Published:Updated:

''ஓவியா... கேமரா முன்னாடி எப்படியோ நேர்லயும் அப்படித்தான்!’’ - ‘நண்பன்’ கதிர்

''ஓவியா... கேமரா முன்னாடி எப்படியோ நேர்லயும் அப்படித்தான்!’’ - ‘நண்பன்’ கதிர்
''ஓவியா... கேமரா முன்னாடி எப்படியோ நேர்லயும் அப்படித்தான்!’’ - ‘நண்பன்’ கதிர்

“சமந்தா கல்யாணத்துக்காக கோவா வந்திருக்கேன். கல்யாணம் முடிஞ்சதும் கூப்பிடவா?” - அந்தப் பரபரப்பிலும் பதில் சொல்கிறார் கதிர். 'மதயானைக்கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கதிர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப்பெற்ற 'விக்ரம் வேதா' படத்தில் விஜய்சேதுபதி தம்பியாக வந்து, இயல்பான நடிப்பினால் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர்.

"நான் கோயம்புத்தூர்ல சிவில் இன்ஜினீயரிங் கடைசி வருடம் படிச்சிட்டு இருந்த சமயம். அங்க ஜி.வி.பிரகாஷ் சாரின் கசின் என் ஃப்ரெண்ட். அவர்தான், ‘ஜி.வி  ஒரு படம் தயாரிக்கிறார். சிட்டி பையன் மாதிரி இல்லாம நம்ம ஊர்ப் பக்கம் இருக்கிறமாதிரியான புது முகம் வேணும்னு தேடுறாங்க. அந்த ஆடிஷன்ல நீங்க கலந்துக்கங்களேன்’னு அவர் சொல்லித்தான் நான் கலந்துக்கிட்டேன். அவங்க முதல்ல என்னை டெஸ்ட் பண்ணினது, எனக்குத் தாடி வளருமா வளராதானுதான். இப்படி எல்லா டெஸ்ட்லயும் செலக்ட் ஆனபிறகு, டைரக்டர் கூடவே இருந்து படத்துக்கு என்னென்ன தேவையோ அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா என்கிட்டயிருந்து வெளியே கொண்டு வந்தார். இப்படித்தான் 'மதயானைக்கூட்டம்'  பட வாய்ப்புக் கிடைச்சுது.”

“அந்தப் படம் தாண்டியும் உங்களுக்கும் கலையரசனுக்குமான நட்பு தொடருது. அதைப்பற்றிச் சொல்லுங்க...”

"எனக்கு சினிமான்னா என்னன்னே தெரியாது. தியேட்டருக்குப் போவேன்; படம் பார்ப்பேன். அவ்வளவுதான் எனக்குத் தெரிஞ்ச சினிமா. 'மதயானைக்கூட்டம்' படத்துலதான் கலையரசன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர் சொல்லித்தான் சினிமாப்பற்றி நிறைய விஷயங்களை நான் தெரிஞ்சுகிட்டேன். என்னோட முதல் சீனுக்கு 27 டேக் வாங்கினேன். கேமரா முன்னால் நடிச்சு பழக்கமே இல்லை. அந்த டைம்ல கலையும் ‘மதயானைக்கூட்டம்’ டைரக்டர் விக்ரம் சுகுமாரனும் நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. கலையரசன் உண்மையாவே செம கேரக்டருங்க."

“முதல் காட்சி 27 டேக் வாங்கியிருக்கீங்க. பிறகு உங்களை எப்படித் தயார்படுத்திக்கிட்டீங்க?”

"முதல் படத்துல என் எல்லாக் காட்சிகளையும் விக்ரம் சுகுமாரன் நடிச்சுக் காட்டுவார். அதைப் பார்த்து நான் நடிப்பேன். ஆனால், எனக்கு சினிமா பற்றி ஒரு க்ளியரான ஐடியா கிடைச்சது, 'கிருமி' படத்துலதான். ஒரு சிலர் நடிச்சுக் காமிப்பாங்க. எல்லோருமே நடிச்சு காமிப்பாங்களானு சொல்லமுடியாது. அதுவும் இல்லாம அவங்களுக்கும் சிரமம். அதுனால, நான் நிறைய ஹோம்வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். எப்படி கேமரா பார்த்து பேசணும், வாய்ஸ் மாடுலேஷன் எப்படி மாத்தணும் இந்தமாதிரியான விஷயங்கள் நானா பண்ண ஆரம்பிச்சேன். எங்கேயாவது ரோட்டுல கொஞ்சம் வித்தியாசமா யாராவது பார்த்தா, அவங்க மாதிரி பண்ண முயற்சி பண்ணுவேன். இன்னமும் ஒரு படத்துல என்னோட முதல் ஷாட் எடுக்கும் போது, இந்தப் படத்துல இருக்க முக்கியமான சீனை முதல் ஷாட்டா எடுக்க வேண்டாம்னு நான் டைரக்டர்கிட்ட சொல்லிடுவேன். ஏனா, எனக்கு அந்த டீம் கூட அந்த இடத்துல செட் ஆகுறது கொஞ்சம் லேட் ஆகும்."

'விக்ரம்வேதா' படத்துல நடிக்க எப்படி உங்களை அப்ரோச் பண்ணாங்க?

"எனக்கு புஷ்கர் - காயத்ரியை 'கிருமி' பட விழாவிலதான் தெரியும். படம் பார்த்தேன் நல்லா இருந்துச்சுனு என்னை வந்து பாராட்டிட்டு மத்த டைரக்டர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அப்போ அவங்க யாருனே தெரிலை. நீங்க யாருனு எப்படிக் கேட்குறதுனு நான் கேட்கவும் இல்லை. சினிமாத்துறையில் ஒரு முக்கியமான நபர் போல, ஒரு வேளை ப்ரொட்யூசரா இருப்பாங்கனு நானும் விட்டுட்டேன். அவங்க எனக்கு 'விக்ரம் வேதா' கதை சொன்னபோதுதான் இவங்க டைரக்டர்னே தெரியும். மாதவனும், விஜய் சேதுபதியும் நடிக்குறாங்க. உங்களுக்கு ஒரு முக்கியமான ரோல் இருக்கு பிடிச்சா பண்ணுங்கனு சொன்னாங்க. நான் அப்போதான் பா.ரஞ்சித் சார் ப்ரொடக்சன்ல ஒரு படத்துல கமிட் ஆகியிருந்தேன். அப்புறம், சேது அண்ணாட்டதான் கேட்டேன் என்ன பண்றதுன்னு. அவருக்கும் எனக்கும் 'கிருமி' படத்துல இருந்து நல்ல பழக்கம். நான் அப்போவே அண்ணன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். அவர்தான் 'உனக்குப் பெரிய ப்ளஸா இந்தப் படம் இருக்கவும் வாய்ப்பு இருக்கு. நீதான் முடிவு பண்ணணும்'னு சொல்லிட்டார். அப்படிதான் நான் உள்ளே வந்தேன்.’’

'விக்ரம் வேதா' பட அனுபவம் பத்தி சொல்லுங்க ப்ரோ...

"உண்மையைச் சொல்லணும்னா நான் எந்த எதிர்பார்ப்பும் இந்தப் படத்துக்கு வச்சுக்கலை. ஒரு சின்ன ரோல் பண்ணப்போறோம்னு ஒரு சின்ன ஃபீல் இருந்துச்சு. ஆனா, செட்டுக்குப் போனா அவ்வளவு ஜாலியா இருக்கும். இந்த மாதிரி எந்த டீமும் இருக்கமாட்டாங்க. ஷூட் எப்படி ஆரம்பிச்சது எப்படி முடிஞ்சதுனே தெரியலை. சேது அண்ணா செம கம்ஃபர்டபுள். அதேபோல, மேடி சார் சூப்பர் டைப். இது என்னோட முதல் ஷாட் சேது அண்ணா கூடதான். கொஞ்சம் பதட்டமா இருக்குனு அண்ணாகிட்ட சொன்னேன். அவர்தான் எனக்கு நல்ல சப்போர்டிவா இருந்தார். புள்ளிங்கிற கேரக்டர் யார் அவன் என்ன எல்லாம் பண்ணுவான் இது மாதிரி எல்லாமே எனக்கு ஒரு கதையா சொல்லுவார். அதைப் புரிஞ்சு நானும் நடிச்சிருவேன். 'டசக்கு டசக்கு' ஷூட் பண்ணும்போது செட்டே ஜாலியோ ஜாலி. அதுல எல்லோருமே அவ்வளவு என்ஜாய் பண்ணி பண்ணிருப்போம். "

'சிகை' ஏன் லேட் ஆகுது ப்ரோ ? லேடி கெட்டப் போட்டிருக்கீங்களாமே... 

"நியுயார்க் திரைப்பட விழாவுக்காக வெயிட் பண்ணோம் ப்ரோ. அப்புறம், இது மாதிரியான சின்ன படங்கள் ரிலீஸ் ஆகுற டைமிங் ரொம்ப முக்கியம். படத்துல நடிக்கிறதைவிட ரிலீஸ் பண்றதுதான் பார்த்துப் பார்த்து பண்ணணும். 'சிகை' படம் க்ரைம் த்ரில்லர். கதை கேட்டவுடனே ரொம்ப பிடிச்சிருந்தது. புதுசா முயற்சி பண்ணலாம்னுதான் இந்த லேடி கெட்டப். எப்பவும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாதான் படம் இருக்கும்."

உங்க முதல் பட ஹீரோயின் ஓவியா இப்போ பயங்கர பாப்புலராகிட்டாங்க. அவங்களைப் பத்தி சொல்லுங்க... 

"எல்லோருமே கேமரா முன்னாடி ஒரு மாதிரி, பெர்சனலா ஒரு மாதிரியும்தான் இருப்பாங்க. ஆனா, ஓவியா அப்படியில்லை. அப்போ எப்படி இருந்தாங்கலோ அதே மாதிரிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலையும் இருந்தாங்க. அவங்க அவங்களாகத்தான் இருந்தாங்க. ஷூட்டிங்ல பாத்த மாதிரிதான் அதுலயும் இருந்தாங்க. ஓவியா எனக்கு  நல்ல ஃப்ரெண்ட்."

என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க? சினிமாவில உங்களுடைய ஆசை என்ன ?

" 'சிகை' வெயிட்டிங்ல இருக்கு. ஷ்ருஷ்டி டாங்கே கூட 'சத்ரு', பா.ரஞ்சித் சார் ப்ரொடக்சன்ல 'பரியேறும் பெருமாள்', அப்புறம் இன்னொரு படம் கமிட் ஆகியிருக்கேன் இன்னும் பேர் வெக்கலை. சினிமாவில் என்னுடைய ஆசை செல்வராகவன் சார் டைரக்‌ஷன்ல நடிக்கணும், தலைவர் கூடவும் தளபதி கூடவும் ஒரு படத்திலாவது நடிக்கணும். புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருக்கணும் பாஸ்".

பின் செல்ல