Published:Updated:

“ட்வின்ஸ் மருமகள்களுக்காக வெயிட்டிங்!” சின்னத்திரை ட்வின்ஸ் சகோதரர்களின் அம்மா

கு.ஆனந்தராஜ்
“ட்வின்ஸ் மருமகள்களுக்காக வெயிட்டிங்!” சின்னத்திரை ட்வின்ஸ் சகோதரர்களின் அம்மா
“ட்வின்ஸ் மருமகள்களுக்காக வெயிட்டிங்!” சின்னத்திரை ட்வின்ஸ் சகோதரர்களின் அம்மா

“எதிர்பாராத வகையில் கடவுள் எனக்குக் கொடுத்த கிஃப்ட், என் இரட்டைக் குழந்தைகள். இவங்க பிறந்ததிலிருந்து இத்தனை வருஷங்களாக வாழ்க்கையின் அழகையும் அன்பையும் நிறைவா உணர்கிறேன்" எனப் பூரிப்புடன் பேசுகிறார் ஜெயந்தி. சின்னத்திரையில் புகழ்பெற்ற அரவிந்தன், அருணன் என்ற இரட்டைச் சகோதரர்களின் அம்மா. 

"என் மூத்தப் பையன் ராஜராஜன், சிங்கப்பூரில் வொர்க் பண்ணிட்டிருக்கான். 1988-ம் வருஷம், என் இரண்டாவது பிரசவம். முதலில் அரவிந்தன் பிறந்தான். அடுத்த பத்தாவது நிமிஷம் அருணன் பிறந்தான். அதுவரைக்கும் எனக்கு இரட்டைக் குழந்தைங்க பிறக்கப்போறாங்கனு தெரியாது. அதனால், வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு. கடவுளின் அன்புப் பரிசாக நினைச்சேன். இவங்கப் பிறந்தப் பிறகு எங்கக் குடும்பத்தில் மகிழ்ச்சியும் புகழும் ரொம்பவே உயர்ந்துச்சு. கணவரும் நானும் சமூகச் சேவை சார்ந்த பணியில் இருந்தோம். நிறையக் கடைகளும் வெச்சிருந்தோம். எங்க பிசினஸூம் டெவலப் ஆச்சு. பசங்க ரெண்டு பேரும் இணை பிரியாத நண்பர்கள் மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வளர ஆரம்பிச்சாங்க. 

நடக்க ஆரம்பிச்சபோதே என் உதவியைப் பெருசா எதிர்பார்க்காமல், ரெண்டுப் பேருமாக கைகோத்துகிட்டு நடந்துப் போவாங்க. அவங்களுக்குள்ளே சண்டை வந்தாலும், நான் பார்க்கிறப்போ கட்டிப்பிடிச்சுப் பாசமழை பொழிஞ்சுப்பாங்க. அதனால், எவன் தப்புப் பண்ணினானு கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிவந்துடுவேன். ரெண்டு பேருமே வித்தியாசங்கள் தெரியாத வகையில் வளர ஆரம்பிச்சாங்க. அதனால், எந்த வகையிலும் இவங்க மனசு புண்படக்கூடாதுனு ஒரே மாதிரியான டிரஸ், பொருள்களை வாங்கிக் கொடுப்போம். இப்போவரை அதையே ஃபாலோ பண்றாங்க. இப்போ சில சமயங்களில் ஆடியன்ஸ் அடையாளம் கண்டுபிடிக்கறதுக்காக, ஒரே டிசைனில் வேற கலர் டிரஸ்ஸைப் பயன்படுத்தறாங்க'' எனப் புன்னகையுடன் தொடர்கிறார் ஜெயந்தி. 

''ஸ்கூலில் ஆரம்பிச்சு காலேஜ் வரை ஒரே கிளாஸ்லதான் படிச்சாங்க. டிப்ளமோ முடிச்சுட்டு ரெண்டு வருஷம் ஒரே கம்பெனியில் வேலைக்குப் போனாங்க. அப்புறம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு சில வருஷம் மீண்டும் ஒரே கம்பெனியில் வேலை. ஸ்கூல் எக்ஸாமிலிருந்து காலேஜ் முடிக்கிற வரை ரெண்டு பேருக்கும் ஏறக்குறை ரெண்டு மார்க் வித்தியாசம்தான் இருக்கும். 'சொல்லிவெச்சு எழுதுவீங்களாடா'னு பலமுறை கேட்டிருக்கேன். 'அதெல்லாம் இல்லேம்மா'னு சிரிப்பாங்க. ஸ்கூல், காலேஜ், வேலை செய்யும் இடம் என எங்கே எது பண்ணினாலும் அது மத்தவங்க மனசுல பதிவாகிடும். அது சின்னத் தப்பா இருந்தாலும், பெரிய தப்பு மாதிரி பிரதிபலிக்க ஆரம்பிச்சுடும். அதனால், ரொம்பவே பொறுப்போடு கவனமாக இருப்பாங்க'' என்கிற ஜெயந்தி, இருவரையும் உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்கும் ரகசியத்தைச் சொல்கிறார். 

"எந்தத் தாயும் தன் பிள்ளைங்களை சுலபமா அடையாளம் கண்டுபிடிச்சுட முடியும். என் கண்களை மூடினாலும், தொட்டுப் பார்த்தே ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தைச் சொல்லிடுவேன். ஆனால், வீட்டுக்கு வரும் நெருங்கிய சொந்தங்களால்கூட அவ்வளவு எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அரவிந்தன் என நினைச்சு அருணன்கிட்டே பேசுவாங்க. அவங்க தப்பா கண்டுபிடிச்சுட்டோம்னு நினைச்சுடக் கூடாதேன்னு அண்ணனாகவே பதில் சொல்லுவான். இந்தக் குழப்பங்கள் இப்போவரை தொடருது. அரவிந்தனின் ஒரு காலில் மச்சங்கள் இருக்கும். அதனால், உறவினர்கள் முதல்ல மச்சத்தைப் பார்த்து உறுதிபடுத்திட்டுப் பேச ஆரம்பிப்பாங்க. பலரும் 'ஜீன்ஸ்' படத்தில் வரும் 'பிரசாந்த் பிரசதர்ஸ்'னு சொல்வாங்க. 

இவங்க எங்கே போனாலும் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷனா மாறிடுவாங்க. பலரும் தங்களை வியப்பாக பார்க்கிறதால், சின்ன வயசில் அடிக்கடி மக்கள் கூட்டம் இருக்கிற இடங்களுக்குக் கூட்டிட்டுப்போகச் சொல்லி அடம்பிடிப்பாங்க. ஒருகட்டத்துல, 'இந்த அட்ராக்‌ஷன் மக்களை மகிழ்விக்குது. அதனால், மீடியாவில் சேரலாம்'னு அதுக்கான முயற்சியில் இறங்கினாங்க. 'கலக்கப்போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் வொர்க் பண்ணினாங்க. ஆதித்யா உள்ளிட்ட பல சேனல்களிலும் காமெடி மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை செய்யறாங்க. வெளியூர் மேடை நிகழ்ச்சிகளிலும் பர்ஃபார்ம் பண்றாங்க. ஒரே மாதிரி மீசை, தாடி, சிரிப்பு, உடல் எடை, உயரம்னு தங்களை மெயின்டன் பண்றாங்க. சினிமா காஸ்டிங்  டைரக்டர்ஸாகவும் வொர்க் பண்றாங்க. 'அச்சம் என்பது மடமையடா', 'டோரா' படங்களில் வொர்க் பண்ணியிருக்காங்க. ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தொடங்கும் முயற்சியிலும் கவனம் செலுத்திட்டிருக்காங்க" என்கிற ஜெயந்தி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சொல்கிறார். 

"அருணன் ரொம்பவே அமைதி டைப். ஆனால், அரவிந்தன் கொஞ்சம் சேட்டைக்காரன். இவங்க பண்ற சேட்டை, சண்டை, குறும்புகளால் நிறைய மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான சீரியஸான விஷயங்கள் நடந்திருக்கு. எந்தத் தருணத்திலும் கோபத்தை மறந்து சிரிக்கவெச்சுடுவாங்க. எப்போதும் இணை பிரியாத பாசத்தோடு இருக்கும் ரெண்டுப் பசங்களும் இது வாழ்க்கை முழுக்க தொடரணும், கூட்டுக் குடும்பமாக வாழணும்னு நினைக்கிறாங்க. தங்களை மாதிரியே ட்வின்ஸ் சகோதரிகள் இருந்தால், நல்லாப் புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறாங்க. அதனால், ட்வின்ஸ் மருமகள்களை தேடிட்டிருக்கோம்" என்று புன்னகையுடன் மகன்களைக் கட்டியணைத்துக் கொள்கிறார் ஜெயந்தி.