Published:Updated:

“நான் இறந்துட்டேனானு என்கிட்டயே விசாரிக்கிறாங்ப்பு!’’ - ‘திண்டுக்கல்’ லியோனி

“நான் இறந்துட்டேனானு என்கிட்டயே விசாரிக்கிறாங்ப்பு!’’ - ‘திண்டுக்கல்’ லியோனி
“நான் இறந்துட்டேனானு என்கிட்டயே விசாரிக்கிறாங்ப்பு!’’ - ‘திண்டுக்கல்’ லியோனி

பட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையாவும் திண்டுக்கல் லியோனியும்தான். குறிப்பாக லியோனியின் பேச்சுக்கள் கல் நெஞ்சுக்காரர்களையும் கலகலவென சிரிக்கவைக்கும் தன்மையுடையனவை. இப்போது பட்டிமன்றத்தை தாண்டியும் தி.மு.க பிரசார கூட்ட மேடையை அதகளப்படுத்திக்கொண்டு இருக்கிறார். பேரன், பேத்தியை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தவர் நம்மைப் பார்த்ததும அதே கலகல சிரிப்புடன் வரவேற்றார். அவரிடம் சினிமா, பட்டிமன்றம், இன்றைய அரசியல் சூழல்... குறித்து பேசியதில் இருந்து...

“இளமைப்பருவத்தில் லியோனி எப்படி இருந்தார்? தி.மு.கவின் மேல் எப்படி ஈர்ப்பு வந்தது?”

"திண்டுக்கல்தான் எனக்கு எல்லாமே. ஸ்கூல் பக்கத்துல உள்ள மாரியம்மன் கோவில்ல நிறைய படங்கள் போடுவாங்க. நான் மூணாங்ளாஸ் படிக்கும்போதே எம்.ஜி.ஆருடைய தீவிர ரசிகன். பசங்கக்கூட விளையாடுறது, படம் பாக்குறதுதான் எனக்கு பொழுதுபோக்கு. ஒவ்வொரு படத்தையும் அஞ்சாறு முறைக்கு மேல பார்த்துடுவேன். பிறகு, என் கேர்ள் ப்ரண்ட்ஸ் முன்னாடி அப்படியே நடிச்சு காமிப்பேன். அந்த சமயத்துல எங்க ஸ்கூல்ல நிறைய வாத்தியார்கள் தி.மு.க மேல ஈர்ப்பு கொண்டவங்களா இருந்தாங்க. அண்ணா இறந்தபோது எங்க வாத்தியார் ஒருத்தர் தேம்பி தேம்பி அழுததைப் பார்த்தபிறகுதான், ‘அண்ணானா யாரு, அவருடைய பின்னணி என்ன’னு தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். எங்க வாத்தியார்கள்ல பலர் அப்ப நெடுஞ்செழியன், அண்ணா குரல்கள்லதான் பாடம் எடுப்பாங்க. அப்படி அவங்க அன்னைக்கு எடுத்த பாடங்கள் எல்லாம் இன்னைக்குவரை மனப்பாடமா இருக்கு. இப்படி ஹைஸ்கூல படிக்கிற நேரத்துலதான் தி.மு.க மேல எனக்கு ஈர்ப்பு வந்துச்சு."

“கருணாநிதியை முதன்முதல்ல எப்ப சந்திச்சீங்க?”

“எனக்கு கலைஞரைப் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஒரு முறை திருநெல்வேலிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அப்ப அந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்றவர், அந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் எடுத்துகிட்டு ஓடிட்டார். அதனால், வந்த மக்களெல்லாம் கோவப்பட்டு பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. மறுநாள் நியூஸ் பேப்பர்கள்ல, 'லியோனி தப்பி ஓட்டம்'னு செய்தி வந்திடுச்சு. அப்ப எனக்கு ஒரு ஃபோன். எதிர்முனையில், 'வணக்கம் லியோனி. நான் கருணாநிதி பேசுறேன்'னு ஒரு குரல். அந்த சந்தோஷத்தை வார்த்தைகள்ல சொல்லமுடியாது தம்பி. அவ்வளவு சந்தோஷம். அதுதான் முதல் உரையாடல். பிறகு ஒருமுறை, திருச்சி ரயில் நிலையத்துல ரயிலுக்காக காத்திருந்தேன். அப்ப, ‘கலைஞர் வர்றார்... கலைஞர் வர்றார்’னு பயங்கர பரபரப்பு. மக்களை கொஞ்சம் ஒதுக்கி ஓரமா நிறுத்தினாங்க. அந்த கூட்டத்துல நின்ன என்னைப் பார்த்துட்டு திருச்சி சிவாகிட்ட சொல்லி என்னை கூப்பிப்பிட்டு அனுப்பினார். அப்போதான் அவரை முதன்முதலா நேர்ல சந்திச்சேன். அவர் என்கிட்ட பேசிட்டு கிளம்பினதும் திருச்சி கலெக்டர் என்கிட்ட, 'நீங்கதான் அடுத்த திண்டுக்கல் எம்.எல்.ஏ'னு சொன்னார். அவரை முதல்முறை நேர்ல பார்த்ததும் இன்னும் நிறையமுறை அவரை பார்க்கணும், பேசணும்னு தோணிட்டே இருந்துச்சு. அதெல்லாம் மறக்கமுடியாத அனுபவம்.”

“அவரிடம் வாங்கிய மறக்க முடியாத பாராட்டுக்கள்...”

"ஒரு நாள் திண்டுக்கல் கலெக்டர்கிட்ட இருந்து ஒரு ஃபோன். ‘உங்க நிகழ்ச்சிகள் எல்லாம் முதல்வருக்கு பிடிக்குமாம். நீங்க பேசின எல்லா நிகழ்ச்சிகளோட கேசட்டும் எங்க கிடைக்கும்’னு தலைமைச் செயலகத்தில் இருந்து கேட்கிறாங்க’னு சொன்னார். அவ்வளவு பரபரப்பான ஆட்சிப் பணிகளுக்கிடையிலயும் நம்ம பேச்சையும் கேட்க அவருக்கு நேரம் இருக்குனு நினைக்கிறப்ப எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அதுதான் கலைஞர். பிறகு நான் கலைஞரோட பவள விழாவில்தான் முதன்முதலா தி.மு.க மேடையில் பேசினேன். அந்த நிகழ்ச்சிக்கு கலைஞரும் வருவார்னு சொன்னாங்க. ஆனா வரலை. பிறகு நிகழ்ச்சியை ஆரம்பிக்க சொல்லிட்டாங்க. நிகழ்ச்சி முடிஞ்சபிறகு பக்கத்து ரூமுக்கு போனா அங்கே கலைஞர், வைரமுத்து, துரை முருகன் எல்லாரும் உட்கார்ந்திருந்தாங்க. என்னைப் பார்த்ததும், 'நான் அப்பவே வந்துட்டேன்யா. நீ ரொம்ப அழகா பேசிட்டு இருந்த. நான் நடுவில வந்தா நிகழ்ச்சிக்கு இடையூறா இருக்குமேன்னுதான் இங்கேயே உட்கார்ந்து நீ பேசுறதை கேட்டுட்டு இருந்தேன்'னு சொல்லி எழுந்து என் கன்னத்துல முத்தம் கொடுத்ததார். இதைவிட மேலான பாராட்டு என்ன இருக்க முடியும் சொல்லுங்க?”

“அவரை சமீபத்தில் எப்ப சந்திச்சீங்க?”

"நான் மாசம் ஒரு முறை கோபாலபுரம்போய் அவரைப் பார்த்திட்டு வந்திடுவேன். கடைசியா நான் போனப்ப தன் பேரனைப் பார்த்து (அருள்நிதியின் மகன்) சிரிச்சிட்டு இருந்தார். அப்ப என் மனைவி அதை தன்போன்ல போட்டோ எடுத்தாங்க. இதுவரை அந்தப் போட்டோ என்கிட்டதான் இருக்கு. அவர் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டே இருந்தேன். புறப்படும்போது,  'நான் கிளம்புறேன்யா’னு சொன்னப்ப அவர் கண்கள்ல கண்ணீர் தேங்கி நின்னுச்சு. அவர் என் மேலே எவ்வளவு ப்ரியம் வெச்சிருக்கார்னு என்னால உணர முடிஞ்சுது."

“ஓய்வில் இருந்த கருணாநிதி, உடல்நலம் தேறி இப்ப முரசொலி அலுவலகத்துக்கு வந்தார். அடுத்து கட்சிப் பணியில் பரபரப்பா ஈடுபடுவாரா?”

“கண்டிப்பா. அவர் முரசொலி அலுவலகம் வந்திருக்கார்ங்கிற செய்தியை கேட்டதும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இப்படி அவர் கண்டிப்பா மீண்டு எழுந்து வருவார்னு நான் எதிர்ப்பார்த்தேன். இப்போ தலைவர் பேக் டு ஃபார்ம். நான் அவரைப் பார்க்கும்போது அவர் கண்ணில் ஒரு ஏக்கம் இருந்துச்சு. மீண்டும் மேடை ஏறுவார். 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே...'னு அவருடைய கணிர் குரலை மக்கள் சீக்கிரம் கேட்பாங்க."

“கொஞ்சம் சினிமா பேசுவோம். ‘மெர்சல்’ படத்தில் வந்த ஜி.எஸ்.டி தொடபான வசனத்தை நீக்கணும்னு பாஜகவை சேர்ந்தவங்க சொல்றாங்களே?”

“ 'கத்தி' படத்துலகூட ‘காத்துல ஊழல் பண்றாங்க‘னு 2ஜி பற்றி விஜய் பேசினார். விவசாயிகள் சம்பந்தமான படத்துல இது ஏன்னு கேள்வி கேட்கலாம். ஆனா, படத்துல வர்றதை பொதுவா பேசுறாங்கன்னுதான் எடுத்துக்கணும். உண்மையில், 'கத்தி' படம் வெளியவர பிரச்சனை ஆனப்ப, ‘சில விஷயங்களை சேர்த்தாதான் படம் வெளியாகும்’னு ஜெயலலிதா சொன்னதால் தான் இந்த வசனன் சேர்க்கப்பட்டுச்சுனு நான் கேள்விப்பட்டு இருக்கேன். தூய்மை இந்தியா திட்டத்துல, ‘கோவிலுக்கு பதிலா கழிவறை கட்டணும்’னு மோடியே சொன்னது தப்பில்லை, ஆனா, 'மெர்சல்' படத்துல கோவிலுக்கு பதிலா ஆஸ்பத்திரி கட்டணும்னு சொன்னா தப்பா? நடிகர்கள், இயக்குனர்களுக்கு சமூகம் தொடர்பான கருத்துக்கள் சொல்ல உரிமை இருக்கு. 'கபாலி', 'ஜோக்கர்' படங்கள்ல மிகப்பெரிய அரசியல் பேசப்பட்டிருக்கு. அப்பல்லாம் எதுவும் சொல்லாம இப்ப எதிர்க்குறாங்க. இந்தப் படத்துல காட்சிகள் நீக்கப்பட்டால், முற்போக்கு கருத்துக்கள் இனி சினிமாவில் சொல்லக்கூடாது’ என்ற சூழல் ஏற்படும்.”

“ஒரு படத்தில் நடிச்சீங்க. பிறகு உங்களை சினிமாவில் பார்க்கவே முடியலையே ஏன்?”

" 'கங்கா கெளரி' படத்துக்குப் பிற பல வாய்ப்புகள் வந்துச்சு. 'சிவாஜி ' படத்துல ஸ்ரேயாவுக்கு அப்பா ரோல்ல நடிக்க ஷங்கர் சார் என்னை போன்ல கூப்பிட்டு சொன்னார். அட்வான்ஸ்கூட வந்திடுச்சு. ஆனா, நான்தான் நடிக்கலைனு சொல்லிட்டேன். ஒரேஒரு சீனுக்கு அன்னைக்கு முழுக்க அதே காஸ்ட்யூமோட உட்கார்ந்திருக்கணும். ஒவ்வொரு ஷாட்டும் ஓகே ஆகுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். நான் இன்ஸ்டன்ட் ரிப்ளை வரணும்னு எதிர்ப்பார்ப்பேன். ஆனா, அது சினிமாவுல லேட் ஆகும். இப்போ வடிவேலு போன் பண்ணி ஒரு படம் பண்ணலாம்னு சொல்லிருகார். அவருக்கு அப்பாவா நடிக்கணும்னு சொன்னார். அவருக்காக நடிக்க ஒப்புக்கிட்டேன்."

“இன்னைக்கு சினிமாவில் வர்ற நகைச்சுவை காட்சிகள் எப்படி இருக்கு?”

" 'மொக்கை', 'ஓட்றது'னு சொல்வாங்கள்ல அதுதான் இப்ப இருக்கும் நகைச்சுவை. முட்டாள்த்தனமா பேசினா அது காமெடியாகுது. அப்போ இருந்த மாதிரி இப்போ இல்லை. வடிவேலுவோட எல்லாம் முடிஞ்சுது. சந்தானம் ஒரு புது ட்ராக்ல போனார். இப்ப அவரும் ஹீரோவாகிட்டார். ஒரு ஹீரொக்கூட இருந்து முட்டாள்த்தனமா பேசுறது மட்டும்தான் இன்னைக்கு உள்ள சினிமா காமெடி. அந்த காமெடியைப் பற்ற சொல்ல எதுவும் இல்லை.”

“பட்டிமன்றம் அன்னைக்கும் இன்னைக்கும் எப்படி மாறியிருக்குனு நினைக்குறீங்க?”

"அப்போதெல்லாம் புராண தலைப்புகளை வெச்சு பட்டிமன்றம் நடக்கும். போகப்போக சமூகம் சார்ந்த தலைப்புகளா மாறிச்சு. இப்போ தலயா தளபதியானு பட்டிமன்றம் வைக்குமளவுக்கு போயிட்டு இருக்கு. நல்ல பொழுதுபோக்காவும் சிந்திக்கிற மாதிரியும் ஆரம்பிச்ச பட்டிமன்றத்துல இப்போ இளைஞர்களும் பள்ளி குழந்தைகளும்தான் அதிகமா பேசுறாங்க. பாட்டுமன்றமாக வும் மாறி அது இன்னைக்கு வேற லெவலில் போயிட்டு இருக்கு."

“உங்க குடும்பத்தைப்பற்றி சொல்லுங்க?”

"இன்னும் திண்டுக்கல்லதான் இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையன்கள். மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணிக்கொடுத்து செட்டில் பண்ணிட்டேன். மூணு பேரக்குழந்தைகள். இவங்க ரெண்டு பேருக்கும் தன்மானம், தமிழரசினு கலைஞர்தான் பெயர்வெச்சார்" என்றபடி பேரக்குழந்தைகளை கட்டியணைத்துக்கொள்கிறார். 

“நீங்க இறந்துட்டதா அடிக்கடி செய்தி பரவுதே...”

"இந்தமாதிரி செய்தி முதல் முறை வந்தப்ப அதிர்ச்சியா இருந்துச்சு, அப்புறம் அதுவே பழகிடுச்சு. அப்படி செய்தி பரவுறதுக்கு காரணம் மேடைகள்ல நான் பேசுற பேச்சுக்கள்தான். ஒரு முறை கலைஞர் பற்றிய வதந்தி பரவிட்டு இருந்துச்சு. அப்ப, ‘இப்படி வதந்தி பரவ பரவத்தான் அவர் இன்னும் பல காலம் நல்லா இருப்பார்’னு சொல்லி மேடையில் இருந்து கீழே இறங்கினா, நான் இறந்துட்டேன்ங்கிற செய்தி எனக்கே வருது. ஒரு சிலர் வீட்டுக்கே வந்துட்டாங்க. வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ போனா, நான் உயிரோட இருக்கேனானு பாக்குறதுக்காகவே நிறைய மக்கள் வர்றாங்க. அந்தவகையில் இந்த வதந்தி நல்லது.”