Published:Updated:

‘25 வருசம் முன்னாடி சக்தி சொன்னாரு... நம்ம பயக இன்னும் வரவே இல்லையே!’ #25YearsOfThevarMagan

‘25 வருசம் முன்னாடி சக்தி சொன்னாரு... நம்ம பயக இன்னும் வரவே இல்லையே!’ #25YearsOfThevarMagan
‘25 வருசம் முன்னாடி சக்தி சொன்னாரு... நம்ம பயக இன்னும் வரவே இல்லையே!’ #25YearsOfThevarMagan

‘25 வருசம் முன்னாடி சக்தி சொன்னாரு... நம்ம பயக இன்னும் வரவே இல்லையே!’ #25YearsOfThevarMagan

'தேவர் மகன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது. கொஞ்சம் பிரமிப்புதான். 1992-ல் வெளியான இந்தப் படம் சமீபத்தில் வெளியான படம் போன்ற பிம்பத்தைக் கொடுப்பதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அதில் முக்கியமானது, இதுபோன்ற ஒரு முழுமையான படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது என்பதுதான். 'அந்தப் படம் இல்லையா, இந்தப் படம் இல்லையா?' எனச் சீற்றமான கேள்விகள் உங்களுக்குத் தோன்றாமல் இருக்காது. நான் சொல்வது, எல்லா வகையிலும் தன்னளவில் நிறைவு கொண்ட படம் 'தேவர் மகன்' போல வேறில்லை. அது கமல் உருவாக்கிய படங்களாக இருந்தாலும்கூட! சென்டர் வைத்து அளக்கிற எந்த ஒரு பிரிவுக்கும் இடம் கொடுக்காமல், அன்றும் இன்றும் ரசிக்கும்படியாக உருவான வெகுசில தமிழ்ப்படங்களில் 'தேவர் மகன்' படமும் ஒன்று.

`காட் ஃபாதர்' இதனுடைய காரணமாய் இருக்கலாம். உலகம் முழுக்க அந்தக் கதையைப் பல்வேறு கோணங்களில் சொல்லியிருக்கிறார்கள். மிகப் பெரிய ஜாம்பவான்களும் அதில் அடக்கம். தமிழில் 'நாயகனை'ப் போல இந்தியாவிலும் வரிசை கட்டி வெவ்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அனந்து எழுத வேண்டிய திரைக்கதையை அவருக்கு வசதிப்படாததால் கமல் எழுதினார் என்று படித்திருக்கிறேன். இந்த மாதிரி செய்திகளுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று தெரியாது. ஆனால், தமிழில் முற்றிலும் புதிதான ஓர் எழுத்து அறிமுகமாயிற்று. அது நிலவிக் கொண்டிருந்தவற்றை கடந்தது. உதாரணமாய் அப்போது எழுதியவாறு இருந்த சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் இந்த அளவிற்கு உளவியல் அணுகல்களை வசனங்களில் ஒருபோதும் நிகழ்த்தியதில்லை.   

ஒரு கதையை எப்படிச் சொல்வது என்று தேர்ந்து கொண்டு திட்டமிட்டு காட்சிகளைச் சங்கிலி கோர்ப்பது திரைக்கதை என்று சொல்லலாமா... சொல்லலாம். அது வெறும் சம்பவங்களை வரிசைப்படுத்துவது இல்லை என்பது தெரியாததால் நாம் நூற்றுக்கணக்கான மூளை வளர்ச்சியற்ற படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். திரைக்கதை, நல்ல திரைக்கதை ஒரு நாவல் எழுதுவதை விடவும் சிரமமானது. ரசிகர்கள் முன்னே நேரடியாய் நிகழ்த்தப்படுகிற சினிமா மனங்களின் உளவியலை அறிந்திருக்க வேண்டும். சிறு சிறு ஆச்சர்யங்களின் தொகுப்பாக வேண்டும். அடுத்த காட்சிக்கு இந்தக் காட்சி உத்திரவாதம் தர வேண்டும். ஒரு காட்சியின் மையம் எதுவென்பதை அலட்டாமல் நகர்த்திச்செல்ல வேண்டும். இது எல்லாம் மட்டுமல்ல, இவற்றைத் தாண்டியும் 'தேவர் மகனி'ல் மாயாஜாலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கேரக்டரும் ஒரு சில கணங்களிலேயே ஒளிரத் தொடங்கி, வாழ்ந்து அனைவரும் திருப்தியுறும் வண்ணம் நிறைவு பெறுவது திரைக்கதையால்தான். கமல் அதன் படைப்பாளி என்பது பெருமைகொள்ள வேண்டியது என்று நினைக்கிறேன்.

படம் பார்த்தவர்கள் ஒரு கணம் பெரிய தேவரை யோசித்துப் பாருங்கள். மாயனை யோசித்துப் பாருங்கள். 'இந்தக் கொஞ்ச நாள்ல எங்க போயிட்டான் என் சக்தி' என்று விதும்புகிற பானுமதி, 'தூங்குவதற்கு பாட்டு பாடவா' என்று கேட்கிற மறக்க முடியாத பஞ்சவர்ணம். ஒரு கையை இழந்து விட்டு அலைகிற இசக்கி. அண்ணி, சின்ன தேவர், அவருடைய பேரன்களான இரட்டையர் என்று யாரைச் சொல்லாமல் விடுவது. இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நல்ல நடிகர், நடிகைகள்தான். ஆனால், அவர்களுடைய கண்கள்கூட வேறு மாதிரி பார்த்தன. அவர்களுடைய முகங்களில் வெளிச்சம் எதிரொளிக்கவில்லை. அவர்கள் நம்மைப் போலவே பேசினார்கள். ஓர் அசலான மனிதர் அவமானப்பட்டது நமக்குச் சகிக்கவில்லை. காதலின் குதூகலமும் காதலின் நெஞ்சு கிழிக்கும் வலியும் நமக்கு எக்காலத்திலோ தெரிந்தார்போல இருக்கிறது. கவனித்து இருந்தீர்களா, எப்பவோ பழைய படங்களில் எல்லாம் நடித்த ஒரு கள்ளபார்ட் நடராஜன் தனது சிறுமைக்காகச் சீறும்போது எனக்கெல்லாம் அது ஒரு திடுக்கிடலாகவே இருந்தது. இவை யாவும் அந்தத் திரைக்கதையின் விளைவுகள்.

ரேவதி நன்றாக நடிப்பவர் என்பது தெரிந்தது. கௌதமியை வியந்து கொண்டினார்கள். எடுத்த உடன் தூவலூர் புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேருகிற சக்தி இம்மீடியட்டாய் டப்பாங்குத்து போடாமல் படிப்படியாய் தனது அசைவுகளை வளர்த்துக் கொண்டு போகும் போதே இது வேறு படம் என்று புரிந்து விடும். இதற்கு வேறு நிறத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். படத்தின் இயக்குநர் பரதன். அவர் தனது 50 படங்களை 50 விதமாய் செய்து பார்த்தவர்.  

ஒரு காட்சியை அதன் வீரியத்துக்குப் பிரித்தோ பிரிக்காமலோ சொல்லி அதன் நாடகத்துக்குச் சுவை கூட்டுபவர். அவருக்கு சினிமா தெரியும் என்று சொல்லுவதை உங்களால் எவ்வளவு தீவிரமாய் எடுத்துக்கொள்ள முடியும் என்று பார்க்கலாம். அவரது கண்களால் பார்க்கப்பட்டு அமைகிற காட்சி சோடை போக வாய்ப்பில்லை. பரதன் ஏற்கெனவே தமிழில் ஓரிரு படங்கள் செய்திருந்தார். 'ஆவாரம் பூ' தனித்தன்மையைக் காட்டியிருந்தது. 'தேவர் மகனி'ல் அவர் இன்னும் தன்னை விரிவாய் வைத்தார். இன்றும் அவரது திரை மொழியின் வீச்சு அப்படத்தின் உபரிக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. படத்தின் உயிராய் இருந்த அத்தனை டெக்னீஷியன்களையும் நான் அவரது கண்களாகவே நினைத்துக் கொள்கிறேன். எதைச் சொல்லி எதைச் சொல்லாமல் தவற விட்டிருந்தாலும் ராஜாவைப் பற்றி சொல்லாமல் இந்தக் கட்டுரை முடிவடைய முடியாது. ஏனெனில் இந்தப் படத்தை முழுமையாய் நிறைவு செய்தவர் அவர்.

பேண்டசியான ஒரு ஸ்ரீராமுக்கு கை தட்டுவார்கள். அவர் இந்தப் படத்திற்கு வேண்டி அணிந்த சிறகுகள் வேறு.

படத்தின் கதைச்சுருக்கம் இங்கே தேவையில்லை. பார்த்தவர்களுக்கும், பார்க்கப் போகிறவர்களுக்கும் அது தேவையே கிடையாது என்று நினைக்கிறேன். இது அணுஅணுவாய் நம்முள் எடுத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய ஒரு நிகழ்வு. பார்க்கத் தொடங்கி விட்டால் ஒரு சிபாரிசுக்கும் அவசியம் வேண்டியிருக்காது. அதைப் போலவே புரளி கிளப்பி அவதூறு பேசுகிறவர் பற்றியும் சொல்லாமலே நகர்கிறேன். அவர்களில் பல பேரும் படம் பார்க்காதவர்கள். படம் பார்த்திருந்தாலும் புரிந்து கொள்ளாதது போல நடிப்பவர்கள். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகிவிடும் என்கிற கோயபல்ஸ் ஐடியா கொண்டவர்கள். அந்தப் பிழைப்புவாதத்துக்கு போலி கட்டுடைத்தலுக்கு இந்த 25 வருடமும் தொடர்ந்து தோல்வியே கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பது இந்நேரத்தின் நீதிக்கதை.

மனிதனாக இருப்பது முக்கியம் என்பதை மனிதர்களிடமே சொல்ல வேண்டியிருப்பது ஓர் அவலம்தான். ஆனால், அவர்களுக்குள்ளே புகுந்து கமல் அந்தக் காரியத்தை முதுகெலும்புடன் செய்தார். படத்தில், 'தேவனாய் இருப்பது முக்கியமா?' 'மனிதனாய் இருப்பது முக்கியமா?' என்ற இரண்டு கேள்விகள். இரண்டாவது கேள்விக்கான பதிலைத்தான் இந்தப் படத்தை ரசிக்கும் ரசிகர்கள் உணர்ந்திருக்க வேண்டும், உணர்ந்திருப்பார்கள். அதேபோல் படத்தின் ஒரு காட்சியில் சிவாஜி ‘நம்ம பயக மெதுவாத்தான் வருவாய்ங்க’னு சொல்வார்.... 25 வருசமாச்சு... ஊர்ந்து வந்திருந்தா கூட இந்நேரம் வந்திருக்கலாம். ஆனா, இன்னும் வரலையே’...

அடுத்த கட்டுரைக்கு