Published:Updated:

மறுநாள், முதல்வராகப் பதவியேற்பு... நள்ளிரவிலும் திக்திக் ஷூட்டிங்! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6

மறுநாள், முதல்வராகப் பதவியேற்பு...  நள்ளிரவிலும் திக்திக்  ஷூட்டிங்! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6
மறுநாள், முதல்வராகப் பதவியேற்பு... நள்ளிரவிலும் திக்திக் ஷூட்டிங்! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6

அ.தி.மு.க கட்சி தோன்றியதும், அக்கட்சிக்கு ஆதரவாக முதலில் எழுதப்பட்ட பாடல், ‘’ஒரு வாலும் இல்ல நாலு காலும் இல்ல – சில மிருகங்கள் இருக்குது ஊருக்குள்ள – இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் -- அதைக்காட்டிலும் எத்தனையோ தேவலே’’. இந்தப் பாடல் ஒரு இடைச்செருகலாக, ‘இதயவீணை’ படத்தில் சொருகப்பட்டது. காட்டில் ஒளிந்து வாழும் எம்.ஜி.ஆர்  பாடுவதாக அமைந்த இந்தப் பாடல், தமிழ்நாட்டில் உள்ள சில பகைவர்களைக் காட்டு மிருகங்களோடு ஒப்பிட்டுப் பாடுவதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, கட்சி வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் மக்களுக்கு ஊழலற்ற சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கையூட்டும் விதமாக பாடல்கள், பாடலாசிரியர்கள் உருவாகினர். எம்.ஜி.ஆர், புதியவர்களுக்கு வாய்ப்பு தரலானார். பகலில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அவர், இரவில் கட்சிக்காரர்களைச் சந்தித்து அரசியல் வியூகம் உருவாக்கினார். ‘அவருடைய இந்தத் திட்டமிடலையும் அந்தத் திட்டங்களை அவருடைய ஆட்களைக்கொண்டு செயல்படுத்திய முறைகளையும்வைத்து பார்க்கும்போது, அவர் ஒரு ராஜாங்கமே நடத்தியதுபோலதான் தோன்றிற்று’ என்றார் நடிகர் ஆனந்தன்.

பாடல்களின் உள்ளடக்கம்

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தோற்றத்துக்குப் பிறகு, தனது படங்களில் புதிய சமூகம் – சமத்துவம் – வர்க்க பேதம் இன்மை –  தி.மு.க அரசின் தீய போக்கு – புரட்சி [பொதுவுடைமை] – தன் புகழ் – தன் துணிவு – என உள்ளடக்க விஷயங்களில் முன்பைவிட அதிகம் கவனம்செலுத்தினார். பாடலாசிரியர்களிடம் சில கருத்துகளைச் சொல்லி, இவை இந்தப் பாட்டில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். சில வரிகள் அவர் நினைத்த கருத்தைத் தரவில்லை என்றால், பாடலாசிரியர்களிடம் அதைச் சொல்லி திருத்தித்தரும்படி கேட்டு மாற்றிக்கொண்டார். இவ்வாறு அவர் படப் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரது நேரடி கருத்தாகவே இடம்பெற்றன. 

புதுக்கட்சி தொடங்க திட்டமிட்ட ரசிகர்கள்

1972 அக்டோபர் மாதம் 12-ம் நாள், அ.தி.மு.க உதயமாயிற்று. அதற்கு முன்பே, ரசிகர்கள் மதுரை போன்ற நகரங்களில் தாமரை படம் போட்ட கொடி ஏற்றி, எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிவிட்டனர். அதுவரை பிரபலமாகாத சில நாளிதழ்கள், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் தரும் உத்வேகம் பற்றி நிறையச் செய்திகள் வெளியிடலாயின. தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் புறப்பட்டு எம்.ஜி.ஆரின் சத்யா  ஸ்டுடியோவுக்கும் ராமாவரம் தோட்டத்துக்கும் சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.  ரசிகர்களும் பொதுமக்களும் இவ்வளவு ஆதரவு அளிப்பர் என்று எம்.ஜியாரோ கலைஞரோ அப்போது எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி. ஆருக்கு இனி அமைதியாக யோசித்துச் செயலாற்ற நேரமில்லாமல்போயிற்று. தி.மு.க மீதிருந்த வெறுப்பும் சேர்ந்துகொண்டதால், படித்தவர்களும் கட்சி சாராத பொதுமக்களும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆங்காங்கே ரசிகர்கள் தமக்குப் பிடித்த படங்களை தி.மு.க கொடியில் போட்டு புதுக் கொடியேற்றி தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டனர். 

கட்சியையும் சினிமாவையும் இணைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் தான் இதுவரை தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தமது படங்களில் வெளியிட்ட காட்சிகளும் பாடல்களும் வீணாகிவிடக்கூடாது என்று முடிவுசெய்தார். அவற்றையும் தன் வருங்கால அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கட்சியின் கொடி மற்றும் வண்ணத்தைத் தீர்மானித்தார். தி.மு.க கொடியின் நிறங்களுடன் பொதுவான ஒரு வெள்ளை நிறத்தை மட்டும் சேர்த்துக்கொண்டார். கட்சித்தலைவராக அறிஞர் அண்ணாவையும் அவர் உருவத்தையும் கொடியிலும் கட்சியின் பெயரிலும் இணைத்தார். ஆக, இப்போது அண்ணா ஆரம்பித்த தி.மு.க தான் இவருடைய அண்ணா தி.மு.க  என்பது போலவும் இவர் அக்கட்சியைப் பொதுச் செயலளாராக இருந்து நடத்துவது போலவும் ஒரு நிலையை உருவாக்கினார். இப்போது, இதுவரை அவர் தி.மு.க-வுக்கு ஆதரவாக அமைத்த காட்சிகளும் பாட்டுகளும் இனி இவருக்கும் பயன்படும். உதயசூரியனை வணங்குவது, போற்றுவது, பாராட்டுவது போன்ற காட்சிகள் மட்டும் பயன்படாது.

‘இதயவீணை’ படம், எம். ஜி.ஆரை தி.மு.க-வை விட்டு வெளியேற்றிய பிறகு வந்தாலும், அது மணியனின் நாவலை படமாக்கிய விதத்துக்காக ஓடி வெற்றிபெற்றது. அதில், அரசியல் பெரிதாகப் பேசப்படவில்லை. காஷ்மீரின் அழகிய காட்சிகள், மஞ்சுளா மற்றும் லட்சுமியின் அழகுத்தோற்றம், எம்.ஜி.ஆர் யேசுகிறிஸ்து போன்ற தோற்றத்தில். ஆனால், காவி உடுத்தி மாறுவேடத்தில் வந்து தங்கை லட்சுமியின் திருமணத்தில், ‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக’ என்ற பாடல் பாடியது ஆகியன இப்படத்தை வெற்றிபெறவைத்தன. 

‘உலகம் சுற்றும் வாலிபன்’

1970-ல் உலகப் பொருள்காட்சியான எஃஸ்போவில் படம் பிடிக்கப்பட்டு, 1973ல் திரைக்கு வந்த படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்று தன் அதிகாரத்தை முழுதாக தி.மு.க செலுத்தியும், படப்பெட்டியை வைக்கோல் வண்டியிலும் பேருந்தில் இஞ்சின் இருக்கும் இடத்திலும் ஒளித்துவைத்து, சரியான நேரத்தில் படத்தை வெளியிட்டு, தி.மு.க-வினரை தன் முதல் முயற்சியிலேயே மண்ணைக் கவ்வவைத்தவர் எம்.ஜி.ஆர். இந்தப் படம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு இதன் அரசியல் சார்பற்ற ஆனால், அரசியல் வெற்றியை முன்னறிவுப்பாக வெளியிட்டதை மட்டும் காண்போம். இந்தப் படத்தில் பெயர் போடும்போது, அதிர்ஷ்டத்தின் சின்னமாக விளங்கும் காகிதப்பூ [போஹன்வில்லா] பின்புலத்தில் ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் – இப்படை தோற்கின் எப்படை வெல்லும் – நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை நிச்சயம் உலகம் பாராட்டும்’ என்ற பாடல், சீர்காழியின் கம்பீரக் குரலில் முழங்கிற்று. இன்றுவரை அ.தி.மு.க கட்சிக் கூட்டங்களில் இப்பாடல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

1974ல் படமும் பாட்டும்

1974ல் ‘நேற்று இன்று நாளை’, ‘உரிமைக்குரல்’, ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘நாளை நமதே’, ‘இதயக்கனி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில், ‘சிரித்துவாழ வேண்டும்’ [ஜஞ்சீர்], ‘நாளை நமதே’ [யாதோங்கி பாரத்] ஆகிய இரு படங்களும் இந்திப் படத்தின் தழுவல்கள். ‘ நேற்று இன்று நாளை’ படத்தில், ‘தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து – அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று – என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும்  நாளை – இது அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை’ என்ற பாடல், அ.தி.மு.க பிரச்சாரப் பாடலாகவே எழுதி இசையமைக்கபட்டு, படத்தில் இடம்பெறச் செய்து, பெரும் வரவேற்பு பெற்றது.  இந்தப் பாட்டில் வரவேண்டிய கருத்துகளை எம்.ஜி.ஆர், வாலியிடம் எடுத்துரைத்தார். ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தில் ஊழல், தெரு விளக்கு போட தொழிலாளிகள் வேலைக்கு வந்ததாகப் பதிவேடு மற்றும் ஆவணங்களைத் தயாரித்து அறிவியல் பூர்வமாகச் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட மஸ்டர் ரோல் ஊழல்...  ஆகியவற்றைச் சொல்லும் வகையில்...
  
   ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே – தாம் 
  வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார்  நகரசபையிலே
  ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் – தாம் 
  வாழ்வதற்கு ஊர்ப்பணத்தில் வீடு கட்டினார்

இந்தப் பாட்டு நேரடியாக மக்களுக்கு எதிரான தி.மு.க-வின் போக்கை எடுத்துச்சொல்லும் பிரச்சாரப் பாடலாகவே அமைந்தது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், அ.தி.மு.க பெற்ற வெற்றியும் ஒரு போஸ்டராக இப்படத்தில் ஒரு காட்சியில் காட்டப்பட்டது.  
   
ஒரு சம்பவம் என்பது நேற்று  -- நேற்று
அது சரித்திரம் என்பது இன்று --  இன்று 
அது சாதனை ஆவது நாளை  -- நாளை 
வரும் சோதனை தான் இடைவேளை 

என்று இப்பாடலை முடித்து, உடனே இடைவேளை விட்டதும் மக்கள் இப்பாடலின் உள்ளடக்கம்குறித்து விவாதிக்க நேரம் கிடைத்தது. பாடலை படத்தில் இடம்பெறச்செய்யும் இடமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பாடல் மூலமாக அறிந்துகொள்ளலாம். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர் அழகாகத் தோற்றமளிப்பார். அவரின் வயது தெரியாதபடி மேக்கப்பும் உடைகளும் வெகு பொருத்தமாக இருந்தது. மஞ்சுளா, லதா என இருவர் ஜோடிகளாக நடித்தனர். படம் தயாரித்த அசோகன், குடிகாரனாகவும் பிச்சைக்காரனாகவும் நடித்திருப்பார். 

உரிமைக்குரல்

தெலுங்குப் படத்திலிருந்து கதை எடுத்து, தமிழில் உருவான ‘உரிமைக்குரலில் ‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில் முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் – நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவர்க்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்’  என்ற பாட்டு  எம்.ஜி.ஆர் நல்ல மனிதர், ஆனால் அவரின் எதிரணியைச் சேர்ந்தவர் அப்படி அல்ல என்பதை நேரடியாகச் சுட்டியது. மேலும்  
     நல்லவன் இலட்சியம் வெல்வது நிச்சயம்
     அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம் 

என்றுதான் அண்ணாவின் வழிவந்தவன் என்பதை நிரூபிக்க முயன்றிருப்பார். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில், தாய் மண்ணை மீட்க உயிரைக்கொடுத்தும் போராடுவேன் என்று எம்.ஜி.ஆர் பேசிய வீர வசனம், 'மக்களை தீய சக்தியிடமிருந்து மீட்பேன்' என்று எம் ஜி ஆர் வாக்குறுதி அளிப்பதாக இருந்தது.

நாளை நமதே 

எம்.ஜி.ஆர் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க ஆரம்பத்தில் தயங்கினார். இது, மியூசிக் சப்ஜெக்ட். இதில் எனக்கு என்ன ஸ்கோப் இருக்கிறது என்றார். ஆனால், அந்த ஃபேமிலி சாங் என்ற மியூசிக்கையே அவர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். அந்தப் பாட்டுதான்...
   
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த சொந்தங்கள் எல்லாம் 
ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே

இப்பாடலில், 'தி.மு.க-வை எதிப்பவர்கள் அனைவரும்  ஒன்று சேர்ந்தால் வென்றுவிடலாம்' என்ற நம்பிக்கையை ஊட்டினார். 

இதயக்கனி

தமிழுக்கு முதல் பம்பாய் வரவான 'தோரஹா' புகழ் ராதா சலூஜா எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த படம். எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில், 'காவேரிக்கு இணையாக நீண்ட காலம் வாழ்க' என்று எம்.ஜி.ஆரை வாழ்த்துவதாக இடம்பெற்ற பாடல், அ.தி.மு.க பிரசாரப் பாடலாக அமைந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தேர்தல் பணிகளுக்கு வருகை தரும்போது ஒலிக்கும் பாடல்களில், இதுவும் ஒன்றாகும். இப்பாடல் காட்சியில்... இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து ஒருமையாக எம்.ஜி.ஆரை வாழ்த்திப் பாடுவர். இதுவும் கட்சிக்கு மத பேதம் கிடையாது என்பதை சுட்டிக்காட்டும் டெக்னிக்தான். மேலும், எம்ஜியார் சத்யா தோட்டம் என்று தன் காபி தோட்டத்தின் பெயரைக் காட்டும்போது, அங்கு கட்சி சின்னமும் இடம்பெற்றிருக்கும். 

1974ல் பல்லாண்டு வாழ்க

இப்படமும் 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற இந்திப் படத்தின் மூலக்கதையைக்கொண்டு மட்டும் தயாரிக்கப்பட்டதாகும். ஐந்து பயங்கரமானவர்களை திருத்தும் சிறைத்துறை அதிகாரியாக  எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். இதில், ஒன்றே குலம் என்று பாடுவோம் –ஒருவனே தேவன் என்று போற்றுவோம் – அன்னை இதயமாக அன்பு வடிவமாக – வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம் என சர்வமத பிரார்த்தனைப் பாடல் ஒன்றை காட்சிப்படுத்தியிருப்பார். இதுவும் அ.தி.மு.க அனைத்து மதத்தினருக்குமான கட்சி என்ற கொள்கையை நிறுவ உதவியது. அதுபோல மக்கள் ஆதரவும் அ.தி.மு.க-வுக்கு வளர்ந்துவந்தது.

நினைத்ததை முடிப்பவன் – 1974

இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படம், இந்தியில் வெளிவந்த 'சச்சா ஜூட்டா' [உண்மையும் பொய்யும்] என்ற படத்தின் தமிழாக்கம். இதில், கண்ணை நம்பாதே என்ற பாட்டு, பிரசாரப் பாட்டாக அமைந்திருந்தது. அதில் ஒரு வரி, ‘வந்த வழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று பாடல் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்துப்பார்த்த எம்.ஜி.ஆர், தன் வழி என்பது நல்ல வழியாக இருக்கலாம் அல்லவா அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாதே. வந்தது நல்ல வழியாக இருந்து, இப்போது தவறான வழியில் போகின்றனரே என்பதுதான் நாம் சொல்லவேண்டிய கருத்து என்றார். உடனே பாடல் ஆசிரியர், ‘வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே’ என்று மாற்றி எழுதினார். எம்.ஜி.ஆரும் அந்த வரியை நடித்துக்காட்டும்போது, கையால் கண்ணை மூடிக்கொண்டு போவதை அபிநயித்துக் காட்டி, பாட்டை விளக்கியிருப்பார். அந்தப் பாடல் வரிகள்...
  
  வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே
  என் மனதை நானறிவேன் என் உறவை அறிவேன் 
  எதுவான போதிலும் ஆகட்டுமே 
  நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்
  என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.

உழைக்குக் கரங்கள்

கா. காளிமுத்து வசனம் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த பாடல். இந்து மதத்தில் உள்ள போலிச் சாமியார், கணவனை இழந்த இளம்பெண்ணை சீரழித்ததைத் தட்டிக்கேட்கும் பாத்திரமாகவும் தேவதாசி குலத்தில் பிறந்த பெண்ணைத் தொந்தரவுசெய்யும் மைனர்களை அதட்டிக் கேட்கும் பாத்திரமாகவும், ஆதரவற்ற பெண்குலத்தின் காவலனாகவும் நடித்திருந்தார். யேசுதாஸ் பாடிய, நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே -  உழைக்கும் கரங்களே  புரட்சி மலர்களே என்ற பாடலில் ‘’ ஏர் பூட்டி தோளில் வைத்து -  இல்லாமை வீட்டில் வைத்து – போராடும் காலம் எல்லாம் போனதம்மா-  எல்லார்க்கும் எல்லாம் உண்டு – என்றாகும் காலம் இன்று – நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா என்றும் விடியும் வேளை வரப்போகுது – தர்மம் தீர்ப்பை தரப்போகுது – நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை என்றும் நம்பிக்கை ஊட்டிய வரிகள் இடம்பெற்றன. 

நீதிக்கு தலை வணங்கு- 1976

'நீதிக்கு தலை வணங்கு' படம்,  தெரியாமல் ஒருவர்மீது காரை ஓட்டிக் கொன்றுவிட்ட தவறுக்கு, எம்.ஜி.ஆர் காவல்துறையிடம் தன்னையே ஒப்புவிக்கும் படம். இதில், ஏழைகளுக்கு பூசாரியாக இருந்துகொண்டு பெண்களுக்குத் துன்பம் தரும் தேங்காய் சீனிவாசனிடம் எம்.ஜி.ஆர் ‘’ நான் பார்த்தா பைத்தியக்காரன் என்று ஒரு பாட்டை பாடுவார். அதில், பெற்றெடுத்த தாயாக மற்றவரை நான் நினைத்து பிள்ளையென வாழ்பவன்டா – அவர் பெருமைகளைக் காப்பவன்டா என்று தாய்க்குலத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்திருப்பார்.

இன்று போல் என்றும் வாழ்க [1977]

தேர்தல் நெருங்கிவரும் காலகட்டமானதால், எம்.ஜி.ஆர் வெற்றிபெறுவதும் உறுதியாகிவந்த காரணத்தால், பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து விரைவாக படத்தை முடிக்க வேண்டும் என பரபரப்படைந்தார்கள். தொழிலதிபர்கள், எம்.ஜி.ஆரை தேர்தலுக்கு முன்பே சந்தித்து, தனது ஆதரவைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவரைப் பார்க்க வந்து குழுமினர். இந்நிலையில், நடிக்கும் படங்களில் அ.தி.மு.க பிரசாரப் பாடல்களைப் புகுத்த, புதுப்புது பாடல் ஆசிரியர்களுக்கு பாடகர்களுக்கும் வாய்ப்பளித்துவந்தார்.  

தாம் அழைக்கும் நேரம் வந்து எவ்வளவு நேரமானாலும் இருந்து, தன் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடிய ஆட்களையே அவர் விரும்பினார். அந்தச் சமயம், ஒரு பாடல் காட்சி எடுத்தார். அதில்தான் தொழிலாளர் அனைவருக்கும் ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தினார். தொழிலாளர் கைகளைப் பற்றிய பாட்டாக இருந்தாலும், இதைக் கேட்கும்போதும் சில காட்சிகளில் தன் கையை உயர்த்தி க்ளோசப் காட்சியாக எடுத்ததாலும் இந்தக் கை பாடல், எம்.ஜி.ஆருக்குரிய போற்றிப் பாடலாகவே அமைந்தது.
    
   இது நாட்டை காக்கும் கை – உன் வீட்டை காக்கும் கை
    இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
    இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

என்று தொடங்கும் இப்பாட்டில், இது பெண்கள் தம் குலம் காக்கும் கை, இது திருடும் கை அல்ல என்று எதிரெதிர் கருத்துக்களாக அமைத்துப் பாடியிருப்பார். பிற்காலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 'கை சின்னம்' அமைந்துவிட்டதால், அவர்களுக்கும் பயன்பட்டது.

மீனவநண்பன் 

ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த இரண்டாவது எம்.ஜி.ஆர் படம். இதில் வலிமையான இரண்டு கொள்கைப் பாடல்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சிக்கு சவால் விடுவதைப் போல...
   
நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் 
   என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் 

எனத் தொடங்கும் பாடலில்  

மாறினால் மாறட்டும் இல்லையேல் மாற்றுவோம் – என்றும்
  நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள் சிறையாய் இருக்குதையா 
   நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும் நிறைவாய் இருக்குதையா

என்றும், இரு கட்சியினரின் இயல்பை விவரித்துப் பாடியிருப்பார். பட்டத்து ராஜாவும் பட்டாளச் சிப்பாயும் ஒன்றான காலம் இது எனற பாடலில், பல சமதர்மக் கருத்துகளைச் சொல்லியிருப்பார். ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி பிறக்கப்போகிறது என்ற தொனி, அ.தி.மு.க ஆரம்பித்த பிறகு வந்த பாடல்களில் ஒலித்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஜூன் 29 அன்று இரவு முழுக்க நடந்தது. மறுநாள் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்க உள்ள நிலையிலும் தொடர்ந்து ஷூட்டிங்கில் ஈடுபட்டார். நள்ளிரவிலும் நீண்ட ஷூட்டிங்கில் அனைத்துக் காட்சிகளும் கச்சிதமாக வர வேண்டுமே என்ற பதற்றத்துடனே படக்குழுவினர் பரபரக்க, எம்.ஜி.ஆர் போகிற போக்கில் அனைத்தையும் ஓ.கே செய்தார்.

முதல்வரான பிறகு வந்த படங்கள்

'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' [1978] என்ற படம் தமிழகத்தை சோழனிடமிருந்து பாண்டியனான எம்.ஜி.ஆர் மீட்டதாகப் பொருள் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, அவர் முதல்வர் ஆன பிறகு திரைக்கு வந்தது. இப்படம், தேர்தல் சமயத்தில் வந்திருந்தால், வெற்றிவிழா படமாக அமைந்திருக்கும். எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றபிறகு என்பதால், ரசிகர்களிடையே படபடப்புக் குறைந்து, ஒரு மிதப்பு ஏற்பட்டுவிட்டது. இப்படம், தமிழீழத்தின் விடுதலையும் தன்னுள் உள்ளடக்கியதாக பாடல்கள் அமைத்திருந்தன. விடுதலைப்புலிகள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க...
    
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை  
    தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் – எங்கள் 
    தாய்த்திரு நாட்டை உயர வைப்போம் 

என்ற பாடலில்...
   
வீரமுண்டு வெற்றி உண்டு 
   விளையாடும் களம் இங்கே உண்டு 
  வா வா என் தோழா  

என்ற வரிகள், போர் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருந்தன.
   
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் 
   கொள்கை வீர தியாகங்களை ஏற்றிட வேண்டும்

இன்னொரு பாடலும் வீரம் புகட்டும் பாடலாக முன்னேற்றத்துக்கு வித்திட்ட பாடலாக அமைந்தது.
   
வீரமகன் போராட  வெற்றி மகள் பூச்சூட 
   மானம் ஒரு வாழ்வாக வாழ்வுநதி தேனாக
   முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்

இத்துடன், எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வு நிறைவுபெற்றாலும், அவர் தன் கட்சிக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் இதே திரைக்கலைஞர்களைக் கொண்டு...
  
இரட்டை இலை வெற்றி தந்த இலை – உயர்
  இலட்சியம் காத்திட வந்த இலை.  மற்றும்
  புரட்சி தலைவரின் வழி நடப்போம் –
  புதிய சமுதாயம் இனி அமைப்போம்

போன்ற பாடல்களை கேசட்டில் பதிந்து, தன் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி, கட்சிப் பணிகளுக்கு நல்ல பாடல்களைப் பயன்படுத்திவந்தார். இப்பாடல்களும் இன்னும் உயிர்ப்புடன் திகழ்கின்றன.

பின் செல்ல