Published:Updated:

தான் நடித்த முதல் படத்தைப் பார்க்காமலேயே இறந்த நடிகர்..! - படக்குழுவின் உருக்க அஞ்சலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தான் நடித்த முதல் படத்தைப் பார்க்காமலேயே இறந்த நடிகர்..! - படக்குழுவின் உருக்க அஞ்சலி
தான் நடித்த முதல் படத்தைப் பார்க்காமலேயே இறந்த நடிகர்..! - படக்குழுவின் உருக்க அஞ்சலி

தான் நடித்த முதல் படத்தைப் பார்க்காமலேயே இறந்த நடிகர்..! - படக்குழுவின் உருக்க அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'மேற்குத் தொடர்ச்சி மலை'...  எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த தமிழ்ப் படம். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும், அங்கு உள்ள அரசியலைப் பற்றியும் பேசியிருக்கும் ஓர் படைப்பு. இசைஞானியின் இசையில், நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க, அறிமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கியிருக்கும் இப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பெற்றிருக்கிறது.

"மேற்குத் தொடர்ச்சி மலையை மையமாக வைத்து படம் பண்ண வேண்டும் என்று எப்படி தோன்றியது?"

"என் சொந்த ஊர் தேனி மாவட்டம் கோம்பை கிராமம். நான் ஐந்தாம் வகுப்பு வரை அங்கே இருந்தேன். பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கு நிலம் பற்றியும், நிலம் சார்ந்த அரசியல் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம். உலகமயமாக்கலுக்குப் பிறகு, 200 வருடங்களில் நடக்கும் மாற்றத்தை வெறும் 20 வருடங்களிலேயே சந்தித்துவிட்டோம். அடித்தட்டு மக்களுக்கு உடைமைதான் சொத்து. ஆனால், அதில்தான் மிகப்பெரிய அரசியலும் நடக்கிறது. நான் சிறு வயதில் பார்த்த சம்பவங்களும், மக்களின் வாழ்க்கையும் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அதுதான் இந்தப் படமெடுக்க காரணம்."

"இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறினாராமே..."

"நான் 'வெண்ணிலா கபடிக்குழு', 'நான் மகான் அல்ல' படத்தில் இணை இயக்குநராக இருந்தபோது விஜய் சேதுபதி நல்ல பழக்கம். அவர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் இருந்தபோது இந்தக் கதைக்கு அவரே நடிப்பதாகக் கூறினார். இந்தக் கதைக்கு  உங்கள் உடல்வாகு ஒத்துவராது. அந்தக் கேரக்டரில் நடிக்கும் நடிகருக்கு எந்த ஒரு பிம்பமும் இருக்கக்கூடாது. 'நீங்கள் ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டீர்கள். நீங்கள் மட்டுமல்ல எந்த நடிகரும் இந்தக் கதைக்கு வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். 'குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று விஜய்சேதுபதியிடம் சொன்னபோது, அவரே தயாரிப்பதாகச் சொன்னார். 'மேற்குத் தொடர்ச்சி மலை' உருவானது." 

"இசைஞானி இளையராஜாவிற்கும் உங்களுக்குமான பழக்கம் பற்றி.."

"இளையராஜா சாரும் என் அப்பாவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். நான் இளையராஜா சாரை  'அழகர்சாமியின் குதிரை' படத்தின் ரெக்கார்டிங்கில் பார்த்துப் பேசும்பொழுது அவர் என்னிடம் எந்த ஊர் என்றெல்லாம் கேட்டறிந்தார். அப்போதுதான் அப்பாவைப் பற்றி அவரிடம் சொன்னேன். ராஜா சார் மண்வாசனையை ரசிக்கக்கூடியவர். அவருடைய அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள் அங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தவர். ஆக, நான் சொல்ல நினைக்கும் களத்தைப் பற்றி நன்கு தெரிந்த மனிதர்."

"இந்த படத்திற்கான நடிகர்களின் தேர்வு எப்படி நடந்தது?"

"இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆண்டனி நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே சில படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு மூன்று வருடம் ப்ரீ ப்ரொடக்‌ஷன் நடந்தது. தேனியில் கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கி, அந்தச் சூழலை ஆராய்ந்து நுணுக்கமாகக் கவனித்து வந்தோம். ஹீரோயினை அந்த ஊர் மக்களுள் ஒருவராகத் தயார்படுத்தி, அவர்களோடு சேர்ந்து மலைக்குக் கூலி வேலைக்கு அனுப்பி அந்த மக்களின் கலாசாரத்தை உள்ளுணர வைத்தோம். அதுவரை அவர் ஒரு நடிகை என்று மக்கள் யாருக்கும் தெரியாது. 'இந்தப் பொண்ணுக்கு வீட்டுல ரொம்ப கஷ்டம். வேலைக்குச் சேர்த்துக்கோங்க' என்று சொல்லி வேலைக்கு அனுப்பினோம். மற்றபடி எல்லோருமே புதுமுகங்கள். அந்த ஊர் மக்கள் பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்."

"திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பு, விருதுகள்... இதையெல்லாம் எதிர்பார்த்தீர்களா?"

"விருதுகள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரை யாருக்காகப் படம் எடுத்தோமோ, அவர்களுக்குப் போய் சேரணும். அதுதான் ஒரு படைப்பின் வெற்றி. விருதுகளுக்கு அனுப்பினால், 'இந்தப் படத்தில் என்ன இருக்கிறது?' என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் வரும், மக்களிடம் எளிதில் சென்றடையும் என்பதால் அனுப்பினோம். இது ஒரு உத்தி என்று சொல்லலாம். நியூயார்க், கேரளா, பஞ்சாப் எனப் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம் எனப் பல்வேறு விருதுகளை இப்படம் பெற்றிருக்கிறது. படத்தில் ஒளிப்பதிவிற்கும் பெரும் பங்கு உண்டு. தேனி ஈஸ்வரின் புகைப்படங்களுக்கு நான் பெரிய ரசிகன். அவர் என் நண்பரும் கூட. இந்தக் கதைக்களத்திற்கு இவர்தான் மிகச்சரியான நபர். இவரும் என்னுடனேயே இருந்து படப்பிடிப்பு தொடங்கும் முன்பிருந்தே பயணிக்க ஆரம்பித்தார். எனக்கும் அவருக்குமான சிந்தனை ஒரேமாதிரிதான் இருக்கும். நான் என்ன நினைத்து காட்சியைச் சொல்கிறேனோ, அதை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிடுவார். மண்ணைப் பற்றி, மனிதத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்."

"படம் வெளிவர தாமதம் ஆவதற்கான காரணம்?"

"இது திட்டமிட்ட தாமதம்தான். படம் முடிந்து ஒரு வருடம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதுதான் திட்டம். அதற்கு, தயாரிப்பாளர் விஜய்சேதுபதியும் முழு சுதந்திரம் கொடுத்தார். அவரது சுதந்திரத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. 'நான் படத்தைத் தியேட்டரில் ஆடியன்ஸா பார்த்துக்குறேன்'னு சொன்னவர், படம் பல விருதுகளுக்குப் போகும்போது, பலபேர் படம் பார்த்துவிட்டு 'படம் நல்லாயிருக்கு' என்று சொன்னப்பிறகு படத்தைப் பார்த்தார், பாராட்டினார். இந்த மாதிரியான படங்களை மக்கள் பார்க்கமாட்டார்கள் என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால், மக்கள் நல்ல படங்களை வரவேற்கிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வரும்பொழுது, இங்கே சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது. இதையெல்லாம் கடந்து ஒரு படத்தை வெளியிடுவதே போராட்டம்தான். இந்தப் படம் நிச்சயமாக, வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆகும்!" 


 

"படத்தில் தேனி கிராம மக்கள் எப்படி நடித்தார்கள்?"

"அவர்கள் நடித்தார்கள் என்று கூறமுடியாது. நம்மைப் பற்றிய படம் இது என்ற எண்ணத்தில் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். இந்த காட்சிகளை நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் உணர்வு ரீதியாக 100 சதவீதம் கொடுக்க முடியாது. அந்த வாழ்க்கையின் மனவலி, உணர்வு எல்லாம் அங்கு வாழ்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். படத்தில் அவர்களைப் பார்க்கும்போது நடிகர்கள் போலவே இருக்கமாட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், நம்மைச் சுற்றி ஒரு சம்பவம் நடக்கும்போது இருக்கும் எதார்த்தம் இந்தப் படத்தில் இருக்கும்." 

''படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இறந்தபோது, அவர் நடித்த காட்சிகள் மட்டும் அவரது இல்லத்தில் திரையிடப்பட்டதாக வந்த செய்தி உண்மையா?"

"உண்மைதான். அவர் பெயர் சுடலை. எங்கள் ஊரில் சினிமா கனவோடு இருந்தவர். ஊர் நாடகத்தில் எல்லாம் நடிப்பார். இளையராஜா சாருடைய அண்ணன் பாவலர் வரதராஜன்தான் 'சுடலை' என்ற இவரது பெயரை 'எம்.எஸ்.லை' என்று மாற்றினார். குடும்ப சூழல் காரணமாக அவரால் சினிமாவிற்குள் நுழைய முடியவில்லை. தன் கடைசி காலம் வரை தியேட்டரில் வேலைசெய்து, ஒவ்வொரு  புதுப்படம் வெளியாகும்போதும் அப்படம் பற்றிய நோட்டீஸ்களை கொடுத்தும் வாழ்க்கையைக் கழித்தார். அவருடைய குரல் அவ்வளவு அருமையாக இருக்கும். அந்தக் குரலுக்காகவே சின்ன வயதில் நாங்கள் அவர் பின்னாடியே போவோம். அவருடைய பல வருட ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். அப்போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எத்தனை டேக் என்றாலும் சலிக்காமல் அதே உற்சாகத்துடன் நடித்துக்கொடுப்பார். தள்ளாத வயதிலும் அவருடையை உத்வேகம் எங்களைப் பிரமிக்க வைத்தது. அவருடைய உடல்நிலையைப் பொருத்தவரை, எப்போதும் என்ன வேண்டுமானால் நடக்கலாம் என்ற சூழல் இருந்தது. அவருடைய வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற அவசர அவசரமாக டப்பிங் பேச வைத்தோம். படம் முடிந்து எல்லோரும் சென்னை வந்தபிறகு, அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் வந்ததும், உடனே ஊருக்குக் கிளம்பி, போகும் வழியிலேயே அவர் நடித்த காட்சிகளை மட்டும் எடிட் செய்தோம். அவர் இல்லத்திற்குச் சென்று அவருக்குப் பக்கத்தில் லேப்டாப்பை வைத்து அவர் நடித்த காட்சிகளைப் போட்டுக் காட்டினோம். அவரது பலவருட ஆசையை நனவாக்கிய எங்களுக்கு, அதை அவரால் பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது" நெகிழ்வாக முடிக்கிறார், லெனின் பாரதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு