Election bannerElection banner
Published:Updated:

“ஹேய்... நிஜத்திலும் நான் வக்கீல்தான்..!’’ - பெர்சனல் வித் ‘யாஞ்சி’ ஷ்ரத்தா

“ஹேய்... நிஜத்திலும் நான் வக்கீல்தான்..!’’ - பெர்சனல் வித் ‘யாஞ்சி’ ஷ்ரத்தா
“ஹேய்... நிஜத்திலும் நான் வக்கீல்தான்..!’’ - பெர்சனல் வித் ‘யாஞ்சி’ ஷ்ரத்தா

“ஹேய்... நிஜத்திலும் நான் வக்கீல்தான்..!’’ - பெர்சனல் வித் ‘யாஞ்சி’ ஷ்ரத்தா

“நான் ஒரு நடிகைன்னு ஒருபோதும் உணர்ந்ததே இல்ல. ஒரு சாதாரண பெண்ணா, மனிதாபிமான குணங்கள் மிக்க ஒரு 'ஃபீல் குட்' பர்சனாலிட்டியா இருந்தாலே போதும்னு நினைக்குறது உண்டு. நான் சினிமாவுல வர்றதுக்கு முன்னாடி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்தேன். அப்போ நான் நடிச்ச ஒவ்வொரு மேடையும் எனக்கு நிறையவே கத்துக்கொடுத்துருக்கு. நான் என்னோட நடிப்புல மட்டும் கவனம் செலுத்தாம, மத்தவங்க நடிக்கிறதைப் பார்த்தும் நடிப்போட நுணுக்கங்களை நிறைய கத்துக்கிட்டேன். நடிப்பைத் தவிர எனக்கே எனக்கான நிறைய ஆசைகளை லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன். அதுல முக்கியமான ஒன்னு, என்னோட மேடை நாடகத்துக்கான ஸ்கிரிப்ட். அதுல 'தி பெஸ்ட்' நடிகர்களை நடிக்க வச்சு என்னோட டைரக்ஷன்ல அந்த ஸ்கிரிப்டை எப்படியாச்சும் மேடையில ஏத்தீரணும். நடிகர்களோட திறமையையும், என்னோட திறமையையும் சேர்த்து இந்த உலகத்துக்கு காட்டணும். இப்போ கொஞ்சம் படத்துல பிஸியா இருக்கேன். ஸோ, என்னோட படம் இயக்குற ஆசை தள்ளிப் போயிட்டே இருக்கு. இருந்தாலும் கூடிய சீக்கிரம் இதை நிறைவேத்தி எல்லாருக்கு குட் நியூஸ் சொல்றேன் ஜி"னு தன்னோட குட்டிக் குட்டி ஆசையை குழந்தைத் தனத்தோடு கொஞ்சுன யாஞ்சி கிட்ட சில பல பர்சனல் கேள்விகளோட தொடங்கினோம்.

“ஏன் சினிமாவை தேர்ந்தெடுத்தீங்க?"

“சினிமா என்ட்ரி கிடைக்குறதுக்கு முன்னாடி நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனி வக்கீலா இருந்தேன். எனக்கு என்னோட வேலை சுத்தமா பிடிக்கல. ஒரு ஆத்ம திருப்தியே இல்லன்றத உணர்ந்தேன். எனக்கு இரண்டாவது வாய்ப்பாக 'தியேட்டர் ஆர்டிஸ்ட்'ன்ற தகுதி இருந்துச்சு. என்னைக்காவது ஒருநாள் என்னோட வேலைய விட்டுட்டு நடிக்க போகணும்கிற ப்ளான்லதான் இருந்தேன். அப்படி வேலைய விடப்போறேன்னு நினைக்குறது வேணும்னா  ஈஸியா இருக்கலாம். ஆனா, செய்யுறது ரொம்பக் கஷ்டம். அந்த கஷ்டத்தை செஞ்சேன். வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தேன். இப்போதான் ஆத்ம திருப்தியோட வேலை பார்க்க முடியுது."

“ 'காற்று வெளியிடை' படத்துல மணிரத்னம் உங்களோட நடிப்பை பாத்துட்டு என்ன சொன்னார்?"

“மொதல்ல அந்த படத்துல நடிக்கவே ரொம்ப யோசிச்சேன். ஏன்னா, சில படங்கள்ல ஹீரோயின் ரோல்ல நடிச்சுட்டு, இப்போ கேமியோ ரோல் பண்ணா, 'இந்த பொண்ணுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கல. அதனாலதான் இந்த மாதிரியான சின்ன ரோல்ல நடிக்கிறாங்கனு' மக்கள் நினைப்பார்களோனு ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு. இருந்தாலும், மணிரத்னம் சாரை இம்ப்ரெஸ் பண்றதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்புன்னு தோணுச்சு. அவரு இயல்பாகவே எதையும் பெருசா வெளிப்படுத்த மாட்டாரு. ஷாட் நடிச்சு முடுச்சதுக்கு அப்பறமும் கூட அப்படித்தான் இருந்தாரு. டேக் ஓகேவான்னு சாரை ஒரு தடவைப் பார்த்தேன். உடனே அவரும் என்னை பார்த்து சிரிச்சாரு. அவ்ளோதான் 'டேக் ஓகே' ஆயிடுச்சு. அவரோட அந்த சிரிப்புல இருந்தே புரிஞ்சுக்கணும் நம்ம நல்லாத்தான் நடிச்சுருக்கோம்னு."

“அந்தப் படத்தைத் தவிர வேற எந்த படத்துக்கும் ஏன் டப்பிங் பண்ணல?"

“ஏன்னா.. காற்று வெளியிடைல நான் தமிழ் பேசல. அதுல ரெண்டு மூணு வார்த்தைதான் தமிழ்ல வரும். அதுனால டப்பிங் ரொம்ப ஈஸியா இருந்துச்சு. 'விக்ரம் வேதா' படத்துக்கும் டப்பிங் பண்ணனும்கிற என்னோட ஆசையை  புஷ்கர் காயத்ரி கிட்ட சொன்னேன். அவங்களும் என்ன வச்சு வாய்ஸ் டெஸ்டெல்லாம் எடுத்தாங்க. ஆனா எனக்குதான் தமிழ் உச்சரிப்பு இன்னும் சரியா வரல. குறிப்பா லோக்கல் பாஷைய என்னால பேச முடியல. ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' மாதிரி ஒருநாள் நான் தமிழ் கத்துகிறதுக்கான பலன் வரும். அப்போ கண்டிப்பா டப்பிங் பண்ணுவேன்"

“சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் நீங்க தொடர்ந்து வேற வேற இடத்துக்கு ட்ராவல் பண்ணிட்டே இருக்கீங்களே...”

“அது எப்படி உங்களுக்கு தெரியும்? என்னோட அப்பா ஆர்மியில இருந்ததுனால இந்திய முழுக்க வேற வேற இடங்கள்ல இடமாற்றம் கிடைச்சது. எந்த இடத்துலயும் ரெண்டு வருஷத்துக்கு மேல இருந்ததே  கிடையாது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகான்ட், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, அஸ்ஸாம், தெலங்கானா என பல  இடங்கள்  சார்ந்துதான் என்னோட சின்ன வயசு அழகான நினைவுகள் நிறைந்து இருக்கு. நிறைய புதுசு புதுசா ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. எனக்கு நிரந்தரமான ஃப்ரெண்ட்ஸ் இல்லையேன்ற சின்ன வருத்தம் இருந்தாலும், ஒரு ஆல் இந்தியா டூர் போனா தங்குறதுக்கு ரூம் புக் பண்ணனும்கிற அவசியமே இல்ல. அந்த அளவுக்கு எந்த ஊரு போனாலும் எனக்கு நண்பர்கள் அதிகம்ன்ற சந்தோசமே போதும்."

ரிச்சி படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி அந்த படத்தோட ஒரிஜினல் படமான ‘உள்ளிட்டவரு கண்டந்தே'கிற கன்னட படத்தை பார்த்தீங்களா? அந்த ஹீரோயின் நடிச்ச மாதிரியே இதுலயும் நீங்க நடிச்சுருக்கீங்களா?" 

“அந்த கன்னட படத்தை நான் பார்க்கவே கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். ஏன்னா அந்த படத்தை பார்த்தேன்னா நானும் அதே மாதிரியான நடிப்பைதான் ஸ்க்ரீன்ல காட்ட வேண்டியது வரும். நான் என்னை மாதிரி நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். மத்தவங்கள பின்பற்ற வேண்டாம்னு நெனச்சேன். பட ஷூட்டிங் முடுஞ்சத்துக்கு அப்பறம்தான் 'உள்ளிட்டவரு கண்டந்தே' படத்தை பார்த்தேன். அதுல அவங்களோட  நடிப்பும் என்னோட நடிப்பும் வேற வேற மாதிரி இருந்துச்சு. ஸ்கிரிப்ட்ல கூட  சில  மாற்றங்கள் இருந்துச்சு. நான் இந்த படத்துல ஒரு க்ரைம் ரிப்போர்ட்டர் ரோல் பண்ணியிருக்கேன். மணப்பாடுல பொறந்து வளர்ந்த பொண்ணு, சென்னைல வேலைக்கு வந்துருக்கு. தவிர, ரிச்சின்ற கேரக்டர் நிவின் பாலிதான். படத்துல ஒரு வாய்ஸ் ஓவர் கூடவே வரும். அதுல ரிச்சியோட வாழ்க்கை வரலாறை கதாநாயகியான நான்தான் சொல்லிட்டே  வருவேன். ஸோ, நீங்க வேற மாதிரியான தமிழ் ரிச்சிய இந்த படத்துல பார்க்கலாம்னு நெனக்கிறேன்."

“நீங்க ‘நந்திதா தாஸ்’ மாதிரி இருக்கீங்கன்னு சில பேர் சொல்லிருக்காங்களாமே... உண்மையா?”

“ஆமா, அவங்க அப்படி சொல்லும்போது எனக்கு தலை கால் புரியாது. அவங்க ரொம்ப அழகு, நடிப்பு திறமை ரொம்ப அதிகம். நிஜ வாழ்க்கையிலும் அவங்க ரொம்ப பொறுமைசாலினு கேள்விப்பட்ருக்கேன். அவங்களோட  என்னை ஒப்பிட்டு பேசுறது எனக்கு சந்தோசம்தான். சில நேரங்கள்ல 'ரசிகர்கள் நம்மள பத்தி அதிகமா எடை போட்டு வச்சுருக்காங்க. ’Ways to go shraddha'னு மனசுல சொல்லிக்குவேன்."

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு