Published:Updated:

‘மெர்சல்’ மாயோன் பாடல் உருவான கதை சொல்லும் விவேக்!

சனா
‘மெர்சல்’ மாயோன் பாடல் உருவான கதை சொல்லும் விவேக்!
‘மெர்சல்’ மாயோன் பாடல் உருவான கதை சொல்லும் விவேக்!

தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கும் 'மெர்சல்' படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று கதாநாயகிகள் மற்றும் வடிவேல், சத்யன், யோகி பாபு என்று காமெடி பட்டாளமே நடித்திருக்கிறது 'மெர்சல்' படத்தில். அப்பா விஜய், டாக்டர், மேஜிக் மேன் என மூன்று ரோலில் விஜய்யை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகயிருப்பது 'மெர்சல்' படத்தின் ஆடியோ லான்ச் விழாவிலேயே பலருக்கும் தெரிந்திருக்கும். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பாட்டுக்கான வரிகளை அமைதியாக எழுதி முடித்திருக்கிறார் பாடலாசிரியர் விவேக். இந்தப் பாட்டில் இருக்கும் ஸ்பெஷலான விஷயம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விவேக்யிடம் பேசினோம். 

“மெர்சல் படத்தில் எல்லாப் பாடல்களும் நான் எழுதியிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சி .'மாயோன்' பாடல் வரிகளை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தேன். அதற்கு ரசிகர்களிடம் நிறைய ரெஸ்பான்ஸ். பாட்டின் வரிகள் வித்தியாசமாக இருப்பதாகப் பலரும் தெரிவித்தனர். பாட்டின் வரிகள் வித்தியாசமாக இருப்பதற்குக் காரணங்கள் இருக்கிறது. இந்தப் பாட்டின் வரிகளை விஜய் நடித்த மேஜிக் மேன் கேரக்டருக்காகதான் எழுதினேன். 

முதலில் அந்த கேரக்டருக்கு பேக் க்ரவுண்ட் மியூசிக் வைப்பதாகத்தான் இருந்தது. அதன் பிறகுதான் பேக் க்ரவுண்ட் மியூசிக் பதிலாக பாடலாக இருந்தால் நல்லாயிருக்கும் என்று அட்லி ஃபீல் பண்ணினார். என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அதற்காகத்தான் 'மாயோன்' வரிகளை எழுதினேன். 

மேஜிக் அப்படிக்குற கான்செப்ட் எடுத்துத்தான் பாடலில் வரிகளாகச் சேர்த்தேன். அதாவது ஒரு மேஜிக் மேன்  தனது இடது கையில் மேஜிக் செய்து கொண்டிருக்கும் போது, நமது கவனம் முழுவதையும் அதில்தான் வைத்திருப்போம். ஆனால், நம்ம யாரும் கவனிக்காத வண்ணம் அவருடைய வலது கையிலும் எதாவது ஒரு மேஜிக் செய்து அதையும் நம்மிடம் காட்டிவிடுவார். நம்ம கவனம் இடது கையில் மட்டும்தான் இருந்திருக்கும். வலது கைக்கு சென்றிருக்காது. அந்த கான்செப்டைதான் பாடல் வரிகளில் பயன்படுத்தினேன். 

ரசிகர்களின் கவனத்தை வரிகளில் வைத்து, இப்போது இதுதான் நடந்திருக்குனு சொல்லி, அதற்குள் இன்னொரு விஷயமும் இருக்கு அதை நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன் 'மாயோன்' வரிகளில். அதாவது, வரிகள் எப்படியிருக்குனா, 

'வலை இல்ல காத்தப் புடிச்சு வர 

அடித் தளம் இரும்பில் பார்க்காத உரசி

தடையின் தடயம் உடைய உருக 

அழிக்க நெனைச்சா ரெண்டா வருவானே..

இந்த வரிகளில் கடைசி எழுத்துகள் எல்லாம் சேர்த்தால் 'ரசிகனே' அப்படினு வரும். அதே மாதிரி டைனமிக்காக பார்த்தால் 'வலை தளம் உடைய வருவானே' அப்படினு வரும். அதாவது 'மெர்சல்' இண்டர்நெட் எல்லாத்தையும் பிரேக் பண்ணியது இல்லையா அதனால் இந்த வரிகள். 

மேஜிக் மேன் கேர்க்டருக்கு இந்தப் பாட்டு அப்படிங்குறனால எப்படி மேஜிக்கை பாட்டுக்குள்ளே கொண்டு வரமுடியும்னு யோசித்து இந்த வரிகளைக் கொண்டு வந்தேன். இந்த கேரக்டருக்கு ஆரம்பித்திலேயே ஒரு பாடல் எழுதலாம் என்றொரு எண்ணமிருந்தது. ஆனால் கரெக்டான ஒரு பாடல் அதற்கு அமையவில்லை. இப்போது பேக் க்ரவுண்ட் ஸ்கோரில் ஒரு பாட்டு எழுதி அந்தக் குறையை போக்கியாச்சு. 

முதலில் இந்தப் பாட்டின் ஐடியாவை அட்லியிடம் சொன்னவுடன். ’ஐடியா நல்லாயிருக்கு பண்ணலாம்’னு சொன்னார். அப்புறம்தான் வரிகள் எழுதினேன். அதன்பிறகுதான் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ட்யூன் போட்டார். எப்படி போட்டாருனே தெரியவில்லை. பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு நான் வந்துவிட்டேன். இன்னும் முழுமையான பாடலை கேட்கவில்லை. 'மாயோன்' பாடலைக் கேட்க வெயிட்டிங்’’ என்று சிரிக்கிறார் பாடலாசிரியர் விவேக்.