“ ‘ஸ்லிம்’ லட்சுமி, ‘ஹீரோ’ பிரபுதேவா, ‘அப்பா’ தங்கர்!” ‘யங் மங் சங்’ உருவான கதை

சிவஸ்ரீ சீனிவாசன், தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர். இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் அறிமுகப்படமான 'உரிமை கீதம்' உள்பட பல படங்களைத் தயாரித்தவர். பிறகு 'நான் கடவுள்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', ‘நிமிர்ந்து நில்’ போன்ற படங்களைத் தயாரித்தவர், தற்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கும் 'ஒரு பக்க கதை', பிரபுதேவா, லட்சுமிமேனன் நடிக்கும் 'யங் மங் சங்', சந்தானம் ஹீரோவாக நடிக்கும், 'ஓடி ஓடி உழைக்கணும்' என்று ஒரே சமயத்தில் மூன்று படங்களைத் தயாரித்துவருகிறார். ஒரு படம் தயாரிப்பதே சிரமமாக இருக்கும் இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரே சமயத்தில் மூன்று படங்களைத் தயாரித்து வரும் சிவஸ்ரீ சீனிவாசனிடம் பேசினேன். 

யங் மங் சங்

“எங்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஒரு பக்க காதல் கதை' திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது, இன்றைய குடும்ப வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களைக் கொண்ட படம். இந்தப் படத்தை சென்சார்க்கு அனுப்பியபோது, ‘படத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வசனத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்துக்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்துவிடுவோம்' என்று சொன்னார்கள். ஆனால், படத்தின் மையக்கருவை தாங்கி நிற்கும் உயிர்நாடியே அந்த வசனம்தான். அதனால் அந்த வசனத்தை நீக்க மறுத்து போராடி வந்தோம். இதற்கிடையில் சென்சார் போர்டு உறுப்பினர்கள் மாறிவிட்டதால் எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயங்களை உணர்ந்து தற்போது 'யூ' சர்டிபிகேட் வழங்கி உள்ளனர். இதையடுத்து 'ஒருபக்க கதை' படம் அடுத்த மாதம் நவம்பரில் ரிலீஸ் செய்கிறோம். 

யங் மங் சங்

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் டைரக்‌ஷன் செய்வதற்காக பிரவுதேவாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து இருந்தேன். அந்தச் சமயத்தில் பிரபுதேவா நடித்த 'தேவி' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதன்பிறகு ஹீரோவாக நடிக்கக்கேட்டு பிரபுதேவாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. அந்தநிலையில் என்னைத்தேடிவந்த பிரபு தேவா சார், ‘நிறைய படங்கள்ல என்னை நடிக்க கூப்பிடுறாங்க. ஆனால் முதல்ல அட்வான்ஸ் வாங்கின உங்களோட படத்துல நடிக்கறதுதான் முறை’ என்றார்.

யங் மங் சங் 

அவரின் நல்ல மனதை உணர்ந்துகொண்டேன். ‘டைரக்டரை வரச்சொல்லுங்க சார், கதை கேட்கிறேன்' என்றேன். அதன்பின் ஏகப்பட்ட இயக்குநர்கள் என்னிடம் கதை சொன்னார்கள், அவர்களில் அர்ஜூன் சொன்ன கதையும் களமும் வித்தியாசமாக இருந்தது. இப்படித்தான் 'யங் மங் சங்' படம் தொடங்கியது. இதில் பிரபுதேவாவுக்கு அப்பாவாக தங்கர்பச்சான் நடிக்கிறார். இந்தப் பட ரிலீஸுக்குப்பிறகு அவர் ராஜ்கிரண் அளவுக்குப் பேசப்படுவார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமிமேனன் சிகிச்சை எடுத்து உடம்பை ஒல்லியாக்கி இருக்கிறார், படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. 

யங் மங் சங்

இவை தவிர சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 'ஓடி ஓடி உழைக்கணும்' படமும் எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். ஜாக்கிசானுடன் 'குங்பூ' படத்திலும், தனுஷூடன் 'அனேகன்' படத்திலும் நடித்த அமைரா தஸ்தூர், சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' டைரக்டர் மணிகண்டன் இயக்கி வருகிறார். சந்தானத்துடன் 'மொட்டை' ராஜேந்திரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, 'லொள்ளு சபா' சுவாமிநாதன் என்று ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்து வரும் இந்தப் படம் காமெடியும் ஆக்‌ஷனும் கலந்துகட்டி உருவாகி வருகிறது. இப்படி தயாரித்து வரும் மூன்று படங்களையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய தயாராகிவருகிறேன்” என்கிறார் சீனிவாசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!