Published:Updated:

விஜய்க்கு இன்னொரு ஹிட் பார்சேல்ல்ல்ல்..! - 'மெர்சல் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மெர்சல்
மெர்சல்

மெர்சல் விமர்சனம்

ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்பவர் டாக்டர் மாறன் (விஜய்). இந்தச் சேவையைப் பாராட்டி மனிதநேய விருது வழங்குவதற்காக பாரீஸ் அழைக்கப்படுகிறார். இதற்கிடையில் திடீரென ஊரில் சில மருத்துவர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தியது யார் என போலீஸ் நூல் பிடிக்க அது டாக்டர் விஜய்யின் வீட்டுக்குள் வந்து முடிகிறது. அவரைக் கைது செய்து, "உயிரைக் காக்க நினைக்கும் மருத்துவர் நீ, நீயே எதுக்கு மருத்துவர்களைக் கடத்தியிருக்க?" விசாரணையை ஆரம்பிக்கிறார் போலீஸ் அதிகாரி சத்யராஜ். அதற்குப் பதில், ஃப்ளாஷ் பேக்குகள். ஒன்று 1979-ல் மதுரையில் வசித்த முறுக்கு மீசை வெற்றிமாறனுடையது. நடந்த கடத்தல்கள் எதற்காக, முறுக்குமீசை விஜய்க்கு என்ன ஆனது, இன்னொரு விஜய் இருக்கிறாரா அல்லது அதே டாக்டர் விஜய்தானா என்பதை எல்லாம் `பீஸ் ப்ரோ' என அமரவைத்து நிதானமாகச் சொல்கிறது `மெர்சல்'

`தெறி'யையும்விட இன்னும் அதிக மாஸ் ஏற்றி ஒரு படம் கொடுக்க நினைத்திருக்கிறார் விஜய். அதில் வெற்றிதான். விஜயின் 3 கதாபாத்திரங்களையும் வித்தியாசம் காட்டும்படி எழுதிய விதமும் அதை திரையில் கொண்டு வந்த விதமும் நேர்த்தி. 

படத்தின் பாகுபலி விஜய்தான். டைட்டில் கார்டில் இளைய தளபதியில் இருந்து தளபதிக்கு ப்ரோமோட் ஆகியிருக்கிறார் விஜய். தளபதி என்ற டைட்டிலுக்கும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கும்கூட திரைக்கதையில் சின்ன லாஜிக் பிடித்திருக்கிறார் அட்லி. ஸ்டைலான தாடி, ஃபிட்டான உடம்பு எனப் படத்துக்காக நிறையவே மாறியிருக்கிறார் விஜய். இதைத்தான் இத்தனை நாளாய் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்படி சின்னச் சின்ன சர்ப்ரைஸ் தொடரட்டும் விஜய். படம் நெடுக நிறைய கண்ணிகள். திரைக்கதையின் பிற்பகுதியில் அவை திரும்ப வரும்போது `வாவ்' என்றிருக்கிறது. தனக்காக கட் அவுட் வைக்கப்போகும் சிறுவனிடம் “அதெல்லாம் வேணாம். நாலு பேருக்கு அந்தக் காசுல உதவி பண்ணு” என ஒரு வசனம். நோட் பண்ணுங்க விஜய் ஃபேன்ஸ்!

ஆட்டம்பாட்டம், ஆக்ஷன், அழுகை, மேஜிக் என ஆல் ஏரியாவிலும் கில்லியாடுகிறார். தெறியில் இரண்டு கெட்டப்களில் வந்து மெர்சல் காட்டிய விஜய்க்கு இது இன்னும் ஒருபடி மேல். மதுரை மைந்தனாகத் `தெரியாம வேலியைப் போட்டாய்ங்க... அதான் என்னாங்கடானு கேட்டேன்' எனக் கேட்பெதெல்லாம் டன் கணக்கில் கெத்து. சமந்தாவிடம் "ரோஸ்மில்க்கா க்கா?" என சிறுவனாய் குழைவதும், "மொத்தம் 22 மாநிலம் இருக்கே, 20 குழந்தைங்கன்னா 2 இடிக்குதே" என நித்யா மேனனிடம் கரைவதுமாய் ரொமான்ஸிலும் பக்கா. புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை எனச் சில ஆண்டுகளுக்கு முன் வாக்கு கொடுத்திருந்தார் விஜய். சொன்னபடியே கடைப்பிடித்தும் வந்தார். ஆனால், இந்தப் படத்தில் விஜயை, மீண்டும் புகைக்க வைத்திருக்கிறார் அட்லி. அந்தக் காட்சியில் அது அவசியமும் இல்லை. ஏணுங்கண்ணா?

படத்தில் மூன்று கதாநாயகிகள். காஜல், சமந்தா சில காட்சிகளில் வருகிறார்கள். விஜய் சமந்தாவுக்கு இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனாலும் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வெயிட்டான ரோல் என்பதால் முதலிடம் பிடிக்கிறார் நித்யா மேனன். வடிவேலுக்கு அசம்பாவிதமாய் நிகழ்ந்த 'கத்திச்சண்டை'யைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் இது வெல்கம் கம்பேக். ஆனாலும், விஜய் - வடிவேலு இணையின் டிராக் ரெகார்ட் பார்க்கும்போது காமெடி மிஸ்ஸாகும் பீல். அடுத்து, இரண்டு காட்சிகளே வரும் யோகிபாபுவின் காமெடிக்கு பிரமாதமான ரெஸ்பான்ஸ். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்டைலிஷான கெட்டப் கொடுத்து வழக்கமான வில்லன் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மாஸ் படத்துக்கே உரிய குரல் மட்டும் கொடுக்கும் பலவீனமான வில்லனாக வந்துபோகிறார். நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், ஹரீஷ் பெரடி, கோவை சரளா எனப் பலர் இருந்தாலும் படம் முழுக்க விஜய் மட்டுமே தெரிகிறார்.

பஞ்சாபின் பொட்டல்காடு,  வெளிநாடு, திருவல்லிக்கேணி ஹவுசிங்போர்டு எனச் சகலமும் நம் கண்ணை நிறைக்க ஒரே காரணம் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. முதல் படம் என்பதை அவரே சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. ஆளப்போறான் தமிழன் பாடல் அவருக்கான நிரந்தர விசிட்டிங் கார்டு. கமர்ஷியல் படம். அதுவும் விஜய் படம். ஆக்ஷன் காட்சிகள் அதகளப்படும்தானே. இது அதுக்கும் மேல என மிரட்டியிருக்கிறார் அனல் அரசு. ஒவ்வொரு அடியும் 'அப்ப்ப்ப்படி' விழுகிறது. ஆனாலும் படம் முழுக்க தெறிக்கும் ரத்தத் துளிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். ரஹ்மான் பாடல்களில் கெத்து காட்டியிருக்கிறார். தெறிக்கவிடும் தீம், உருக்கும் பேத்தாஸ் தாண்டி ரஹ்மானின் சர்ப்ரைஸ் - 'சைலன்ஸ்'. நித்யா மேனன் தொடர்பான குறிப்பிட்ட காட்சியில் ரஹ்மான் கொடுக்கும் அந்த அமைதி... செம்ம.

`மனிதாபிமானம்ங்கறது ஸ்பெஷல் குவாலிட்டி இல்ல. ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி' என மேலோட்டமான வசனங்கள் படத்தின் அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மேலும், ஏற்கெனவே நீளமாகச் செல்லும் படத்தில், அந்த ஃப்ளாஷ் பேக்கும் நீளமாக இருப்பதால் சோர்வடையச் செய்கிறது. வடிவேலுவுக்கு இன்னொரு விஜய் எங்கு இருக்கிறார் என எப்படித் தெரிந்தது, பஞ்சாப் பெண் நித்யா எப்படி மதுரை தமிழ், இப்படியான லாஜிக் களேபரங்கள் அனைத்தையுமே மேஜிக் என்ற ஒற்றை வார்த்தையில் டிக் அடிக்கிறது மெர்சல். திரைக்கதைக்கு அட்லி முதல் விஜயேந்திர பிரசாத் வரை நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். அவ்வளவு உழைப்புக்கும் ஒரு மாஸ்டர்பீஸ் திரைக்கதை தந்திருக்கலாம். ஆனால், யூகிக்கும்படியான காட்சிகள் தந்திருப்பது மைனஸ். 

படத்தில் எக்கச்சக்க குறியீடுகள். வேட்டி சட்டை புகழ் பாடுவது, தலைவன் பன்ச், எம்.ஜி.ஆர் உருவகம், இதுமட்டுமல்லாமல் பார்ப்பவர்கள் எல்லாம் 'நீ தெய்வம்யா' எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியில் கையில் திருப்பிப் பிடித்த அருவாளோடு 'ஒருநாள் எங்க கை ஓங்கும்டா' என கம்யூனிச பன்ச் பேசுகிறார் விஜய்.

கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார் அட்லி (எத்தன...). அபூர்வ சகோதரர்கள் கதையையே கொஞ்சம் ஆல்டர் செய்து, அதற்குள் சர்ஜிகல் எரர் இறப்பு, எலி கடித்து இறந்த இன்குபேட்டர் குழந்தை, கார்ப்பரேட் கைகளில் இருக்கும் மருத்துவம் எனப் பல விஷயங்களை வைத்த விதம் நன்று. தியேட்டரில் படம் பார்க்கும் ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் கலை நன்றாகவே கைவருகிறது. ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி எனச் சரியான மிக்சிங்கில் பரிமாறியிருக்கிறார். ஆனால், அடுத்த லெவலுக்குச் செல்ல ஏற்கெனவே வந்த படங்களின் சாயல் இருப்பதைக் கட்டாயம் தவிர்க்கணும் ப்ரோ. சிவாஜி, கஜினி, ரமணா எனப் பல படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள் நிறைய. 

கொண்டாட்ட மனநிலையில், எந்தக் குறைகளும் தியேட்டரில் இருக்கும்போது தெரியவில்லை என்பதால் மெர்சல் மூலம் இன்னொரு ஹிட் பார்சல்.

அடுத்த கட்டுரைக்கு