Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அப்பா அரசியலுக்கு வரணும்!” சத்யராஜ் மகள் திவ்யா விருப்பம்

''பாகுபலி'' படத்தை சமீபத்தில்தான் ஃபேமிலியாகப் போய்ப் பார்த்தோம். இதற்குமுன் ‘பாகுபலி-2’ ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ''கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்’ என்று அப்பாவிடம் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். ‘இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது’ என்று சிபிக்குத் தெரியும். அதனால் அவர் கேட்கவில்லை. ஆனால், நான் அப்பாவின் செல்லப்பிள்ளை. அதனால் என்னிடம் சொல்வார் என நினைத்து அவரை விரட்டிவிரட்டி அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், அந்த ரகசியத்தை அப்பா கடைசிவரை என்னிடம்கூட சொல்லவே இல்லை.” - தன் அப்பா சத்யராஜைப் பற்றி அன்பும் ஆர்வமுமாகப் பேசுகிறார் மகள் திவ்யா. சமீபத்தில் அமெரிக்க மருந்து கம்பெனி ஒன்றின் ஏஜென்டுகள் தன்னை மிரட்டியதாகவும் இந்திய மருத்துவர்களைத் தரக்குறைவாக விமர்சித்ததாகவும் கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு இவர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் திவ்யாவைச் சந்தித்தேன். 

திவ்யா

“பிரதமருக்கு அந்த மெயில் எழுதும்போது, ‘இதைப் பண்ணியே ஆகவேண்டும்’ என்பதுமாதிரியான சில விஷயங்கள் நடந்தன. அதனால் உடனே, ‘மெயில் எழுதி அனுப்பிவிட்டேன். அதன்பிறகுதான் அப்பாவிடமே சொன்னேன். அவர் மிகவும் சந்தோஷமாக ஃபீல் பண்ணினார். ஆனால், அம்மாதான் ரொம்ப பயந்தார்கள். அந்தக் கடிதத்துக்கு பதிலோ, நடவடிக்கையோ எதுவும் இல்லை என்பதுதான் வருத்தம். ஆனால் நான் எழுதும்போதே அதற்குப் பதில் வராது என்பது தெரியும்.”

“நீட் தேர்வுக்கு எதிராகவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தீர்கள். இப்போது அந்தத் தேர்வால் அனிதா மரணம் அடைந்திருக்கிறார். அது உங்களை எந்த அளவுக்குப் பாதித்தது?”
“நீட் தேர்வு எழுதுவதில் உள்ள கஷ்டம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் சென்ட்ரல் போர்ட் ஸ்டூடண்ட். நீட் தேர்வு என்பது சென்ட்ரல் போர்டு மாணவர்களுக்கானது. அந்த சிலபஸை வைத்து வினாத்தாள் தயாரிக்கும்போது அதை ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்களால் எப்படி எழுத முடியும்? அதனால்தான், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் நீட் எக்ஸாம் பற்றியும் எழுதியிருந்தேன். அனிதாவின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. அப்பா நேரில் சென்றார். அவருடன் நானும் போகவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்போது காய்ச்சல். அதனால் போகமுடியவில்லை. எளிய பின்னணியிலிருந்து வந்த அனிதா மருத்துவராகியிருந்தால் நிச்சயம் இந்தச் சமூகம் அவரால் பயனடைந்திருக்கும்.”

திவ்யா

“கொஞ்சம் சினிமா பேசுவோம். அப்பா நடித்ததில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத கேரக்டர் எதுஎது?”
“நிறைய இருக்கின்றன. 'நண்பன்' படத்தில் நடித்தற்காக அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறேன். ‘அந்த கேரக்டர்ல நீங்க நடிக்கவே கூடாது’ என்று சொன்னேன். எதற்காக, ஏன் அப்படிச் சொன்னேன் என்று காரணம் சொல்ல தெரியவில்லை. அது எனக்கு சந்தோஷமாக ஃபீல் ஆகவில்லை. ஆனால் நடித்துவிட்டார். இதேபோல 'முதல்வன்' படத்தில் அப்பா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஃபீல் பண்ணியிருக்கிறேன். அந்தப்படத்தை இப்போது பார்த்தால்கூட அப்படி நினைத்துக்கொள்வேன். அர்ஜுன் அங்கிள் கேரக்டரை அப்பா செய்திருக்கலாம். ஏனென்றால் 'ஜென்டில்மேன்' படத்துக்கான வாய்ப்பும் அப்பாவுக்கு வந்ததுதான். அதையும் அப்பா பண்ணவில்லை. அப்பாவைப் பார்த்து நான் பயந்தது, அவர் நடித்த 'நூறாவது நாள்' படத்தைப் பார்த்துதான். அந்த கேரக்டரில் அப்பாவைப் பார்க்க மிகவும் பயமாக இருந்தது. ஆனால், போகப்போக எனக்கு 'நூறாவது நாள்' ரொம்பப் பிடித்துவிட்டது. எங்கள் வீட்டு மேக்கப் ரூமில்கூட அப்பாவின் 'நூறாவது நாள்' போட்டோவைத்தான் மாட்டிவைத்துள்ளோம்.”

திவ்யா

““அப்பாவும் கவுண்டமணியும் நல்ல நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்களா?”
“ அப்பாவும் கவுண்டமணி அங்கிளும் சந்தித்தால் இருவரும் சிரிக்கும் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். ஒருமுறை கோயமுத்தூருக்குக் கவுண்டமணி அங்கிள் குடும்பமும் எங்கள் குடும்பமும் ட்ரெயினில் போய்க்கொண்டிருந்தோம். அந்த இரவு முழுக்க யாரும் தூங்கவேயில்லை. பயங்கர சிரிப்புதான். அந்த அன்பும் நகைச்சுவையும்தான் அவர்கள் இருவர் நட்பின் பலம்.”

“சமீபத்தில் அப்பாவின் பிறந்தநாள் வந்தது. என்ன பரிசளித்தீர்கள்?”
“அப்பா தன் செல்போனை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதனால் அவருக்கு புது போன் பரிசளித்தேன். பிறகு வீட்டில் எல்லோரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.”

திவ்யா

“கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வருவதற்கான பணிகளில் இருப்பதாகத் தெரிகிறது. உங்கள் அப்பா அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?”
“ஆம். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் பெண்களை மதிக்கக்கூடிய ஒரு தலைவர் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? இப்போதிருக்கும் சூழலில் சுயநலமில்லாத, ஆளுமையுள்ள ஒருவர் தலைவராக வேண்டும். அதனால், அப்பா அரசியலுக்கு வந்தால் நான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனால், இதுநாள்வரை என் இந்த எண்ணத்தை அவரிடம் சொன்னதே இல்லை. உங்கள் மூலமாகச் சொல்கிறேன்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்