Published:Updated:

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive
'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

"சக்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டுப் போனதுக்கு அப்புறம் ஒரு விஷயத்தை ஃபீல் பண்ணினேன். கேமரா முன்னாடி போய்க் கேட்டேன். 50 நாள்கள் கூடவே பழகின சக்தியைப் பற்றிப் பேசினது அவருக்குத் தப்பாகத் தெரிந்தது. அப்போது 10 வருஷம், 20 வருஷம் பழகிய நண்பர்கள் எதிரிகளாகியிருக்கிறார்கள். சில நண்பர்களால் கோடிக்கணக்கில் எனக்கு நஷ்டம். வீடுகளை இழந்திருக்கிறேன். என் திருமண வாழ்க்கை தடைப்பட்டது. ஆனால், அவர்களிடம் எல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. இழப்பு எனக்கு இருந்தாலும், அந்த இழப்புக்கான காரணம் ஏதோ ஒரு நண்பன் என்னைப் பற்றி தப்பாகச் சொல்லியிருப்பான். அது தப்பாகத் தோன்றியிருந்தால் மன்னித்துக்கொள். ஆனால், நான் தப்பு செய்யவில்லை. 50 நாள் பழகின சக்திக்கே நான் பேசினது தப்பாகத் தெரிஞ்சிருக்குனா, 10 வருஷம் பழகின உனக்கும்கூட நான் பேசினது தப்பாகத் தெரிஞ்சியிருக்கலாம்னு மன்னிப்புக் கேட்கும்போது, என் தமிழ் ஆசான் வைரமுத்துவை நினைத்துதான் நான் மன்னிப்புக் கேட்டேன்." சினேகன் சொல்லும் மன்னிப்புப் பட்டியலின் நீளம் அதிகம்.

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

''ஐயா, சென்னைக்கு என்னை அழைத்து வந்தது நீங்கள். என்னைக்  கவிஞனாக உருவாக்கினது நீங்கள். ஆனா, என்னுடன் சேர்ந்துமட்டும் நீங்கள் பாட்டு எழுதவில்லை. திட்டுவதற்காக மட்டுமாவது என்னைக் கூப்பிட்டு இருக்கணும். ஒரு தகப்பனிடம் பிள்ளை அங்கீகாரத்துக்காகவும் அடையாளத்துக்காகவும் அலைந்துகொண்டிருக்கும் ஆதங்கத்தில் சில மேடைகளில் உங்களைத் திட்டியிருக்கிறேன். அது என் தந்தையை விமர்சிப்பதுபோல்தான் விமர்சித்திருக்கிறேன். அது உங்கள் மனதைக் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என மீண்டும் வைரமுத்துவிடம் மன்னிப்புக்  கேட்டுவிட்டு தனது பிக் பாஸ் அனுபவம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் சினேகன். 

"பிக் பாஸ் அனுபவம் எப்படி இருந்தது?"

"ஒரு பெரிய நிதானம் வந்திருக்கிறது. என்னை முழுவதும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகுதுனு தெரியும். ஆனால், இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு தெரியவில்லை. ''வீட்டை விட்டுச் செல்லப்போகிறீர்கள் உங்கள் உணர்வு எப்படியிருக்கிறது'' என்று பிக் பாஸ் என்னிடம் கேட்டார். 'இந்தச் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளுமா, இந்தச் சமூகத்தை நான் ஏற்றுக் கொள்வேனானு தெரியவில்லை' என்று சொன்னேன். ஏனென்றால், ஒரு மிகப் பெரிய முகமூடி போட்டு இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். கவிஞனாக, நண்பனாக, நடிகனாக, பேச்சாளராக, எதிரிகளுக்கு நல்ல எதிரியாகத் தேவைப்பட்டது. ஆனால், இந்த 100 நாள்களில் நான் போட்டிருந்த முகமூடியை நானே கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டேன். என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நானே மக்களிடம் சொல்லிவிட்டேன். பிக் பாஸ் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு என் பலம், பலவீனம் மக்களுக்குத் தெரியாது. என்னை எப்படி மக்கள் கையாளப்போறாங்கனு தெரியலை. இன்னும் 10 சதவிகிதம்கூட இந்த வாழ்க்கைக்குள்ள வர முடியவில்லை. இன்னும் பிக் பாஸ் வீட்டைச் சுற்றியே என் மனது அலைகிறது. என்னுடைய சமையல் அறை, படுக்கை அறை, நான்கு சுவரைச் சுற்றியே என் மனது அலைந்துகொண்டிருக்கிறது."

"பிக் பாஸ் வாய்ப்பு எப்படி வந்தது?"

"மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எனக்கு விஜய் டிவி தரப்பிலிருந்து போன்வந்தது. வீட்டுக்கு வரட்டுமானு கேட்டார்கள். இல்லை, 'நானே அங்கே வரேன்'னு சொன்னேன். குரானில் ஒரு வார்த்தையிருக்கும். 'கீழ்ப்படிதலுக்குக் கற்றுக்கொள், கட்டளையிடுவதற்கு ஆளாவாய்' என்று. அதனால், நானே சென்றேன். 'பிக் பாஸ் என்று ஒரு நிகழ்ச்சி இருக்கு தெரியுமா' என்று கேட்டார்கள்.  'இல்லை சார், நான் பாட்டு எழுதுற படங்களைப் பார்க்கவே எனக்கு நேரம் இருக்காது. எனக்கு எதுவும் தெரியாது' என்றேன். பிக் பாஸ் பற்றிச் சொன்னார்கள். எனக்கு சிஸ்டம் பிடித்திருந்தது. ஆனால், என்னால் 100 நாள்கள் அங்கேயிருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், உடன் பணிபுரிவர்களும் சரி, நண்பர்களும் சரி என்னை ஒரு ஹிட்லராகப் பார்ப்பார்கள். அதனால், என்னால் அங்கேயிருக்க முடியுமானு தெரியலை சாரி'னு சொல்லிட்டேன். அப்போதுதான் சில நாள்களுக்குப் பிறகு போன் பண்ணி, 'இந்த நிகழ்ச்சியைக் கமல் சார்தான் தொகுத்து வழங்கப் போறாங்கனு'' சொன்னார்கள். 'கமல் சாரா, கண்டிப்பா கலந்துக்கலாமே'னு தோணுச்சு. கமல் என்கிற ஒற்றை ஆண் தேவதைக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சிக்குள்ளே போக ஒப்புக்கொண்டேன். அப்போதுகூட பிக் பாஸ் பற்றி தெரியாமலும் எவ்வளவு சம்பளம் என்று தெரியாமலும் அந்த வீட்டுக்குக்குள் போனேன்." 

"100 நாள்களும் அங்கே இருப்பீர்கள் என நினைத்தீர்களா?"

"இல்லை. முதலில் வீட்டுக்குள் போகும்போது கமல் இருப்பதால் நமக்கும் கொஞ்சம் பாப்புலாரிட்டி கிடைக்கும்ங்குற நம்பிக்கையில்தான் சென்றேன். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று எல்லோரையும் பார்த்தவுடன் நான் எண்ணியது இதுதான். 'கண்டிப்பாக இந்த வீட்டில் 100 நாள்கள் இருந்தால்... என்னாலும் கணேஷாலும் மட்டுமே இருக்க முடியும் என்று ரொம்ப ஸ்ட்ராங்காக நம்பினேன். ஏனென்றால், கணேஷ் மென்டலி வெரி ஸ்ராட்ங். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். நல்ல தோழன் நம்முடன் இருக்கிறான் என்று நினைத்தேன்." 

"ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போனோம்னு எப்பவாவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா?"

"கண்டிப்பாக. ஏனென்றால் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக என்னிடம் தயாரிப்புத் தரப்பிடமிருந்து வீட்டுக்குள் மிகச் சிறந்த இலக்கியவாதி, அரசியல்வாதி, ஆன்மிகவாதி, கதையாசிரியர், நடிகர்  என ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒருவர் உங்களுடன் வீட்டில் இருப்பார். நீங்கள் கவிஞர் வரிசையில் உள்ளே போகிறீர்கள் எனச் சொல்லித்தான் அனுப்பினார்கள். அதனால், வீட்டுக்குள்ளே போனவுடன் எனக்கு ஹவுஸ் மேட்ஸைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. என் நண்பன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை. என் எதிரி என்னைவிடப் பலசாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால், எனக்கு என் ஹவுஸ் மேட்ஸைப் பார்க்கும்போது பெரிய ஏமாற்றமாக இருந்தது. அதனால், இரண்டாவது நாளே ஃபீல் பண்ணினேன். 

ஆனால், இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் உள்ளவர்களை என் குடும்பமாக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால்தான் கடைசியாக அந்த வீட்டைவிட்டு நானும் ஆரவ்வும் வெளியே சென்றபோதுகூட ஆரவ்வைக் கமலுடன் முன்னால் அனுப்பிவிட்டு, கடைசியாக ஒரு முறை அந்த வீட்டு முன்னால் நின்று கண்ணீர் வடித்தேன்.

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

"100 நாள் பிக் பாஸ் வீட்டை இவ்வளவு அதிகமாக நேசிக்க முடிந்த உங்களால், உங்கள் வீட்டைவிட்டு எப்படி இவ்வளவு நாள்கள் பிரிந்திருக்க முடிந்தது?"

"என் தாயாரின் மரணத்துக்குப் பிறகு, என் கிராமத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து நான் ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. ஏனென்றால், என் அம்மா இல்லாத பூமியில் இனி எனக்கு வேலையில்லை என்று நான் அங்கே போய்த் தங்கவில்லை. ஆனால், அப்பா என்கிற ஒரு ஜீவன் அங்கேயிருந்ததால் திருச்சி, தஞ்சாவூர் பக்கம் போகும்போது அப்பாவைப் பத்து நிமிடம் சென்று போய்ப் பார்த்துவிட்டு வருவேன். ஒருநாள்கூட முழுமையாக அங்கே நான் செலவிட்டது கிடையாது. 17 வருஷமாக இப்படித்தான் என் வாழ்க்கையை ஒரு வழிப்போக்கன் மாதிரி வாழ்ந்தேன். 

பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நாங்கள் 15 பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போது எனக்குக் கேவலமாக இருக்கும். நமக்குச் சொந்தபந்தம் இருந்தும் இப்படி இருந்து இருக்கிறோமே... என்று நினைத்தது உண்டு. இதை நான் பிக் பாஸ் வீட்டிலும் பதிவு செய்தேன். அதைச் சிலபேர் '17 வருஷமாக என் அப்பாவைப் பார்க்கவேயில்லை என்று சொல்லிவிட்டு போட்டோ எல்லாம் எடுத்திருக்கிறாரே' என்று சமூக வலைதளங்களில் நானும் என் அப்பாவும் இருக்கும் போட்டோக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அது புரிதலின் தவறாக இருக்கலாம். இல்லை, நான் சொன்னதன் தவறாகயிருக்கலாம். ஆனால், உண்மை இதுதான். என் தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபிறகு பெரிய தலைக்கனம் எனக்கு வந்தது. ஏனென்றால், சுருக்கிய தோளும் கறுத்த தோளோடும், கையெழுத்துப் போடாத ஒரு கடைக்கோடி  விவசாயியின் மகன்  நான் என அன்றைக்குத்தான் பெருமைப்பட்டேன்." கண்டிப்பாக அப்பாவுடன் ஒரு நாள் முழுவதும் செலவிடுவேன்."

"பிக் பாஸில் கடுமையான போட்டியாளராக யாரை நினைத்தீர்கள்?"

"என்னைப் பொறுத்தவரை, எனக்கு நிகரான ஒரே போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராம். அறிவு, உணர்வு, பலம் சார்ந்தும் எல்லா வகையிலும் கணேஷ் வெங்கட்ராமைத்தான் என் போட்டியாளராக நினைத்தேன். பிக் பாஸில் நியாயமாக விளையாட வேண்டும். அந்த நியாயம் கணேஷ் வெங்கட்ராமிடம் இருந்தது." 

"ஆரவ்வை உங்கள் போட்டியாளராக நினைக்கவில்லையா?"

"நண்பன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எதிரி பலசாலியாக இருக்க வேண்டும். என்னைவிட பலசாலி, திறமையாளன், அறிவாளி, தந்திரக்காரன் என எல்லா விதத்திலும் இருந்த கணேஷ் வெங்கட்ராமைதான் எதிரியாகப் பார்த்தேன். நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது." 

"பிடிக்காத போட்டியாளர் யார்?"

"என் பலத்தோடு விளையாடிய எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். என் பலவீனத்தோடு விளையாடிய யாரையும் எனக்குப் பிடிக்காது. அந்த வகையில் எனக்கு சுஜாவைப் பிடிக்காது. நான் சொல்வது, 'பிக் பாஸ் வீட்டிலிருந்த சுஜாவை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது'. மற்றபடி வெளியே வந்த சுஜாவை எனக்குப் பிடிக்கும். ஏன்னா, ஒருவரின் பலவீனத்தோடு மட்டும் விளையாடக் கூடாது. அது மனித இனத்துக்கே செய்யக்கூடிய துரோகம். எதிரிக்கு எதிராய் நிற்க வேண்டுமே தவிர, முதுகுக்குப் பின்னாடி குத்தக் கூடாது. எப்போது சாய்வான் என்று தருணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு குள்ளநரித்தனம். அந்த வகையில் அங்கிருந்த போட்டியாளர்களில் எனக்கு சுஜாவைப் பிடிக்காது." 

"சினேகன் எப்படிப்பட்ட மனிதர்?"

"சினேகன் ஒரு களிமண் மாதிரி, அழகான ஒரு குழந்தை. எப்படி வளைத்தாலும் வளையும். இந்தச் சமுதாயத்தில் நிறைய ஏமாற்றங்களால் சில வேஷம் போடப்பட்டிருச்சு. என்னைப் பொறுத்தவரை, ஒரு களத்துக்குப் போவதற்கு முன்பு அந்தக் களத்துக்கு என்ன ஆயுதமோ அதை நான் தீட்டிக்கொள்ள ஆசைப்படுவேன். ஒரு பாடலாசிரியராய் மட்டுமே அனைவராலும் நான் அறியப்பட்டவன். சிலபேர் 'இவர் டைனமிக் கல்யாணம்னு ஒண்ணு பண்ணியிருக்கார்'னு விமர்சனம் வந்தது. எந்த விமர்சனத்தைக் கண்டும் நான் பயப்படவில்லை. ஏனென்றால், எந்தப் புத்தனும் என்னைக் குறை சொல்லவில்லை. குறை சொன்ன யாரும் புத்தரும் இல்லை. 

தவிர, நல்லது கெட்டது இரண்டையும் பார்த்துச் சொல்வதுதான் விமர்சனமே தவிர, கெட்டதை மட்டுமே சொல்வது விமர்சனம் இல்லை. அது பொறாமையின் வெளிப்பாடு. அந்த வகையில் சினேகன் சராசரி விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண விவசாயி மகன். படித்தது பன்னிரண்டாம் வகுப்புதான். அதற்குப் பிறகு டீச்சர் ட்ரெயினிங் முடித்தேன். இலக்கிய, இலக்கணங்களை முறைப்படி கற்கவில்லை. ஆனால், பாடல் துறைக்கு வந்துவிட்டோம். பிறகு பாடல்களை எழுத வேண்டும் என்ற சூழ்நிலையில், முடிந்த அளவுக்குத் தமிழ் நூல்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இதற்காக இரண்டு ஆண்டுகள் எந்த வேலைக்கும் நான் செல்லவில்லை. எந்த ஒரு இடத்திலும் நமக்குத் தடுமாற்றம் வரக் கூடாது என்பதற்காகக் கற்றேன். ஆனால், அதையும் தாண்டி ஏதாவது தடுமாற்றமும் வரத்தான் செய்யும். ஏனென்றால், கற்றவனுக்கும் சறுக்கத்தானே செய்யும். என்னைப் பொறுத்தவரை, நான் பாடலாசிரியரோ கவிஞரோ, நடிகனோ இல்லையோ... ஒரு நல்ல ரசிகன். அந்த ரசிப்புத் தன்மைதான் என்னைக் கவிஞனாய் ஆக்கியிருக்கு."

"பிக் பாஸில் ஏதாவது பாகுபாடு காட்டப்பட்டதாக நினைக்கிறீர்களா?"

"அதை நான் சொல்ல முடியாது. மக்கள்தான் சொல்லணும். ஏனென்றால் நாங்கள் அனைவரும் 24 மணிநேரமும் பேசிக்கிட்டுதான் இருந்தோம். யார் யாரைப் பற்றி எப்படிக் காட்டினார்கள் என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பதினைந்து பேர்,  24 நேரம் பேசியதை ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியாகக் காட்டியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இது பிக் பாஸூக்கே வெளிச்சம்."

"ஆரவ் 'பிக் பாஸ்' டைட்டிலுக்குத் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?"

"அதுவும் பிக் பாஸூக்கே வெளிச்சம். ஏன்னா, எல்லா அக்ரீமென்ட்டும் போட்டதுக்குப் பிறகு பிக் பாஸே சொல்கிறார், 'இங்கு இருக்கும் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கும் ஒருவரை வெளியே அனுப்புவதற்கும் ஒரு முடிவு எடுப்பதற்கும் பிக் பாஸூக்கு அனைத்து உரிமையும்  இருக்கிறது. ஆனால், அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று." 

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

"ஆரவ் வெற்றியடைந்தது உங்களுக்கு மகிழ்ச்சியா?"

"நிச்சயம், என் குடும்பத்தில் இருந்த ஒருவர். 100 நாள் என்பது முதல் வெற்றி. முழு வெற்றி என்பது வெறும் கோப்பையும் 50 லட்சம் பணமும். எனக்கு அந்த 50 லட்சம் கிடைத்திருந்தால், ஒரு நூலகம் கட்டியிருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. அது முடியாமல் போனதில் இருந்த சின்ன வருத்தம். பிறகு அதுவும் மறந்துபோச்சு. ஏன்னா, கிடைத்திருந்தால் ஒரு கோப்பை, 50 லட்சம் பணம். பணம் இரண்டு வருடத்தில் கரைந்து போயிரும், கோப்பை 10 வருடத்தில் கறுத்துப்போயிரும். வெளியே வந்த பிறகு இப்போது பல கோடி மக்கள் தங்கள் நெஞ்சங்களில் என்னைக் கோப்பையாகக் கொண்டாடித்தீர்க்கின்றனர். ஒருவேளை, நான் ஜெயித்திருந்தால் என்னை வாழ்த்தியிருப்பார்கள், இல்லை வசம் பாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால், இப்போது நான் ஜெயிக்காத ஆதங்கத்தை எப்படியோ சொல்லித் தீர்க்கிறார்கள்.

நேற்றுகூட யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து பெசன்ட் நகர் பீச் போனேன். அப்போது அங்கிருந்த ஒரு ஐஸ் விற்கின்ற அம்மா, 'ஐயா, உள்ளுக்குள்ள அழுதுகிட்டே இருந்தியே ஐயா, என்னையா ஆச்சு உனக்கு... அந்தப் பாவிப்பசங்க ஜெயிச்சுப்புட்டாங்களே' என்று சொன்னார். 'அம்மா, ஆரவ்வைத் திட்டாதீங்க'னு அவங்ககிட்ட சொன்னேன். 'இப்படிதான்யா எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தர்ற'னு சொன்னாங்க. கொஞ்சம் நேரத்தில் பார்த்தால் அந்த ஏரியாவில் இருக்கக்கூடிய மக்கள் எல்லோரும் வந்தார்கள். 'குப்பத்தின் செல்லப்பிள்ளை சார் நீங்க' என்று சொல்கிறார்கள். இப்படி நான் போகிற இடத்தில் இருக்கும் மக்கள் என்னைத் தூக்கிவைத்துக் கொண்டாடுறாங்க. அந்தக் கோப்பையும் பணமும் கொடுக்காத சந்தோஷத்தை மக்கள் எனக்குக் கொடுத்தார்கள். ஆரவ் சந்தோஷமாகயிருக்காரோ இல்லையோ... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்." 

"பிக் பாஸ் வீட்டுக்குள்ளே 'சமையல்காரனா இருக்கோமோ' அப்படினு எப்போவாது ஃபீல் பண்ணியீருக்கீங்களா?"

"இல்லை, நான் பெருமையாகத்தான் நினைக்கிறேன். 'நம்மளைத் தேடி வர்றவங்க வயிறும் மனசும் குளிர வைத்து அனுப்பு'ன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. அந்த பாமரத்திக்குத் தெரிந்த மிகச் சிறந்த மொழி அது. அதனால், நான் இருந்தவரை யாரையும் அங்கு பட்டினி போட்டது கிடையாது. காயத்ரி மேடம் சமைப்பார்கள். ஆரவ், சக்தி ஓரளவுக்கு நல்லா சமைப்பார்கள். மற்றபடி யாருக்கும் சமைக்கத் தெரியாது. என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட கலை, சமையல். அதை பிக் பாஸ் களத்தில் பயன்படுத்தினேன். பிக் பாஸில் பார்த்த வேலையைவிட அதிகமான வேலையை என் கிராமம் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. அந்த வீட்டில் கடைசியாகக் கோலம் போடுவதற்கு ஒரு பெண்மணியும் இல்லை. கடைசி இரண்டு வாரம் நானே கோலம் போட்டேன். நிறைய பேர் சொன்னார்கள், 'என்ன சார் இவ்வளவு அழகாகக் கோலம் போடுகிறீர்கள்'னு. எல்லாமே என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் எல்லாவற்றையும் என் பொறுப்பாக நினைத்துதான் செய்தேன்." 

"ஜூலி பற்றிய உங்கள் பார்வை?" 

"ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஜூலி ஃபேமஸ்னு சொல்கிறார்கள். ஆனா, எனக்குத் தெரியவில்லை. ஏன்னா, ஒவ்வொரு ஊராக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடங்கி வைக்க நான் சென்றுவிட்டேன். அப்போதுதான் ஜூலி பற்றி சமூக வலைதளங்களில் வந்தது. அப்போதுகூட நான் சரியாகப் பார்க்கவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவுடன் ஜூலி பற்றிச் சொன்னார்கள். சினிமாக்காரங்ககூட ஒத்துப் போகணும்... இல்லை, 'நான்தான் அறிவாளி' என்பதைக் காட்ட வேண்டும்... இப்படி ஏதோ ஒன்றை ஜூலி முயற்சி பண்ணார். அந்தப் பாவனை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் முதல் வாரத்திலேயே அவரின் நடவடிக்கை பிடிக்காமல் ஜூலியை நாமினேட் பண்ணினேன்."

"ஓவியாவுக்கு இத்தகைய வரவேற்பு இருக்கும்னு நினைத்தீர்களா?"

"ஓரளவுக்கு அவருக்கான வரவேற்பு இருக்கும்னு எதிர்பார்த்தேன். ஏனென்றால், கமல் சார் பேசும்போது அதிக அளவு கரகோஷம் ஓவியாவுக்குக் கேட்கும். ஆனால், வெளியே வந்து பார்க்கும்போது எதிர்பார்த்தைவிட அதிகமாகவே அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது." 

"பிக் பாஸ் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக விளையாடியதாக யாரை நினைக்கிறீர்கள்?"

"ஆரவ். ஏன்னா, அந்த வீட்டிலிருந்த எல்லோரையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அவரை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதனால், ஒரு புத்திசாலித்தனத்தோடு இருந்தாரோ... என்று எனக்குத் தோன்றுகிறது."

"ஓவியாவுக்கும் ஆரவ்வுக்குமான காதல் பற்றி?"

"அது அவர்கள் இரண்டும் பேரும் சேர்ந்த ஒரு விஷயம். அந்த வீட்டுக்குள்ளே அவர்கள் இருக்கும்போது நான் பிரச்னைக்குப் போனேன். அதுவும், ஓவியா மேலிருக்கும் அளவு கடந்த பாசத்தினால்... சகோதரப் பாசம் அது. என் கையில் ஓவியா ஒரு காப்பு போட்டுவிட்டுச் சொன்னார்கள், 'உன்கூட நிறைய சண்டை போடுறேன். ஆனா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். யூ ஆர் ட்ரூ ப்ரோனு'னு சொன்னார்கள். அதற்குப் பிறகு ஓவியாவுக்கும் ஜூலிக்கும் நிறைய சண்டைகள் வந்துகொண்டேயிருந்ததால், இருவரையும் தொடர்ந்து நாமினேட் பண்ணினேன். அதற்கான காரணம் வீட்டுக்குள்ளே அமைதி இருக்கணும் என்பதால்தான். பிறகு வீட்டில் இருக்கும் அனைவரும் ஓவியாவைத் தனிமைப்படுத்தும்போது, 'ஐய்யோ... இந்தக் குழந்தையை எல்லோரும் தனிமைப்படுத்துகிறார்கள், நாமும் தெரியாமல் நாமினேட் பண்ணிட்டோமோ'னு ஓவியாவுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினேன்,  அவர்கள் பக்கமும் பேசினேன். அப்போதுதான் சினேகன் இரண்டு பக்கமும் பேசுகிறார், என்ற அவப்பெயர் கிடைத்தது. 

ஓவியாவிடம் இரண்டு அழகான குணங்கள் உண்டு. ஒன்று, புறம் பேசத் தெரியாது. இரண்டு, பொய் சொன்னால் உடனே வந்து பொய் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிடுவார். 'உனக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தால், நான்தான் தாய்மாமனாக வருவேன்னு' சொன்னேன். ஓவியாவின் குழந்தைத்தனம் எல்லோருக்கும் பிடித்த காரணத்தால் அவருக்கு இத்தகைய வரவேற்பு இருக்கிறது." 

"ஏன் பிக் பாஸ் மேடையில் பேசவில்லை?"

"ஆரவ் ஜெயித்த பிறகு, மேடையில் வெற்றிப் பேச்சு பேசிக்கொண்டிருந்தார். அப்போது என்னைத் திரும்பிப் பார்ப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பார்க்கவேயில்லை. அந்த நேரத்திலும் நானே அவரிடம் சென்று கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருப்பேன். என்னைப் பேசுவதற்கு யாரும் என்னை அழைக்கவும் இல்லை. நானும் கேட்கவும் இல்லை." 

"கட்டிப்பிடி வைத்தியத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தினது யார்?"

" 'டைனமிக் செல்ப் அவைக்' என்ற தன்னம்பிக்கை முனைப்பு இயக்கத்துக்குப் போனோம். அரவணைத்து அன்புச் செலுத்துவது மானிடத்தின் மேன்மை என்பதைப் புரிந்துகொண்டோம். பயிற்சி எடுத்தவர்களுடன் நாங்கள் அதைப் பகிர்ந்துகொண்டோம். அதுவும், இருவரும் சம்மதித்தால்தான். இல்லையென்றால் கை குலுக்கியும், கண்களைப் பார்த்தும்கூட வாழ்த்துச் சொல்லலாம். ஆனால், கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்வது தாய்மையின் வெளிப்பாடாக இருக்கும் என்ற நோக்கத்துடன்தான் அதைச் செய்தோம்."

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

"பெண்களைப் பெரிதும் மதிக்கும் சினேகனுக்கு இந்தச் செயல் தப்பாகத் தெரியவில்லையா?"

"நகர்ப்புறங்களில் பெண்களைப் பார்த்தால் உடலோடு ஒட்டாத வகையில் ஒரு தொட்டில் கட்டி குழந்தைகளைச் சுமந்து செல்கின்றனர். ஆனால், கிராமப்புறத்தில் இருக்கும் பெண்கள் அப்படியில்லை. அவர்களின் வியர்வையுடன் தோள்களில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள். எப்போதும் அதுதான் உண்மையான பாசம். உங்களைத் தொட்டாலே தவறு. கற்பு போயிரும் என்றால், இந்த உலகத்தில் எல்லோரும் தனித்தனியாக வாழ்ந்து இருக்கணும். 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ' படத்தில் கமல் சார் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பற்றிச் சொன்னார். அது உங்களுக்குத் தப்பாக தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் 'வேர்ல்ட் ஹக்கிங் டே'க்கு ஒரு வீடியோ போட்டார். அது உங்களுக்குத் தப்பாகத் தெரியவில்லை. சினேகன் மட்டுமே தப்பாகத் தெரிந்தார்." 

"பிக் பாஸ் குரலுக்குச் சொந்தக்காரரைப் பார்த்தீர்களா?"

"இதுவரை அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டிலிருந்த எல்லோரும் ஒற்றுமையாக இருந்தற்கும், அவ்வப்போது சிரித்து, தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் அந்தக் குரல் மட்டும்தான் பெரிய பலமாக இருந்தது. அந்தக் குரல் மட்டும் இல்லை என்றால் எங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். நான் அழுதுகொண்டே இருப்பேன். அப்போது 'சினேகன் ரூமுக்கு வாங்க'னு கூப்பிடுவார். எனக்கு ஒரு கடிதம் ரெடி பண்ணி வைத்திருப்பார். யாரையும் விட்டுக்கொடுக்காத குரல். தாய்மை கலந்த உணர்வுடன். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரருக்கு ஒரு அருமையான கதைக்களம் அமைக்கவிருக்கிறேன். அந்தக் குரலை வைத்தே ஒரு படம் உருவாக்கலாம் எனக் கதை எழுதி வைத்திருக்கிறேன். ஒப்பனையும் கற்பனையும் இல்லாத ஒரு கதை அது. இந்த மானுடத்தை உரித்துப்போடும் வகையில் கதை இருக்கும். 'பிக் பாஸ் உங்களுக்காகவே ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்' என அங்கேயே சொல்லியிருக்கிறேன். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரைக் கண்டிப்பாகச் சந்திப்பேன். என் படத்தில் அவர் நடிப்பார்." 

"தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் பெயரை எப்படி மறந்தீர்கள்?"

"அது எனக்கே தெரியவில்லை. அதுவரைக்கும் மனோன்மணியம் சுந்தரனார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தாயுமானவர் என்று சொன்னதுக்குக் காரணமே, 'நம்மளை எப்படியாவது வெளியே அனுப்பிட மாட்டார்களா?' என்றுதான். பிரச்னையோட உச்சத்தில் இருக்கிறோம் என்பதால்தான். இப்போதுகூட என்னிடம் வந்து பிக் பாஸ் வீட்டுக்குள் எத்தனை அரிசி, பருப்பு, கடுகு, முட்டை இருந்தது என்று கேட்டால் அப்படியே சொல்வேன். ஏனென்றால், எல்லாமே எனக்கு அத்துப்படி. அந்த அளவுக்கு அந்த வீட்டை அறிந்தவன். அன்று கேட்ட கேள்விக்கு எல்லாம் சுத்தமாகப் பதில் இல்லாமல், என் போராட்டத்தில்தான் அப்படிச் சொன்னேன். தெரியவில்லை என்பது ஒருபக்கம். ரொம்ப ஜாக்கிரதையாகப் பதில் சொல்லவில்லை என்பது இன்னொரு பக்கம். வெளியே வந்து சக்தியிடம் சொல்லிட்டுதான் இருந்தேன். 'உள்ளே கேட்ட எந்தக் கேள்விக்கும் சரியாக, நிதானமாகப் பதில் சொல்லவில்லை. எப்படியோ வீட்டுக்கு அனுப்பினால் சரி' என்றேன். தெரியாததைத் தெரியாது என்று சொல்வதுதான் சரி." 

"பிக் பாஸில் மறக்க முடியாத அனுபவம்?"

"என் அப்பா வந்ததுதான். எந்த இடத்தில் ஒரு பொருளை வைத்தால் எல்லோரும் அண்ணாந்து பார்ப்பார்களோ, அந்த இடத்தில் என் தகப்பனார் வந்ததாக உணர்கிறேன். அதற்குக் கமல் சாருக்குத்தான் நன்றி சொல்கிறேன். ஏன்னா, அவர்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னாடி அப்பாவைப் பார்க்கணுமானு கேட்டார். அதனால், எல்லோரும் சேர்ந்து ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்." 

"எதிர்காலத் திட்டம்?"

"எப்போதும் கவிஞன், எப்போதாவது நடிகன். சமூகப் பொறுப்புகளில் இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே இதே காவிரியில் நான் தண்ணீர் கேட்கின்ற காலகட்டத்தில்தான், டைனமிக் கல்யாணத்தில் என்னைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டனர். ஏனென்றால், அப்போது இருந்த அரசு வேறு. அந்த அரசுக்கு எதிராகத்தான், பூம்புகாரிலிருந்து மேட்டூர் வரைக்கும் தனியாக நடந்தேன். இதே ஜல்லிக்கட்டு பிரச்னையை 300 இளைஞர்களை வைத்து விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பு ஆரம்பித்து வைத்தேன். அதற்கு ஃபைல் இருக்கிறது. அதற்குப் பிறகு கோடிக்கணக்கான பேர் சேர்ந்தார்கள். மொழி, இனம், கலாசாரம், சமூகப் பிரச்னைகளில் எல்லாம் என்னால் முடிந்த அளவுக்குப் பணிகளை ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் அதிகமாக சமூகப் பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன்." 

"கமல் அரசியலுக்கு வருவாருனு நினைக்கிறீர்களா?"

"வீட்டுக்குள் இருந்தவரை அப்படி எதுவும் நினைக்கவில்லை. பத்மஶ்ரீ பேச்சுகளில் அவரின் வாழ்வியல் மாறிக்கொண்டிருக்கிறது என்று கணித்தேன். அதை அவரிடமே கேட்டேன். நான் முன்பு பார்த்த பத்மஶ்ரீ வேறு இப்போது பார்க்கும் பத்மஶ்ரீ வேறு என்று எனச் சொன்னேன்." 

'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive

"ஹீரோவாக நடிக்கும் படத்தைப் பற்றி சொல்லுங்கள்?"

"விரைவில் 'பொம்மி' ரிலீஸாகப்போகுது. அதில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அடுத்ததாக 'இராஜ ராஜ சோழனின் போர்வாள்'' படத்தில் ஒரு சின்ன ரோல் செய்திருக்கிறேன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். கமல் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்கள். இதுதவிர புதிய படங்களில் ஹீரோவாக நடிக்க அணுகியிருக்கிறார்கள்."

அடுத்த கட்டுரைக்கு