Published:Updated:

"எனக்கு லாலா கடை சாந்தி பாட்டுதான் வேணும்..!" - கேட்டு வாங்கிய சிவகார்த்திகேயன் #IppadaiVellumAL

"எனக்கு லாலா கடை சாந்தி பாட்டுதான் வேணும்..!" - கேட்டு வாங்கிய சிவகார்த்திகேயன் #IppadaiVellumAL
"எனக்கு லாலா கடை சாந்தி பாட்டுதான் வேணும்..!" - கேட்டு வாங்கிய சிவகார்த்திகேயன் #IppadaiVellumAL

'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கெளரவ் நாராயணன் இயக்கியிருக்கும் படம் 'இப்படை வெல்லும்'. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. வாலாஜா சாலை முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பேனர்கள் மேலோங்கி நிற்க, அனைத்து பேனர்களிலுமே 'எங்கள் இதய நாயகன்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததோடு, பேனர்கள் அனைத்திலும் 'சட்டமன்றத் தொகுதி ரசிகர் மன்றம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தொகுப்பாளர்களாக நட்ஷத்ராவும், திலீப்பும் என்ட்ரி கொடுத்தனர். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இவ்விழாவில் முதலாக படத்தின் டீசர் திரையிடப்பட்டது. டீசர் நிறைவு பெறும் தருணத்தில் சிறப்பு விருந்தினர் சிவகார்த்திகேயன் கையை உயர்த்தியபடி சிரித்த முகத்துடன் என்ட்ரி ஆனார்.   

முதலில் வந்த மதன் கார்க்கி, "இந்தப் படத்தில் 'குலேபா வா' என்ற பாடலை நான் எழுதியிருக்கேன். இமான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களைப் பாடவைப்பார். இந்தப் படத்துலேயும் அப்படி மூணு பேரைப் பாட வெச்சிருக்கார். எனக்கு அருண்ராஜா காமராஜின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும். எளிமையான வார்த்தைகளை மிகச்சரியான இடத்தில் போட்டு எழுதுவார். இந்தப் படத்துல பாடல் எழுதுனது மகிழ்ச்சி"  என்று முடிக்க, அடுத்ததாக வந்த அருண்ராஜா, 'ஒருமுறை அந்தச் சிரிப்பை சிரிச்சுக்கட்டுமா? ஆசையா இருக்கு' என்ற அவருடைய அந்த ஆஸ்தான சிரிப்பைச் சிரித்தார். ''இந்தப் படத்துல மூணு பாட்டு எழுதியிருக்கேன். வழக்கமா நான் எழுதுறமாதிரி இல்லாம புது ஜானர்ல ட்ரை பண்ணலாம்னு டைரக்டர் சொன்னாரு. மாஸ் பாட்டுனு இல்லாம கதையம்சத்தோட வரும் சூழல்ல பாட்டு எழுத வாய்ய்பு கிடைச்சது. இமான் சாருக்கும் டைரக்டர் கெளரவ் சாருக்கும்தான் நன்றி சொல்லணும். அப்புறம் நான் இதை சொல்லணும், டைரக்டர் ஆகணும்னுதான் சினிமாக்குள்ளே வந்தேன். உதயநிதி சாருக்குக் கதை சொல்ல ஒன்றரை வருடம் ஃபாலோ பண்ணேன். ஆனா, அவரைப் பார்க்கக்கூட முடியலை. அடுத்து ஒரு கதையோட போய் நின்னா, அவர் என் கதையைக் கேட்பார்னு நம்பிக்கை இருக்கு" என்று முடித்தார்.      

இயக்குநர் விஜய் பேசுகையில், "கெளரவ்வைத் தெரியும். ரொம்ப பேஷனோடுதான் இருப்பார். சின்னச்சின்ன விஷயங்களையும் நுணுக்கமாப் பார்த்துப் பார்த்து செய்வார். உதயநிதி சாரோட 'நிமிர்' படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அவரோட தன்னம்பிக்கைதான் அவர்கிட்ட எனக்குப் பிடிச்சது. இமான் சாருடன் இன்னும் படம் பண்ணலை. ஆனா, உங்களோட ரசிகன் நான். சீக்கிரம் படம் பண்ணுவோம் சார்." என்றார். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, "எனக்கும் டைரக்டருக்கும் பத்து வருட நட்பு. இமான் சாரோட பாட்டைக் கேட்டவுடனேயே அவருக்குக் கால் பண்ணிடுவேன். மஞ்சிமாவை முதல் படத்துல ஃபைட் சீன் பண்ணும்போது அழ வெச்சுட்டேன். உதய் சார் ரொம்ப கேஷுவல். சீக்கிரம் ஒன்னா வொர்க் பண்ணுவோம் கெளரவ்" என்றார். அடுத்து வந்த மஞ்சிமா மோகன், "எனக்கு இதுதான் முதல் இசை வெளியீட்டு விழா. ஷூட்டிங் ஸ்பாட்ல உதய் சார் அவ்ளோ ஜாலியா சிரிச்சிட்டே இருப்பார். ஆனா, கேமரா முன்னாடி சீரியஸா மாறிடுவார்" என்றவரை, 'குலேபா வா' பாட்டுக்கு ஆடச் சொன்னார்கள். 

இசையமைப்பாளர் இமான் மேடை ஏறியவுடன், கூட்டதிலிருந்த ஒரு நபர் 'தல... எப்படி தல உடம்பை குறைச்ச?' என்று கேட்க, 'எனக்கே தெரியலை' என்றபடி ஆரம்பித்தார். ''டைரக்டர் கதை சொன்னதைவிட ரெண்டு மடங்கு ஸ்கிரீன்ல கொண்டு வந்திருக்கார். வேற விதமான பாடல்களைக் கொடுத்திருக்கார் அருண்ராஜா காமராஜ். மை ஸ்வீட் டார்லிங் மதன் கார்க்கி, ஸ்பாட்லேயே சில வரிகள் எழுதிக் கொடுத்தார். இந்தப் படைக்கு நன்றிகள். என் தம்பி சிவகார்த்திகேயன் வந்திருக்கார். அவர் படத்துக்கு ட்யூன் போடும்போது தம்பி நடிக்கிறார், அண்ணன் ட்யூன் போடுறேன்ங்கிற ஃபீல்தான் இருக்கும். சிவாவின் வளர்ச்சியில நானும் அனிருத்தும் சின்ன டூல் மாதிரி உதவியிருக்கோம்னு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு" என்றார். 

அடுத்து பேசிய உதயநிதி, "இந்தப் படத்துல தெரியாம ஒத்துக்கிட்டோமானு சில நேரம் நினைச்சிருக்கேன். ஏன்னா, என்னை வெச்சு செஞ்சுட்டாங்க இந்தப் படத்துல. கெளரவ் வீட்டுக்கு வந்து கதை சொல்லும்போது, கண்ணாடி க்ளாஸ் எல்லாம் உடையிற அளவுக்கு எமோஷனோட சொன்னார். இந்தப் படத்துல நானும் மஞ்சிமாவும் ரெண்டே ரெண்டு காஸ்ட்யூம்தான் பயன்படுத்திருப்போம். ஒரு சில ஷாட் எடுக்கும்போது கேமரா எங்கெல்லாம் வெச்சிருக்காங்க, எத்தனை கேமரா வெச்சிருக்காங்கனே தெரியாது. படம் ஓடுறதைவிட நான் இந்தப் படத்துல நிறைய ஓடியிருக்கேன். வில்லனா நடிச்சிருக்கிற ஆர்.கே.சுரேஷ் ஃபைட் சீன்ல உண்மையாவே அடிச்சுட்டாருங்கனு டைரக்டர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணேன். அவர் உண்மையாவே அடிக்கிறாருங்க. டைரக்டர் என்கிட்ட உங்களை நினைச்சு எழுதுன கதைனு சொன்னார். ஆனா, இது மாதிரியே சில பேர்கிட்ட சொல்லிருக்கார்னு அப்பறமாதான் தெரிஞ்சுது" என்று சிரித்தவரை மேடையிலே சிறைபிடித்து வைத்தனர் தொகுப்பாளர்கள், மேடைக்குக் கீழே இருந்த கிருத்திகா உதயநிதியிடம் 'உதயநிதி எந்த ஹீரோயின்கூட நடிச்சா அழகா இருக்கும்னு நினைக்குறீங்க?' என்று கேட்க, 'ஹீரோயினே இல்லாம ஒரு படம் நடிச்சு  சக்சஸ் கொடுத்தா நல்லா இருக்கும். அதுக்கான ஸ்கிர்ப்ட் என்கிட்டேயே இருக்கு' என்றார் கிருத்திகா உதயநிதி. 

விழாவின் சிறப்பு விருந்தனர் சிவகார்த்திகேயன் அரங்கம் அதிர மேடை ஏறி, "கெளரவ் பேசும்போது எனர்ஜியா இருக்கும். படமும் அவர் மாதிரியே இருக்கு. கார்க்கி சார் பேசுறது அவ்ளோ பிடிக்கும் அவர் மாதிரியே பாட்டும் ஸ்வீட்டா இருக்கும். நானும் அருண்ராஜாவும் திருச்சியில ஒண்ணா படிச்சோம். அங்கேயே நிறைய பாட்டு, கவிதை எழுதிக்கிட்டே இருப்பான். ஏதாவது ஒரு பொண்ணுகிட்ட கொடுடானு சொன்னாலும் கொடுக்கமாட்டான், அதை நான் மட்டும்தான் படிக்கணும். இப்படி நான் மட்டுமே படிச்ச அவன் வரிகளை இப்போ உலகமே படிக்குதுனு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு. இமான் அண்ணா, என் வளர்ச்சிக்கு நீங்க பெரிய டூல்தான். தியேட்டர்களே இல்லாத இடத்துல எல்லாம் உங்க பாட்டுனாலதான் எங்க முகம் எல்லாப் பக்கமும் தெரியுது. என்னோட பிக் ப்ரதர் நீங்க... இப்போ மீடியம் ப்ரதரா இருக்கீங்க, அடுத்து ஸ்மால் ப்ரதர் ஆயிருவீங்க. லவ் யூ அண்ணா. ஃபேமிலி பேக்ரவுண்ட் இருந்தாலும், உதயநிதி சாரோட அடக்கம்தான் அவரது ஸ்பெஷல். ஒவ்வொரு படத்துலேயும் சார் இம்ப்ரூவ் பண்ணிட்டுதான் இருக்கார். குறிப்பா, டான்ஸ் முன்னவிட நல்லா பண்றார். கண்டிப்பா வேற லெவலுக்குப் போவார்" என்று பேசி முடிக்க, சிவகார்த்திகேயன் - உதயநிதி ஸ்டாலின் இருவரையும் மேடையிலேயே ஆடச்சொன்னார்கள். 'லாலா கடை சாந்தி' என்று சிவகார்த்திகேயன் சொல்ல, அந்தப் பாடலுக்கே இருவரும் ஆடினார்கள்.

இந்த இடைவேளையில், 'உதயநிதியிடம் சிவகார்த்திகேயன் கற்றுக்கொண்டதும், சிவாவிடம் உதயநிதி கற்றுக்கொண்டதும் என்ன?' என்ற கேள்வியைக் கேட்டார் நட்ஷத்ரா. கேள்விக்கு முதலில் பதில் சொன்ன சிவகார்த்திகேயன், 'சத்தமா பேசக்கூடாதுனு கத்துக்கிட்டேன். அது உங்களுக்கும் பயன்படும்'னு சொல்லி நட்ஷத்ராவைக் கலாய்த்தார் சிவா. ''நூறு சதவீதம் உழைத்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்னு சிவாவிடம் இருந்து கத்துக்கிட்டேன்" என்றார் உதயநிதி.  இறுதியில் பேசிய இயக்குநர் கெளரவ், "இந்தப் படத்துக்காக உதயநிதி ரொம்ப மெனக்கெட்டார். நான் சரியா ஷாட் வரலைனு டென்ஷன் ஆனாலும் கூலா சிரிச்சுக்கிட்டே 'ஒன் மோர் சொல்லுங்க'னு நடிப்பார். விரைவில் 'இப்படை வெல்லும்-2' அறிவிப்பும் வரும்" என முடித்தார். விழாவின் இறுதி நிகழ்வாக, படத்தின் இசையை சிவகார்த்திகேயன் வெளியிட 'இப்படை வெல்லும்' படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். 

அடுத்த கட்டுரைக்கு