Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது!’: 'காக்கா முட்டை’ டு ‘காமுக்காபட்டி’ கதை சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்

“உங்களுக்குத் தெரியுமா, சினிமாவில் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது ஆனந்த விகடன்தான். அது எப்படி நிகழ்ந்தது என்று இந்தப் பேட்டியின் கடைசியில் சொல்கிறேன்...”  சஸ்பென்ஸுடன் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனித்தன்மை, தமிழ்த்தன்மை... இவைதான் ஐஸ்வர்யாவின் பலம். இரு சிறுவர்களின் அம்மாவாக ‘காக்கா முட்டை’யில் கலங்க வைத்தவர், காமுக்காபட்டி அன்புச்செல்வியாக ‘தர்மதுரை’யில் நெகிழவைத்தார். வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்காமல் அவற்றில் தனக்கானதைத் தேர்வுசெய்வதுதான் ஐஸ்வர்யாவின் ஸ்பெஷல். அந்தத் தன்மைதான் மணிரத்னம், கௌதம் மேனன், வெற்றிமாறன், விஜய்... இப்படி பெரிய இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், இந்த இடத்தை ஐஸ்வர்யா எளிதாக அடைந்துவிடவில்லை. அவர் கடந்துவந்த பாதை மிகக்கடினமானது. அந்தப் பயணத்தை ஐஸ்வர்யாவின் வார்த்தைகளிலேயே கேட்போமே...

ஐஸ்வர்யா ராஜேஷ்

“என் தாத்தா அமர்நாத், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர், தயாரிப்பாளர். அப்பா ராஜேஷும் தெலுங்கு நடிகர்தான். அத்தை ஸ்ரீலட்சுமி அங்கே சீனியர் நகைச்சுவை நடிகை. ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். என் பத்தாவது வயதில் அப்பா இறந்துவிட்டார். நான், அம்மா, அண்ணன் மூவரும்தான் குடும்பம். வேறு துணையில்லை. யாருடைய உதவியும் இல்லை. அம்மா எங்களைப் போராடி வளர்த்தார். தி.நகர் ஹோலி ஏஞ்சல்ஸில் பள்ளிப் படிப்பு, எத்திராஜில் கல்லூரிப் படிப்பு. இப்படி வளர்ந்து தனி மனுஷியாகப் போராடி இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்பதை கர்வம் இன்றி பெருமையுடன் சொல்கிறேன். இந்த எளிமையான வாழ்க்கைதான் நான்.”

“சினிமா பின்னணி கொண்ட உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் எளிதாக அமையவில்லையா?”
“எளிதாக அமையவில்லை. முதலில் சன் டிவி-யில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் 10 எபிசோட்களுக்கு ஆங்கர், பிறகு ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் அந்த சீஸன் டைட்டில் வின்னர்... இப்படி பிடித்ததைச் செய்துகொண்டு இருந்தேன். பிறகு, ‘குடும்பத்துக்காகச் சம்பாதிக்கணும்’ என்ற கட்டாயம் வரும்போது ‘நடிப்போம்’ என முடிவு செய்தேன். அப்படி ஒரு சீரியலில் நடித்தேன். நாளொன்றுக்கு 1,500 ரூபாய் சம்பளம். காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து நடித்து முடித்தால் வெறும் ஆயிரத்து ஐந்நூறுதானா? ஆனால் சிலருக்கு மட்டும் 5,000 ரூபாய், 10,000 ரூபாய் தந்தனர். ‘ஏம்மா இப்படி’ என்று அம்மாவிடம் கேட்டேன். ‘இல்லடி அவங்கெல்லாம் சினிமாவுல நடிச்சிட்டு வந்தவங்க. நீயும் அப்படி சினிமாவுல நடிச்சிட்டு வந்தீன்னா உனக்கும் அவவளவு காசு கொடுப்பாங்க’ என்று அம்மா சொல்ல, ‘ஓகே. நாமளும் இரண்டு மூன்று படங்கள்ல நடிச்சிட்டுப் பிறகு சினிமாவுக்கு வருவோம்’ என்று நினைத்து வந்ததுதான் சினிமா.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“சினிமா வாய்ப்பாவது எளிதாக அமைந்ததா?”
“தினமமும் ஐந்தாறு தயாரிப்பு கம்பெனிகள் ஏறி இறங்குவேன். ஆனால் ஒன்றுமே அமையாது. அப்போது தமிழில் நடித்துக்கொண்டிருந்த பெரும்பாலானா நடிகைகள், மலையாளம், இந்தி, தெலுங்கு சினிமாவிலிருந்து வந்தவர்கள். ‘ஒருவேளை தமிழ் பேசுறதாலயே நமக்கு வாய்ப்புக் கொடுக்கமாட்டேங்குறாங்களோ’ என்று நினைத்து, ‘நான் ஹைதராபாத்லயிருந்து வந்திருக்கேன். தெலுங்கு மட்டும்தான் பேசுவேன்’ என்று சொல்லிப் பேசும்போது இடையிடையே தமிழ் பேசி மாட்டிக்கொண்டு, ‘தமிழும் பேசுவேன் சார்’ என்று சமாளித்தது உண்டு. அப்போது என் அண்ணன் மணிகண்டன்தான் எல்லா தயாரிப்பு கம்பெனிகளுக்கும் என்னுடன் வருவான். அவன் என்னைவிட நல்ல கலர். அழகாகவும் இருப்பான். நான் போகும் இடங்களில் எல்லாம் என்னைத் தவிர்த்துவிட்டு, ‘நீ என்னப்பா தம்பி பண்ற, நீ முயற்சி பண்ணலாமேடா. இதுல இப்படி ஒரு கேரக்டர் இருக்கு, பண்றீயா?’ என்பார்கள். ஒருகட்டத்தில், ‘டேய்... பேசாமா நீ நடிடா. எனக்கு செட்டாகாதுனு நினைக்கிறேன்’ என்று சொன்னேன். ஆனால், இங்கு ஹீரோயின்தான் கலராக இருக்க வேண்டும். ஹீரோவுக்கு மாநிறம்தான் தகுதி என்பதால் அதில் அவன் அடிபட்டுவிட்டான். அதனால் அவனுக்கும் சரியான வாய்ப்பு அமையவில்லை.”

“அந்த வாய்ப்புத் தேடலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதும் உண்டா?”
“நிறைய. ஓர் இயக்குநர், பாவம் அவரின் பெயரைச் சொல்ல வேண்டாம். இப்போது படம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். ‘இல்லமா, நீங்க காமெடியனுக்கு ஜோடியா நடி. நீயெல்லாம் தமிழ் இன்டஸ்ட்ரியில ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட’ என்று கொச்சைப்படுத்திப் பேசினார். ‘நீங்க ஹீரோயின் மெட்டீரியலே கிடையாதும்மா’ என்று சில தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். வெகுநாள்களாக ஹீரோயின்களை வெள்ளையாகப் பார்த்துவந்த அவர்களுக்கு நம் கலரில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் என்னை அப்படி பேசிய இயக்குநரின் கையாலேயே நான் விருது வாங்கியிருக்கிறேன். உண்மையில் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் பேசியதால்தான், வைராக்கியத்துடன் போராடி இன்று ஓரளவு நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால், அவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். நாம் போராடினால்மட்டுமே அவர்களை வெற்றிகொள்ள முடியும்.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“அப்போது அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். என்ன சொல்வார்கள்?”
“அம்மா நாகமணி. ‘எதுவா இருந்தாலும் இவ சரியா பண்ணுவா’ என்று அவருக்கு என்மீது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால், ‘நம்ம புள்ளை இவ்வளவு கஷ்டப்படுதே. அவளுக்கு எதுவுமே செட்டாக  மாட்டேங்குதே. அப்பா இருந்தா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாமே’ என்று வருத்தப்படுவார். ஒருகட்டத்தில், ‘25 வயசாகுது. கல்யணம் பண்ணி வெச்சிடலாம்’ என்கிற மனநிலைக்கு வந்து பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால், ‘கண்டிப்பா நான் நல்லா வருவேம்மா’ என்று நம்பிக்கையாகப் பேசி அவரை சமாதானப்படுத்துவேன்.”

“கடைசியில் சினிமா வாய்ப்பு எப்போது வந்தது?”
“அவர்களும் இவர்களும்’. இதுதான் என் முதல் படம். அடுத்து ஹரிஷ் கல்யாணுடன் எஸ்.ஏ.சி சார் டைரக்ஷனில் சின்ன கேரக்டரில் நடித்த ‘சட்டப்படி குற்றம்’. தொடர்ந்து சின்னச் சின்ன கேரக்டர்களில் சில படங்களில் நடித்தேன். பெரிய முழு நீள ஹீரோயின் கேரக்டர் எதுவும் அமையவில்லை. அந்தச் சமயத்தில் ஒரு சீரியல் வாய்ப்பு வந்தது. ‘ஒரு நாள் சம்பளம் 2,000’ என்ற ஆஃபர். ‘ஓ.கே போதும். சில படங்கள் பண்ணியாச்சு. ‘சினிமா புகழ்’ நடிகைனு சீரியல்ல செட்டிலாகிடலாம்’ என்று முடிவு பண்ணி நாளை ஓ.கே சொல்லலாம் என்று இருந்தேன். அந்தச் சமயத்தில்தான், ‘ ‘அட்டகத்தி’னு ஒரு படம். கேரக்டர் பேர் ‘அமுதா’. ஆடிஷன் இருக்கு. வாங்க’ என்ற அழைப்பு. இந்த ஆடிஷன் போய்வந்தபிறகு அந்த சீரியல் பற்றி யோசிக்கலாம் என்று போய், ‘அட்டக்கத்தி’ அமுதாவாக திரும்பி வந்தேன்.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“ரம்மி,  பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை என்று தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள். இந்த காம்பினேஷன் அமைந்த கதையைச் சொல்லுங்கள்?”
“முதலில் ‘ரம்மி’. ‘லுக் டெஸ்ட் இருக்கு. கண்டிப்பா கூப்பிடுறேம்மா’ என்றார்கள். ‘அப்ப கண்டிப்பா கூப்பிடமாட்டாங்க’ என்று நினைத்தேன். அதேபோல் இரண்டு நாள்கள் கழித்து ஃபேஸ்புக்கில் வேறொரு ஹீரோயினும் விஜய்சேதுபதியும் இருக்கும் படத்துடன் அறிவிப்பு வந்தது. ‘வழக்கம்போல்தான்’ என்று நினைத்து விட்டுவிட்டேன். அந்த சமயத்தில் இயக்குநர் பாலகிருஷ்ணனிடம் இருந்து ‘ஆடிஷன் இருக்கு வாங்க’ என்று போன். ‘வேறு ஏதோ சிஸ்டர் கேரக்டருக்குதான் கூப்பிடுறாங்கபோல’ என்று நினைத்தபடி போனேன். ‘அந்தப்பொண்ணு பண்ணலை. நீங்க பண்ணுங்க’ என்று அந்த ‘சொர்ணம்’ கேரக்டரைத் தந்தார்கள். ‘கூடமேல கூட வெச்சு’ பாடல் ஹிட்டாக நான் அடுத்தகட்டத்துக்கு வந்தேன். 

இதேபோல ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் ‘பெரிய ஹீரோயினாக போகலாம்’ என்று ஒரு பெரிய ஹீரோயினை வைத்து போட்டோஷூட் முடித்தார்கள். அது, விஜய் சேதுபதி கமர்ஷியல் ஹீரோவாக வளராத சமயம். அப்போது, ‘விஜய்சேதுபதி கூட நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அந்த ஹீரோயின் போய்விட அந்த வாய்ப்பும் அப்படித்தான் அமைந்தது. அடுத்து ‘தர்மதுரை’. ‘அந்தக் கேரக்டர் பண்ண நீங்க மட்டும்தான் இருக்கீங்க. வேற ஆளே இங்க இல்லை’ என்று சீனு ராமசாமி சார் சொன்னார். ‘சார் தமன்னா இருக்காங்கனு சொல்றீங்க. நான் எங்க தெரியப்போறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தோட லைஃபே அந்தக் கேரக்டர்தான். நீங்கதான் பண்ணணும்’ என்றார் சீனு சார். அவரை நம்பிப் போனேன். அந்த காமுக்காபட்டி அன்புச்செல்வி கேரக்டரின் முக்கியத்துவம் கதை கேட்டபிறகுதான் தெரிந்தது.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“நீங்கள் இருவரும் நடிக்கும்போது அந்த லொக்கேஷன் எப்படி இருக்கும், இருவரும் விவாதிப்பீர்களா?”
“விஜய் சேதுபதியுடன் நல்ல கேரக்டர்கள் அமைந்தது என்பது உண்மைதான். ஆனால், அவருடன் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக இதுவரை நடித்ததே இல்லை. ‘ஏங்க, வெளியில நான் ஏதோ உங்களோட எல்லாப் படங்கள்லயும் நடிச்சிட்டு இருக்கிறமாதிரி பேசிட்டு இருக்காங்க. ஆனா சின்னச் சின்ன கேரக்டர்கள்தான் பண்ணியிருக்கேன். அதனால அடுத்த படம் பண்ணினா ஃபுல்லா வர்றமாதிரி ரெஃபர் பண்ணுங்க’ன என்று அவரிடம் சொன்னேன். சிரிச்சுட்டார். உண்மையில் சொல்கிறேன், அவரைமாதிரி நல்லவர், எளிமையானவரை சினிமாவில் நான் பார்த்தது இல்லை. கேரவேன் இருக்கும். ஆனால் ஏதாவது மரத்தடியில் படுத்திருப்பார். ஷூட்டிங் நடக்கும் இடங்களில் உள்ள வீடுகளில் தோசை சுடச்சொல்லி சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். நிறைய உதவிகள் செய்யக்கூடியவர். ஹீரோயின், டைரக்டர் என்றுதான் இல்லை. துணை நடிகர்களுக்குக்கூட நிறைய உதவிகள் செய்துள்ளார். அவருடன் நடிக்கும்போது ஏதோ நம் வீட்டில் உள்ளவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் உணர்வைத் தருவார். அவரின் ஃபேமிலியைச் சந்தித்திருக்கிறேன். மனைவி, குழந்தைளைத் தெரியும். விஜய், நான் மதிக்கக்கூடிய மனிதர்.”

“காக்கா முட்டை’ அனுபவம் சொல்லுங்கள். எப்படி அமைந்தது அந்த வாய்ப்பு?”
“நான் இன்று வெவ்வேறு மொழிகளில் முக்கியமான படங்கள் பண்ணக் காரணம், ‘காக்கா முட்டை’யும் இதன் இயக்குநர் மணிகண்டன் சாரும்தான். அவர் என்னைக் கூப்பிட்டு பேசினார். ‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மா’ என்று சொன்னதும் எல்லோரையும்போல நானும் பயந்தேன். ஏனென்றால் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’ என்று நான் ஹீரோயினாக ஃபார்ம் ஆகிக்கொண்டு இருந்த நேரம். ‘அழுக்கும் சோகமும் அப்பிய முகத்துடன் சேரியில் இருக்கும் அம்மா கேரக்டர். லேசாக இடுப்பு தெரிந்தால்கூட அங்கும் கருப்பு அப்பி அழுக்காக்கியதை ஆடிஷனில் பார்த்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது ‘பண்ணையாரும்...’ பட ஷூட்டிங் போய்க்கொண்டு இருந்தது. அந்த சமயத்தில்தான் மணி கதை சொன்னதால் ஷூட்டிங்கில் இருந்த விஜய்சேதுபதி, இயக்குநர் அருண் இருவரிடமும், ‘இப்படி காக்காமுட்டையில் அம்மாவா நடிக்க கூப்பிட்டு இருக்காங்க’ என்று சொன்னேன். உடனே விஜய், ‘மணி செம டைரக்டர். நீங்க கத்துக்கலாம். யோசிக்காதீங்க. பண்ணுங்க. அவர் எந்த நடிகரையும் தப்பா கெயிட் பண்ணமாட்டார். செம சென்சிபுள் ஆள்’ என்றார். அந்த நம்பிக்கையில் பண்ணினேன். உண்மையிலேயே கற்றுக்கொண்டேன். அவர் நடித்துக்காட்ட மாட்டார். ‘100 சதவிகிதம் நடிச்சிருக்கீங்க. அவ்வளவு வேணாம். இயல்பா நார்மலா பண்ணுங்க போதும்’ என்று இன்புட் கொடுத்தபடி இருப்பார். அதேபோல ஷூட் முடிந்தால் அனுப்பமாட்டார். அங்கேயே உட்கார வைத்து இருப்பார். அந்தப்படம் எனக்கு இன்னும்  கற்றுக்கொடுத்தபடி இருக்கிறது.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

‘‘இரண்டு மலையாளப் படங்கள், ஒரு இந்திப்படம் என்று மற்ற மொழிப் படங்களில் நடித்தது பற்றி...”
“மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு பெரிய இயக்குநர். அதேபோல துல்கர் சல்மான் அங்கு பெரிய நடிகர். காக்கா முட்டை பார்த்துவிட்டு அழைத்தனர். ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ படம். பெரிய கேரக்டர் தந்தனர். ஹீரோவுக்கு உதவி செய்து அவரை நிலைநிறுத்தும் கேரக்டர். அதேபோல் நிவின் பாலியுடன் ‘சகாவ்’. 60 வயசு கிழவி, ஃப்ளாஷ்பேக்கில் 27 வயது பெண் என்று இரண்டு வெவ்வேறு காலங்களில் நடக்கும் கதை. இரண்டு படங்களிலும் நன்றாக நடித்து இருந்தேன் என்று இங்கு விமர்சனம் எழுதியிருநதனர். இந்தியில் அர்ஜுன் ராம்பாலுடன் ‘டாடி’ படம். 16 வயது தொடங்கி 55 வயது வரை பயணமாகும் ஒரு பெண்ணின் கதாபாத்திரம். ஒரு நாளிதழில் வந்த அந்தப்பட விமர்சனத்தில், ‘பாலிவுட் நடிகைகள் இங்கு வந்து நடித்து நம்மை டார்ச்சர் பண்ணுவதற்கு பழிக்குப்பழியாக இந்தப் பெண் நடித்து பழிவாங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பெண் அப்படி பண்ணவில்லை’ என்று எழுதியிருந்தார்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியது, இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த ‘காக்கா முட்டை’தான்.”

“அடுத்து விக்ரம், கௌதம்மேனன் காம்பினேஷனில் ‘துருவ நட்சத்திரம்‘. அதில் ஐஸ்வர்யாவை எப்படி எதிர்பார்க்கலாம்?”
 “எனக்கு வந்த பெரிய படங்களில் முதல்படம் துருவநட்சத்திரம்தான். கண்டிப்பாக கதைக்கு முக்கியமான கதாபாத்திரம். இதில் பார்த்திபன், சிம்ரன், ராதிகா மேடம், இன்னொரு ஹீரோயின் ரீது என அனைத்து கேரக்டர்களுமே வித்தியாசமாக இருக்கும். கௌதமின் படங்களில் வருவதுபோல காதல் காட்சிகள் குறைவு. வேற லெவலில் உள்ள பெரிய படம். இதன் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே பெரிய சீன். மூன்று பக்க வசனம் பேசி நடிக்க வேண்டிய எமோஷனலான காட்சி. முதல்முறையாக பெரிய டைரக்டர், பெரிய நடிகரோடு ஒர்க் பண்ணுவதால் பதட்டமாகவே இருந்தேன். இரண்டு மூன்று டேக்கிலேயே சரியாக பண்ணிவிட்டேன். கௌதம்மேனன் சார் கைதட்டினார். ‘சூப்பரா பண்ணீங்க ஐஸ்வர்யா’ என்று விக்ரம் சார் பாராட்டினார். இப்படி எத்தனை ஹீரோஸ் சொல்வார்கள் என்று தெரியாது. விக்ரம் சார் அன்று பாராட்டியது மறக்கமுடியாத பாராட்டு.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“அடுத்து இதற்கு நேரெதிர் படம், ‘வடசென்னை’. வெற்றிமாறன், தனுஷுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்...”
“ தனுஷ் சாரும் வெற்றி சாரும் ‘காக்கா முட்டை’ பட தயாரிப்பாளர்கள். ‘அந்த கேரக்டரை இந்தப் பொண்ணு எப்படி பண்ணும்’ என்று வெற்றி சார்க்கு காக்கா முட்டையிலேயே சந்தேகம். படம் பார்த்தபிறகுதான் அவருக்கு நம்பிக்கை வந்தது. ஆனால் வடசென்னையில் என் கேரக்டரில் நடிக்க முதலில் கமிட் ஆனது சமந்தா. அவர் மாறியபிறகு அமலாபால் வந்தார். அவரும் போக அடுத்துதான் நான் கமிட் ஆனேன். என் கேர்க்டர் பயங்கர லோக்கலாக, இதுக்கு முன் தமிழ் சினிமாவில் வராத கேரக்டராக இருக்கும். காசிமேடு, எண்ணூர்... இப்படி வடசென்னையின் லைவ் லொகேஷன்ஸ். தனுஷே தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்பாகவும் இது பெரிதாக இருக்கும். அதேபோல நாம் நாமாக இருந்து நடிக்க நிறைய ஸ்பேஸ் கொடுப்பார். வெற்றி சாருக்கு யதார்த்தமான நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அவர் நடிகர்களை ரொம்ப மெனக்கெட வைக்கமாட்டார். காட்சியை விளக்கி சொல்லிவிட்டு நடிக்கச்சொல்வார். நமக்கு என்ன வருகிறதோ அதில் இருந்து பெஸ்டை எடுத்துக்கொள்வார். இது எனக்கு முக்கியமான படமாக அமையும்.”

“மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவு. உங்களுக்கு அமைந்திருக்கிறது. என்ன சொன்னார் மணிரத்னம்?”
“இந்தப்படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே மணி சாரை ஒருமுறை சந்தித்து வாய்ப்பு கேட்டு இருக்கிறேன். ‘உங்களுக்கான கேரக்டர்வரும்போது, உங்களுக்கு அழைப்பு வரும்’ என்று சொல்லியிருந்தார். பிறகு, ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்த ஹீரோயின் அதிதிக்கு டப்பிங் பேச வாய்ஸ் டெஸ்ட்டுக்காக போயிருந்தபோதும் சந்தித்தேன். ஆனால் மூன்றாவது முறை அழைத்து பேசும்போது, ‘இப்படி ஒரு படம். உங்களை காஸ்ட் பண்றாங்க’ என்று சொன்னார்கள். பிறகு மணி சாரை சந்தித்தேன். நான்கு ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள் என மல்ட்டி ஸ்டாரர் படம். முழுக்கதையையும் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்’ என்றார். நல்ல கேரக்டர். அவர் படங்களில் ஹீரோயின் கேரக்டர்களில் ஓர் உயிர் இருக்கும். அதனால்தான் அவர் படத்தில் நடிக்க அவ்வளவு போட்டி. மணி சார் பட வாய்ப்பு எவ்வளவு பெரிய விஷயம் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கெங்கிருந்தோ வந்த வாழ்த்துக்களை பார்த்தபிறகு, ‘ஓ.கே மணி சார் படம்னா எல்லாருக்குமே அந்த எதிர்பார்ப்பு இருக்கு’ என்பதை புரிந்துகொண்டேன்.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“ஓ.கே. இப்ப அம்மா என்ன சொல்கிறார்?”
“சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும், ‘வர்ற படஙகளை எல்லம் பண்ணிடணும்டி. எதையுமே விடக்கூடாது. இப்பதாண்டி சம்பாதிககணும்’ என்று சொல்வார்கள். ஏனெனில், ‘ஹீரோயின்ஸோட லைஃப் மூணு நாலு வருஷம்தான். அந்த டைம்லயே சம்பாதிச்சு செட்டில் ஆகிடணும்’ என்கிற மனநிலை. சினிமாவும் அப்படித்தான் இருந்தது. அப்பாவும் சினிமாவில் இருந்ததால் அம்மா அப்படி நினைத்து இருக்கலாம். ஆனால் வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்துதான் பண்ணினேன். அந்த பொறுமைதான், ‘ஐஸ்வர்யா நடிச்சா நல்ல கேரக்டராதான் இருக்கும்’ என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் விதைத்து இருக்கிறது. இப்போது அம்மா கல்யாணத்தைப் பற்றி பேச்சு எடுப்பதில்லை. ‘ஏன் அந்தப் படத்துல நடிக்கலை’ என்ற கேள்வியும் கேட்பதில்லை.”

“சினிமாவுக்கும் வர ஆசைப்படும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
“சினிமா என்றில்லை, எந்தத் துறையாக இருந்தாலும் பெண்கள் தைரியத்துடன் இருக்கவேண்டும். இப்போதுள்ள பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆசிட் அட்டாக்,  சைல்ட்அப்யூஸ், கொளுத்துகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. 24 மணிநேரமும் குழந்தைகளை நம் கண் பார்வையிலயே வைத்திருக்க முடியாது. நாம எப்போதும் அவர்களுடனேயே இருக்கும் உணர்வை தர குட் டச், பேட் டச் தொடங்கி இக்கட்டான சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதுவரை அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தர வேண்டும். எந்தப்பெண்ணும் யாரையும் நம்பி இருக்கக்கூடாது. சொந்தக்காலில் நிற்க கற்க வேண்டும். பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படுத்தக்கூடிய படமோ, கேரக்டரோ வந்தால் கண்டிப்பாக நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த விஷயத்தை தெளிவாக பேசும் படம் என்றால் சம்பளம் வாங்காமல்கூட நடிக்கத் தயார்.”

ஐஸ்வர்யா ராஜேஷ்

“இப்போது சொல்லுங்கள், திருப்புமுனை ஏற்படுத்திய அந்த விகடன் தருணம் பற்றி...”
“ ‘அட்டகத்தி’ படம் ரிலீஸ் ஆன நேரம். ஆனந்த விகடனில், அப்போது வந்த படங்களில் நம்பிக்கை ஊட்டக்கூடிய இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அண்ணாசாலை ஆனந்த விகடன் அலுவலகத்தில்தான் அந்த சந்திப்பு. ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களில்த விஜய் சேதுபதி, ‘வழக்கு எண்’ மனிஷா, இயக்குநர்கள் பா.இரஞ்சித், அன்பழகன், ராஜுமுருகன், பிரேம்குமார்.. என்று பலரையும் அழைத்து இருந்தனர். ‘அட்டகத்தி’யில் நடித்த நந்திதாவை அழைத்தபோது அவர் அப்போது பெங்களூருவில் இருந்தார். அதனால் அந்தப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த என்னை கூப்பிட்டு இருந்தார்கள். நானும் போயிருந்தேன். அப்போது எனக்கு விஜய் சேதுபதி யாரென்றே தெரியாது. அவரின் படங்களையும் நான் பார்த்ததில்லை. ‘தமிழ் பேசும் நடிகைக்கு நல்ல வாய்ப்பு தரமாட்டேங்குறாங்க’ என்று பொதுவாக என் சினிமா முயற்சிகள் பற்றி பேசி புலம்பிக்கொண்டு இருந்தேன். அதைப்பார்த்த விஜய்சேதுபதியும் இயக்குநர் பிரேம்குமாரும், ‘இவங்க நம் ஊர் பொண்ணுமாதிரி யதார்த்தமா இருக்காங்க. ‘ரம்மி’க்கு பொருத்தமா இருப்பாஙக’ என்று அந்தப் படத்துக்கு ரெஃபர் செய்தனர். அப்படித்தான் எனக்கு ரம்மி பட வாய்ப்பு அமைந்தது. ஒருவேளை அன்று நந்திதா சென்னையில் இருந்து அந்த சந்திப்புக்கு அவர் வந்திருந்தால் நான் விஜய்சேதுபதி யையும் ப்ரேமையும் சந்தித்திருந்திருக்கமாட்டேன். பிறகு என்ன நடந்திருக்கும் என்றும் தெரியாது. அந்த விகடன் சந்திப்பு திருப்புமுனை என்று நான் சொன்னது சரிதானே?”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்