Published:Updated:

"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு!" காத்திருக்கும் அப்புக்குட்டி

"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு!" காத்திருக்கும் அப்புக்குட்டி
"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு!" காத்திருக்கும் அப்புக்குட்டி

'ஓம் மண்ணெண்ணெயாய நமஹ!', 'ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ'...  இப்படி ஒற்றை காட்சி, ஒருவரி வசனங்களில் ஆரம்பித்த அப்புக்குட்டி, குதிரையுடன் விளையாட்டு, தேசிய விருது, தல ஃபோட்டோஷூட், பல பட கமிட்மென்ட்ஸ்...  என பரபரப்பாக இருக்கும் அப்புக்குட்டியிடம் பேசினோம்.

''தூத்துக்குடி மாவட்டம் நாதன்கிணறு கிராமம்தான் என் பூர்வீகம். ஆரம்பத்துல ஊர்ல சும்மா சுத்திட்டு இருந்தோம். எப்படியோ அலைஞ்சு திரிஞ்சு ஒரு நடிகராயிட்டோம். ஒரு நடிகரா இப்போ ஊருக்குப்போனா ரொம்ப சந்தோசப்படுறாங்க. ‘நம்ம ஊருக்கு ஏதோ ஒரு வகையில பெருமை சேர்த்திருக்கோம்’னு எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஊர்ல சேர்மராஜ், ஐயப்பன்னு இரண்டு பேர்தான் பள்ளிக்கூடம் படிக்குற காலத்துல இருந்து என் நண்பர்கள். ஊர்ப் பக்கம் போனா இவங்களை பார்க்காம வரமாட்டேன்.''

"வெண்ணிலா கபடிக்குழு’ படம்தான் உங்களுக்கு நல்ல ஆரம்பத்தை தந்துச்சு. அதைப்பற்றி சொல்லுங்க..."
"நான் ஆரம்பத்துல சினிமாவுல நடிக்கணும்னு சென்னை வந்து ஹோட்டல்ல வேலை செஞ்சேன். அப்புறம், பல கம்பெனிகள் ஏறி இறங்கி என் ஃபோட்டோ கொடுத்துட்டு இருந்தேன். அதைப் பாத்துட்டு ஆரம்பத்துல சும்மா ஒரு சீன் ரெண்டு சீன்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படி தான் வாழ்க்கை ஓடிட்டு இருந்திச்சு. அப்படி கொடுக்கும்போதுதான் சுசீ அண்ணன் படத்துலயும் நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. படத்துல என்னை ஆரம்பத்துல வேறொரு ரோல்லதான் நடிக்கச் சொன்னாங்க. ஷூட் அப்ப அந்தக் கபடி டீம்ல ஒருத்தர் வரலை. அப்போதான் பென்னினு டைரக்ஷன் டீம்ல இருந்த ஒருத்தர் என்னை அந்த ரோலுக்கு நடிக்கவெக்கலாம்னு சுசி அண்ணன்ட்ட சொன்னார். அப்புறம் ரிஹர்சல் பாத்துட்டு, ‘வெண்ணிலா கபடி டீம்ல நானும் சேர்ந்துட்டேன். ‘நாம எல்லோருமே புதுசு. கண்டிப்பா நாம வெளியே தெரியணும்’னு  கடுமையா உழைச்சோம். அதுக்கான பலன் கிடைச்சது.”

" ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக தேசிய விருது வாங்குனீங்க. அந்தப் பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?”
"பாஸ்கர் சக்தி  சார் ஆனந்த விகடனில் எழுதுன கதைதான் ‘அழகர்சாமியின் குதிரை’. சுசி அண்ணன்கிட்ட உதவி இயக்குநரா இருந்த லெனின் பாரதி அதைப் படிச்சிட்டு, ‘இதைப் படமா பண்ணலாம். படிச்சுப் பாருங்க’னு சுசி அண்ணன்ட்ட சொன்னார். அதைப் படிச்சிட்டு படம் பண்ற ஐடியாவுக்கு வந்து சுசி அண்ணன், ‘அப்புக்குட்டியே நடிக்கட்டும்’னு ப்ளான் பண்ணி என்கிட்ட வந்து சொல்லி தன்பாக்கெட்ல இருந்த கொஞ்சம் பணத்தை அட்வான்ஸா கொடுத்துட்டு போனார். ஆனா, அதுக்குப்பிறகு அவர், 'நான் மகான் அல்ல' படத்துல பிஸியா இருந்ததால, ‘ஓ.கே. இந்தப்படம் அவ்வளவுதான்’னு யோசனை வந்திடுச்சு. ஆனால், 'நான் மகான் அல்ல' முடிஞ்சபிறகு அவரே ஒரு நாள் கூப்பிட்டார். அப்போதான் நம்பிக்கையே வந்துச்சு. அதில் என்னை நல்லா வேலை வாங்கினார். படம் நடிச்சிட்டு இருக்கும்போதே, சரண்யா மோகனும் ஸ்டில் சார்லஸ் அண்ணணும், ‘இதுல கண்டிப்பா உனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்’னு சொன்னாங்க. அதுக்கு தகுந்தமாதிரியே தேசிய விருதும் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.”

"உங்களுக்கும் அஜித்திற்குமான பழக்கம் பற்றி சொல்லுங்க..."
" சிவா சார்தான் என் படங்களைப் பார்த்துட்டு கூப்பிட்டு, ‘தல-க்கு தம்பிமாதிரி ஒரு கேரக்டர்னு சொன்னார். வேற எதுபற்றியும் நான் கேட்கலை. அஜித் சாருக்கு என்னை யாருனே தெரியாது அவர் என் படங்களைப் பார்த்ததும் இல்லை. சிவா சார்தான், ‘தேசிய விருது வாங்கினவர்’னு அறிமுகப்படுத்தினார். அப்புறம், கைகொடுத்த தல, ஷூட் போகப்போக நல்ல பழக்கமாகிட்டார். நல்லா நடிச்சா, டயலாக் டெலிவரிலாம் சரியா பண்ணினா முதல்ல வந்து பாராட்டுவார். பத்திரிகை வைக்கிற சீனும் அவர் என் கல்யாணத்துக்கு வந்து பத்திரம் கொடுக்குற சீனும்தான் படத்தில் எனக்கு ரொம்பப் பிடிச்ச காட்சிகள்.”

"அவர் உங்களை வெச்சு போட்டோஷூட் பண்ணும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க? இப்ப அவருடன் தொடர்பில் இருக்கீங்களா?”
“ ‘வீரம்’ படப்பிடிப்பில அஜீத் சார் என்கிட்ட, 'தம்பி எல்லாப் படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்க வளர்ச்சிக்குத் தடையா இருக்கும். முடிஞ்சவரை படத்துக்குப் படம் தோற்றத்தை மாற்றப் பாருங்க'னு சொன்னார். அப்புறம் அப்படியே நாள்கள் ஓடிடுச்சு. படம் எல்லாம் முடிச்சு கொஞ்சநாள்ல என்னை ஒரு இடத்துக்கு வரச்சொன்னார். அங்கபோன எனக்கு பயங்கர ஷாக். என் உடம்புக்கு தகுந்தமாதிரி தைக்கப்பட்ட துணிகள், மேக்கப் பொருள்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட  ஒப்பனையாளர்கள்னு அசத்திட்டார். அப்போ எடுத்த போட்டோஸ்தான். அதுக்கு அப்புறம் நான் போட்டோவே எடுக்கலை. என்னைக்கோ சொன்னதை ஞாபகம் வெச்சுகிட்டு அதைச் சொன்னபடி செஞ்சிட்டார். அதான் தல. அவர் ரொம்ப பிஸியான நபர். அதனால போன் தொடர்புலாம் இல்லை. ஆனா, மறுபடியும் சிவா சாரும் தலயும் என்னைக் கூப்பிடுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு."

"இப்ப என்னென்ன படங்கள் கைவசம் வெச்சுருக்கீங்க?”
" 'வல்லவனுக்கு வல்லவன்', 'எங்க காட்டுல மழை', 'வைரி', 'காத்திருப்போர் பட்டியல்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'வெண்ணிலா கபடிக்குழு-2', '100% காதல்', 'பூம்பூம் காளை'னு பல படங்கள் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படங்கள்ல காமெடி கேரக்டர்களுக்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்கிறேன். இதுதவிர 'விவசாயி'னு ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். இந்த காமெடி கலந்த ஹீரோவா என் தோற்றத்துக்கு ஏற்ற கதை வந்தா பண்ணணும்ங்கிற ஆசையும் இருக்கு ''