Published:Updated:

“பாலா சாரை சீக்கிரமே இயக்குவேன்!” - குஷி ரகசியம் சொல்லும் சசிகுமார்

“பாலா சாரை சீக்கிரமே இயக்குவேன்!” - குஷி ரகசியம் சொல்லும் சசிகுமார்
“பாலா சாரை சீக்கிரமே இயக்குவேன்!” - குஷி ரகசியம் சொல்லும் சசிகுமார்

வெள்ளை வெளேர் என இருக்கிறது அலுவலகப் பின்ணனி. ஷோபாவும், நாற்காலிகளும் காலியாகக் கிடக்க தரையில் அமர்ந்தபடி வரவேற்கிறார், 'வெல்கம்' சொல்கிறார் சசிகுமார். 'கொடிவீரன்' படத்திற்காக மீண்டும் முறுக்கு மீசையும், முரட்டு தாடியுமாய்க் களமிறங்கியிருக்கும் அவரைச் சந்தித்தேன். 

“இயக்குநர் விக்ரம் சுகுமாறனை எப்படி வில்லன் ஆக்குனீங்க?"

“ ‘கிடாரி'யிலேயே அவர் நடிக்கவேண்டியது. சில காரணங்களால முடியாமப்போச்சு. ஒரு இயக்குநரா நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அனுபவம் அவருக்கு இருக்கும். தவிர, முத்தையாவும் அவரும் நண்பர்கள். அந்தக் கேரக்டருக்கு அவர் சரியா இருப்பார்னு நினைச்சு சொன்னோம், சரினு சொல்லிட்டார். ஊர்ல சண்டித்தனமா திரியிற, படத்துக்கு மிக முக்கியமான ஒரு கேரக்டர். அதைச் சரியா பண்ணியிருக்கார், விக்ரம் சுகுமாறன். தவிர, பசுபதியும் முக்கியமான வில்லன். பூர்ணாவும் முக்கியமான வில்லை. இப்படிப் பல வில்லன், வில்லிகளை மீறித்தான் நான் நடிச்சிருக்கேன். முக்கியமா எல்லோருமே சூழலுக்குத்தான் வில்லனா இருப்பாங்களே தவிர, படத்துல வர்ற எல்லா அண்ணன் - தங்கச்சி கேரக்டர்களும், அவங்களுக்கு அவங்க நல்லவங்களாதான் இருப்பாங்க!"

“கிராமம் சார்ந்த கதைகளையே தேர்ந்தெடுக்குறீங்களே.... வெரைட்டியான ஏரியாவுல களமிறங்க விருப்பம் இல்லையா?" 

''நானா வேணாம்னு சொல்றேன். கதை சொல்ற எல்லோருமே, 'சார்... மதுரையில ஆரம்பிக்குது கதை', 'ஓப்பன் பண்ணா, தேனி மாவட்டத்தைக் காட்டுறோம்'னே சொல்றாங்க. யாராச்சும் ஒருத்தர், செங்கல்பட்டைத் தாண்டி சென்னைக்குக் கூட்டிட்டு வந்துடமாட்டாங்களானு பலதடவை யோசிப்பேன். தவிர, அவங்க மனசுல நான் அப்படிப் பதிஞ்சுட்டேன். கிராமத்துக் கதைனா சசிகுமார்னு அவங்க செட் ஆயிடுறாங்க. அதுக்கு நான் எதுவும் பண்ணமுடியாது. தவிர, ஒரு கிரியேட்டரா அவங்க சொல்ற கதை எனக்குப் பிடிச்சா, அது கிராமமோ நகரமோ பண்ணிடுவேன். அவ்வளவுதான்!"

“நீங்க, சமுத்திரக்கனி, அமீர்னு உங்க செட் எல்லோருமே இயக்குநர் டூ நடிகர் ஆகிட்டீங்க. இயக்குநர் பாலாகிட்ட என்னைக்காவது 'நடிக்கலாமே?'னு கேட்டிருக்கீங்களா?

“(சிரிக்கிறார்) நான் ஒருதடவை கேட்டிருக்கேன். முதல்ல சிரிச்சார். 'எப்படி வில்லனாவா... அப்படித்தானே என்னை நடிக்க வைப்ப?'னு கேட்டார். 'அப்படியெல்லாம் இல்லியே'னு சொன்னேன். 'நான் நடிக்கமாட்டேன். ஆனா, நீ டைரக்டர்னா நான் நிச்சயம் நடிக்கிறேன்'னு சொன்னார். அதுவே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. உடனே, 'அப்போ, உங்க படத்துல அவர் நடிப்பார்'னு கேட்கக்கூடாது. ஓகே!"

''பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், 'சுப்ரமணியபுரம்' படத்தைப் பார்த்த பாதிப்புல படம் எடுக்கிறார். உங்களுக்கு பாலிவுட்ல படம் இயக்கணும்னு ஆசை இருந்திருக்கா, அதுக்கான முயற்சிகள் ஏதாவது எடுத்திருக்கீங்களா?"

''நிச்சயம் இருக்கு. நான் 'சுப்ரமணியபுரம்' படத்தையே ரீமேக் பண்ற சூழல் இருந்தது. அந்தச் சமயத்துல அனுராக் காஷ்யப் ''தமிழ்ப் படமான 'சுப்ரமணியபுரம்' பாதிப்பில்தான், 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' எடுக்குறேன்"னு ஒரு பேட்டியில சொன்னார். அதைத் 'ரீமேக்' பண்றதா தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இதை விட்டுட்டாங்க. அதுக்குப் பிறகு எந்த முயற்சியும் எடுக்கலை. ஆனா, படத்தோட ரைட்ஸ் என்கிட்டதான் இருக்கு. இப்போ இல்லைனாலும், கண்டிப்பா 'சுப்ரமணியபுரம்' படத்தை ஹிந்தியில் இயக்குவேன்."

''பார்ட்-2 படங்கள் சீஸன் இது. 'சுப்ரமணியபுரம்' படத்தோட இரண்டாம் பாகம் உருவாகும் வாய்ப்பு இருக்கா?"

''இல்லவே இல்லை. பலபேர் கேட்டுட்டாங்க. ஒரு கதைக்கு ஒரு முடிவைச் சொல்லிட்டா, அவ்வளவுதான். திரும்ப அதோட தொடர்ச்சியை எடுக்கும்போது, இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. தவிர, ஃபர்ஸ்ட் இம்ரஸன் இஸ் த பெஸ்ட் இம்ரஸன்னு சொல்வாங்கள்ல... அது உண்மைதான். அதுதான் அந்தப் படத்தோட முடிவுனு சொல்லியாச்சு. திரும்ப அந்த முடிவுல கை வெச்சா, நம்ம முடிவு எங்கெங்கோ போயிடும்னு நினைக்கிறேன்!"

"2017-ல நிச்சயம் இயக்குநரா பார்க்கலாம்னு சொல்லியிருந்தீங்க. ஞாபகம் இருக்கா?"

"ஒவ்வொரு வருடமும்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இப்போ இப்படிச் சொல்லட்டுமா, '2018-ல் நிச்சயம் என்னை இயக்குநரா பார்க்கலாம்!' "

"மொபைல் ஃபோனை எப்பவுமே சைலெண்ட்லேயே வெச்சுப்பீங்களாமே, ஏன்?"

" (சொன்னதும்தாங்க ஞாபகம் வருது. இருங்க... யாராச்சும் போன் பண்ணியிருக்காங்களானு பார்த்துக்கிறேன்.) மொபைலை சைலெண்ட் மோடுல வெச்சுக்கிட்டா, ரிலாக்ஸா இருக்கலாம். போன்ல இருந்து தடதடனு ரிங் அடிக்கிற சத்தம் வந்தாலே எனக்குள்ள பதற்றமும், பரபரப்பும் வந்துடும். 'அய்யய்யோ.. யாரு, எதுக்குக் கூப்பிடுறாங்கனு தெரியலையே?'ங்கிற பதட்டம் அது. இன்னைக்கு இருக்கிற வாழ்க்கைச் சூழல் நம்மளை அப்படி ஆக்கிவெச்சிருக்கு. 'ஈசன்' ஷூட்டிங் டைம்ல இப்படி ஒரு யோசனை தோணுச்சு. நான் எங்கே இருக்கேன், யாரோட இருக்கேன்னு எல்லாமே எனக்கு நெருக்கமானவங்களுக்குச் சொல்லிடுவேன், சொல்லைனாலும் தெரிஞ்சுடும். அவசரமா என்கிட்ட எதையாவது சொல்லணும்னாலும், என்னைச் சுத்தி இருக்கிறவங்க மூலமா என்கிட்ட சொல்லிடலாம். பிறகு ஏன் மொபைலை அலறவிடணும்? அது, ஷூட்டிங்ல என்னோட சிந்தனையைச் சிதறிடுச்சுக்கிட்டு இருந்துச்சு. அதான், சைலெண்ட்ல போட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். அந்தப் பழக்கம்தான் இப்போவரைக்கும் தொடருது. ஸோ, எனக்குக் கால் பண்ணா, நான் திரும்பக் கூப்பிடும்போதுதான் பேசமுடியும். அதுக்காக 'இவர் போன் பேசமாட்டார்'னு நினைச்சுடாதீங்க. என்னைமாதிரி எவனும் போன் பேசமுடியாது. விட்டா, விடிய விடியக்கூட பேசிக்கிட்டு இருப்பேன்!"