Published:Updated:

உதிரிப்பூக்கள்... வருடங்கள் கடந்தோடினாலும் உதிராத வாசம்! #38YearsOfUthiriPookal

ப.தினேஷ்குமார்
உதிரிப்பூக்கள்... வருடங்கள் கடந்தோடினாலும் உதிராத வாசம்! #38YearsOfUthiriPookal
உதிரிப்பூக்கள்... வருடங்கள் கடந்தோடினாலும் உதிராத வாசம்! #38YearsOfUthiriPookal

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனுக்கு  துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அதன்படி,  ஒருசிலரைத் தவிர அனைத்து இயக்குநர்களும் அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருக்க, அந்த ஒருசிலரில் ஒருத்தராக கதையை நம்பிப் படமெடுத்து அதை வெற்றி பெறவும் செய்தார் அந்த இயக்குநர். தமிழ் சினிமா வரலாற்றில் இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதுவரை வெற்றி விதிகள் என்று சொல்லப்பட்ட அத்தனையையும் இந்த ஒற்றைப்படத்தின் மூலம் மீறினார். அதன்படி, எப்படிப்பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் காலம் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன .இந்தப்படமும் இன்றும் தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறனர். அந்தத் திரைப்படத்தின் பெயர் "உதிரிப்பூக்கள்". அந்த இயக்குநர்தான் "மகேந்திரன்" அவர்கள். 1979-ம் ஆண்டு  அக்டோபர் 19-ம் தேதி வெளிவந்த இந்தத்திரைப்படம் இன்றுவரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதைதான். புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை " என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை  மிகச் சிறப்பாக அமைத்தார் இயக்குநர் மகேந்திரன்.

படத்தின் கதை? 
    
விஜயன் ஊரில் பள்ளிக்கூடம் நடத்தும் பெரிய மனிதர். அவர் மனைவி, அஸ்வினி இரு குழந்தைகளோடு வசித்து வருகிறார். விஜயன் தன்னைவிட யாரும் பெரியாளாக இருக்கக்கூடாது என்ற மனப்பான்மை கொண்டவர். அஸ்வினி அடிக்கடி நோய் வாய்ப்படுவதை காரணம் காட்டி அவரின் தங்கையைத் திருமணம் செய்யப் பார்க்கிறார். அஸ்வினின்  தங்கையை மணப்பதற்காக அஸ்வினியை  சரத்பாபுவோடு தொடர்புபடுத்தி பேச, அது ஊர் விவகாரமாகி பிரச்னையில் முடிகிறது. ஊரே தெய்வமாக மதிக்கும் அஸ்வினி நோய்வாய் பட்டு இறக்க, விஜயன் தன் அம்மா சொன்ன பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறார். இதற்கிடையில், இறந்துபோன முதல் மனைவியான அஸ்வினியின் தங்கைக்கு திருமணம் நடக்க இருக்கும் சூழ்நிலையில், அந்தப் பெண்ணை பாலியல் கொடுமை செய்கிறார். இதைக் கேட்டு ஆவேசப்படும் ஊர் மக்கள் எடுக்கும் இறுதி முடிவுதான் படத்தின் கிளைமேக்ஸ்.

விஜயனின் அற்புதமான நடிப்பை தூக்கி நிறுத்துவது போன்ற காட்சியமைப்புகள் படத்தின் மிகப்பெரிய பலம். தனக்குக் கீழே வேலை பார்க்கும் இளைஞன், பேண்ட் சட்டை அணிந்திருப்பதைப் பார்த்து 'இனிமே நீ ஜிப்பாதான் போடணும்' என்று அறிவுறுத்தும் அந்த ஒரு காட்சியிலேயே விஜயனின் குணத்தை சொல்லிவிடுகிறார் இயக்குநர். அமைதியாக, மிக அழகாக வில்லத்தனம் பண்ணுவதில் விஜயனுக்கு நிகர் விஜயன்தான்.

நோயிலிருந்து மீண்ட அஸ்வினி, விஜயனுக்கு மனைவியாக யதார்த்தமான நடிப்பைக் காட்டுகிறார். படத்தில் இவருக்கு அதிகமான வசனங்கள் இல்லையென்றாலும், தன் முகபாவனைகளிலேயே நடித்து அசத்தியிருப்பார். 

அஸ்வினிக்கு அப்பாவாக வரும் சாருஹாசன், வாத்தியாராக வரும் சுந்தர், அஸ்வினியின் தங்கையாக வரும் மதுமாலினி, சுகாதார அதிகாரியாக வரும் சரத்பாபு, விஜயனின் தம்பியாக வரும் ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி என்று படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். முக்கியமாக விஜயன், அஸ்வினி தம்பதிக்கு குழந்தைகளாக வரும் நடிகை அஞ்சுவும், 'மாஸ்டர்' காஜா ஷெரிப் இருவரும் ரொம்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இளையராஜா இந்த படத்தில் ஒரு பெரும் மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருப்பார். படத்தின் கிளைமாக்ஸ்சில் இளையராஜா கொடுக்கும் BGM... விவரிக்க வார்த்தைகளே கிடையாது. படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும்  மிகவும் அருமையாக இருக்கும். 'இத்தன நாளும் நான் கெட்டவனா இருந்தேன். அப்பெல்லாம் நீங்க நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இப்போ, உங்களையும் நான் என்னை மாதிரி ஆக்கிட்டேன். நான் பண்ணதிலேயே பெரிய தப்பு இதுதான்' போன்ற வசனங்கள், மிகவும் ஆழமான வார்த்தைகள். படத்தில் இறுதியில் ஆற்றை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளோடு படம் முடியும்போது நம் மனம் கனத்திருப்பதை மறுக்காமல் இருக்க முடியாது.

யதார்த்தமும் அழகியலும் கலந்த இப்படம், நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. சாடிஸ்டான ஒருவனை முன்னிறுத்தி, கடைசிவரை அவனின் கதாபாத்திரத் தன்மையை மாற்றாமல், அதற்கான தண்டனையை அவன் பெறுவது எனப் புதுமையான முறையில் கதை பின்னப்பட்டிருந்தது. மிகக் குறைந்த வசனங்களுடன், பின்னணி இசை மூலம் ஒரு சிக்கலான மனநிலை சம்பந்தப்பட்ட படத்தைத் தந்தது மகேந்திரனின் சிறப்பான இயக்கத்துக்குச் சான்று. இப்படம் தேசிய விருதுகளுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு மிகப்பெரிய பெயர் பெற்றது.

'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தை, வேறுவிதமாகவும் அன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்றமாதிரி மாற்றி திரைக்கதை அமைத்திருக்க மகேந்திரன் முயற்சித்திருக்கலாம். ஆனால் மகேந்திரன், புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்கின்ற சிறுகதையை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியிருப்பார். கதையின் நாயகனாக நடித்திருப்பவரை, கொடூர வில்லனாகக் காட்டாமல், ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதுக்குள்ளும் இருக்கும், இன்னொரு பக்கத்தைக் காட்டியிருப்பார். உதிரிப்பூக்கள்', தமிழ் சினிமாவின் தரத்தை, உலகத் தரத்துக்கு உயர்த்தியது என்றால் மிகையாகாது. ஒரு நாவலை அல்லது சிறுகதையை சினிமாவாக எடுக்கலாம் என்று இயக்குநர் தேர்ந்தெடுக்கும்போதே, அதில் எந்தெந்த பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதைவிட, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்கிற தெளிவு இருப்பது மிக அவசியம். அதை மிகச்சிறப்பாக கையாண்டிருப்பார் இயக்குநர் மகேந்திரன். 

சிறந்த காட்சிகள் :

படத்தில் பல காட்சிகள் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் சரத்பாபு ஆற்றங்கரையில் இருக்கும் விஜயனிடம் சமாதானம் பேச வருவார். அந்த ஒரு ஷாட் முடிந்ததும், அடுத்த காட்சியில் சரத்பாபு ரத்தக்காயப்பட்டிருக்கும் தன் உதட்டை ஆற்று நீரால் கழுவி, கிழிந்த தன் சட்டையை சரிசெய்து கொண்டு, 'உங்கள நான் அடிக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனா  லட்சுமி விதவையாகிடக் கூடாதுனுதான் அடிக்காம போறேன்' என்று சொல்லுவார். அந்த ஒரு காட்சியிலேயே  இதற்கு முன் என்ன நடந்திருக்கும் என்பதை வெகுத் தெளிவாக விளக்கியிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.

அஸ்வினியின் தங்கை மதுமாலினியின்  கல்யாணத்துக்கு முந்தினநாள் விஜயன் மதுமாலினியை நிர்வாணமாக்கிப் பார்க்கிறான். அதுதான் விஜயன் செய்த மிகப்பெரிய குற்றம். ஆனால், இயக்குநர் நினைத்திருந்தால் மதுமாலினியை பலாத்காரம் செய்கிற மாதிரி காட்டி ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து விஜயனைக் கொல்வது போன்று காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால், பல படங்களை அது நினைவுறுத்தும். எனவே, அவளை மானபங்கப்படுத்துவதோடு நிறுத்தி விடுகிறார் அதற்குப் பஞ்சாயத்து மரணதண்டனை தர முடியாது என்பதால் விஜயன் முன்பே செய்த பல குற்றங்களுக்கும் சேர்த்து விஜயனுக்கு தண்டனை தரப்படுகிறது. அதையும் புதுமையாக சொல்லியிருப்பார் இயக்குநர் மகேந்திரன். 

நீச்சலடிக்கத்தெரியாத விஜயன் தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்வதாக ஆற்றுக்குள் முழ்கி இறக்கவேண்டும். அவனும் மறுபேச்சின்றி அந்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அப்பொழுது அவனைப் பார்க்க அவனது குழந்தைகள் வருகின்றனர். அவர்கள் நன்றாகப் படித்து நல்லவர்களாக வளர வேண்டும் என்று கூறுகிறான். அது மிகவும் நெகிழ்ச்சியான காட்சி. பின்னர் ஆற்றில் இறங்குகிறான் இப்படி ஒரு தண்டனை நிறைவேற்றப் போகும் இடத்தில்கூட கவித்துவமான ஒரு தருணத்தைத் தருகிறார் மகேந்திரன்.

'உதிரிப்பூக்கள்’ திரைப்படம் 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாள்களில் படமாக்கப்பட்டது. அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 'உதிரிப்பூக்கள்’தான். வன்முறை, ஆபாசம், குத்துப்பாட்டு என்று எல்லா மோசமான விஷயங்களையும் இந்தப் படத்தின் கதையோடு தொடர்புபடுத்தி மகேந்திரன் எடுத்திருக்கலாம். ஆனால், மகேந்திரன் அதைத் தவிர்த்து, சினிமாவுக்கு மிக நேர்மையாக நடந்துகொண்டார். குடும்ப உறவுகளை மிகப் பிரமாண்டமாக காட்சிப்படுத்திக் கொண்டே, அதன் போலியான கட்டமைப்பை எதிர்கேள்வி கேட்ட இயக்குநர்கள், தமிழில் குறைவுதான்.

மகேந்திரனுக்கு நிகர் மகேந்திரன்தான்.