Published:Updated:

லட்சம் ரூபாய் சம்பளம், சட்ட மேலவை உறுப்பினர்... தமிழ் இசையின் உச்சஸ்தாயி... கே.பி.சுந்தராம்பாள்! #VikatanInfographics

லட்சம் ரூபாய் சம்பளம்,  சட்ட மேலவை உறுப்பினர்... தமிழ் இசையின் உச்சஸ்தாயி... கே.பி.சுந்தராம்பாள்! #VikatanInfographics
லட்சம் ரூபாய் சம்பளம், சட்ட மேலவை உறுப்பினர்... தமிழ் இசையின் உச்சஸ்தாயி... கே.பி.சுந்தராம்பாள்! #VikatanInfographics

“அவ்வையே நீ கூறும் சமாதானத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அம்மையப்பனிடம் இருந்து ஒரு பழத்தைப்பெற எனக்கு அருகதை இல்லையா? எனக்கு அந்தப்பழம் தரக்கூடாதா?’ என்று முருகன் கேட்ட அடுத்த நொடியே... ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா...” என்று அவ்வையார் பெருங்குரல் எடுத்து பாட...  அந்தப் பாடலை கேட்பவர்கள் தன்னையறியாமல் இருந்த இடத்தையே பழநி மலையாக நினைத்து உருகுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் பாடுவதை கேட்கும்போது, ஏதோ அந்த அவ்வையாரே வந்து பாடுவதுபோல் இருக்கும். இப்படி குரலில் கம்பீரத்தையும் தெய்வீகத்தையும் ஒருங்கேபெற்ற  கே.பி.சுந்தரம்பாள் இதேநாளில்தான் (அக்டோபர் 10) பிறந்தார். 

அவரைப்பற்றி 5.8.1965 ஆனந்த விகடன் இதழில் வந்த கட்டுரையில் இருந்து...

குழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார். தாயைப் பின்தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) ''எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடுகிறாய், குளிப்பதற்கா?'' என்று கேட்டபோது, அந்தத் தாய் துக்கம் தாங்காமல் ''என் அருமைச் செல்வங்களே! உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜன்மத்துக்கு ஒரு வழியும் இல்லை. வறுமையின் கொடுமையை என்னால் தாங்கவும் முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்று வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடன் உயிரை விட்டுவிடப் போகிறேன்'' என்று கதறிவிட்டாள்.

அதைக் கேட்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒருத்தி, அம்மாவைத் தடுத்து, மனம் மாற்றி, வீட்டுக்குத் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.
வறுமையின் கொடுமை தாங்காது கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டுச் சென்ற அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றுக்கொண்டார்.

அம்மாவைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்றுகொண்டு இருந்தபோது, அந்த வழியாகச் சென்ற டெபுடி போலீஸ் சூப்பரின்டென்டெண்ட் ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யருக்கு என்ன தோன்றியதோ, அந்தச் சிறுமியைப் பார்த்து, ''டிராமாவில் சேர்ந்து நடிக்கிறாயா, கண்ணு?'' என்று கேட்டார். அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்ததும், அவளை வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். எட்டு வயது நிரம்பாத அந்தப் பெண்ணுக்கு அங்கே கிடைத்த வேஷம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி!

பிற்காலத்தில் 'லட்ச ரூபாய் நட்சத்திரம்' என்று புகழப்பெற்ற திருமதி கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை நாடகம் இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த இவர், 1927-ம் ஆண்டில் இலங்கை சென்றபோது, அங்கே எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார்.

''என்னுடைய ஸ்வாமியை (கிட்டப்பா) நான் முதன்முதல் சந்தித்தது இலங்கையில்தான். அதற்குப் பிறகு அவருடன் சேர்ந்து வாழும் பேறு எனக்கு ஆறே ஆண்டு காலம்தான் கிட்டியது. 1933-ல் அவர் காலமாகிவிட்டார். அன்று முதல் இன்றுவரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவேரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இந்த 32 ஆண்டுகளில் ஒரு சில அமாவாசைகளே காவேரி ஸ்நானம் இல்லாமல் விட்டுப் போயிருக்கின்றன'' என்கிறார்.

பல படங்கள், பல பாடல்கள், பல விருதுகளைப்பெற்ற கே.பி.சுந்தராம்பாள், 1980ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி காலமானார். 

அவரின் நினைவைப் போற்றுவோம்.