Published:Updated:

" ‘ஜெயிக்கறது'ங்கறதே ஒரு காமெடியான வார்த்தைதான்..!’’ - சித்தார்த்

பா.ஜான்ஸன்
" ‘ஜெயிக்கறது'ங்கறதே ஒரு காமெடியான வார்த்தைதான்..!’’ - சித்தார்த்
" ‘ஜெயிக்கறது'ங்கறதே ஒரு காமெடியான வார்த்தைதான்..!’’ - சித்தார்த்

'ஜில் ஜங் ஜக்' படத்துக்குப் பிறகு படு சைலன்ட்டாக இருக்கிறார் என்று பார்த்தால் வெளியே தெரியாமல் `அவள்' என்ற படத்துக்குக் கதை எழுதி, நடித்து முடித்து, 'இன்னும் நான்கு படங்களிலும் கமிட் ஆகியிருக்கேன் ப்ரதர்' என்கிறார் சித்தார்த். 'இதெல்லாம் எப்போ நடந்தது திடீர்னு டீசர் பார்க்கும்போதுதான் தெரியுது' எனக் கேட்டு பேச்சைத் தொடங்கினால், உதவி இயக்குநர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என சினிமாப் பயணம் பற்றித் தொடர்ந்தது அந்த உரையாடல்.

 " `அவள்' என்ன மாதிரியான படம்?"

"மலைப்பகுதி வீட்டுல வாழ்ற அன்பான கணவன் - மனைவி. அவங்க வீட்டுக்குப் பக்கத்துல புதுசா குடி வர்ற கிறிஸ்தவக் குடும்பம். அந்தக் குடும்பத்துல 'ஜெனி'னு ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணுக்கு நடக்குற சில சம்பவங்கள், அந்தக் கணவன் - மனைவியை எப்படி மாத்துது... இதுதான் கதை. என்னடா, கதையைச் சொல்லிட்டானேன்னு பார்க்குறீங்களா... கதையைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு உங்களுக்குள்ள பல கேள்விகள் வருதுல்ல...அது கடவுள் பற்றியதா இருக்கலாம், பேய் பற்றியதா இருக்கலாம். அது எதுவா இருந்தாலும் அதுக்கெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு பதில் கிடைக்கலாம். இல்லனா இன்னும் நல்ல கேள்விகள் கிடைக்கலாம். படத்தோட இயக்குநர் மிலிந்த் ராவுக்கும் எனக்கும் மணி சார்கிட்ட உதவி இயக்குநர்களா இருக்கும்போது பழக்கம். ஒரு நண்பருடைய படத்தில் நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகளில் வெளியிடுறோம். சும்மா சொல்லலை, ஹாரரே பிடிக்காதவங்களுக்குக்கூட இந்தப் படம் பிடிக்கும்னு நம்புறேன்." 

"படத்திற்கு கதை எழுதினது, இயக்குநர் ஆசைக்கான வார்ம்-அப்னு எடுத்துக்கலாமா?" 

"படம் இயக்கக் கூடாதுனு என்னை யாரும் தடுக்கலை, தடுக்கவும் முடியாது. எனக்குப் படம் இயக்கணும்னு தோணுச்சுனா நானே போய் இயக்கிட்டு வந்திருவேன். ஏன்னா, நான் சினிமா படிச்சது மணி சார் ஸ்கூல்ல. என்னுடைய நண்பர் படம் பண்றாரு அதில் என்னால எந்தளவுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ, அந்தளவுக்கு சப்போர்ட் பண்ணணும்னு நினைச்சேன். நான் ரெண்டு, மூணு வருஷம் கழிச்சு படம் இயக்கலாம். ஆனா, அதை இன்னும் திட்டமிடல. ஏன்னா எனக்கு இப்போ இருக்கும் பொறுப்புகள் அதிகம். ஹீரோவா மூணு படத்தில் நடிச்சிட்டிருக்கேன், மலையாளப் படம் ஒண்ணு நடிக்கப்போறேன்... இதையெல்லாம் முடிச்சிட்டு வர்றப்போ நானும், ஒரு தயாரிப்பாளர்கிட்ட இருந்து, எழுத்தாளர்கிட்ட இருந்து சப்போர்ட் எதிர்பார்ப்பேன். ஏன்னா, சினிமா ஒரு கூட்டு முயற்சிதானே!"

"அதுல் குல்கர்னி, பிரகாஷ் பெலவாடினு புதுக் கூட்டணியா இருக்கே?"

"திறமையான நடிகர்கள் இவங்க. படத்தில் ஒரு குட்டிப் பொண்ணு நடிச்சிருக்கு. அந்தப் பொண்ணுட்ட வேலை வாங்கறதுக்குள்ள செமயா டயர்ட் ஆகிடுவோம். ஆனா, அதுல அவ்வளவு பொறுமையா அந்தக் குழந்தையை ஹேண்டில் பண்ணி இவரும் பிரமாதமான நடிப்பைக் கொடுத்தார். கன்னடம், இந்தியில பின்னிப் பெடலெடுத்திட்டிருக்கிறவர் பிரகாஷ் பெலவாடி. `உத்தமவில்லன்', `சோலோ', மூலமா சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்கார். அவருடைய முழு நீளமான தமிழ்ப் படமா `அவள்' இருக்கும். எனக்கு மனைவியா ஆண்ட்ரியா நடிச்சிருக்காங்க. அவங்களப் பற்றி சொல்லவே தேவையில்ல, 'தரமணி'யில கலக்கியிருந்தாங்க. இன்னும் நிறைய புதுமுகங்களும் படத்துல இருக்காங்க. 'மெரினா' படத்துக்கு இசையமைச்ச கிரிஷ் கோபால கிருஷ்ணன், 'ஜில் ஜங் ஜக்' ஒளிப்பதிவாளர் ஸ்ரியாஸ்னு நிறைய திறமையான டெக்னீஷியன்ஸும் வெறித்தனமா வேலை செஞ்சிருக்காங்க. ஹிமாச்சல் பிரதேசத்தொட லொக்கேஷன்ஸ் ஆடியன்ஸுக்குப் புதுசா இருக்கும்." 

" `ஜிகர்தண்டா', `காவியத்தலைவன்', `ஜில் ஜங் ஜக்'னு உங்களுடைய படத் தேர்வுகள் வித்தியாசமானதா இருக்கு, வழக்கமா எல்லோரும் பண்றதை பண்ணக் கூடாதுங்கறதாலா?"

’’மத்தவங்களோட படங்களைப் பார்த்து ரசிக்கறது நல்ல விஷயம். அதே விஷயத்தை நானும் பண்ணணும்ங்கிற கட்டாயம் வந்தா, நான் சினிமாவை விட்டே போயிடுவேன். இன்னொருத்தவங்க பண்றாங்க என்பதற்காக அதையே நானும் பண்ணணும்னு சொன்னா, அதுக்கு நான் எம்.பி.ஏ முடிச்சதும் ஆஃபீஸ்ல சேர்ந்து ஒன்பது மணிக்கு சலாம் போட்டுட்டே இருந்திருப்பேனே... ஏன் சினிமாவுக்கு வரணும்?. என்னோட ஸ்க்ரிப்ட் செலக்‌ஷன், நான் முதல் முறை கதை கேட்பதுல இருந்து, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பாக்கறவரை இருக்கும் எதிர்பார்ப்பைதான் பூர்த்தி செய்ய முடியும். ஏன்னா ஆடியன்ஸ்கூட சேர்ந்து சினிமாவுடைய ட்ரெண்டும் மாறிகிட்டே இருக்கு. ஒரு கதை கேட்கும்போது நல்லாயிருக்கும், அதுவே படமா வெளிய வரும்போது ட்ரெண்ட் மாறியிருக்கலாம். இப்போ இருக்கும் பெரிய மைனஸ் இதுதான். நான் ட்ரெண்டை வெச்சுப் படம் பண்றவன் கிடையாது. எனக்கு இந்தக் கதை சினிமாவா நல்லாயிருக்கும்னு தோணுச்சுனா அதைப் பண்ணிடுவேன். ரெண்டாவது, அது முதல் பட இயக்குநரோ, தேசிய விருது வாங்கின இயக்குநரோ... அவர் கூட வேலை செய்தா ஏதாவது கத்துக்க முடியும்னா நான் தயங்காமப் போயிடுவேன். சினிமாவைப் பொறுத்தவரை நான் ஒரு ஹார்டு வொர்க்கிங் ஸ்டூடன்ட்.”

"நடிப்புனு ஆரம்பிச்சு 15 வருடங்கள் கடந்திருக்கீங்க. சினிமாவை முழுசாப் புரிஞ்சுகிட்டதா நினைக்கறீங்களா?"

"நடிகரா இருக்கறது காத்திருக்கிற வேலைனு சொல்வேன். 'காவியத்தலைவன்' ரிலீஸ் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சுச் சிறந்த நடிகருக்கான விருதைக் கொடுத்தாங்க. அதை நான் தாமதமாகக் கிடைச்ச விடையாதான் பார்க்குறேன். படம் ரிலீஸானப்போ கிடைக்காத மகிழ்ச்சி, அதுக்கான அங்கீகாரம் கிடைச்சப்போ விட்டமின் ஊசி போட்ட மாதிரி இருந்தது. யாரோ ஒருத்தருக்கு ஒரு கதை வந்து, அந்தக் கதையில் உங்களுக்கு ஏத்தமாதிரி ஒரு கதாபாத்திரம் உருவாகி, அதுவும் சரியா உங்களையே தேடி வந்து, அதில் நீங்க நடிச்சு இதெல்லாம் நடக்கறதுக்குள்ள...  மூணு விகடன் பேட்டி தாண்டிடும். நான் கடைசியா பேசுனப்போ இருந்ததுக்கும் இப்போ இருக்கறதுக்கும் எனக்குள்ள என்ன வித்தியாசம் வந்திருக்குன்னா, ஒரு ஸ்டேட் அவார்டு கிடைச்சிருக்கு. ஒரே நேரத்தில் ரெண்டு மூணு படங்கள் நடிக்க முடியாதுனு நினைச்சிட்டிருந்தேன். 'அவள்', 'சைத்தான் க பச்சா', சசி சார் கூட 'ரெட்டக் கொம்பு' படம் ஆரம்பிக்கப் போகுது. அதனால, இப்போ அந்த நினைப்பு மாறியிருக்கு. நாம ஒன்னும் சும்மா இந்த சினிமால இல்ல, நம்மகூட வேலை செய்ய நிறைய பேர் விரும்பற அளவுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம்ங்கிற நம்பிக்கை வருது."

அதேபோல, உதவி இயக்குநர் வேலையையும் சேர்த்தா சினிமாவுக்கு வந்து 18 வருடம் ஆச்சு. இப்போ இருக்கும் சூழல் கடினமானது. ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவைக்கிறதுல ஆரம்பிச்சு ஜி.எஸ்.டி வரி வரை... எல்லாத்திலும் சிக்கல் இருக்கு. ஒரு நல்ல படம் எடுக்கறதும் கஷ்டம், அதை மக்கள்கிட்ட கொண்டு போறதும் கஷ்டம்.  படம் மூலமா ஆடியன்ஸைத் திருப்திப்படுத்துறது கஷ்டம். அவங்களைத் திருப்திப்படுத்துறதுக்குள்ள பைரஸி வந்துடுமோன்னும் கஷ்டம்... இப்படிப் பல விஷயங்கள் நம்பளைத் தாக்கிட்டே இருக்கு. ஸோ, சினிமா என்னைக்குமே சுலபமா இருக்கப்போறதில்லை. அதுக்காகவே சினிமாவுக்கு நாம இன்னும் அதிக எஃபர்ட் போடணும்னு தோணுது. சார்லஸ் டிகின்ஸ் சொல்ற மாதிரி "it is the best of time and the worst of times"  சினிமாவுல என்னுடைய பயணமும் இப்படித்தான்!"

"2013-ல ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தினு பல மொழிகள்ல படங்கள் பண்ணிட்டு இருந்தீங்க. ஆனால் இப்ப அதைக் குறைச்சுகிட்ட மாதிரி தெரியுதே?"

"இதே கேள்வியை அடுத்த வருடம் கேட்கமாட்டீங்க. தொடர்ந்து இயங்குறது அடிக்கடி நடந்தா நல்லா இருக்காது. சினிமா மட்டுமில்ல, நம்ம நாட்டோட நிலைமையே கொஞ்சம் ஸ்லோவாதான் போய்க்கிட்டு இருக்கு. அப்படி ஒரு சூழல் இருக்கும்போது, 'ஏன் நீங்க அதிகப் படங்கள் நடிக்கிறதில்லை'னு நீங்க கேட்கிறது எனக்குச் சரியா படலை. நாங்களும் எல்லாத்துக்கும் ஒரு சரியான நேரம் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். தொடர்ந்து நாலு படம் பண்றேன். ஆனா, கடந்த ஆறு மாசமா ரிலீஸ் பண்ற சூழல் அமையலை. இப்போ இருக்கிற சூழல்ல ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்களானே தெரியலை. ஸ்டிரைக் அறிவிச்சு நாளு நாள் தியேட்டர் மூடப்பட்டது யாருக்கும் பெரிய வருத்தமா தெரியலை. அப்போதான் எங்களோட வேலைமேல ஒருவித பயம் வந்தது. அதனால, அதுக்கான டைம் வரும்போதுதான் ரிலீஸ் பண்ண திட்டமிடவேண்டியிருக்கு.

"அடுத்தடுத்த படங்கள்..."

"அடுத்தது `கப்பல்' படத்தோட இயக்குநர் கார்த்திக் இயக்கும் `சைத்தான் கா பச்சா' படம். அது மெய்ன் ஸ்ட்ரீம் கமர்ஷியல் படம். எப்படி என்னோட ஒவ்வொரு படமும் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இல்லாம இருக்கோ, அப்படித்தான் இதுவும். லுக்ல நிறைய புது விஷயங்கள் பண்ணியிருக்கோம். முழுக்க காமெடி என்டர்டெய்னரா இருக்கும். அதுக்குப் பிறகு சசி சார் இயக்கும் `ரெட்டக் கொம்பு' படத்தில் நடிக்கிறேன். அவர்கூட ரொம்ப நாளா படம் பண்ணுவோம்னு பேசிட்டே இருந்தது, இப்போ அமைஞ்சிருக்கு. இதில் ஜி.வி.பிரகாஷ் கூட நடிக்கிறேன். சசி சாருடைய எமோஷன்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் படம் எனக்குப் புது அனுபவமா இருக்கும். யாரோ ஒருத்தர்கிட்ட பேசிட்டிருந்தப்போ 'உன்னோட செலக்‌ஷன்லயே இந்த மூணு படங்கள்தாம் பக்கா கமர்ஷியல் ஸ்க்ரிப்ட்ஸ்'னு சொன்னாங்க. அது உண்மையா இருந்தா சந்தோஷம்." 

"உதவி இயக்குநர் தொடங்கி தயாரிப்பாளர்வரை நிறைய ரோல் பண்ணியிருக்கீங்க. சினிமாவைப் பொறுத்தவரை நீங்க எப்படிப்பட்டவரா பதியணும்னு நினைக்கறீங்க?"

"கடைசிவரை முயற்சி பண்ணிட்டிருந்தவனா பதியணும். என்னைப் பொறுத்தவரை இதில் ஜெயிச்சேன், அதில் ஜெயிச்சேன்னு சொல்லிக்கிறதுல உடன்பாடு இல்லை. ஜெயிக்கிறதுங்கிற வார்த்தையையே ஒரு காமெடியான வார்த்தையா நான் பார்க்கறேன். நாம ஜெயிச்சோம்னு எப்போ நினைக்கறோமோ அப்போ மனசுல உங்களுக்கே தெரியாம திமிரு வந்திடும். வெற்றி, தோல்வி சுழற்சிதான். எப்போடா ஜெயிப்போம்னு மட்டுமே இருந்தா, சுத்தி இருக்கும் எதையும் கவனிக்காம, எதையும் அனுபவிக்காம போயிடுவோம். I am because i try. இதுதான் எப்போதும் என்னோட மனநிலை."

" `தரமணி' படத்தில், ‘உன் பதில் வேண்டி...’ பாடல் ரொம்ப நல்லா ரீச் ஆனது. பாடகராக வரவேற்பு எப்படி இருக்கு?"

"சின்ன வயசில இருந்தே பாடிட்டுதான் இருக்கேன். ராமும் நானும் ரொம்ப நல்ல நண்பர்கள். நாங்க சேர்ந்து படம் பண்றோமோ இல்லையோ நிறைய படங்கள் பற்றிப் பேசுவோம், கதைகள் எழுதுவோம். `கற்றது தமிழ்' படத்துக்குப் பிறகு தொடங்கினது எங்களுடைய நட்பு. 'தரமணி' ஸ்க்ரிப்ட் ஸ்டேஜ்ல இருக்கும்போதே நாங்க அதுபற்றி நிறைய பேசியிருக்கோம். யுவன் இசையில் தெலுங்குல 'ஓய்' படத்தில் பாடியிருந்தேன், இந்தியில் `ஸ்ட்ரைகர்' படத்திலும் பாடியிருந்தேன். `தரமணி' நானும் யுவனும் இசையால் இணைந்த மூணாவது படம். அதையும் தாண்டி முத்துக்குமாருக்கு நான் பெரிய ரசிகன். ‘போன படத்திலும் பாடல. இதில் கண்டிப்பா பாடியே ஆகணும்’னு ராம் சொன்னார். ‘முத்து எழுதினா எப்போ வேணாலும் பாட ரெடி’னு சொன்னேன். ஆனா, பாட்டு வெளியானப்போ முத்து எங்களோட இல்லை. அதில் எங்க எல்லோருக்கும் ரொம்ப வருத்தம். இருபத்தைந்து பாடல்களுக்கு மேல பாடியிருக்கேன். `தரமணி' ஆல்பம் கேட்டுட்டு ஒரு ரிவ்யூவர், ‘சித்தார்த்னு ஒரு புது சிங்கர் அறிமுகமாகியிருக்கார்’னு சொல்லி வாழ்த்தியிருந்தாங்க. சந்தோஷம்!"