Published:Updated:

“நல்லவேளை கல்யாணம் பண்ணிட்டேன்; இல்லைனா...?!” பாபி சிம்ஹா பர்சனல்

“நல்லவேளை கல்யாணம் பண்ணிட்டேன்; இல்லைனா...?!”  பாபி சிம்ஹா பர்சனல்
“நல்லவேளை கல்யாணம் பண்ணிட்டேன்; இல்லைனா...?!” பாபி சிம்ஹா பர்சனல்

“என்னது சண்டை நடக்குமாவா? அதெல்லாம் நிறையாவே நடக்கும். காலையில எழுந்த உடனேயே இவருக்கு காபி இல்லைனா டீ பக்கத்துல இருக்கணும். இல்லைனா கோவம்; சண்டை, பிறகு ஏதாவது பொருள் உடையும்...” என்ற ரேஷ்மியிடம், ‘யம்மா நீ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு... மைக்ல பேசிட்டு இருக்க” என்றபடி தொடர்கிறார் பாபி சிம்ஹா. “ரேஷ்மி சொன்னதும் ஒருவகையில் உண்மைதான். ஆனால் அதெல்லாம் முத்ரா பிறக்குறதுக்கு முன்னாடி. ஒரு முறை நடந்த சண்டையில் நான் கொஞ்சம் சத்தமா கத்திட்டேன். முத்ரா ஒரு மாதிரி பயந்து அழ ஆரம்பிச்சுட்டா. அதைப்பார்த்ததும் எனக்கே கண்ணு கலங்கிடுச்சு. அதுக்குப்பிறகு, நான் அப்படிக் கத்துறதே இல்லை” என்றபடி முத்ராவுக்கு முத்தமிடும் பாபி சிம்ஹா, “தவிர நாங்க சண்டை போட்டா பிக்ஸிக்குப் பிடிக்காது. சத்தம் கொஞ்சம் அதிகமானாலே இது உள்ளப்போய் ஒளிஞ்சிக்கும். அன்னிக்கு ஃபுல்லா சாப்பிடாது. பிறகு அதுக்கு முன்னால நின்னு நாங்க நல்லபடியா பேசணும். அவளைத் தூக்கி கொஞ்சினால்தான் சாப்பிடும்” என்று தன் நாய்க்குட்டி பிக்ஸியை வருடிக்கொடுக்கிறார். பாபி சிம்ஹா-ரேஷ்மிமேனன் இந்தக் காதல் தம்பதி தங்கள் திருமணத்துக்குப்பிறகு முதல் முறையாக மீடியாவுக்குப் பேசுகிறார்கள். 

முதலில் பாபி சிம்ஹாவுக்கான கேள்விகள்... 

“வில்லன், ஹீரோனு மாறிமாறி நடிக்குறீங்க... ஒரு படத்தை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்குறீங்க?”
“'ஹீரோவா, வில்லனானு பார்க்குறதில்லை. கதை, களம், கதாபாத்திரம் மூணும்தான் கேட்பேன். மூணும் பிடிச்சிடுச்சுன்னா உடனே கமிட் ஆகிடுவேன். அது ஹிட்டா குட்டா என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நெகட்டிவ் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'திருட்டுப்பயலே 2' கதை கேட்கும்போது என் முதல் 15 நிமிஷம் சூப்பரா இருக்குனு சொன்னேன். அடுத்து பிரசன்னா கேரக்டரை கேட்டதும் அந்தக் கதாபாத்திரம்மேல லவ் வந்திருச்சு. ‘வேணும்னா, அந்த கேரக்டரை நான் பண்ணவா’னு கேட்க ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. ஆனால் ஹீரோ, வில்லன்னு மாறிமாறி பண்ணினா படம் ரிலீஸ் ஆகும்போது பாதிப்பு வரும்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா அப்படி பண்றதுல என்ன தப்பு? கதைக்கு எது தேவையோ அதைப் பண்ணப்போறோம். உதாரணத்துக்கு, விஜய் சேதுபதி. ஹீரோவோ, வில்லனோ மக்களைச் சந்தோசப்படுத்தணும், அவ்வளவுதான்.'

“'திருட்டுப்பயலே 2', 'சாமி 2' மாதிரியான இரண்டாம் பாகப் படங்களுக்குனு ஏதாவது ஸ்பெஷல் பயிற்சி எடுப்பீங்களா?”
“முதல் பார்ட்ல ஒருத்தர் நடிச்சு, அடுத்த பார்ட்ல வேறொருவர் நடிச்சா ரசிகர்கள் இரண்டு பேரையும் ஒப்பிட்டு பார்ப்பாங்க. அதுதான் இதுல ரிஸ்க். அதுக்கு முதல் பாகத்துல பண்ணின கேரக்டரைவிட அடுத்த பாக கேரக்டர் இரண்டு மடங்கா பண்ணணும். இல்லைனா ஏத்துக்க மாட்டாங்க. அதுக்கு ஒரு கிக் தேவைப்படுது. ஆனா, அதுக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. ‘சாமி’ படத்தை நாலுமுறை பாத்திட்டு அப்புறம் நான் நடிச்சா அது காபி அடிக்கிற மாதிரி ஆகிடும். அவர் சீன் சொல்லும்போது, ‘இது இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்’னு எனக்கு தோணும் விஷயத்தை டைரக்டர் சார்ட்ட சொல்லி எனக்கான நடிப்பை பெஸ்ட்டா கொடுப்பேன். அவ்வளவுதான்.”

“ஓ.கே. ஹீரோ, வில்லன், சப்போர்டிங் ரோல்... இந்த மூணையும் எப்படி பேலன்ஸ் பண்றீங்க?”
’‘புடிச்ச வேலையைப் பார்க்கிறோம் பிரதர், மத்தபடி ரெஸ்பான்ஸ் அதுவே தானா வரும். ஹீரோ, வில்லன் ப்ராஜெக்ட் ஒரே நேரத்துல பண்ணும்போது கெட்டப்ல பிரச்னை வரும். ஹீரோவா ஒரு படத்துல க்ளீன் ஷேவ் பண்ணி வரணும். அதே டைம்ல வில்லனா வேறொரு படத்துல நிறைய முடியோட பண்ணணும். அதுனாலயே சில படங்கள்ல விக்வைக்க ஆரம்பிச்சேன். ஒரே நேரத்துல இப்படி நிறைய படங்கள் பண்ணும்போது நிறைய அடிபட்டேன். சரியா தூங்காம, டயலாக்கை சரியா கவனிச்சு நடிக்க முடியாமனு பெரிய வேதனை. இனி அந்தத் தப்பை பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன். ஹீரோவோ, வில்லனோ ஒரு படம் பண்ணினா அதை முழுமையா முடிச்சுட்டுதான் அடுத்தப் படத்துக்குப் போகணும் என்பதுல தெளிவா இருக்கேன்.”

“ 'சாமி 2'-ல் விக்ரமுக்கு வில்லன். ஹரி டைரக்ஷன். இது எப்படி அமைஞ்சது?”
''அப்ப நான் 'கருப்பன்' ஷூட்ல இருந்தேன். ‘நான் டைரக்டர் ஹரி பேசுறேன்’னு ஒரு போன் அழைப்பு. ‘அவ்வளவு பரபரப்பான டைரக்டர் நமக்கெதுக்கு போன் பண்ணப்போறார். வேற யாரோனு நினைச்சு கூப்பிட்டுட்டாரோ? இல்ல... வேற யாராவது கலாய்க்கிறாங்களோ’னு நினைச்சேன். ‘எந்தப் படம் பண்ணிருக்கீங்க’னு கேட்டேன். அவரும் 'சிங்கம்'னு சொன்னார். ‘சார் உண்மையிலே நீங்கதானா’ன்னதும் சிரிச்சுட்டார். ‘சாமி-2’ பற்றி சொன்னார். 'தப்பா எடுத்துக்காதீங்க சார், வில்லன் கேரக்டர் வேணாமே...'னு சொல்லிட்டேன். ஆனால் அவர், நீங்க கதையை கேளுங்க சார். பிடிக்கலைனா நாம இன்னொரு படம் பண்ணுவோம். அதுக்கு நான் கதை எழுதறேன்’னு அவ்வளவு எனர்ஜியுடன் சொன்னார். கதையை கேட்டேன். செம பவர்ஃபுல்னா கேரக்டர். கேட்டதுமே இம்ப்ரஸ் ஆகிட்டேன். எப்படா ஷூட் தொடங்கும்னுதான் காத்திருக்கேன்.”

“உங்க நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்குனு சில விமர்சனங்கள். ரஜினியை நேரில் பார்த்திருப்பீங்க. என்ன சொன்னார்?”
“நீங்க சொல்றதை நிறையபேர் சொன்னாங்க. நான் அவரை இமிடேட் பண்ணலை, அவரால இன்ஸ்பையர் ஆகியிருக்கேன். சின்ன வயசிலிருந்து அந்த மனுஷனை பார்த்து பார்த்து வளர்ந்திருக்கோம். அதுல இருந்து எவ்வளவு விஷயங்கள் நம்மள அறியாம நம் மூளைக்குள் போயிருக்கும்? அந்தளவுக்கு அவர் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுத்திருக்கார். 'லிங்கா' ஷூட்லதான் சாரைப் பார்த்தேன். நானும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் தான் போனோம். கதவைத் திறந்தவுடனே, 'ஹே சிம்ஹா...'னு எனர்ஜியோட வந்தார். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. அப்படியே உறைஞ்சுட்டேன். அணுஅணுவா ரசிச்ச ஒரு மனுஷன் நம் பக்கத்துல இருக்கார். அதைச் சொன்னா புரியாது பிரதர், அது வேற லெவல் எமோஷன்.”

“கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின்... பாபி சிம்ஹாவிடம் என்ன மாற்றங்கள்?”
“நிறைய மாற்றங்கள் இருக்குனு பலர் சொல்றாங்க. அப்பல்லாம் வெளியே ஃப்ரண்ட்ஸோட சுத்திட்டு இருப்பேன். இப்போ சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். இப்ப ஷூட்டிங் இல்லைனா வீட்டைவிட்டு வெளியவே போறது இல்லை. நானும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். ‘நல்லவேளை கல்யாணம் பண்ணிட்டோம். இல்லைனா தரிசா போயிருந்திருப்போம்’னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது. இப்போ எல்லா விஷயங்கள்லயுமே கன்ட்ரோலா இருக்கேன். லைஃப் நல்லா இருக்கு ப்ரதர்.”

“அம்மா, அப்பா எங்க இருக்காங்க?”
'அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் கொடைக்கானல் பேத்துப்பாறையில விவசாயம் பார்த்துட்டு இருக்காங்க. அண்ணனும் அப்பாகூட விவசாயமும் பிசினஸும் பார்த்துட்டு இருக்கார். எனக்கும் விவசாயத்துல அதிக ஆர்வம். ஊர்ல செடி கொடிகளோட இருந்துட்டு இங்க ஒரு செடிகூட வளர்க்கமுடியலையேனு யோசிச்சா வருத்தமாத்தான் இருக்குது. குறைஞ்சது 100 செடிகளாவது வளர்த்தாதான் ப்ரோ அது வீடு.”

இனி ரேஷ்மிமேனனுக்கான கேள்விகள்... 

“சினிமாவில் தொடர்ந்து நடிப்பீங்களா?”
“நடிச்சேதான் ஆகணும்னு இல்லை. பட வாய்ப்பு வந்தா நடிப்பேன். அவர் அளவுக்கு நடிப்பு எனக்கு லட்சியமெல்லாம் கிடையாது” என்கிற ரேஷ்மியை இடைமறித்த பாபி, “அவங்களுக்கு என்ன தோனுதோ அதை பண்ணட்டும். டிசைனிங் மாதிரி பிஸினஸ் ஆரம்பிக்க ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க...’ என்றதும், “கம்பெனி சீக்ரெட்டை எல்லாம் வெளிய சொல்லக் கூடாது’ என்று அவரின் தோளில் தட்டி சிரிக்கிறார் ரேஷ்மி. 

“ஓ.கே. உங்கள்ல ஒருத்தரின் படக்காட்சியை இன்னொருத்தர் பார்க்கும்போது ரியாக்ஷன் எப்படி இருக்கும்?” என்றதும் ரேஷ்மியே முதலில் பதிலளிக்கிறார். 'நான் இவர் படங்களை டிவியில் பார்க்கும்போது கமென்ட் பண்ணிட்டே இருப்பேன். ‘காஸ்ட்யூம் மாத்தியிருக்கலாம், கொஞ்சம் முடிவெட்டி இருந்தா இன்னும் நல்லா இருக்கும். முகம் ஏன் இப்படி இருக்கு’னு நிறைய சொல்லிட்டே இருப்பேன்' என்று சிரித்தவர், “என் படங்களோட காட்சிகளை நீங்க பார்த்த விஷயங்களை நீங்க சொல்லுங்க” என்கிறார். “இவங்க படங்கள்ல ‘'உறுமீன்’ தவிர அவங்களோட வேற எந்தப் படங்களையும் இதுவரை நான் பார்த்ததே இல்லை. ‘ 'இனிது இனிது' ஹீரோயினையா கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க. நான் அவங்க ஃபேன்’னு சொல்லுவாங்க. ஆனா, நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கலை’னு பாபி சொன்னதும, 'அதான் டிவியில் அடிக்கடி போடுறாங்களே பாருங்க' என்கிற ரேஷ்மியிடம், 'ஆமாம், முதல்வேலையா அந்தப் படத்தை பாக்கணும்' என்றபடி முத்ராவையும் பிஸ்கியையும் அணைத்துக்கொள்கிறார் பாபி சிம்ஹா. 

உண்மையிலேயே அவர்களின் வாழ்க்கை இனிது இனிது...