Published:Updated:

வேதாளம், தெறி, விவேகம், மெர்சல்..! - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்

வேதாளம், தெறி, விவேகம், மெர்சல்..! - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்
வேதாளம், தெறி, விவேகம், மெர்சல்..! - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்

இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது 'மெர்சல்'. இந்தப் படம் ரிலீஸானதில் இருந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச் ராஜா  மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், எதற்காக 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கமல் உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆளுக்கொரு திசையில் 'மெர்சல்' திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் '' அடேய் படத்துக்கு  நான்தான் டா எடிட்டர்''னு பதிவியிட்டிருக்கிறார். மெர்சல் சர்ச்சைகள் குறித்து அவருடன் பேசினேன். 

''அம்மா சென்னை, அப்பா கும்பகோணம். பிறந்தது சென்னை கல்யாணி ஹாஸ்பிஸ்டல்தான். பட், ஸ்கூல் படிச்சது எல்லாம் கும்பகோணம். அப்பாவுடைய பக்கம் பார்த்தால் மூன்று தலைமுறைகளாய்  மேடை இசைக்குழு நடத்திவரும் இசைக் குடும்பம். கலை என்பது என் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே எனக்குப் படிப்பை விடக் கலை மீது ஆர்வம் அதிகம். என்னை பத்தாவது படித்து முடித்தவுடனே சைன்ஸ் குரூப் படிக்கச் சொல்லிதான் சேர்த்தார்கள். பட், எனக்குப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. 

அதனாலேயே, காலேஜ் படிக்கும் போது சென்னையில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்தேன். அப்போதுதான் எனக்கு கெளதம் சார் பழக்கம் ஏற்பட்டது. காலேஜ் படிக்கும் போது ஏதாவது இன்டென்ஷிப் செய்யலாம்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் முடிவு செய்து கெளதம் மேனன் சாரை போய் பார்த்தோம். அப்போது 'வேட்டையாடு விளையாடு' ஷூட்டிங் போயிட்டு இருந்தது. அந்த நேரத்தில் எல்லோருடனும் கெளதம் வாசுதேவ் மேனன் சார் பேசும் போது '' ப்ரீ டைமில் என்ன செய்றீங்கனு'' கேட்டார். நான் உடனே, '' எனக்கு சாப்ட்வேர் நாலேஜ் இருக்கு. அதனால் ப்ரெண்ட்ஸோட ஷார்ட் ஃபிலிம் எல்லாம் எடிட் செய்வேன்'' னு சொன்னேன். 'ஓ அப்படியா, அப்போ நீ எடிட்டர் ஆண்டனிக்கிட்ட எடிட்டரா சேர்ந்துக்கோ’னு சொன்னார். அப்படிதான் எடிட்டர் ஆண்டனி அறிமுகம் கிடைத்தது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வரைக்கும் கெளதம் சார்கிட்டதான் இருந்தேன். 

அவரிடம்தான் எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். '' வேட்டையாடு விளையாடு' படத்தின் போது கமல் சாருடன் ஒரு சின்ன ஷாட்டில்கூட நடித்திருப்பேன். அப்படியே லைப் போயிட்டு இருந்தபோதுதான் 2011 ஆம் வருஷத்தில் 'கண்டேன்' படத்துக்கு முதல் முறையாய் எடிட்டர் ரூபனாய் அறிமுகமானேன்.  இப்போது 'மெர்சல்' வரைக்கும் முப்பது படம் பண்ணிட்டேன். இதுதான் என் சின்ன ப்ளாஷ் பேக்’’ என்றவரிடம் அட்லியின் முதல் அறிமுகம் பற்றிக் கேட்டோம்.

’’என்னுடைய முதல் ஹிட் திரைப்படம் 'ராஜா ராணி'தான். அதன் வெற்றியை என்னால் மறக்கவே முடியாது. எனக்கான ஒரு அங்கீகாரத்துக்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் 'ராஜா ராணி' வாய்ப்பு வந்தது. எப்போதும் கன்டென்ட்தான் ஜெயிக்கும். அதற்காகத் தான் நம்ம வேலைப் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 'ராஜா ராணி' படத்துக்காக மட்டும் வேலை பார்த்தேன். எனக்கான பெயரை இந்தப் படம்தான் வாங்கிக் கொடுத்தது. எத்தனைத் தெறி, வேதாளம் வந்தாலும் 'ராஜா ராணி' தான் ஃபர்ஸ்ட். அதற்கு அட்லிக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும். 

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்துக்கு நான் எடிட்டராக ஒர்க் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நான் எடிட் செய்து கொண்டிருந்த ஸ்டூடியோவில் அட்லியின் ஷார்ட் ஃபிலிம் டப்பிங் போயிட்டு இருந்தது. அட்லியை ஷங்கர் சாரின் உதவி இயக்குநராய் தெரியும். ஜட்ஸ்ட் ஹாய், பாய் சொல்லுற அளவுக்கு ஆன ஒரு ரிலேஷன்ஷிப்தான். 

அன்னைக்கு 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ட்ரெய்லர் ஒர்க் செய்து முடித்து அதை யாரிடமாவது போட்டு காட்ட வேண்டுமென்று யாராவது இருக்காங்களா என்று தேடி கொண்டிருந்த போது, அட்லி என் இடத்துக்கு ஹாய் சொல்வதற்காக வந்தார். அப்போது, அட்லியை கூப்பிட்டு உட்கார வைத்துப் படத்தின் ட்ரெய்லரை போட்டுக் காட்டினேன். 

அதைப் பார்த்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு அட்லி அந்த ட்ரெய்லரை காட்டினார். அப்போது அட்லி '' நான் படம் பண்ணினால், நீங்கதான் எடிட்டர்'' என்று சொன்னார். அப்படிதான் அட்லியின் அறிமுகம் மற்றும் 'ராஜா ராணி' தொடர்ந்து 'மெர்சல்' வரை வாய்ப்பு கிடைத்தது.  என் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்கான சுதந்திரத்தை அட்லி கொடுத்தார்’’.

’கெளதம் மேனன் படத்தில் எப்போது வொர்க் பண்ணப் போறீங்க’ என்றால், ’’எனக்கும் ஆசையிருக்கு. அவருடன் நிறைய சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கின்றேன். பட், எங்களுக்கான படத்தைப் பற்றி பேசியது இல்லை. என் படங்களை பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு பேசுவார். 'விவேகம்' படத்துக்காக செர்பியா சென்று விட்டு சென்னை வந்த போது ஒரே விமானத்தில்தான் இருவரும் வந்தோம். அப்போது நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்’’ என்றவர் தொடர்ந்தார்.

’’ 'மெர்சல்' படத்தில் நிறைய சீன்ஸ் எடிட் செய்வதற்கு இருந்தது. காதல், அப்பா, மாஸ் சீன்ஸ் என்று எல்லாமே. எனக்கு அப்பா விஜய் வெற்றி மாறன் சீன்ஸ் எடிட் செய்த போது ரொம்ப பிடித்திருந்தது. இந்தப் படத்தில் முதலில் எடிட் செய்தது அந்த சீன்ஸ்தான். எனக்குப் பிடித்த சீக்வென்ஸ் சீன்ஸூம் அதுதான்.  அந்த சீக்வென்ஸ் சீன்ஸ் எடிட் செய்வதற்கு நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். படத்தில் நிறைய கேரக்டர்ஸ், கன்டென்ட் இருந்தது. அது எல்லாத்தையும் ஒரு மூன்று மணி நேரத்துக்குள்ளே கொண்டு வரணும்னு நினைத்தபோது இதற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருந்தது. 

நிறைய காமெடி சீன்ஸ், லவ் சீன்ஸ் எல்லாம் எடிட் செய்து, பிறகு நேரம் அதிகமானதான் அதனையெல்லாம் எடிட் செய்தோம். பட், எடிட்டிங் பொருத்தவரைக்கும் எனக்கு நிறைய சுதந்திரத்தை அட்லி கொடுத்தார். சில சீன்ஸ் வேண்டும், வேண்டாம் என்று எங்களுக்குள் வாக்குவாதம் எல்லாம் நடக்கும். அதற்கான தேவை மற்றும் புரிதலை புரிந்து கொண்டு இருவரும் வேலைப் பார்த்தோம். படம் சென்சாருக்கு போறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ளேயே நிறையப் பேசி முடிவு செய்துதான் அனுப்பினோம்.’’

எடிட் செய்யும் போது சில காட்சிகள் இந்தளவுக்குச் சர்ச்சைக்குள்ளாகும்னு நினைத்தீர்களா?

’’இல்லை, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன்னா, படத்தில் சமூக தொடர்பான சில விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். நம்ம பாக்கும் போது நல்லதானே இருக்கிறது என்றுதான் தோன்றியது. தப்பாக எதுவும் தெரியவில்லை. அதையும் மீறி படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகுமா இல்லையா என்பதை நம்ம சொல்ல முடியாது. ஏன்னா, சென்சாருனு ஒரு விஷயம் இருக்கு. சென்சார் போர்ட்டில் சொன்ன சில விஷயங்களை நாங்களும் ஏத்துக்கிட்டுதான் சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். ஒரு தடவைக்கு மூன்று முறைப் பார்த்துத்தான் சென்சார் போர்ட் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அவங்களும் படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. இது எல்லாத்தையும் மீறி படம் ரிலீஸானதுக்கு பிறகு இப்படி சர்ச்சைக்குள்ளாகும் என்று நினைக்கவில்லை.’’

சர்ச்சை ஆனது எந்த மாதிரியான ஒரு ஃபீல்லை உங்களுக்கு கொடுத்திருக்கு?

’’உண்மையை சொல்லணும்னா, சினிமா ஒரு கலை. படத்தின் கன்டென்ட்டில் இருக்கக்கூடிய ஒரு டயலாக்கை ஒரு நடிகர் சொல்லியிருக்கிறார். அதற்காக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது தப்பு. கருத்து சுதந்திரம் என்பது எங்கயிருக்கு என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நம்ம வாழ்றதுக்கு நம்மதான் வரி கட்டுறோம். தேவையில்லாத விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கு. சினிமாவை ஒரு பிரச்னையாக எடுத்து வைத்துப் பேசுவது சரியில்லை. 

சில காட்சிகளை நீக்கச் சொல்வது வருத்தப்படக் கூடிய விஷயம்தான். ஹாலிவுட்டிலும் படங்கள் எடுக்குறாங்க. கவர்மெண்ட்யை டார்க்கெட் பண்ணிக்கூட காட்சிகள் வைக்குறாங்க. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சென்சார் போர்ட் அனுமதித்த ஒரு படத்தை பார்த்து சரியில்லைனு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.’’

'மெர்சல்' படத்தில் உங்கள் எடிட்டிங்யை பார்த்துவிட்டு விஜய் என்ன  சொன்னார்?

’’இந்தப் படத்தின் ஆடியோ லான்சின் போதுதான் விஜய்யை பார்த்தேன். அப்போதே என்னைப் பாராட்டினார். படத்தின் டீசர் வெளியான உடன் என்னைக் கூப்பிட்டு நல்லாயிருக்குனு சொன்னார். 'தெறி' படத்துக்காக எனக்கு இருந்த நேரம்  'மெர்சல்' படத்துக்காக இல்லை. அதனால், மெர்சல் டீசர்  மூன்று மணி நேரத்திலேயே ரெடி பண்ணினேன். டீசருக்கு ரொம்ப மெனக்கெட்டேன். டீசர் பார்த்தவுடன் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது. 

இந்தப் படத்தின் நீளம் எடிட்டிங் செய்யும் போது இதைவிட அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் சுருக்கி படத்துக்குத் தேவையான விஷயங்களை மட்டும்தான் கொடுத்தோம். அதே போல் தமிழ் சினிமாவில் பாடலுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்போம். ஒரு பாட்டுக்கு ஐந்து நிமிடம் என்று வைத்தால் கூட பாட்டுக்காக மட்டுமே அரைமணி நேரம் சென்று விடும். இதுதான் ஆங்கில படத்துக்கும், தமிழ்ப் படத்துக்கும் இருக்கிற வித்தியாசம். மாஸ் ஹீரோ படத்துக்காக சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் இந்தப் படத்தில் ஆக்டர்ஸ், காமெடியன்ஸ் என எல்லோரும் பெரிய ஆட்கள். எல்லோருக்கும் சமமான இடம் கொடுக்கணும். படத்திலும் நிறைய எமோஷன்ஸ் இருக்கு. அதனால் எல்லோவற்றையும் சேர்த்துக் கொடுக்கும் போது டைம் எடுக்கத்தான் செய்யும்.’’

மெர்சல் படத்தின் எடிட்டிங் போது எந்த இடத்திலாவது எமோஷனல் ஆகியிருக்கீங்களா?

''நிறையவே. பேஸிக்காகவே நான் ரொம்ப எமோஷனல் டைப். அதனால், இந்தப் படத்தின் எடிட்டிங் போது அந்த அனுபவம் நிறையவே இருந்தது. ப்ளாஷ்பேக் காட்சியை எடிட்டிங் செய்யும் போது என்னையே அறியாமல் எமோஷனல் ஆகி விட்டேன். கண்ணீல் இருந்து கண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. அட்லி படத்தில் எப்போதும் எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்தப் படத்தில் கேட்கவே வேண்டாம்''.

ட்விட்டரில் 'மெர்சல்' படத்துக்கு நான்தான் டா எடிட்டர் அப்படினு போட்டியிருந்த ட்விட் பற்றி?

’’அந்த ட்விட் கொஞ்சம் காமெடி டோனில்தான் போட்டிருந்தேன். அவங்க அவங்க வேலையை அவங்க பார்த்தால்தான் நன்றாகயிருக்கும். என் படத்துக்கு நான் தானே எடிட்டர். வரவங்க போறவங்க எல்லாம் எடிட் பண்ணிட்டு போறதுக்கு என் வேலை சும்மாயில்லை. இதற்காக முறையாக நான் பயிற்சி எடுத்து, படித்து, இத்தனை வருடம் உதவி எடிட்டராக இருந்து வந்திருக்கின்றேன். என் படத்தை என்னை எடிட் செய்ய விடவில்லை என்றால் எப்படி. 

நான் எப்படி ஜாலியான டைப் என்பது என்கூட இருக்குறவங்களுக்கு தெரியும். அதனால், ஒரு காமெடி டோனில்தான் போஸ்ட் பண்ணியிருக்கேனு தெரிந்து கொண்டு நிறையபேர் போன் பண்ணி பேசினார்கள். கஷ்டம் வரும் சூழ்நிலையில் கூட அதைச் சிரித்து கொண்டேதான் சமாளிப்பேன்.இதைப் பார்த்த எல்லோரும் சிரித்து கொண்டேதான் என்னிடம் பேசினார்கள். நம்மனால நாலு பேர் சந்தோஷமாகயிருந்தா நல்லதுதானே. இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடி கூட நிறைய பிரச்னைகள் இருந்தது. அப்போதும் கூட நாங்க யாரும் சோர்ந்து விடவில்லை. அட்லி இப்போதுகூட போன் செய்து பேசினார். சிரித்துக் கொண்டேதான் பேசினார். பிரச்னைகள் வரும் அதை எப்படி சமாளிக்கணும் அப்படிங்குறதுதான் விஷயம். படத்துல இருக்குற எமோஷனல் காட்சிகளுக்கே செம ரெஸ்பான்ஸ். ஆனா, அதுக்கும் மேல இருக்கிற பல காட்சிகளை நீளம் கருதி குறைச்சுட்டோம். அதுலாம் சீக்கிரமே ரிலீஸ் பண்றோம். அது இன்னும் மெர்சலா இருக்கும்!’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு