Published:Updated:

“என் காதல் கல்யாணக் கதை... இப்பவும் ஆச்சரியமா இருக்கு!” - ‘அழகிய தமிழ்மகள்’ ஷீலா சோழன்

“என் காதல் கல்யாணக் கதை... இப்பவும் ஆச்சரியமா இருக்கு!” - ‘அழகிய தமிழ்மகள்’ ஷீலா சோழன்
“என் காதல் கல்யாணக் கதை... இப்பவும் ஆச்சரியமா இருக்கு!” - ‘அழகிய தமிழ்மகள்’ ஷீலா சோழன்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'அழகிய தமிழ்மகள்' சீரியலில் வெகுளியான குணம் கொண்ட அழகான கிராமத்துப் பெண்ணாக அனைவரின் மனதையும் கவர்ந்துவருகிறார் ஷீலா சோழன். அவருடன் ஒரு ஜாலி சாட். 

''ஷீலா யார்?" 

''அடிப்படையில் நான் ஒரு நடன ஆசிரியை. பரதநாட்டியத்துல மாஸ்டர் டிகிரி முடிச்சிருக்கேன். சென்னைக் கலைக்குழுவில் நடித்திருக்கிறேன். என் கணவர் சோழன், வீதி நாடகக் கலைஞர். திரை உலகுக்கு வரும் புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கிறார்.''

“சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது..?''

சோழனும், தயாரிப்பாளர் கவிதா பாரதியும் நண்பர்கள். கவிதா பாரதி மூலமாகதான் அழகிய தமிழ்மகள் வாய்ப்பு கிடைச்சது. அவர்தான் என்னை ஜீ தமிழ் குழுமத்துல அறிமுகப்படுத்தினார். நான் பரதநாட்டிய டான்ஸர் என்பது சிறப்புத் தகுதியாகி என்னைத் தேர்ந்தெடுக்கவெச்சது. சீரியல் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் ஆரம்பமானது இப்படித்தான்." 

“ ‘அழகிய தமிழ்மகள்' சீரியல்ல இவ்வளவு வெகுளியா நடிக்கிறீங்களே... நிஜத்தில் நீங்க எப்படி?" 

“நான் இயல்பிலும் வெகுளித்தனமான பொண்ணுதான். அதனாலேயே அந்த கேரக்டர் எனக்கு சூப்பரா செட் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். ஆனா, நான் குறும்புக்காரப் பொண்ணும்கூட.”

“உங்க வாழ்க்கையின் திருப்புமுனைனு எதைச் சொல்வீங்க?”

நானும், சோழனும் திருமணம் செய்துகிட்டதுதான். சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல ஆர்வம் இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போது சின்ன சின்னதா குறும்படங்களிலெல்லாம் நடிச்சிட்டு இருந்தேன்.. பரதம் ஆடுறது, பலருக்கும் அதைக் கற்றுக்கொடுக்கிறதுனும் இருந்தேன். சோழனைத் திருமணம் செய்துகிட்ட பிறகுதான் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு வேணும்னு புரிஞ்சது. அதை நடிப்பு என்று நிர்ணயிக்கும் தெளிவுகிடைச்சது. அதில் எனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்க முடிஞ்சது. நடிப்புல எனக்கு ஆர்வம் இருக்குங்குறதை புரிஞ்சிகிட்ட சோழனும் எனக்கு எந்தத் தடையும் சொல்லாம என்னை ஊக்குவிச்சார். தேங்க்ஸ் கணவரே!" 

''மறக்க முடியாத சம்பவம்..?''

“ஒரு குறும்படத்துல நடிக்கப் போயிருந்தப்போதான் சோழனோட அறிமுகம் கிடைச்சது. ஒரு சில காரணங்களால் அந்தப் படப்பிடிப்பைத் தொடர்ந்து செய்யமுடியலை. நிறைய பிரச்னைகள் ஏற்பட்டன. நானும் சோழனும் மனதளவில் நெருங்கினது அந்தக் காலகட்டத்தில்தான். ஒருநாள் அவர்கிட்ட, 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'னு கேட்டேன். 'என்னைப் பற்றி முழுமையா உனக்குத் தெரியாது. நான் வேற மாதிரியான ஆள். நல்லா யோசிச்சுக்கோ'னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா நான், என்னை முழுசா புரிஞ்சுக்கிட்ட, உற்சாகப்படுத்துற அவர்கூடதான் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு உறுதியா நம்பினேன். இடையில் எங்க வீட்டுக்கு எங்க காதல் தெரியவர, நிறையப் பிரச்னைகள் ஏற்பட்டன. வேற வழி இல்லாம, ஒருநாள் ரெண்டு பேரும் ஊரைவிட்டுக் கிளம்பிட்டோம். சொந்தங்களையெல்லாம்விட்டு, 'இனிமே நமக்கு நாமதான்'னு முடிவெடுத்து நாங்க வாழ்க்கையை ஆரம்பிச்ச அந்த நாளை என்னால ஆயுளுக்கும் மறக்கமுடியாது.'' 

“சோழன் எப்படி..?"

“நிறைய புத்தகங்கள் வாசிப்பார். ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்காம சட்டுனு கோபப்படுவார். அவருக்கு நிறைய வொர்க் பிரஷர் இருக்கும். அதைப் புரிஞ்சிட்டு அதிலிருந்து அவரை ரிலாக்ஸ் பண்றது எப்படினு எனக்குத் தெரியும். அதேமாதிரி நான் டென்ஷனா இருந்தா என்னை கூல் பண்றதை அவர் அழகா செஞ்சிடுவார். சந்தோஷமா இருக்கோம்!" 

''தியேட்டர் பிளேக்கும், சீரியலுக்கும் என்ன வித்தியாசம்..?''

“தியேட்டர் பிளேயில் அங்க அதிகபட்சமா 150 பேருக்கு மேல உட்காரமுடியாது. குறிப்பிட்ட பார்வையாளர்களைத்தான் கவரமுடியும். ஆனா, சீரியலை சின்ன குழந்தைங்கள்ள இருந்து பெரியவங்கவரை பார்க்கிறாங்க, உலகம் முழுக்கப் பார்க்கிறாங்க. அந்தப் பிரமாண்டம்தான் அதனோட ப்ளஸ்." 

''சீரியல்ல செமையா கபடி விளையாடுறீங்க... நிஜத்துல கபடி விளையாடியிருக்கீங்களா..?''

“உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கபடி விளையாட்டுன்னாலே பயம். அது கொஞ்சம் ரஃப் அண்ட் டஃப் ஆன கேம்னு தோணும். ஆனா, சீரியலுக்காக ஷூட்டிங்ல கபடி விளையாடி விளையாடி, இப்போ கபடிதான் என் ஃபேவரைட் ஸ்போர்ட் ஆகிடுச்சு!" 

“ரொம்ப கஷ்டப்பட்ட ஷாட்?"

“ 'அழகிய தமிழ்மகள்' புரொமோ ஷாட்களுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஓட்டு மேல நின்னு கோழியைப் பிடிக்கிற மாதிரி ஒரு சீன் எடுத்தாங்க. வீடு ரொம்பப் பழைய வீடு. ஓடெல்லாம் கால்வெச்சதுமே உடையுறமாதிரி இருந்தது. அதனால ஒரே பயம். ஆனாலும் எல்லாத்தையும் சமாளிச்சு நடிச்சிட்டு இறுதியா புரொமோ பார்த்தப்போ, 'சூப்பரா வந்திருக்கே'னு சந்தோஷமா இருந்தது.'' 

''சினிமாவில் நடிக்க ஆர்வமிருக்கா?"

நான் ஏற்கெனவே ரெண்டு படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிச்சிருக்கேன். அந்த ரெண்டு படங்களுமே ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குப் போயிருக்கு. அதோட ரிலீஸுக்காக வெயிட் பண்றேன்.'' 

''எதிர்காலத் திட்டம்..?''

“இப்போதைக்கு இந்த ஒரு சீரியல்லதான் கமிட் ஆகியிருக்கேன். நடிக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு. தொடர்வோம்!”