Published:Updated:

மிஸ்டர் கைப்புள்ள.... உன்ன ரொம்ப மிஸ் பண்றோம்! #HBDVadivelu

மிஸ்டர் கைப்புள்ள.... உன்ன ரொம்ப மிஸ் பண்றோம்! #HBDVadivelu
மிஸ்டர் கைப்புள்ள.... உன்ன ரொம்ப மிஸ் பண்றோம்! #HBDVadivelu

நகைச்சுவை மூலம் சமுதாய கருத்துகளையும், சமுதாய கருத்துகளை நகைச்சுவையாகவும் பகடியாகவும் என்.எஸ்.கிருஷ்ண னும் எம்.ஆர்.ராதாவும் செய்துகொண்டிருந்த காலம். அப்போது நகைச்சுவைக்கென உடல்மொழி கொண்டு ஒரு புதிய இலக்கணத்தைப் படைத்தவர் நாகேஷ். தமிழ் சினிமாவின் மொத்த நகைச்சுவை காலத்தையும் நாகேஷுக்கு முன், நாகேஷுக்கு பின் என்று பிரித்துவிடலாம். நகைச்சுவையைப்போலவே குணச்சித்திரத்திலும் கொடி நாட்டியவர் நாகேஷ். 

எப்பொழுதுமே ஒருவருடைய பிரதியாக மற்றொருவர் இருக்கிறார் என்றால் அவரை உண்மை என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் நாகேஷுக்குப் பின்னால் நாகேஷின் பிரதி என்று ஒரு நடிகரை அழைக்க முடியுமேயானால் அவர் ‘வைகைப்புயல்’ வடிவேலுவாக இருக்க முடியும். நாகேஷ் ஒரு நகைச்சுவை நடிகர் என்பது அவரது அடையாளம். ஆனால் அவரது இயல்பு என்பது அவர் ஒரு முழு நடிகர். சோகம், கோபம் என அனைத்துக்கும் பொருந்திப்போகிறவர். தனது தத்ரூபமான நடிப்பால் எவ்வளவுக்கு எவ்வளவு சிரிக்கவைத்தாரோ அதேபோல அழவைக்கவும் சோகமாக்கவும் செய்வார் நாகேஷ். 

நாகேஷின் அந்த இடத்தை வடிவேலு நிரப்பினார் என்று சொல்லலாம். நகைச்சுவையைப் போலவே உணர்வுபூர்வமான காட்சிகளிலும் வடிவேலு தன்னை ஒரு தேர்ந்த நடிகராகவே நிலைநிறுத்திக்கொண்டார். முன்னணி நடிகர்களைப்போல ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தும் நாகேஷுக்கு மகனாகவும், பேரனாகவும் நடித்த பெருமை வடிவேலுவுக்கு உண்டு. ‘கார்மேகம்’ படத்தில் டீக்கடை வாசலில் சாக்கடையில் விழுந்துகிடக்கும் வடிவேலு சொல்லும் 'அம்மா... அம்மா' என்ற குரலில் நாகேஷின் நிறம் தெரியும். 

வடிவேலுவின் ஆரம்ப காலம் கவுண்டமணி-செந்தில் சாம்ராஜ்யத்தின் ஒரு ப்ராபர்ட்டியாக இருந்தது. மிகப்புதுமையான உடலசைவுகள், குரல், மதுரைத்தமிழ் எனத் தனக்கென பலங்களை அதிகப்படுத்திக்கொண்டு மெருகேற்றிக்கொண்டிருந்த காலம் அது. அடிவாங்குவதும், சிரித்து சிரிக்க வைப்பதுமாக கடந்த அந்தநேரத்தில் அவருக்கென்று ஓர் அங்கீகாரத்தை அளித்த படம் 'தேவர் மகன்'. 'சட்டை மேல எத்தன பட்டன்' என்று கமல்ஹாசனுடன் பணியாற்றிருந்த வடிவேலுக்கு இந்த ‘தேவர் மகன்’ புது அனுபவம் மட்டுமல்ல. அது ஒரு பாலபாடமும் கூட. சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் மத்தியில் தனது நடிப்புத்திறமையை நிரூபித்தார் வடிவேலு. 

நகைச்சுவையைத் தாண்டி உணர்வுகளைக் கொப்பளிக்கும் காட்சிகளால் 'இந்தப் பய பெரிய ஆளா வருவான்டா' என்று மூத்த தமிழ் பேசிய சிவாஜியின் வாயால் வாழ்த்து வாங்கினார். பஞ்சாயத்து காட்சி முடிந்து கோபத்துடன் சிவாஜி வீட்டுக்குத் திரும்பும் காட்சி. அந்த மொத்த ஃபிரேமில் சிவாஜியின் முகத்துக்கும் கமலின் முகத்துக்கும் நடுவே பயந்து பயந்து வரும் வடிவேலுவின் முகம். அந்த இறுக்கமான காட்சியில் வடிவேலுவின் நடிப்பு நன்றாக புலப்படும். 

கை வெட்டப்பட்டு படுத்தப்படுக்கையாக இருக்கும் காட்சியில் அவர் வலியோடு பேசும் வசனங்கள் அனைத்தும் மற்றுமொரு எடுத்துக்காட்டு. சோகங்களை அதன் அடர்விலேயே வெளிப்படுத்திய காட்சி அது. தேவர் மகனில் வடிவேலு என்று சொன்னால் அதில் அவர் நகைச்சுவை நடிகர் என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள். குணச்சித்திரம் என்ற சொல்லுக்கு அவர் பெயர் வாங்கிய படம் தேவர் மகன். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அந்த இசக்கி கதாபாத்திரம் எளிதில் கடந்துவிட முடியாத ஒன்று.

'பொற்காலம்' படத்திலும் முரளியிடம் தான் கருப்பாக இருப்பதால் தன்னை மாப்பிள்ளை கேட்கவில்லையா என்று கேட்கும் காட்சி அவரது நடிப்புக்கு மிகப்பெரிய சாட்சி. ‘ராஜகாளி அம்மன்’ என்ற திரைப்படத்தில் ஓர் அண்ணனாக அவர் காட்டிய பாசமும் அன்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அழவும் வைத்தது. அதுபோல இன்னொரு முக்கியமான படம் 'எம் மகன்'. தாய் மாமனாக மருமகனுக்கு ஆறுதலாக இருப்பதாகட்டும் அக்கா கணவரிடம் பயப்படுவதாக இருக்கட்டும் வடிவேலு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

குணச்சித்திர நடிப்பை நகைச்சுவை நடிகராகவே கையாண்டார் வடிவேலு. அண்ணனாக, தாய் மாமனாக, சித்தப்பாவாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களைத் தாண்டியும் நகைச்சுவைக்கு ஈடாக நடிப்பும் பேசப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் தனக்கான உடல்மொழி, தோற்றம், பேச்சு எனத் தானே தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்ற வடிவேலு கடந்த சில  ஆண்டுகளாக வெற்றிகளை விட்டு விலகியிருக்கிறார். அப்படியிருப்பது அவர் தோல்வி அடைகிறார் என்று அர்த்தமல்ல.

விஜயகாந்துடனான பிணக்கு, அதனால் நடந்த அரசியல் பிரவேசம், நண்பர்களின் விலகல் என அவரது பயணம் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தாலும் அவர் கொடுத்து வைத்திருக்கும் நகைச்சுவை இன்னும் தலைமுறைகளைச் சிரிக்க வைக்கும். முன்பு போல அவரது படங்கள் இல்லையென்றாலும் அவருடைய வசனமற்ற ஒரு நாள் பொழுதை யாராலும் கடக்க முடியாது. தற்பொழுது பெருகிவரும் மீம் கலாசாரத்திற்கு மிகப்பெரிய தீனி வடிவேலுவின் வசனங்களும் உடல் மொழிகளும்தாம். 

நகைச்சுவை நடிகர் என்பதைத்தாண்டி வடிவேலு எனும் ஒரு குணச்சித்திர நடிகரைத் தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழ் சினிமாவோ ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களையும், வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த நடிகர்களை நகைச்சுவை நடிகர்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘தெனாலிராமன்’, ‘எலி’, ‘கத்திசண்டை’, ‘சிவலிங்கா’ என்று அவர் தொடங்கிவிட்டாலும் மக்களின் மனதில் இருக்கும் வடிவேலு இன்னும் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ‘கைப்புள்ள’, ‘வீரபாகு’, ‘சூனாபானா’, ‘நாய் சேகர்’, ‘கிரிகாலன்’, ‘பேனர்ஜி’... என்று யாராவது ஒருவர் தினமும் கிச்சுகிச்சு மூட்ட வந்துவிடுகிறார்கள். 

இருந்தாலும் மக்கள் காத்திருக்கிறார்கள் வடிவேலு அவர்களே. 

பின் செல்ல