Published:Updated:

யாருமே ப்ரபோஸ் பண்ணாத வகையில் ப்ரபோஸ் பண்ணிய மதன் கார்க்கி!

யாருமே ப்ரபோஸ் பண்ணாத வகையில் ப்ரபோஸ் பண்ணிய மதன் கார்க்கி!
News
யாருமே ப்ரபோஸ் பண்ணாத வகையில் ப்ரபோஸ் பண்ணிய மதன் கார்க்கி!

யாருமே ப்ரபோஸ் பண்ணாத வகையில் ப்ரபோஸ் பண்ணிய மதன் கார்க்கி!

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுமான சுசீந்திரன் இயக்கும் பத்தாவது படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. இதில் சந்தீப் கிஷன், மெஹரின், விக்ராந்த், சூரி, துளசி உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் படத்தின் வில்லன் ஹரிஷ் உத்தமன் தொகுத்து வழங்கினார்.

தன் மகனைத் தோளில் சுமந்தபடி மேடை ஏறிய இயக்குநர் சுசீந்திரன், ''இது மறக்கமுடியாத இடம். 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இங்கேதான் நடந்தது. இது, நானும் இமானும் சேர்ந்து வொர்க் பண்ணும் ஐந்தாவது படம். இது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது. ஆண்டனி அண்ணனும் என் சித்தப்பா பன்னீர் செல்வமும் சேர்ந்து தயாரித்து உள்ளனர். இந்த மேடையில் என் அடுத்த படமான 'ஏஞ்சலினா' பட டீமை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்'' என்றவர் ‘ஏஞ்சலினா’ படக்குழுவை மேடையேற்றி அறிமுகப்படுத்திவைத்தார். 

தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அடுத்ததாகப் பேசிய மதன் கார்க்கி, ''எனக்கு சுசீந்திரன் படம் ரொம்ப பிடிக்கும். தன் கதையை மட்டும் நம்பி படம் பண்ணுவார். இந்த ஆல்பத்தில் என் அப்பா எழுதிய 'எச்சச்ச கச்சச்ச' பாடல் என்கு ரொம்ப பிடிக்கும். வெகுநாட்களுக்குப் பிறகு பெண்களை கொண்டாடி எழுதப்பட்ட பாடல், ‘இதில் சுசீந்தரன் எனக்குக் கொடுத்த டாஸ்க் யாருமே ப்ரபோஸ் பண்ணாத வகையில் ஹீரோ ஹீரோயினுடன் ப்ரபோஸ் பண்ணியது என்பதுதான்’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ''நான் இயக்குநராகும் முன்பு 'நான் மகான் அல்ல' படத்தில் சுசீந்திரனிடம் வேலை செய்திருக்கிறேன். அப்போது படத்தின் டைட்டில் கார்டில் 'நன்றி இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்' என்று போட்டார். நான் இயக்குநர் ஆகும் முன்பே அவர் என்னை இயக்குநராக அடையாளம் காட்டினார். இன்னும் பலரையும் அடையாளம் காட்டியுள்ளார்" என்றார்.

அடுத்து பேசிய கார்த்தி, “முதலில் ஆண்டனி சாருக்கு வாழ்த்துகள். 'நான் மகான் அல்ல' படத்தின் ஒட்டுமொத்த டீமும் இங்கே இருக்கிறது. ''கே.எஸ்.ரவிக்குமார் சார் மாதிரி நிறைய படங்கள் பண்ணணும்'' என்று சுசீந்திரன் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் ட்ரெய்லர் பார்த்துவிட்டு இரண்டு நாள்களாக தூக்கமில்லை.

அவர் ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதையைச் சொன்னதை இன்றும் மறக்கவே முடியாது. இப்போ அவரே திரையிலும் வர ஆரம்பித்துவிட்டார். இப்போதெல்லாம் ப்ராடெக்ட் யாருடையதோ அவர்களே திரையிலும் தோன்ற ஆரம்பித்துவிட்டார்கள். இமான் சாரும் நானும் அடுத்த படத்துல இணையவிருக்கிறோம். பின்னணி இசையிலேயே கதையைக் கொண்டுசெல்வதில் அவர் கெட்டிக்காரர்.'' என்றவர்,'' விக்ராந்த் உனக்கு நல்ல கதையாக அடுத்தடுத்து மாட்டுது. சந்தீப் 'மாநகரம்' படத்தில் அருமையாக நடித்திருப்பார். கதையை சுசீந்திரன் மிக அழகாகக் கையாண்டுகொண்டிருக்கிறார்" என்றார். 

சுசீந்திரனின் ஒவ்வொரு படத்தில் உள்ள வித்தியாசமான அணுகுமுறையைப் பற்றி பேசிய படத்தின் வில்லன் ஹரிஷ் உத்தமன், “சுசீந்திரன் கோயம்பேடு நிலையம்மாதிரி. அங்க ஒரு பஸ் போனதும் அது பின்னாலயே அடுத்த வண்டி வர்றதுபோல, ஒரு கதை படமாக்கப்பட்டு வெளிவருவதற்குள் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துவிடும்'' என்று பாராட்டினார்.

அடுத்து பேசிய 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் இயக்குநர் சாய் ரமணி, "இந்த அரசு படம் எடுக்க ஸ்டுடியோ கட்டிக்கொடுத்திருக்கிறதா, பைரஸியை தடுத்திருக்கிறதா? ஆனால், வரி மட்டும் கேட்கிறது. சினிமாவை ப்ளாட்ஃபாரத்தில் 30 ரூபாய்க்கு கூவி கூவி விற்கிறான். முன்னாள் முதல்வர்கள் சினிமாத்துறை சார்ந்து வந்தவர்கள் என்பதால் சினிமாவைப் பாதுகாத்தனர். இப்போது அப்படி இல்லை. நாமும் தர்மயுத்தத்தை ஆரம்பிப்போம். சினிமாவைப் பாதுகாக்க வேண்டிய அரசு பாதுகாக்கவில்லை. இந்தக் கேளிக்கை வரியை அரசாங்கம் விலக்க வேண்டும். அப்போதுதான் சினிமா காப்பாற்றப்படும். இல்லை, சினிமா சார்ந்தவர்கள்தான் முதல்வர் ஆக வேண்டுமென்ற சுழல் ஏற்பட்டால் பார்த்துக்கொள்வோம்" என்றார்.

இறுதியாகப் படத்தின் குறுந்தகட்டை நடிகர் கார்த்தி வெளியிட சுசீந்திரனின் நண்பர்களான ரமேஷும் இலக்கியனும் பெற்றுக்கொண்டனர்.