Published:Updated:

கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama

கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama
கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama

கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama

ன் எதார்த்த நடிப்பால் தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் மனோரமா. நடிப்பையே உயிர்மூச்சாகக் கருதி, மரணம் அருகில் வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தவர். காமெடி, குணசித்திரம் என ஐந்து தலைமுறையாக வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஆச்சியின் சொந்த வாழ்க்கை, சோகங்களும் வலிகளும் நிறைந்தவை. அதைக் கண்கூடப் பார்த்தவரும் ஆச்சியின் உடன்பிறவா அண்ணனுமாகிய வீரய்யா, தங்கையைப் பற்றிய நினைவுகளை மனம் திறந்து பகிர்கிறார். 

* 'கோபி சாந்தா' என்ற இயற்பெயரை, திருச்சி நாடகக் கம்பெனியில் ஆர்மோனியக் கலைஞராக இருந்த தியாகராஜர், 'மனோரமா' என மாற்றினார். அதுக்குப் பிறகு அவர் நிறைய புகழ்பெற்றாங்க.

* 1957-ம் வருஷம், கவிஞர் கண்ணதாசன் திருச்சிக்குப் போனபோது, மனோரமாவின் நாடகத்தைப் பார்த்தார். 'சிறப்பான வார்த்தை உச்சரிப்பும் நடிப்புத் திறமையும் உன்னிடம் இருக்கு. மெட்ராஸ் வந்தால் என்னை வந்து பாரு. சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தர்றேன்'னு சொன்னார். இந்நிலையில், தன் நாடக கம்பெனியில் மனோரமாவை நடிக்கவைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தார். அப்புறம், 'மாலையிட்ட மங்கை' படத்துக்காக, தயாரிப்பாளர் கண்ணதாசன் நடிகையாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சினிமா, நாடகம் என மாறி மாறி நடிச்சாங்க. 

* 'மாலையிட்ட மங்கை' படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கம், நாயகிகளாக பண்டரிபாய் மற்றும் மைனாவதி ஒப்பந்தம் செய்யப்பட்டாங்க. அதனால், 'உனக்கு நகைச்சுவை வேடம். உனக்கு ஜோடி,

'காக்கா' ராதாகிருஷ்ணன்' என கண்ணதாசன் சொன்னார். 'நகைச்சுவை வேடம் வேண்டாம். கதாநாயாகியாகவே நடிப்பேன்' என்றார் மனோரமா. அவங்களை சமாதனம் செய்தே அதில் நடிக்கவெச்சார் கண்ணதாசன். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு காபி கொடுத்து பேசுவதுதான் மனோரமாவின் முதல் காட்சி. நீளமான வசனம். பலமுறை சொல்லிக்கொடுத்தும் மனோரமாவால் சரியாகப் பேச முடியலை. இதனால், 'மனோரமாவைப் படத்திலிருந்து நீக்கிடலாம்'னு டைரக்டர் சொன்னார். 'பயிற்சி கொடுத்தா நல்லாப் பேசுவாங்க'னு நான் சொன்னேன். மனோரமாவின் வீட்டுக்கே போய் பயிற்சி கொடுத்தேன். மறுநாள் ஒரே டேக்ல சிறப்பா நடிச்சு கைத்தட்டல் வாங்கினாங்க. 

* 'நான் ஆசைப்பட்ட மாதிரி கதாநாயகியா நடிச்சிருந்தால் பத்து வருஷத்தில் ஃபீல்ட் அவுட்டாகியிருப்பேன். காமெடி நடிகையா நடிச்சதால்தான் 1,500 படங்களுக்கும் மேலாக, அஞ்சு தலைமுறையா நடிச்சுட்டிருக்கேன். என் வளர்ச்சியில் உங்க பங்கு மகத்தானது' என என்னிடம் கண்ணீர்விட்டு பேசுவார். 'உன்னை மாதிரி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் நீதான் பெரிய நட்சத்திரமா வந்த; அதுக்கு முழுக் காரணம், உன் உழைப்பும் திறமையும்தான்'னு நானும் சொல்வேன். 

* கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியா நடிச்சுட்டிருந்தாலும் நாடகத்தில் நடிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தார். தினமும் அவங்க அம்மா காலைத் தொட்டு வணங்கிட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால், ஷூட்டிங் முடிச்சுட்டு வீடு திரும்ப நடுராத்திரியாகிடும். 

* மன்னார்குடியில் பிறந்து, நான்கு வயசிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனோரமா. மன்னார்குடி நாடக கம்பெனியில் நடிச்சுட்டிருக்கும்போது, சக நடிகரான ராமநாதனை காதலிச்சாங்க. அம்மாவின் எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மகன் பூபதி பிறந்த கொஞ்ச நாளில் மனோரமாவைப் பிரிஞ்சு ராமநாதன் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டார். அம்மா, மகன் மட்டும்தான் மனோரமாவின் துணை. ராமநாதன் இறந்தச் சமயத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி, அவங்க குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். 'உன்னைத் தவிக்கவிட்டுப்போனவரின் இறப்புக்குப் போகக் கூடாது'னு அவங்க அம்மா சொல்லியும், கணவரின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினாங்க மனோரமா. 

* வறுமையோடு சென்னைக்கு வந்தாலும், தன் திறமையால் ஆயிரக்கணக்கான படங்களில் நடிச்சு கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதிச்சாங்க. ஆனால், நல்லத் தூக்கம் இல்லாம, சரியா சாப்பிடாம, எந்த உறவுகளின் அரவணைப்பும் இல்லாம, நிறைய நம்பிக்கை துரோகங்களைச் சந்திச்சாங்க. புகழ் மற்றும் வசதிகளுக்கு இடையே ஆச்சி சந்திச்ச சவால்கள் ரொம்ப அதிகம். தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் அடிக்கடி என்னைச் சந்திச்சு மனம்விட்டுப் பேசி அழுவாங்க. மூட்டுவலியால் ரொம்பவே வேதனைப்பட்டாங்க. ஆனாலும், எதையுமே காட்டிக்காமல், சினிமாவில் நடிச்சு மக்களை மகிழ்விச்சாங்க. 

* நடிகர் சிவாஜி கணேசனும் மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தன் வீட்டிலிருந்து சாப்பாட்டைக் கொண்டுவந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு தன் கைப்பட பரிமாறுவாங்க மனோரமா. சிவாஜி மறைந்த பிறகும் அவர் குடும்பத்தின் உறுப்பினராகவே இருந்துவந்தாங்க. 

* ஒருநாளில் எத்தனை படங்களில் நடிச்சாலும், கொடுத்த கால்ஷீட்படி சரியா முடிச்சு கொடுத்துடுவாங்க. சினிமாவில் சில டேக் வாங்குவாங்க. ஆனா, மேடை நாடகங்களில் எத்தனை பக்க டயலாக்கா இருந்தாலும் சுலபமா நடிச்சுடுவாங்க.

* தமிழ் மட்டுமே தெரிஞ்சிருந்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிச்சுப் புகழ்பெற்றாங்க. 'சின்ன கவுண்டர்', 'சின்ன தம்பி' படங்கள் ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். 

* ஒரு பிரச்னையின் காரணமாக நடிகர் நாகேஷ், தன் மனைவியுடன் சிறிது காலம் மனோரமாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ஏற்பட்ட ஒரு பிரச்னை ஆச்சியை ரொம்பவே கஷ்டப்படுத்துச்சு. அந்த நிகழ்வுக்குப் பிறகு, 'நாகேஷ் அண்ணன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கிறார். எனக்கு நரக வேதனையா இருக்கு'னு சொல்லி பல வருஷங்களா புலம்பினாங்க. 

* தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி எங்கேயும் எந்தக் குறையும் சொல்ல மாட்டார் மனோரமா. கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், 'கோவை' சரளா போன்ற சக நகைச்சுவை கலைஞர்களை எப்பவுமே உயர்வாகப் பேசி, பாராட்டிட்டே இருப்பாங்க. பிற்காலத்தில் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித்குமார் என தன் மகன்களாக நடித்த எல்லா நடிகர்களிடமும் சொந்த அம்மா மாதிரி பாசம் காட்டிப் பழகினாங்க. 

* 'சில வருஷங்களாகவே தொடர்ந்து பல மூத்த சினிமா கலைஞர்களும் இறந்துட்டிருக்காங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'னு அடிக்கடி சொல்லிட்டிருந்தாங்க. கே.பாலசந்தர் இறந்தபோது, என்னைப் பார்க்க வந்தாங்க. 'நம்ம ஆளுங்களில் சிலர் மட்டும்தான் அண்ணா உயிரோடு இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்பவே முடியலை. அடுத்து நானாகூட இருக்கலாம்'னு சொன்னாங்க. அதன்படியே சில மாசத்தில் மனோரமா இறந்துட்டாங்க. 

* காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, ஒருமுறை மனோரமாவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்து, அவர் நடிப்பை ரொம்பவே பாராட்டினார். இது தெரிஞ்சதும், காமராஜரைச் சந்திக்க அனுமதி வாங்கச்சொன்னார். அதன்படி, தன் மகனுடன் என்னையும் அழைச்சுட்டுப்போய் காமராஜரைச் சந்திச்சார். 'உங்க நடிப்பு ரொம்பவே சிறப்பா இருக்கு. நீங்க பெரிய கலைஞரா உயர்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கணும்'னு காமராஜர் வாழ்த்தினதும் நெகிழ்ந்துபோயிட்டாங்க. 

* கற்பகம் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்காக நடிச்சுட்டிருந்தாங்க. டிரஸ் மாற்றும் சமயத்தில் அவங்களை பாம்பு கடிச்சுடுச்சு. மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மனோரமாவை என் மனைவி சுகுணா அழைச்சுட்டுப்போனாங்க. ரெண்டு நாள் மட்டுமே சிகிச்சை எடுத்துகிட்டு, மீண்டும் ஷூட்டிங்ல கலந்துகிட்டாங்க. இதுபோல, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் குதிரையிலிருந்து கீழே விழுந்து மயங்கிட்டாங்க. ஒரு வாரம் சிகிச்சை பெற்றவங்க, முழுசா குணமாகும் முன்பே படப்பிடிப்பில் கலந்துகிட்டாங்க. தன் உடலுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாதுனு நினைக்கிறவங்க மனோரமா. 

* அம்மா மற்றும் மகனுடன் மட்டுமே வாழ்ந்த காலத்தில், தன் வீட்டில் சில நாய்களைப் பாசமாக வளர்த்தாங்க. 'மனுஷங்க பலரும் நம்பவெச்சு ஏமாத்திட்டாங்க. ஆனால், இந்த ஜீவன்கள் நன்றி விசுவாசத்தோடு இருக்கு'னு அடிக்கடி சொல்வாங்க. அந்த நாய்களை பிள்ளைகள்போல அன்பு காட்டி வளர்த்தாங்க. 

* அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்திருந்தவர். அவங்களோடு நல்ல நட்பில் இருந்தார். அவங்க மாற்றுக் கட்சிகளாகவும், தங்களுக்குள் போட்டி உணர்வுடனும் இருந்தாலும், ஆச்சியிடம் ஒரே மாதிரியான நட்போடு இருந்தாங்க. 

* ஆயிரக்கணக்கான சினிமா படங்களில் நடிச்சிருந்தாலும், மேடை நாடகங்களில் நடிக்கிறதையே பெருமையா நினைப்பாங்க. நாடக நடிகர்கள் பலரும் ஏழ்மையில் இருந்ததால், அவங்க பசங்களின் கல்யாணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்வாங்க. இந்தப் பழக்கம் ஆரம்பத்திலிருந்து, ஆச்சியின் இறுதி காலம் வரைக்கும் தொடர்ந்துச்சு. இந்த விஷயம் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. 

* வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணா எனவும், என் மனைவியை அண்ணி எனவும் கூப்பிடுவாங்க. எனக்குத் தெரியாமல் ஒரு வீடு வாங்கி, தக்கச் சமயத்தில் அதை எனக்குப் பரிசாகக் கொடுத்து உதவின என் உடன்பிறவா தங்கை ஆச்சி மனோரமா. 

அடுத்த கட்டுரைக்கு