Published:Updated:

“என்னாது... இந்தியன்-2 எடுக்குறாங்களா..!?" முன்னாள் ‘இந்தியன்’கள் கவுண்டமணி, செந்தில்

“என்னாது... இந்தியன்-2 எடுக்குறாங்களா..!?"  முன்னாள் ‘இந்தியன்’கள் கவுண்டமணி, செந்தில்
“என்னாது... இந்தியன்-2 எடுக்குறாங்களா..!?" முன்னாள் ‘இந்தியன்’கள் கவுண்டமணி, செந்தில்

1996ம் ஆண்டு தமிழ், இந்தியில் வெளிவந்த ‘இந்தியன்’ திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கமல், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், பாலாசிங், நெடுமுடி வேணு, கஸ்தூரி, கிரேஸிமோகன், மனோரமா, நிழல்கள் ரவி, சொக்கலிங்க பாகவதர் உள்பட பலர் நடித்திருந்தனர். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களைத்தொடர்ந்து தன் மூன்றாவது படமாக ஷங்கர் இயக்கிய இந்தப்படம் அவருக்கும் அடுத்தகட்டமாக அமைந்தது. ரஹ்மானின் இசையில் வாலியும் வைரமுத்துவும் பாடல்கள் எழுதினர். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். 

இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப்பிறகு அதன் அடுத்த பாகத்தை தில் ராஜு தயாரிப்பில் எடுக்க உள்ளதாகக் கமலும் ஷங்கரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து, ‘‘இந்தியன்’ படத்தின் கதை அடுத்த பாகத்தில் எப்படித் தொடரும்’ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. லஞ்சம், ஊழலை ஒழிக்க ஒரு சுதந்திரப்போராட்ட வீரர் கத்தியை எடுப்பதுதான் ‘இந்தியன்’ படத்தின் கதை. கடைசியில் தன் மகனைக் குத்திக்கொன்றுவிட்டு இந்தியன் தாத்தா எப்படித் தப்பிக்கிறார் என்று கதை முடியும். 

அப்படித் தப்பிக்கும் இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார் என்பதாகத்தான் அடுத்தபாகத்தின் கதை அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ‘இந்தியன்’ படத்தில் அந்த தாத்தா கேரக்டர்தான் ஸ்பெஷல். அதனால் அதை கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டார்கள். அப்படித் தப்பிக்கும் தாத்தா 21 வருடங்களுக்குப் பிறகு திரும்பி வருகிறார் என்று கதை இருக்கலாம். ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கமல் பேசிவரும் இன்றைய அரசியல் சூழலுடன் கனெக்ட் செய்யும் வகையில் இருந்தால்தான் படம் பெரிய அளவில் பேசப்படும். அதனால் நிச்சயம் இந்த இந்தியன் தாத்தா, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக தன் வர்மக் கலையைப் பயன்படுத்துவார் என்று நம்புவோம். 

இதுதவிர, இந்த இந்தியன்-2’வில் யாரெல்லாம் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களில் மனோரமா, சொக்கலிங்க பாகவதர், ஓமக்குச்சி நரசிம்மன் உள்பட சிலர் இறந்துவிட்டனர். மேலும் கதைப்படி மகன் சந்துரு கமலும், மகள் கஸ்தூரி கதாபாத்திரங்களும்  இறந்துவிடுவதால் மீண்டுவர வாய்ப்பு இல்லை. இந்தியன் தாத்தாவின் மனைவியாக நடித்த சுகன்யாவே அடுத்த பாகத்திலும் நடிப்பாரா? கவுண்டமணி, செந்தில் போன்றோர் ‘இந்தியன் 2’லும் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

குறிப்பாக கமலும் கவுண்டமணியும் ‘இந்தியன்’ படத்தில் செய்த காமெடிகள் எவர்கிரீன் ரகம். இவர்கள் இருவரும் நடிக்கும் ஒரு காட்சியில், கவுண்டமணி எதையோ குனிந்து தேடுவதுபோல் பாவனை செய்வார். அப்போது, ‘என்ன தேடூறீங்க’ என்று கமல் கேட்க, 'இல்ல, இங்க சந்துரு சந்துருனு ஒரு மானஸ்தன் இருந்தான். அவனைத்தான் தேடுறேன்' என்று கவுண்டமணி சொல்லும் பதில் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இதேபோல சஃபாரி ஷூட்டும் சுருள் முடியுமாக வந்து மனிஷா கொய்ராலாவை மனம் உருக காதலிக்கும் செந்தில் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். 

இந்த நிலையில் கவுண்டமணி, செந்தில் இருவரும் இந்தியன் 2 தரப்பிலிருந்து அழைப்பு வந்ததா, அடுத்த பாகத்திலும் இருப்பார்களா என்பதைத் தெரிந்துகொள்ள இருவரையும் தொடர்பு கொண்டோம். முதலில் கவுண்டரை அலைபேசியில் அழைத்தோம். ‘அப்படியா சாமி...' என்று ஆச்சர்யத்தோடு கேட்டவர், 'இந்தியன் படத்தோட செகண்ட் பார்ட் எடுக்கப் போறாங்க என்கிற தகவலே நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும். இதுவரைக்கும் நடிக்கக்கேட்டு யாரும் என்னைத் தொடர்பு கொள்ளலையே' என்றார். 

செந்திலிடம் பேசினால், 'இப்ப நான் மதுரையில இருக்கேன். நீங்க இந்தியன் படத்தைப்பத்தி சொன்னதுமே நானும், மனிஷாவும் நடிச்ச காட்சிகள் ஞாபத்துக்கு வருது. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணுக்கு உடம்பு சரில்லாம போச்சுன்னு சொன்னாங்க. ஷங்கர் மறுபடியும் கமல்சாரை ஹீரோவாவெச்சு இந்தியன் செகண்ட் பார்ட் எடுக்கறது சந்தோஷமான விஷயம். இதுவரைக்கும் தயாரிப்புத் தரப்புல இருந்து யாரும் பேசலை. நீங்க அவங்ககிட்டே சொல்லி என்கிட்டே பேசினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்’ என்று ஆர்வமாகிறார். 

மொத்தத்தில் இது இந்தியன் தாத்தாவின் அடுத்த வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர இன்றைய அரசியல் அனலுக்கு ‘இந்தியன்-2’ மிகச்சரியான சீக்வெலாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கமல், ஷங்கர் உள்ளிட்ட இந்தியர்களுக்கு வாழ்த்துகள்.