Published:Updated:

அறிமுகத்திலேயே அரசியல் நையாண்டியில் புகுந்து விளையாடிய துணிச்சல் டிம்..! - #HBDTimRobbins

அழகுசுப்பையா ச
அறிமுகத்திலேயே அரசியல் நையாண்டியில் புகுந்து விளையாடிய துணிச்சல் டிம்..!  - #HBDTimRobbins
அறிமுகத்திலேயே அரசியல் நையாண்டியில் புகுந்து விளையாடிய துணிச்சல் டிம்..! - #HBDTimRobbins

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசைக்கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஹாலிவுட் திரை வித்தகர், டிம் ராபின்ஸ் (Tim Robbins). ஹாலிவுட் திரைப்படப் பட்டியலில் மக்கள் மனதில் இன்றும் முதல் இடத்தில் இருப்பது `தி ஷாசங் ரிடெம்ஷன்' (The Shawshank Redemption) என்ற படம்தான். இந்தப் படத்தில் ஆண்டி டியுஃப்ரெஸ்னே (Andy Dufresne) வாக நடித்து அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்தவர்தான் இந்த டிம். சினிமா தெரிந்த ஒவ்வொருவரும், இந்தப் படத்தைக் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் பார்த்திருப்பர்.

அப்பா, நாட்டுப்புறப் பாடகர், அம்மா நடிகை, மனைவி சூசன் சரண்டன் (Susan Sarandon) இவரைவிட 12 வயது மூத்தவர், நடிகை. மகன் ஒரு பாடகர் என இவரின் குடும்பமே  ஒரு கலைக்குடும்பம்தான். திமோத்தி பிரான்சிஸ் ராப்பின்ஸ் (Timothy Francis Robbins) என்பதுதான் இவரது முழுப்பெயர். 1958-ம் ஆண்டு அக்டோபர் 16-ல் பிறந்தார். இரண்டு சகோதரிகள், இரண்டு மகன்கள். இவரது மனைவியுடனான 21 வருடக் காதல் வாழ்க்கை, 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

அவரது டீன் பருவம், `தியேட்டர் ஆஃப் தி நியூ சிட்டி' (Theatre of the New City) என்ற நாடகக் குழுவிலிருந்து தொடங்கியது. அதன்பிறகு வீதி நாடகக் குழுக்கள். தன் நண்பர் ஜான் குசாக் (John Cusack)குடன் சேர்ந்து `ஆக்டர்ஸ் கேங்' என்ற நாடக் குழுவை உருவாக்கினார். 1982-ம் ஆண்டில் முதன்முதலாக `செயின்ட் எல்ஸ்வேர்' (St.Eleswhere) என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பிறகு 1985-ம் ஆண்டு `மூன் லைட்' (Moon Light) என்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் சில எபிசோட்களில் நடித்தார். ஃபிராடெர்னிட்டி வெக்கேஷன்' (Fraternity Vacation) என்ற திரைப்படம்தான் இவரது முதல் வெள்ளித்திரைத் தோற்றம். `டாப் கன்' (Top Gun) என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின.

1992-ம் ஆண்டில் வெளிவந்த `தி பிளேயர்' (The Player) என்ற படத்துக்குச் சிறந்த நடிகருக்கான `கன்னாஸ்' விருது பெற்றார். இந்தப் படத்தின் இயக்குநர் ராபர்ட் ஆல்ட்மன்ஸ் ஆறு முறை ஆஸ்கர் விருதைப் பெற்றவர். அப்போது தொடங்கிய ராபின்ஸின் விருது வேட்டை, 2004-ம் ஆண்டில் `மிஸ்டீரியஸ் ரிவர்' (Mysteries River) என்ற திரைப்படத்துக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வரை கொண்டு நிறுத்தியது. உலகிலேயே சினிமாவின் உயரிய விருதை வாங்கிய உயர்ந்த மனிதர். ஆம், இவரது உயரம் 6'5''. 6'7'' உயரம்கொண்ட ஜேம்ஸ் க்ரோம்வெல் ஆஸ்கர் பரிந்துரையில் மட்டுமே இருந்தார்.

இதற்கிடையே இவரே எழுதி இயக்கி நடித்த `டெட் மேன் வாக்கிங்' (Dead Man Walking) திரைப்படம் மூலம் சிறந்த இயக்குநருக்கான நாமினேஷனில் இருந்தார். இதற்கு முன் டிம் எழுதி, இயக்கி, நடித்த `பாப் ராபர்ட்' (Bob Robert) என்ற சினிமா, அமெரிக்க அரசியல் சூழலைக் கேலி பேசியது. தன் முதல் படத்திலேயே இப்படி ஓர் அரசியல் நையாண்டித்தனம் செய்ய தனி தைரியம் வேண்டும்தான். அந்தப் படம், நினைத்ததைவிட அதிக வரவேற்பைப் பெற்றது. இதுதான் முதன்முதலில் இவர் எழுதி இயக்கிய படம். ஐந்து முறைக்குமேல் இவர் கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பல்வேறு பிரிவுகளில் இதுவரை 36 விருதுகளையும், 38 பிரிவுகளின்கீழ் பரிந்துரையிலும் இருந்துள்ளார்.

திரைப்படங்கள், சீரியல் என நடிகராக 73 படங்கள், இயக்குநராக 10 படங்கள், திரைக்கதை ஆசிரியராக 7 படங்கள், இசை அமைப்பாளராக 7 படங்கள் என, திரைத் துறையில் கால் பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்குச் செயல்பட்டுள்ளார். இவர் நடித்த படங்களிலேயே `தி ஷாசங் ரிடெம்ஷன்' (1994), `புல் துஹ்ராம்' (1988), `டெத் மேன் வாக்கிங்' (1995), `மிஸ்டீரியஸ் ரிவர்' (2003) போன்றவை ஆகச்சிறந்த படங்கள்.  `அகிரா குரோஷிவாவின் `செவன் சாமுராய்' எனக்குப் பிடித்த படம்’ என்பார் டிம் ராபின்ஸ்.

``நான் நடிகருக்கேற்ற மாதிரிதான் வசனத்தை எழுதுகிறேன். திரைக்கதை என்பது, கடைசி நிமிடத்தில்கூட மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னும் எனக்கு வரவில்லை. கதாபாத்திரங்கள்தான் எப்போதும் தெரிய வேண்டும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும், நீங்கள் செய்யவேண்டியது என்ன, செய்துகொண்டிருப்பது என்ன என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கும். நான் என் வாழ்க்கையிலிருந்தே நான் செய்யவேண்டியவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன். நமக்கு தோன்றுவதைச் செய்ய வேண்டும். ஆனால், அது கலையின்  உந்துதல் இல்லாமல் எதையும் பெரிதாகச்  செய்ய முடியாது. பில் கிளின்டன் செய்த எந்தத் தவற்றையும் மீடியாக்கள் வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் பல பொய்களை அடுக்கியே புஷ், ஈராக் மீது போரைத் தொடுத்தார். இப்போது பின்லேடனைவிடக் கொடுமையானவர்களே அமெரிக்காவின் சார்பில் ஆட்சி அமைத்துள்ளனர். ஹாலிவுட்டில் யாரையும் எப்போதும் நம்ப முடியாது. உங்களுக்கு உண்மையான நண்பர்கள் என யாரும் இருக்கப்போவதில்லை'' என அரசு மீதும் ஹாலிவுட் மீதும் மிகுந்த வெறுப்பை திரைப்படங்களில் காண்பித்தார். போருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.

எல்லோருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவதில்லை. தனக்கான வாய்ப்புகள் வரும்போது அதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். தான் சொல்வதைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது எனும்போது அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் தனது திரைப்படங்கள் மூலமும் செயல்பாடுகள் மூலமும் சரியாகப் பயன்படுத்திவரும் இவரின் எதிர்காலச் செயல்பாடுகளும், நமக்குச் சிறந்த அனுபவங்களைத் தரப்போகின்றன என்ற மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துகள்!