Published:Updated:

“வாவ்... அஜித் செய்த அந்த தந்தூரி சிக்கன் சூப்பர்ப்!” - சிலாகிக்கும் சிஸ்டர்

“வாவ்... அஜித் செய்த அந்த தந்தூரி சிக்கன் சூப்பர்ப்!” - சிலாகிக்கும் சிஸ்டர்
“வாவ்... அஜித் செய்த அந்த தந்தூரி சிக்கன் சூப்பர்ப்!” - சிலாகிக்கும் சிஸ்டர்

“என் மாமனார் ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தன் கடினமான உழைப்பால் முன்னேறியவர். தயாரிப்பு நிர்வாகியாகியா இருந்து பிறகு தயாரிப்பாளரா உயர்ந்தவர். சினிமா தயாரிப்பில் அவருக்குள்ள அனுபவம் மிகப் பெரியது. அஜித்சாரின் 'ஆரம்பம்' படம் தயாரிப்பில் இருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. அப்போது இருந்தே நானும் சினிமா தயாரிப்பில் என் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தேன். 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்', 'வேதாளம்', சமீபத்தில் வெளிவந்த 'கருப்பன்', தெலுங்கில் வெளிவரவிருக்கும் 'ஆக்ஸிஜன்'... படங்களின் தயாரிப்பில் இருந்து வருகிறேன். தயாரிப்புத் துறையில் என் முன்னோடி என் மாமனார்தான்.” இப்படித் தன் மாமனார் ஏ.எம்.ரத்னத்தைக் கொண்டாடுகிறார் மருமகள் ஐஸ்வர்யா. படத்தயாரிப்பாளரான ஐஸ்வர்யா தற்போது பாடகியும்கூட. தன் கணவர் ஜோதி கிருஷ்ணா இயக்கும் ‘ஆக்ஸிஜன்’ என்ற தெலுங்கு படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். ஐஸ்வர்யாவிடம் பேசினேன். 

“உங்கள் கணவர் ஜோதி கிருஷ்ணா தமிழில் ஓரிரு படங்களை இயக்கினார். பிறகு பெரிய இடைவெளி. ஏன்?”
“தமன்னா, இலியானாவை தமிழுக்கு அறிமுகம் செய்ததே என் கணவர்தான். தயாரிப்புப் பணியில் தன் அப்பாவுடன் இருந்ததால்தான் இந்த இடைவெளி. ஏனோதானோ என்று ஒரு படத்தை அரைகுறையாக இயக்கினால் சரியாக இருக்காது என்று காத்திருந்தார். ஒருமுறை, ஷீரடி சென்றுவிட்டு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது 'ஆக்ஸிஜன்' படத்துக்கான ஒன்லைன் கதையைச் சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது- 'இந்தக் கதையை நல்லா டெவலப் பண்ணுங்க' என்று சொன்னேன். கடந்த இரண்டு வருடமாக உழைத்து அதன் திரைக்கதையை உருவாக்கினார். அந்தக்கதையை என் மாமனாரிடம் சொல்ல அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆக்ஸிஜன்’ ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் தெலுங்கில் வெளிவரவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு இயக்கும் படம் என்பதால் தோல்வி அடையக் கூடாது என்பதில் ஜோதி கிருஷ்ணா தெளிவாக இருக்கிறார். ஆக்ஸிஜன் ஆக்ஷன் த்ரில்லர் படம். அக்டோபர் 27-ம் தேதி ஆந்திரத்தில் வெளியாகிறது. பிறகு தமிழில ரீமேக் செய்ய இருக்கிறோம். அதற்காக இங்குள்ள முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.”

“இதேபோல உங்கள் கணவரின் தம்பியும் நடிகருமான ரவிகிருஷ்ணாவும் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறாரே?”
“'7-ஜி ரெயின்போ காலனி’ என்ற வெற்றிப்படத்தில் நடித்தவர். இப்போதும்கூட கதைகள் கேட்டு வருகிறார். சினிமாவில் ஒரு இடைவெளி விழுந்தால் அடுத்த கதையை தேர்வு செய்வதில் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவு நம்மை சறுக்கிவிட்டுவிடும். இப்போதைக்கு ரவி கிருஷ்ணா மூன்று கதைகளைத் தேர்வு செய்து வைத்துள்ளார். அதில் ஒரு கதையில் நடிப்பார். அது நிச்சயம் ‘7-ஜி ரெயின்போ காலனி' வெற்றியை நமக்கு நினைவுபடுத்தும். என் மாமனார் பிரபல தயாரிப்பாளர், கணவர் இயக்குநர், அவரின் தம்பி நடிகர், இந்தப்பக்கம் நான் பாடகி... உண்மையில் நான் கொடுத்துவைத்தவள்.”

“நீங்களே தயாரிப்பாளர் என்பதால்தான் பாடகியாகவும் எளிதாக அறிமுகமாகிவிட்டீர்களோ?”
“சினிமாவில் பாடல் பாடவேண்டும் என்பது என் சின்னவயசுக் கனவு. ஆனால், அப்போது சரியான வாய்ப்புகள் அமையவில்லை. என் திருமணத்துக்குப்பிறகும் அந்த ஆசையை நான் வெளிப்படுத்தவில்லை. பிறகு என் மாமனார் ஏ.எம்.ரத்னம் அவர்களுக்குத் தயாரிப்பில் உறுதுணையாக இருந்தேன். அந்த சமயத்தில்தான் ஆக்ஸிஜன் படத்தை என் கணவர் இயக்க ஆரம்பித்தார். இந்தப் படத்துக்கு இசை, யுவன் ஷங்கர் ராஜா. என் பாட்டு ஆசையைத் தெரிந்துகொண்டவர்கள் 'ஆக்ஸிஜன்' படத்தில் இரண்டு பாடல்களைப் பாடவைத்தனர். அந்தப் பாடலுக்குத் தெலுங்கில் நல்ல ரெஸ்பான்ஸ். பிறகு 'கூத்தன்' படத்தில் ஒரு பாடலைப் பாட என்னை அழைத்தனர். அந்தப் பாடலை பாடி முடித்தேன். அந்தப்பட இசையமைப்பாளர் பாலாஜி, தயாரிப்பாளர் நில்கிரீஸ் முருகன் இருவருக்கும் பயங்கர சந்தோஷம். உடனே இன்னொரு பாடலையும் பாடவைத்தனர். அது எனக்கு பயங்கர சந்தோஷம். பாடகியாக வந்தது எனக்குக் கடவுள் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.”

“நீங்கள் சமையற்கலையிலும் தேர்ந்தவர் என்கிறார்கள். என்னென்ன உணவு வகைகளைச் சமைப்பீர்கள்?”
“திருமணத்துக்கு முன்பு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது கல்யாணத்துக்குப் பிறகு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அப்படி சென்னைப் போரூரில் 'இலாபுரம்' என்கிற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்தேன் அது இப்போது பெரிய அளவில் பெயரெடுத்து இருக்கிறது. அங்கே சமைத்துத்தரும் ஆந்திர ஸ்பெஷல் பிரியாணியை அதிகமானோர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். தினமும் அங்கு சென்றுவிடுவேன். பிரியாணி உள்ளிட்ட நான்-வெஜ் உணவுகளுக்கான ரெசிப்பிகளை நானே தயார் செய்து கொடுப்பேன். இந்த ரெஸ்டாரன்ட் கடந்த ஒன்றரை வருடமாக நடக்கிறது. எங்கள் ரெஸ்டாரன்டில் உணவு தவிர ஐஸ்கிரீமும் ரொம்ப ஸ்பெஷல். நானே ஸ்பெஷலாக 'குரு' என்கிற சாய்பாபா பெயரில் தயாரித்து ஐஸ்கிரீம் விற்கிறோம். நீங்க ஒருமுறை எங்க ரெஸ்டாரன்டுக்கு வந்தீங்கன்னா என் ரெசிப்பீஸ் பிடிச்சிடும்.”

“'ஆரம்பம்', ' என்னை அறிந்தால்', ' வேதாளம்' என்று அடுத்தடுத்து அஜித் நடித்த மூன்று படங்களைத் தயாரித்து உள்ளீர்கள். இந்தப் பயணங்களின்போது அஜித் என்ன சொன்னார்?”
“ 'ஆரம்பம்' ஆரம்பித்தபோது எனக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது நான் அதிகமாக ஷூட்டிங் ஸ்பாட் போகமாட்டேன். அலுவலகத்தில் இருந்து நிர்வாகத்தை கவனித்துக்கொண்டேன். அதனால் அஜித்சாரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘அந்த சமயத்தில் எனக்கு டெங்குக் காய்ச்சல். 'ஆரம்பம்' ரிலிஸுக்கு முன்பு போஸ்டர் டிசைனை பார்த்த அஜித் சார், அதில் என் பெயரைப் பார்த்ததும் என்னைப்பற்றி விசாரித்து இருக்கிறார். எனக்கு டெங்குக் காய்ச்சல் என்பதைக் கேள்விப்பட்டு, எனக்கு போன்செய்து உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளும்படி அட்வைஸ் பண்ணினார். மேலும், என் பெயர் போஸ்டரில் வந்ததற்காக வாழ்த்துகள் சிஸ்டர் என்று தெரிவித்தார்.

அடுத்து 'என்னை அறிந்தால்' சமயத்தில் நான் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அப்போது என் பிறந்தநாள் வந்தது. எனக்கு பிறந்தநாளை பெரிதாகக் கொண்டாடும் வழக்கம் இல்லை. அன்று திடீரென என்னை மாடிக்கு அழைத்துச் சென்ற அஜித் சார், அங்கே முன்பேயே பிரம்மாண்ட பிறந்தநாள் கேக் ரெடி செய்து வைத்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதுதவிர அங்கேயே செங்கற்களை அடுக்கி வைத்து நெருப்பு உண்டாக்கி 'என்னை அறிந்தால்' படக்குழுவில் இருந்த அத்தனை பேருக்கும் என் பிறந்தநாள் விருந்தாக தந்தூரி சிக்கன் சமைத்துக் கொடுத்து அசத்தினார். 

இது, 'வேதாளம்' சமயத்தில் நடந்த நிகழ்ச்சி. நான் போரூரில் 'அகிலாபுரம்' ஹோட்டல் ஆரம்பித்த விஷயத்தை அஜித்சாரிடம் சொன்னேன். சந்தோஷப்பட்டார். நான்-வெஜ் உணவு வகைகளுக்கு என்னென்ன மசாலா வகைகள் சேர்க்க வேண்டும் என்று ரெசிப்பி டிப்ஸ் நிறைய கொடுத்தார். அகிலாபுரம் ஹோட்டலுக்கு அஜித்சார் ஆசீர்வாதமும் இருக்கிறது என்பதில் சந்தோஷம்.”

அடுத்த கட்டுரைக்கு