Published:Updated:

திங்கள் வரை 'மெர்சல்' படக் காட்சிகளில் மாற்றமில்லை!

திங்கள் வரை 'மெர்சல்' படக் காட்சிகளில் மாற்றமில்லை!
திங்கள் வரை 'மெர்சல்' படக் காட்சிகளில் மாற்றமில்லை!

இயக்குநர் அட்லி எடுத்திருக்கும் திரைப்படம், 'மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படம், தீபாவளி அன்று ரிலீஸானது. இந்தப் படம், ரிலீஸாவதற்கு முன்பாகவே அதை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. 


ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 2014-ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம்  ஃபேக்டரி எனும் நிறுவனம் `மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவுசெய்ததால், `மெர்சல்’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  'மெர்சல்'  படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து,  இந்தப் படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்ட நிலையில், இதையெல்லாம் தாண்டி, 'மெர்சல்' திரைப்படம் வெளியானது.

 தற்போது, இந்தப் படத்தின் காட்சிகள் குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. அதாவது, மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார். '' ‘மெர்சல்' படத்திலிருந்து ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.  தமிழிசையைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணனும் 'மெர்சல்' படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால், படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால், ''வரும் திங்கள்கிழமை வரை ‘மெர்சல்’ திரைப்படக் காட்சிகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை'' என திரைப்படக் குழுவினரிடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.