Published:Updated:

நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம்
நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம்

நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம்

பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் ஆகாயத்தை தவிர மற்ற நான்கு பூதங்களுக்கும் ஒரு கதை என நான்கு வெவ்வேறு கதையும், களத்தையும் இணைத்து `சோலோ'வாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார். நான்கு எலமென்ட், ஒவ்வொன்றிலும் சிவனின் ரெஃபரன்ஸ் வைத்து மித்தாலஜியும் சேர்த்து, நான்கு வித காட்சியமைப்பு, கலர், சவுண்ட் என தரமான ஆந்தாலஜி படமாக களம் இறங்கியிருக்கிறது `சோலோ'

ஒவ்வொரு கதை துவங்குவதற்கு முன்னும் அந்தக் கதை சம்பந்தப்பட்ட கவிதையுடன் துவங்குகிறது. முதல் கதையாக, சேகர், ராதிகா (சாய் தன்ஷிகா) இருவரின் கதையுடன் விரிகிறது படம். சேகர் கோவமோ, பதற்றமோ வந்தால் திக்கிப்பேசக்கூடியவர். தன்ஷிகா தனது பத்தாவது வயதில் கண் பார்வையை இழந்தவர். இந்த இருவரின் திருமணத்திற்கு வரும் சிக்கல், அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, அதில் நடக்கும் ஒரு பிரச்னை பற்றி விவரிக்கப்படுகிறது. இரண்டாவது, காதல் திருமணம் செய்து கொண்ட த்ரிலோக், அவர் மனைவி ஆயிஷாவின் (ஆர்த்தி வெங்கடேஷ்) கதை. திடீரென நடக்கும் ஒரு விபத்தும் அதன் விளைவுகளால் நிகழும் விபரீதங்களும்தான் கதை. மூன்றாவது சந்தர்ப சூழலால் அடியாளாக மாறிய சிவாவின் கதை. சிவாவுக்கு ஏற்படும் இழப்பும் அதற்காக பழி தீர்க்கக் கிளம்புவதுமே களம். கடைசியாக வருவது ருத்ரா ராமசந்திரன், அக்‌ஷரா (நேஹா ஷர்மா) ஜோடியின் காதல் கதை மிகவும் ஜாலியாக நகர்ந்து ஒரு அதிர்ச்சியான திருப்பத்துடன் முடிகிறது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட `பென்ச் டாக்கீஸ்', `அவியல்' இரண்டும் தமிழில் முதல் ஆந்தாலஜி. குறும்படங்களை இணைத்து சினிமாவாக வெளியிட்ட ஆந்தாலஜியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவாக வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஆந்தாலஜியாக மிகத் தரமாக உருவாகியிருக்கிறது `சோலோ'. ஒன்றுக்குகொன்று சம்பந்தமே இல்லாத நான்கு தனித் தனிக் கதைகள். ஒவ்வொரு கதையின் நரேட்டிவ் ஸ்டைலை வழக்கத்துக்கு மாறான முறையில் வைத்தது, ஒவ்வொரு கதைக்கும் ஒரு தீம் வைத்து படமாக்கியிருந்தது என மிகவும் தரமான சினிமாவைத் தர முயற்சித்திருக்கிறார் பிஜோய். எல்லாக் கதையிலும் நாயகனுக்கு என இருக்கும் மோட்டிவ் அந்ததந்தக் களங்களை மிக சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. நான்கு கதைகளுக்குள்ளும் வரும் `நான்கு வருடம்', ஒவ்வொரு கதையிலும் கோபம், காத்திருப்பு, பாசம், பகைமை என வெவ்வேறு உணர்வுகளை சேர்த்த விதம் அழகு. 

'சோலோ'வாக படத்தில் தனித்துத் தெரிகிறார் துல்கர். எல்லா கதைகளிலும் அவர்தான் பிரதானம் என்பதால் அதற்கு உரிய நடிப்பை சற்றும் குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார். சேகர் கதாபாத்திரத்தில் சில இடங்களில் செயற்கையாய் திக்குவது தெரிந்தாலும் அதை நம் கவனத்துக்கு வரவிடாமல் தடுக்கிறது அவரின் தோற்றமும், நடிப்பும். த்ரிலோக் பாத்திரத்தில் இருக்கும் பகை உணர்வு, அம்மா, அப்பா தவிர வேறு எதுவும் வசனமே இல்லாமல் ஆக்ரோஷத்தை மட்டுமே காட்டும் சிவா, மிகுந்த துள்ளலுடன், காதல் செய்யும் ஜாலியான ருத்ரா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்த முறையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். எந்த பாத்திரமும், இன்னொரு பாத்திரத்தை நினைவுபடுத்தாதபடி காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் ஆசம். 

பார்வை சவால் கொண்டவராக தன்ஷிகா, அவ்வளவு நெருக்கமாக காதலித்துவிட்டு, பின்பு இங்க இருந்து போயிடு என விரட்டும் நேஹா ஷர்மா இருவரின் நடிப்பு கடைசிவரை மனதில் நிற்கிறது. ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ், நாசர், சுரேஷ் மேனன், சதீஷ், சாய் தம்ஹாங்கர், ரோஹன் மனோஜ், க்யூ, `தாய்குடம் ப்ரிட்ஜ்'  கோவிந்த் மேனன், ஜான் விஜய், ஆன் அகஸ்டின், அழகம் பெருமாள், சந்தோஷ், மனோஜ் கே.ஜெயன்... என பைலிங்குவலுக்கு ஏற்றபடி நிரம்பி வழிகிறது நடிகர் பட்டாளம். சின்ன சின்ன பாத்திரங்களுக்குக் கூட திறமையான நடிகர்களை தேர்வு செய்திருப்பது சூப்பர், ஆனால் அவர்களுக்கான வேலை பெரிதாக இல்லை என்பதால் எல்லோரும் கடந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். 

"அவ இல்லாம வாழ்ந்து பார்க்கணும்னு கண்ண மூடி யோசிச்சேன். என் வாழ்க்கையிலேயே ரொம்ப இருட்டான பத்து செக்கண்ட் அதுதான்" என சில இடங்களில் அழகாக இருக்கிறது கார்த்திக் ஐயரின் வசனம். ‘நீ சினேகன் மாதிரி முடி வச்சிருக்கும் போதே சந்தேகப்பட்டேன்டா...’ என்று ட்ரெண்டுக்கு ஏற்ப வசனம் சேர்த்திருந்ததும் சிறப்பு. ஆனாலும், ஏனோ டப்பிங் படத்துக்கு எழுதப்பட்ட வசனங்கள் போலவே ஒலிப்பதால் அத்தனை ஈர்க்காமல் போகிறது. படத்தின் பெரும் பலம், டெக்னிக்கல் டீம். நான் லீனியர் கதை சொல்லலுக்கு ஏற்ற படி பக்காவான படத்தொகுப்பை வழங்கியிருக்கும் ஸ்ரீகர் பிரசாத், ஒவ்வொரு கதைக் களத்துக்கும் ஏற்றபடி விஷ்ணு கோவிந்த், ஸ்ரீ ஷங்கர் வடிமைத்திருக்கும் ஒலிக் கலவை, ஒவ்வொரு கதைகளையும் வித்தியாசப்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் கிரிஷ் கங்காதரன், மது நீலகண்டன், செஜல் ஷா, பின்னணி இசை மற்றும் பாடல்களில் மிரட்டியிருக்கும் பிரசாந்த் பிள்ளை, இசைக்குழுக்கள் Thaikkudam Bridge, Masala Coffee, Filter Coffee, Sez On The Beat, Agam, கலை இயக்கம் என அத்தனை துறை ஆட்களும் போட்டி போட்டு வேலை செய்திருக்கிறார்கள். 

அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சாதாரணமாக நிகழும் கொலை, சிவா செய்யும் கொலைகளை கண்டுகொள்ளாத காவல்துறை, சிவாவின் அப்பாவுக்கும், அந்த மும்பை கேக்ஸ்டருக்கும் என்ன பிரச்னை, ருத்ராவிடம் கடைசி நேரம் வரை காத்திருந்து சுஹாசினி சொல்லும் ரகசியம், இந்தக் கதைகள் எல்லாம் எங்கு நடக்கிறது என படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அத்தனை குழப்பங்கள் எழுகிறது. தமிழ் படத்திற்கு ஏற்ப லிப் சிங் வரை துல்லியமாக இருந்தும் ஏனோ அந்நியமான உணர்வைக் கொடுக்கிறது படம். கதை நிகழும் களம் எதுவென்று தெரியாததும், கதை மாந்தர்கள் பலரின் முகங்கள் பரிட்சயம் இல்லாததாலும் நிலப்பரப்பே இல்லாமல் அந்தரத்தில் மிதக்கிறது கதை. அதனாலேயே கதையிலிருக்கும் உணர்வுகளும் சரியாக பார்வையாளர்களை சென்றடையாமல் போய்விடுகிறது. கடைசி கதையில் நாசரை வைத்து வரும் ட்விஸ்ட் அத்தனை சீரியஸாக பதிவு செய்யப்பட்டிருந்தும், ஏனோ நாட்டாமை பட கவுண்டமணி - செந்தில் காமெடி நினைவுக்கு வந்து சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. 

வித்தியாசமான சினிமா உருவாக்கம், விதவிதமான களங்கள், பக்காவான டெக்னிக்கல் டீம் என உழைத்தது போல் ஒவ்வொரு கதைக்குள் இருக்கும் உணர்வுகளை இன்னும் ஆழமாக கொடுத்திருந்தால் கொண்டாட்டத்துகுரிய சினிமாவாக இருந்திருக்கும் இந்த `சோலோ'.

அடுத்த கட்டுரைக்கு