Published:Updated:

’’கிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு என் பதில்..?!’’ - பிரியா பவானிசங்கர் கேண்டிட்

’’கிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு என் பதில்..?!’’ - பிரியா பவானிசங்கர் கேண்டிட்
’’கிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு என் பதில்..?!’’ - பிரியா பவானிசங்கர் கேண்டிட்

''என் வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக நடந்ததுதான். ஆனால், நடப்பவை எல்லாவற்றினாலும் மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றேன்'' என மகிழ்ச்சி பொங்கப் பேச ஆரம்பிக்கிறார், முதல் படத்திலேயே முத்திரை பதித்த 'மேயாதமான்' படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர். 

''அப்பா மயிலாடுதுறை, அம்மா பாண்டிச்சேரி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். இன்ஜினீயரிங் படித்தேன். காலேஜ் படிக்கும் போதிலிருந்தே எனக்கு மீடியா மேல் ஆர்வம் இருந்தது. அப்பா எனக்கு எப்போதுமே  ஃபுல் சப்போர்ட் பண்ணுவார். எந்த விஷயமாக இருந்தாலும், பாஸிட்டிவ், நெகட்டிவ் இதுதான்னு எடுத்துச்சொல்வார். அதனால் மீடியாவுக்கு வரும்போது வீட்டிலிருந்து எனக்கு எதிர்ப்பு எல்லாம் கிளம்பவில்லை. அதனால்தான் பார்ட் டைம்மாக மீடியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு, காலேஜ் முடித்தவுடன் ஃபுல் டைம் மீடியா வேலைதான்.  

தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் மீடியா வேலை போதும்னு தோணுச்சு. வேலையை விட்டுடலாம்னு நினைத்தபோதுதான் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் வாய்ப்பு வந்தது. அப்போது சீரியலில் நடிக்கும் ஐடியா எனக்குத் துளியும் இல்லை. அதனால், முதலில் மறுத்தேன். 

சீரியல் தரப்பிலிருந்து ''வெறும் பத்து நாள் மட்டும்தான் ஷூட்டிங். நீங்கதான் பண்ணணும்''னு சொன்னாங்க. சரி, பத்து நாள்தானேனு நடிக்க வந்தேன். அப்போ எனக்கு சீரியலும் பார்ட் டைம்தான். ஏன்னா, அந்த நேரத்தில் எம்.பி.ஏ படிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, கடைசியில் ஷூட்டிங் பத்து நாளையும் கடந்து இரண்டு வருடம் நடந்துச்சு.  

சீரியலில் நடிக்க வரும்போதே, 'ரெண்டு வருடத்துக்குப் பிறகு இந்தத் துறையில் இருக்கக் கூடாது'னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அதேமாதிரி இரண்டு வருடம் முடிந்ததும் சீரியலை விட்டு வந்துவிட்டேன். சீரியலை விட்டு நான் வந்தது வெளியே இருந்த ஆடியன்ஸூக்குதான் பெரிய ஷாக்கிங். ஏன்னா,  'நான் வெளிநாடு போகிறேன். திருமணம் நடக்கப் போகுது'னு வதந்தியைப் பரப்பி விட்டுட்டாங்க.

சீரியலில் நடிக்கும்போது, சினிமாவில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஏன்னா, இந்த சீரியல் பண்ணும் போதே என்னைத் தேடி நல்ல படங்களின் வாய்ப்பு எல்லாம் வந்தது. அதனால் வந்த வாய்ப்புகளைத் தவிர்த்தேன். அந்த நேரத்தில் சீரியலிருந்து முழுவதுமாக விலகி ஆறு மாதம் ஆகியிருந்தது. அந்த ஆறு மாத காலமும் நான் சும்மாதான் இருந்தேன். அந்த நேரத்தில் என்னைத் தேடி வந்த சில படங்களைத் திரையில் பார்த்தேன். 'நாம ஹீரோயினா நடிச்சியிருக்கலாமே'னு தோணுச்சு. ஏன்னா, சின்னத்திரையில் இருக்கும் பலர் பெரிய திரைக்கு முயற்சி பண்ணும்போது, நாம ஏன் வந்த வாய்ப்புகளை மறுக்கணும்? அதனால, சினிமாவிலும் நடிக்கலாம் என முடிவு செய்தேன்.

அப்போதுதான், 'மேயாதமான்' படத்தின் கதை என்னைத் தேடி வந்தது. படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் என்றதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. ஏன்னா, கார்த்திக் சுப்புராஜ் பெரிய இயக்குநர். நல்ல படங்களைத் தரக்கூடியவர். அவரே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, அதில் விஷயம் இல்லாமல் இருக்காது. தவிர, இயக்குநர் ரத்னகுமார் குறும்பட இயக்குநராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்படிப் பல பாஸிட்டிவ் பாயின்ட்ஸ் இருந்ததால், கதையைக் கேட்டதுமே சம்மதித்துவிட்டேன். ஷூட்டிங்கில் கார்த்திக் சுப்புராஜ் உள்பட யாரும் என்னைப் புதுமுக நடிகை மாதிரி நடத்தவில்லை. அதனால், எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் சூழல் இருந்தது'' என்றவரிடம், படத்தின் ஹீரோ வைபவ் பற்றிக் கேட்டேன்.

''எல்லோரும் வைபவ் ரொம்ப ஜாலியான டைப்னு நினைக்கிறாங்க. ஆனா, அவர் ரொம்ப அமைதியான ஆள். ஒருத்தரோட சகஜமா பேசவே அவருக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும். நான், விவேக் பிரசன்னா எல்லோரும் ஜாலியாகப் பேசிக்கிட்டு இருப்போம். வைபவ் ரொம்ப அமைதியாக இருப்பார்" என்றவரிடம், '' 'மேயாதமான்' படம் பார்த்துவிட்டு எந்தப் பிரபலம் பாராட்டினார்?'' என்று கேட்டால், பதறுகிறார்.

''படம் தீபாவளிக்கு ரிலீஸாகப் போகுதுனு தெரிந்தவுடன் ஒரு பதற்றம் ஏற்பட்டுவிட்டது. ரொம்ப பயந்துட்டேன். ஏனெனில், இந்தப் படம் நவம்பரில்தான் ரிலீஸ் எனச் சொல்லியிருந்தார்கள். ஆனால், 'மெர்சல்' வரும் போது நம்ம படம் ரிலீஸாகுதுனு சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ஆனால், இப்போது படத்தைப் பற்றி பாஸிட்டிவ் ரிசல்ட் வருகிறது. புதுசா இரண்டு படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். அந்தப் படத்தின் ஹீரோக்கள் எல்லாம் போன் பண்ணி வாழ்த்தினாங்க. 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் நாயகன் அமித் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனவுடன் பார்த்துவிட்டு விஷ் பண்ணினார். ஹாப்பியாக இருக்கேன்'' என்றவரிடம், 

'புதியதாக கமிட் ஆகியிருக்கும் படங்களைப் பற்றிக் கேட்டால், ''கண்டிப்பாகச் சொல்ல மாட்டேன், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். கமிட் ஆகியிருக்கும் படத்தின் ஹீரோ, இயக்குநர் எல்லோரும் ஏற்கெனவே ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான்'' என்று பொடி வைத்துப் பேசுகிறார் பிரியா.  

'மேயாதமான்' படத்தை மக்களுடன் திரையில் பார்த்தேன். ஏற்கெனவே என்னை எல்லோருக்கும் தெரியும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. இனி நான் நடிக்கப் போகும் படங்களையும் என் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி செலக்ட் பண்ணி நடிப்பேன். அதே நேரத்தில் ரொம்ப கிளாமராக நடிக்க மாட்டேன். என்னை ரசிகர்களுக்குப் பிடிக்கக் காரணமே நான் ஹோம்லியாக இருப்பதுதான்.  அதுனால கிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு சொல்ல என்கிட்ட இருக்கிற ஒரே பதில்...‘நோ’. நடிகர்களில் எனக்கு மாதவனைப் பிடிக்கும். அவரோடு சேர்ந்து நடிச்சா, நல்லா இருக்கும்" எனச் சிரிக்கிறார், பிரியா பவானி சங்கர்.