Published:Updated:

மெர்சலை மிரட்டும் தமிழிசை, ‘தி டிக்டேட்டர்’ பார்த்தால் என்ன செய்வார்?

மெர்சலை மிரட்டும் தமிழிசை, ‘தி டிக்டேட்டர்’ பார்த்தால் என்ன செய்வார்?
மெர்சலை மிரட்டும் தமிழிசை, ‘தி டிக்டேட்டர்’ பார்த்தால் என்ன செய்வார்?

மெர்சலை மிரட்டும் தமிழிசை, ‘தி டிக்டேட்டர்’ பார்த்தால் என்ன செய்வார்?

`மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு, மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கும் டாக்டர்கள்... இப்படி அரசியல், சமூகம் சார்ந்த சில வசனங்கள் வரும். அதற்கு அரசியல் தளத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. `சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்’ என்கிறார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.  ``நூறு டாக்டர்களில் பத்துப் பேர் இப்படி மருத்துவத்தை பிசினஸாகப் பயன்படுத்துவர். அது தவறு என்று புரிபவர்களுக்கே நான் சொல்வது கோபத்தை உண்டாக்கும்” என்று இதில் ஒரு வசனம் வரும். 

அதுபோல, ‘தாம் செய்வதெல்லாம் தவறுதான். அவையெல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன’ என்ற எண்ணம் உடையவர்களுக்கு மட்டும்தான் தனது கொள்கைகளை விமர்சிக்கும்போது கோபம் வரும். அப்படியானால், `இவர்களின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவிவிட்டன என்பதை இந்த அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?' என்ற கேள்வியை முன்வைத்து இதைவிட தீவிரமாக அரசியலை நையாண்டி செய்வதற்காகவே ஹாலிவுட்டில் 2012-ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்தது. அது, `தி டிக்டேட்டர்' (The Dictator).

மன்னராட்சி நடக்கும் வட ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி வடியா நாடு. அங்கு ஜனநாயகம் என்பது கடுகளவும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக இருப்பார் சர்வாதிகாரி ஹஃபீஸ் அலாதீன். அவரைப் பற்றியும் அவரது அரசியல் கொள்கைகள் பற்றியதுமான கதைதான் இந்த `டிக்டேட்டர்'.

ஆரம்பக் காட்சியில் அலாதீனிடம் ஒரு பத்திரிகையாளர், `நீங்கள் நியூக்ளியர் ஆயுதம் வைத்திருக்கிறீர்களா?’ என்ற கேள்வியைக் கேட்பார். ஆனால், அதை அலாதீன் கேட்காத மாதிரியே இருப்பார். அந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்கும்போதும் அவரின் பதில், `ஸாரி, எனக்குக் கேட்கவில்லை’ என்பார். பின்னர் வேறொரு கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் கேட்கும்போது, `ம்ம்… இப்போ கேட்குது’ என்பார். நம் அரசியல்வாதிகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் எவ்வாறு பதில் சொல்கிறார்கள் என்பதையும் இந்தக் காட்சியையும் பொறுத்திப்பாருங்கள். `நாம் ஒண்ணு கேட்க, அதைக் கேட்காத மாதிரியே இருந்துவிட்டு, நாம அசந்துபோற மாதிரி வேறொரு பதில் சொல்வாங்க பாருங்க… அடேங்கப்பா பிரமாதமா இருக்கும்!

வடியாவுக்கென்றே தனித்தன்மை வாய்ந்த ஓர் அகராதி இருக்கும். அதில் இருக்கும் 300 வார்த்தைகளை `அலாதீன்’ என்றே மாற்றிவைத்திருப்பார். பெரும்பான்மையான சொற்கள் அவரது பெயரிலேயே இருக்கும். உடனே நீங்கள், `தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அந்தத் திட்டங்கள் அப்போது ஆளும் அரசின் தலைவர்கள் பெயரில்தான் செயல்படுத்தப்படும்’ என்பதோடு இதைப் பொறுத்திப்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

அடுத்து அலாதீன் தன் நாட்டு மக்களிடம் உரையாற்றும் ஒரு காட்சி வரும். அதில் `நம்மிடம் நியூக்ளியர் ஆயுதம் இருக்கிறது. இதை எந்தவித அழிவுக்காகவும் பயன்படுத்தப்போவதில்லை. இதைக்கொண்டு மருத்துவ ஆராய்ச்சி மட்டுமே செய்யப்போகிறோம்' என்பார். உலகின் பல்வேறு நாடுகள் அணு ஆயுதம், பயோ ஆயுதம் எனப் பல பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்தாலும், `அவை எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. எல்லாம் மக்களைப் பாதுகாக்க, நாட்டின் நன்மைக்காக’ என்றுதானே கூறிவருகின்றனர்.

ஒருமுறை, தான் தயாரிக்கும் நியூக்ளியர் ஆயுதத்தைப் பார்க்கப்போவார் அலாதீன். அப்போது அந்த ஆயுதத்தின் முனைப்பகுதி உருளையாக இருக்கும். அந்த முனைப்பகுதி கூர்மையாக இருக்குமாறு மாற்றிச் செய்யச் சொல்வார். அதற்கு அலாதீன் கூறும் காரணம் அடேங்கப்பா ரகம். `உருளையாக இருப்பதால் நாம் எந்த நாட்டின் மீது அதைப் பயன்படுத்துகிறோமோ அந்த நாட்டில் விழும்போது அது எகிறி மறுபடியும் வடியா மீதே விழும். அதுவே கூர்மையாக இருந்தால் எகிறாமல் அப்படியே இருக்கும்' என்பார். 

‘அணைக்கட்டுத் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடுவது, வாசலில் சாணம் தெளித்தால் டெங்குவை ஒழித்துவிடலாம் என்பது, 2,000 ரூபாய் தாளில் சிப் வைக்கப்பட்டுள்ளது எனக் கிளப்பிவிடுவது, கடலில் கொட்டிய எண்ணெய்யை வாளிகொண்டே அள்ளிவிடலாம் என நினைப்பது, தற்போதைய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும்தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகிறது என ஸ்டேட்மென்ட் விடுவது, டெங்குக் கொசு... ஏ.சி பஸ்ஸில்தான் வந்தது என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசுவது, நொய்யல் ஆற்றில் நுரை வருவதற்குக் காரணம் மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பதே எனத் தன் அறிவால் கண்டறிந்து சொல்வது... போன்ற இன்றைய தமிழக அரசியல்வாதிகளின் முத்தான கருத்துகளின் முன்னோடி அலாதீன்தான் என்பது இப்போது புரிகிறதா?

தன்னிடம் நியூக்ளியர் ஆயுதம் இல்லை எனக் கூறவும், தனது நாட்டை மக்களாட்சி சார்ந்ததாக அறிவிக்கவும் அலாதீன் அமெரிக்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அழைக்கப்பட்டிருப்பார். அமெரிக்காவுக்கு வரும் அலாதீன், லாம்போகினி சூழ அமெரிக்க வீதிகளில் ஒரு யாத்திரையை நிகழ்த்திக்காட்டுவார். இந்தியாவில் ஒரு வார்டு கவுன்சிலராக இருந்தால்கூட நான்கைந்து கார்கள் தன்னைப் பின்தொடர்ந்து வலம்வருதை காணலாம். அப்படி இருக்கையில், ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்துகொண்டு அலாதீன் இந்த அலப்பரைகள்கூட கொடுக்கவில்லையென்றால் எப்படி? ஐ.நா-வில் ஜனநாயகம் தொடர்பாக அலாதீன் ஆற்றும் உரை நையாண்டியின் உச்சம். 

தவிர, பெண்கள் வெறும் போதைப்பொருளாக மட்டுமே பார்ப்பதை கேலிசெய்வது, விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களைக் கேலிசெய்வது, மக்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படாமல் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைப்பதுதான் சரியெனப் பேசுவது, பொது அறிவு, உலக அறிவு என எந்தவித அறிவும் இல்லாமல் இயங்கும் அரசியல் தலைவர்கள்... இப்படிப் பலரையும் தனது நையாண்டித்தனத்தால் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அலாதீன் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். 

அலாதீன், நமது `23-ம் புலிகேசி' மாதிரியேதான். ஆரம்பம் முதல் இறுதி வரை மிகத் தீவிரமான அரசியல் நையாண்டியாக இருக்கும். அவை அனைத்தும் ரசிக்கும்படியாகவும் சிந்திக்கவைப்பதாகவும் இருக்கும். இதையெல்லாம்விட, முக்கியக் குறியீடு ஒன்று இருக்கும். முக்கியக் கதாபாத்திரமான சர்வாதிகாரி அலாதீன், தாடியுடனே பிறப்பார், வளர்வார், ஆட்சிசெய்வார். தாடி எடுத்தவுடன் அவரை எவராலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தாடி அவருடைய அடையாளமாக இருக்கும். இதை இன்றைய அரசியல் சூழலுடன் பொறுத்திப்பார்த்தால் அதற்கும் நான் பொறுப்பல்ல. 

இந்தத் திரைப்படம் வெளியான பிறகு நடந்த மெக்ஸிகோவின் அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் இதன் பெரும்பான்மையான காட்சிகளும் வசனங்களும் பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் ஒரு சிறு உதாரணமே. இந்தப் படத்தைப் பார்த்து இதன் அரசியல் நையாண்டியை முழுவதுமாக ரசிக்கலாம். ஆனால், ஒரே ஒரு வசனம், அது அரசியல் தொடர்பாக, மதம் தொடர்பாக, ஜாதி தொடர்பாக இடம்பெற்றாலே `ஆ…ஊ…' எனக் கூச்சலிட்டு, போராட்டம் நடத்தி, எதிர்ப்புத் தெரிவிக்கும் நம் மக்கள், `தி டிக்டேட்டர்’ போன்ற படைப்புகள் இங்கே எடுத்தால் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. 

படைப்புகளை, படைப்புகளாக... அதன் சுதந்திர வெளியில் இயங்கவிடுங்கள். அதே நேரத்தில் படைப்பாளிகளும் சமூக அக்கறையோடு செயல்படுங்கள். ஏனென்றால், நம் படைப்பின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல!

அடுத்த கட்டுரைக்கு