Published:Updated:

ஆந்திரத் தலைநகரை வடிவமைக்கும் 'ஆர்ட் டைரக்டர்' தமிழர்!

ஆந்திரத் தலைநகரை வடிவமைக்கும் 'ஆர்ட் டைரக்டர்' தமிழர்!
ஆந்திரத் தலைநகரை வடிவமைக்கும் 'ஆர்ட் டைரக்டர்' தமிழர்!

ஆந்திரத் தலைநகரை வடிவமைக்கும் 'ஆர்ட் டைரக்டர்' தமிழர்!

ந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை வடிவமைப்பதில் தமிழர் ஒருவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. அவர் கலை இயக்குநர் ஆனந்த் சாய். தெலுங்கில் வந்த பல வரலாற்றுப் படங்களுக்கு கலை இயக்கம் செய்து, கவனிக்கவைத்தவர், தற்போது ஆந்திரத்தில் திருப்பதிக்கு இணையாக நரசிம்மர் கோயிலையும் தலைநகர் அமராவதியையும் வடிவமைத்து வருகிறார்.

``பிறந்தது, படிச்சது எல்லாமே சென்னையில்தான். என் அப்பா பெரிய ஆர்ட் டைரக்டர். அவர் எல்லா மொழிப் படங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 700 படங்களுக்குமேல் ஆர்ட் டைரக்‌ஷன் செய்தவர். அவருக்குப்பிறகு நானும் ஆர்ட் டைரக்டரானேன். தெலுங்கு சினிமாவில் பரபரப்பா இருப்பதால் தமிழில் அவ்வளவா படங்கள் பண்ண முடியலை. இருந்தாலும் நான் இங்கே பண்ணிய `நியூ', `சந்தோஷ் சுப்ரமணியம்' படங்களுக்கு மாநில அரசின் விருது கிடைத்ததில் சந்தோஷம். தெலுங்கு சினிமாவுக்குப்போனபிறகு `வெட்டிங் டிசைன்' என்கிற கான்செப்ட்டை பெரிய அளவில் பண்ண ஆரம்பித்தேன். முதலில் நடிகர் சிரஞ்சீவியின் மகள் திருமணத்துக்கு வடிவமைத்தேன். பிறகு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுனின் திருமணங்களுக்கும் அந்த டிசைன் பண்ணினேன். இந்த செட் அனைத்திலும் டெம்பிள் டிசைன் வரும்வகையில் அரங்கங்களை அமைத்திருந்தேன். அதற்கு நல்ல ரீச். இப்போது சினிமா ஆர்ட், வெட்டிங் அனைத்தையும் விட்டுட்டு, டெம்பிள் புராஜெக்ட்ஸ், அமராவதியை டிசைன் பண்ணும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.”

“கோவில் கலை வடிவமைப்பில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?”

“நான் பிறந்தது தமிழ்நாடு என்பதால் கோயில் கட்டடக் கலைமீது இயல்பிலேயே அதிக ஆர்வமும் ஈர்ப்பும் இருந்தது. கட்டடக் கலை பற்றித் தெரிந்துகொள்ள தஞ்சை, மதுரை, மகாபலிபுரம் என்று நிறைய கோயில்களுக்குப் பல நாள்கள் மாறி மாறி பயணம் செய்திருக்கிறேன். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டுக் கோயில்கள் பற்றியும் அந்த நாட்டுக் கட்டடக் கலைகளைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். அப்போது சின்ன ஜீயர் சுவாமிகளுக்கு என் டெம்பிள் டிசைன்ஸ் பிடிச்சுபோய், அவரோட புராஜெக்ட்டுகளுக்கு டிசைன் பண்ணி தரச்சொல்லி என்னை அழைத்தார். `சினிமாக்களுக்கு நாம நினைச்சமாதிரி செட் போடலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா, கோயில்கள் கட்டுறதுக்கான சாஸ்திரங்களை முறைப்படி கத்துக்கிட்டு செய்யணும்’ என்றார். அது நான்கைந்து வருட புராஜெக்ட் என்பதால் சினிமாவை கமிட் பண்ணாமல் அதில் மட்டுமே கவனம் செலுத்தினால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். என் முடிவை மனைவி வாசுகியிடம் சொன்னதும், `உங்களுக்கு எதில் திருப்தியோ, அதையே செய்யுங்க’ என்றார். அந்த ப்ராஜெக்டில் கமிட் ஆனபிறகு நிறைய கோயில்களுக்குச் சென்றேன். நிறைய ஸ்தபதிகளைச் சந்தித்துப் பல நுணுக்கங்களைக் கற்றேன். என்னைப் பொறுத்தவரை ஸ்தபதிகள், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த புராஜெக்ட் பண்ணின மூன்று வருடங்களில் என் வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள்.”

“ஆந்திராவில் நரசிம்மர் கோவில் கட்டும் பணியை முதல்வர் சந்திரபாபு நாயுடு உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். அதன் பின்னணி விவரங்கள் சொல்லுங்கள்?”

“திருப்பதி போல் ஆந்திராவில் மலைமேல் 12 ஏக்கரில் அமைந்துள்ள 45 வருடங்கள் பழைமையான நரசிம்மர் கோயிலை மறுசீரமைக்கும் பணிகளுக்கான அறிவிப்பு வந்தது. அதைப் பார்த்துவிட்டு என் டிசைன்ஸ் அனுப்பினேன். அது முதலமைச்சருக்குப் பிடித்துப்போய் என்னை கமிட் பண்ணினார். `ஆர்ட் டைரக்டர், கோயிலுக்கு டிசைனா’ என்கிற கேள்வியில் தொடங்கி, மற்ற கோயில்கள்ல இருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும். கோயில் கட்டமைப்பு பற்றி அனைவரையும் பேசவைக்க வேண்டும் என்பது மாதிரியான நிறைய சவால்கள் இருந்தன. வெளிப் பிரகாரத்திலும் மண்டபம் வருவதுபோல் டிசைன் பண்ணியது அனைவருக்கும் பிடித்திருந்தது. தூண்கள், பிரகாரம் என்று ஆரம்பித்து சின்னச் சின்ன விஷயங்கள் வரை வித்தியாசமாகவும் இனி கட்டப்போகும் மற்ற கோவில்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று தெளிவாக இருந்தோம். டிசைன் பண்ண மட்டுமே முழுமையாக இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டோம். `எதுக்காகவும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாம். என்ன வேணுமோ அதைப் பண்ணிக்கலாம்’ என்று முதலமைச்சரும் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.  

கோவில் தவிர அதைச்சுற்றி இருக்கும் வெளிப்பகுதியில் குளம், டெம்பிள் சிட்டி, கோயிலையொட்டி கிழக்குப் பகுதியில் ஆஞ்சநேயர் விக்கிரகமும் வைக்க உள்ளோம். இந்தச் சிலை வெண்கலத்தில் தயாராக இருக்கிறது. சிலை செய்ய சீனக் கலைஞர்களிடம் பேசி இருக்கிறோம். கோயிலிலிருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்துக்கு க்யூ காம்ப்ளெக்ஸ், ஏசி வெயிட்டிங் ஹால், மலை மேல் வர மூன்றுவிதமான பஸ் வசதிகள்... என்று தரிசனம் செய்ய வரும் மக்களுக்குச் சரியா இருக்க வேண்டும் என்று பார்த்துப்பார்த்து செய்துவருகிறோம். இங்கே முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையிலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களைக் கையாளும் வகையில் க்யூ காம்ப்ளெக்ஸும் டிசைன் பண்ணிக் கொடுத்திருக்கோம். பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்த்து மர பொருள்கள்கொண்ட ஷாப்பிங் கடைகளை இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் கிராம மக்களைக் கவரும்விதமாகவும் அமைத்துள்ளோம்.

இந்த புராஜெக்ட்டுக்காக முதலமைச்சரிடம் கிட்டத்தட்ட 50 முறை பேசியிருப்பேன். மதியம் இரண்டு மணிக்குப் போனால் இரவு 12 மணி வரைகூட பேசுவோம். அவருக்கு இந்த புராஜெக்ட் குறித்து ஆர்வமும் தெளிவும் அதிகமாகவே இருக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் போல் இந்தக் கோவிலுக்காகவும் முதலமைச்சர் ஒரு கமிட்டி தொடங்கினார். இந்த புராஜெக்ட்டில் மட்டும் கிட்டத்தட்ட 3,000 பேர் வேலைசெய்கிறார்கள். 80 சதவிகிதம் ஸ்டோன் வொர்க் மற்றும் 40 சதவிகிதம் சிவில் வொர்க் முடிந்துள்ளது. இன்னும் ஏழெட்டு மாதங்களில் முழுப் பணியையும் நாங்கள் முடித்துவிடுவோம்."

``ஆந்திரத் தலைநகர் அமராவதியையும் நீங்கள்தான் டிசைன் செய்கிறீர்கள். அதில் என்ன சிறப்பு?”

“முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரை, தலைநகர் டிசைன் பண்ணுவதில் நம் பாரம்பர்யம், வரலாறு இரண்டையும் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். இந்த வேலையை இப்போது லண்டன் தலைமையகத்தை டிசைன் பண்ணின `நார்ம் ஆஃப் வெஸ்ட்’ என்ற  கம்பெனியுடன் சேர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். அமராவதி தி பெஸ்ட் தலைநகராக வர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். அரசாங்க புராஜெக்ட். பொதுமக்களோட வரிப்பணத்துக்கு நாம நியாயம் செய்யணும். வொர்க் முடியும் வரை மீட்டிங்ஸ், புராஜெக்ட் புராகிரஸ், பிரஸ் என்று ஏகப்பட்ட சவால்கள்.

என்னைப் பொறுத்தவரை, டிசைனிங் என்பது ஒரு பெருங்கடல். இங்கே நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு இன்ஸ்டிட்யூட்டில் கட்டடக் கலை படிக்கும் மாணவர்கள் புத்தகங்களைப் படித்து தெரிந்துகொள்வதைவிட நிறையப் பயணம் செய்து பலவிதமான கோயில்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன். நானும் என்னை அப்படித்தான் வளர்த்துக்கொண்டேன். அதேபோல சூழலுக்குத் தகுந்தாற்போல் முடிவெடுக்கும் தன்மை இந்தத் துறையில் அவசியமான ஒன்று. இந்த புராஜெக்ட்டுக்கான டிசைனை குடியரசுத் தலைவருக்கும் கவர்னருக்கும் போட்டுக்காட்டினேன். அவங்களுக்குப் பிடித்துப்போய் என்னைப் பாராட்டினார்கள். நாம் பண்ணும்வேலை உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்தால் நாம் நிச்சயம் பெரிய இடத்துக்குப் போவோம்."

``உங்கள் ஃபேமிலியைப் பற்றிச் சொல்லுங்கள்?”

``நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் தெலுங்கில் முதல் படம் பண்ணும்போது என்னை ஆர்ட் டைரக்டராக ஒர்க் பண்ண அழைத்தார். அப்பா ஆர்ட் டைரக்டராக இருந்தாலும் நான் ஷூட்டிங் பார்க்காமலேயேதான் வளர்ந்தேன். அதனால் அவர் படத்துக்கு வொர்க் பண்ண ஆரம்பத்தில் மறுத்தேன். ஆனால், பவன் என்மேல் நம்பிக்கைவைத்து வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் பவன் கல்யாணுக்குத் தங்கையாக நடித்த வாசுகியை விரும்பினேன். அந்தப் படம் முடிந்தபிறகு என் காதலைத் தெரிவித்து கல்யாணம் செய்துகொண்டேன்.

என் ஒவ்வொரு புராஜெக்ட்டிலும் வாசுகியின் சப்போர்ட் நிச்சயம் இருக்கும். இப்போ அமராவதி புராஜெக்ட்லயும் அவங்க என்னுடன் வொர்க் பண்ணுகிறார்கள். மகள் ஹர்ஷிதா, இப்போது டென்த் முடித்திருக்கிறார். அவருக்கு மருத்துவத் துறையிலதான் ஆர்வம். பையன் ஷிவசந்திப்சாய். செவன்த் முடித்திருக்கிறார். அவருக்கு என்னைமாதிரி வரைவதில் ஆர்வம். என் உறவினர்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் இருப்பதால் அங்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு அம்மாவும் தம்பியும் இருக்கிறார்கள். அப்பா காலமாகிவிட்டார். அவர் தமிழில் ரஜினி, கமலுடன் அதிகப் படங்கள் ஒர்க் பண்ணியுள்ளார். சீக்கிரமே சென்னையில ஒரு டெம்பிள் புராஜெக்ட் பண்ணும் திட்டம் இருக்கிறது.”

``இயக்குநர் ராஜமெளலியுடன் வேலை செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?”

``ராஜமெளலியின் முதல் படத்தில் நான்தான் ஆர்ட் டைரக்டர். அவர் மிகப்பெரிய க்ரியேட்டிவ் பெர்சன். எப்பவும் பெஸ்ட் தர வேண்டும் என்று விரும்புவார். அவருக்கு டைரக்‌ஷன் தவிர, ஆர்ட் டைரக்‌ஷன், கிராஃபிக்ஸ், போட்டோகிராஃபி என்று பல துறைகளில் ஆர்வம் அதிகம். இயக்குநர்கள், ஆர்ட் டைரக்டருடன் இன்வால்வ் ஆகி வேலைசெய்வது மிகக்குறைவு. ஆனால், ராஜமெளலி டிசைன்ஸ், கரெக்‌ஷன்ஸ், சஜெஷன் என்று என்னுடன் இன்வால்வ் ஆகி ஒர்க் செய்து பெஸ்ட்டை வரவைப்பார். அவருக்கும் அவருடன் ஒர்க் பண்ணும் டீமுக்குமான அலைவரிசை பலமாக இருக்கும். அதனால்தான் இன்று அவர் வெற்றிப்பட இயக்குநராக இருக்கிறார். ராஜமெளலி படத்தில் அவர் மட்டுமல்லாமல் அவர் நினைத்ததை நிறைவேற்ற அவருடன் சேர்ந்து அவருடைய குடும்பமே வேலை செய்யும். அவருடன் வேலை செய்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.”

அடுத்த கட்டுரைக்கு