Published:Updated:

‘குறியீடுகளின் குரு!’ எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் குறியீடுகள்...! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 11

‘குறியீடுகளின் குரு!’ எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் குறியீடுகள்...! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 11
‘குறியீடுகளின் குரு!’ எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் குறியீடுகள்...! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 11

‘குறியீடுகளின் குரு!’ எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் குறியீடுகள்...! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 11

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்புகளுக்கும் அவரது தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தந்தை அன்பை அறியாதவர். தாயால் வளர்க்கப்பட்டவர். தாயாரின் கண்டிப்பு மொழிகளும் வசைமொழிகளும் அவரது நினைவில் நின்றன. அண்ணனின் பாசமும் அன்பும் ஏழு வயது முதல் அவரை திரையுலகம் வரை அரவணைத்துக் கொண்டு சென்றது. எம்.ஜி.ஆரின் அரசியல் ஈடுபாட்டில் அவர் அண்ணனுக்கு பெருவிருப்பம் கிடையாது. அம்மா, அண்ணன், அண்ணி, மனைவி குழந்தைகள் மட்டுமே அவரது குடும்பம் திரையுலகிலும் அரசியலிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். நலம் விரும்பிகள் இருந்தனர். அடி வருடிகள் இருந்தனர். எதிரிகளும் துரோகிகளும் அவரைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவரைப் பகைத்துக் கொண்ட சில அப்பாவிகளும் இருந்தனர். அவரது ரசிகர்கள் அவரது ரத்தத்தின் ரத்தமாக விளங்கினர். அவரது உயிர்நாடியாக இருந்தது உழைக்கும் வர்க்கத்தினரும் தாய்மாரும் பெண்களும் ஆவார். இவர்களை மையப்படுத்தியே அவரது படத்தலைப்புகள் வைக்கப்பட்டன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்பு சில இலக்கியச்சான்று உடைய தலைப்புகளைப் பற்றி காண்போம்.

ஆயிரத்தில் ஒருவன்

1965ஆம் ஆண்டு ஜூலை ஒன்பதாம் நாள் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். கம்ப இராமயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த போது கம்பர் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூறுபாட்டுக்கு ஒரு பாட்டாகப் புகழ்ந்திருந்தார். அதனைக் கேட்ட சபையினர் ‘இராமகாதையில்’ (கம்பர் சூட்டிய பெயர்) நரஸ்துதி (மனிதனைப் புகழ்வது) அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். உடனே கம்பர் சரி நான் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடலாக சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறேன் என்றார். மேலும், சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் அல்லர் அவர் ஆயிரத்தில் ஒருவர் என்றார். இந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற பெயர் எம்.ஜி.ஆரின் படத்துக்கு சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆரின் கதை இலாகாவில் இருந்த வித்வான் வே. இலட்சுமணன் எம்.ஜி.ஆர் கம்பராமாயணம், தொல்காப்பியம் போன்றவற்றைப் படிக்க உதவினர். மேல்சபைத் தலைவராக இருந்த மா.பொ.சி. அவருக்குச் சிலப்பதிகாரச் சுவையைப் புகட்டினார்.

கம்பன் விழா ஒன்றில் சிறப்புரை ஆற்றிய எம்.ஜி.ஆரை வியப்புடன் பார்த்த மு.மு. இஸ்மாயில் அவர்கள் ‘நீங்கள் கம்பனை எங்குக் கற்றீர்கள்?’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் சிறுவயதில் சம்பூர்ண இராமாயணத்தில் நடித்த காலத்தில் இருந்தே எனக்கு கம்பராமாயணத்தில் பரிச்சயம் உண்டு என்றார்.

கம்பன் விழாவில் பங்கேற்கும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு கம்பராமாயணம் தெரிந்திருந்தது. அவர் படத்துக்கு அவருடன் இருந்த இலக்கிய இதிகாசத் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் காட்சி சித்தரிப்பு. வசன உதவி, பெயர் சூட்டல் ஆகியவற்றிற்கு உதவினர். ஆஸ்தான நாத்தகி, கவிஞர் என்பவை எல்லாம் அவர் முதலமைச்சர் ஆன பிறகு நடைமுறைக்கு வந்ததற்கு அடிப்படை காரணம் அவர் சினிமாவில் இருக்கும் போதே இலக்கியம் இதிகாசம், இசை, நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை தன்னுடன் வைத்திருந்ததே ஆகும்.

ஆசை முகம்

எம்.ஜி.ஆரின் தேர்தல் நிதியை விட அவர் தன் முகத்தை ஒருமுறை மக்களிடம் வந்து காட்டினாலே போதும் திமுக அதிக ஒட்டுகளை பெற்று வெற்றி வாகை சூடும் என்றார் அறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆரின் மலர்ந்த முகத்தைப் பார்க்க மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்தனர். இதனால், ஆசை முகம், முகராசி என்ற பெயர்கள் அவர் படங்களுக்கு சூட்டப்பட்டன.

ஆசை முகம் (10-12-65) படம் தமிழில் வந்த முதல் முகமாற்று அறுவை சிகிச்சை படம் ஆகும். ராம்தாஸ் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக எம்.ஜி.ஆர் முகம் போல மாற்றிக் கொள்ளும் படம் ஆசைமுகம். ரேவதியும் அவர் கணவரும் இதே கதையமைப்பில் ஒருபடம் எடுத்தபோது ‘புதியமுகம்’ என்று பெயரிட்டனர். இது அறிவியல் சாதனையைக் குறிக்கும் பெயர். ஆனால் எம்.ஜி.ஆர் முகம் ‘செண்டிமெண்ட்’ சார்ந்தது. அது “ஆசைமுகம்”.

பாரதியார் பாடல்களில் காதலி ஒருத்தி

“ஆசைமுகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல் வேண்டி தோழி”

என்று காதலனின் முகம் மறந்துவிட்டதை பற்றி தன் தோழியிடம் கூறுவாள். இந்த ‘ஆசை முகம்’ என்ற பெயர் ரசிகர்கள் ஆவலோடு பார்க்க விரும்பும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு ஏற்ற பெயராகவும் கதையோடு பொருந்திச் செல்கின்ற பெயராகவும் அமைந்தது.

முகராசி

1966ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் நாள் தேவர்  ஒரு படம் வெளியிட்டார். எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்த இப்படத்துக்கு அவர் ‘முகராசி’ என்று பெயரிட்டார். படம் அமோக வெற்றி. குறைந்த செலவில் எடுத்து நிறைய இலாபம் கிடைத்த படம் முகராசி. இதில் ஜெயலலிதா சிலம்பு சுற்றுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்.ஜி.ஆர் அவருக்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை எடுத்துரைப்பார். அமெரிக்க மாணவிகள் இப்படத்தைப் பார்த்தபோது ஜெயலலிதா கதாபாத்திரத்தை ‘Empowered Woman' எனப் பாராட்டினார்.

குடியிருந்த கோயில்

எம்.ஜி.ஆர் படங்களில் தாய்க்குலம் விரும்பும் வகையில் தாய்ப்பாசம் இடம் பெற்று இருக்கும். தந்தைப் பாத்திரம் புதியபூமி, விவசாயி, பணக்காரக்குடும்பம் போன்ற சில படங்களில் மட்டுமே காணப்படும்.

தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெரியவர்களின் கதைகள் நமக்கு நினைவுக்கு வரும். உலகத்தையே வெறுத்த துறவிகளால் கூட தாய்ப்பாசத்தை துறக்க இயலவில்லை. நபிகள் நாயகம் தாயின் காலடியில் உன் சொர்க்கம் இருக்கிறது என்றார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது தன் சீடர்களைப் பார்த்து ‘இதோ உன் தாய்’ என்று தன் தாயாரை பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறார். சங்கரர் தன் தாய்க்கு இறுதிக்கடன் தீர்க்க எங்கிருந்தாலும் வந்துவிடுவேன் என்கிறார். ஒரு தாய்க்கு மகன் செய்யும் கடமையை அவர் மறக்கவில்லை. பட்டினார்த்தார் தன் தாயின் சிதைக்கு தீ மூட்டிய பிறகு குடியிருந்த கோயிலை தீக்கு இரையாக்கிவிட்டேனே என வருந்துகிறார். இங்கு தாயை இவர் ‘குடியிருந்த கோயில்’ என்று குறிப்பிட்டது, எம்.ஜி.ஆர் படத்துக்கு பொருத்தமான தலைப்பாக இடம்பெற்றது. ஆரம்பத்தில் இதற்கு ‘சங்கமம்’ என்றுதான் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அதைவிட குடியிருந்த கோயில்’ என்ற பெயரை எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாகத் தோன்றியது. படமும் வெள்ளிவிழா கொண்டாடியது.

உலகம் சுற்றும் வாலிபன்

தமிழ்மொழி அகராதியைத் தொகுத்த ஏ.சிதம்பரநாதன் செட்டியார் உலகநாடுகள் பலவற்றைச் சுற்றிவந்து உலகம் சுற்றிய தமிழன் என்று ஒரு நூல் வெளியிட்டார். எம்.ஜி.ஆர் இத்தலைப்பை உலகம் சுற்றும் வாலிபன் என்று தனக்கேற்றபடி மாற்றிக் கொண்டார்.

காவல்காரன்

1967-ல் திமுக வெற்றி பெற்றதும் செப்டம்பர் ஏழாம் நாள் வெளிவந்த திரைப்படம் இது. இந்தப் படத்துக்கு முதலில் “மனைவி” என்று பெயர் சூட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி குழந்தை பெறும் படமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளித்து “மனைவி” என்று பெயர் சூட்டப்பட்டது.

விளம்பர ஸ்டில்கள் எடுத்த போது “ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கையில் டார்ச் லைட்டும் மறுகையில் சிறு தடியுமாக இரவில் காவல்பணி மேற்கொள்ளும் ரோந்துப் போலிஸ் போலத் தோன்றினார். அதைப்பார்த்த கவிஞர் வாலி இந்தப் படத்துக்கு ‘காவல்காரன்’ என்று பெயரிடலாமே என்றார். எம்.ஜி.ஆருக்கும் சரியனப்பட்டது ஏனென்றால் இப்படத்தில்

“என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும்
நான் தான் காவலடி”

என்று பாடல்வரிகள் அமைந்திருக்கும். எனவே மனைவிக்கும் காதலிக்கும் நானே காவல்காரன் என்ற பொருளில் இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்ததால் ‘காவல்காரன்’ என்பதே பொருத்தமான தலைப்பாகத் தோன்றியிருக்கும்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத சிலர் ஆரம்பம் முதலே ஜெயலலிதாவை கழற்றிவிடத் திட்டமிட்டனர். ‘மனைவி’ என்ற பெயரை நீக்கிட்டாலும் பிடிவாத குணம் உடைய ஜெயலலிதா அடுத்தடுத்த படங்களில் கணவன் கண்ணன் என் காதலன் படத்தலைப்புகளில் தன் முக்கியத்துவத்தை நிறுவி அடிமைப்பெண்ணில் தன் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்டார்.

திருடாதே

‘பாக்கெட் மார்’ என்ற இந்திய படத்தைப் பார்த்து எடுக்கப்பட்ட திருடாதே படம் 1958ல் தொடங்கி 1961-ல் வெளிவந்தது. இப்படத்துக்கு “நல்லவனுக்குக் காலமில்லை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இத்தலைப்பு எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.

எம்.ஜி.ஆரே நல்லவனுக்கு காலமில்லை என்று சொல்லிவிட்டார். இனியெதற்கு நல்லவனாக வாழவேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை இத்தலைப்பு உருவாக்கிவிடும் என்று எம்.ஜி.ஆர் தான் குழுவினரிடம் தெரிவித்தார். பின்பு “அந்தப் படக்குழுவினரைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்பவர் (இவர் வித்வான் வே. லட்சுமணன் கிடையாது) ‘திருடாதே’ என்ற பெயரைக் கூறினார். எம்.ஜி.ஆருக்கு இந்தப் பெயர் பிடித்திருந்ததால் அவருக்கு ரூ.500 அன்பளிப்பாகக் கொடுத்தார். படத்தில் வரும்

திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

என்ற பாடல் படத்தலைப்புக்கு வலுச் சேர்த்தது. ‘திறமை இருக்கு’ என்று பாடியது வறுமையில் உழன்றவருக்கு உழைத்து வாழும் நம்பிக்கையை வாழ்வில் ஏற்படுத்தியது.

நல்லவன் வாழ்வான்

‘திருடாதே’ படத்துக்கு ‘நல்லவனுக்குக் காலமில்லை’ என்று முதலில் சூட்டியிருந்த பெயர் சரியில்லை என்று மாற்றிய எம்.ஜி.ஆர் தன் அடுத்த படத்திற்கு ‘நல்லவன் வாழ்வான்’ என்று பெயர் வைத்தார். இது அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம். அண்ணா தனது இதயக்கனி எம்.ஜி.ஆர் என்பதைக் குறிப்பிடும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதனால் இதயக்கனி என்று ஒரு படத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரிட்டார். பணத்தோட்டம், பணம் படைத்தவன், பணக்காரக் குடும்பம் ஆகியவை பணக்காரனின் முகத்திரையைக் கிழித்த படங்கள்.

திமுக ஆட்சியில்

திமுக அரசாட்சி அமைந்ததும் தமிழ் நாட்டில் பொற்காலம் பிறந்துவிட்டதாகக் கருதும் வகையில் புதியபூமி, ஒளிவிளக்கு தேர்த்திருவிழா, ஒரு தாய்மக்கள், நல்லநேரம், போன்றவை வெளிவந்தன. புதியபூமி என்பது கிறிஸ்தவக் கோட்பாடான ‘புதிய வானம், புதிய பூமி’ என்பதைச் சார்ந்ததாகும். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது இந்துமத, எதிர்ப்பாளராக இருக்கிறார் என்பதை நம்பிய கிறிஸ்தவர்கள் பலர் அவரை Secret Christian என்றே நம்பினார். அவர் தினமும் பைபிள் வாசித்து ஜெபம் செய்வார் என்றும் கூறி வந்தனர். தென் தமிழகத்தில் இவருக்கு இருந்த ஆதரவைப் பார்த்ததால் இவரை வைத்து ‘பரமபிதா’ என்ற படத்தை எடுக்க முன் வந்தனர். கேரளாவில் எம்.ஜி.ஆர் இயேசு கிறிஸ்து வேடத்தில் இருக்கும் படத்தை தம் வீட்டில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றினர். படகோட்டி படப்பிடிப்புக்கு கொல்லத்துக்குப் போயிருந்த எம்.ஜி.ஆரிடம் இத்தகவலைத் தெரிவித்ததும் அவர் என்னப்பா உயிரோடு இருக்கும்போது எனக்கு பூ, மாலை, மெழுகுவர்த்தி ஏற்றுகிறீர்களோ என்று சொல்லிச் சிரித்தாராம்.

அண்ணாவின் தலைப்புகள்

அறிஞர் அண்ணாவைத் தன் தலைவராகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவரது கதைகளின் தலைப்புகளைத் தன் படங்களுக்குச் சூட்டி தன்னை ஒரு திமுக காரர் என்று பறைசாற்றிக் கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் துணிச்சலுடன் எம்.ஜி.ஆர் செயல்பட்டதற்கு படத்தலைப்புகளும் நற்சான்றாக அமைந்தன. அவரது நாவல்களின் தலைப்புகளான குமரிக்கோட்டம் பெரிய இடத்துப் பெண் என்ற பெயர்களில் படம் எடுத்து வெளியிட்டு வெற்றிவாகை சூடினார்.

தனக்கான பெயர்கள்

தனது பெயரையும் புகழையும் உயர்த்தும் வகையில் தன்னை நேசிக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களில் உயர்ந்த ஓரிடத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில படங்களுக்குப் பெயர் சூட்டினார். அவற்றுள் சில, உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, என் அண்ணன், அன்னமிட்ட கை, தனிப்பிறவி, முகராசி, நினைத்தை முடிப்பவன், கருணாநிதிக்கு இலவசமாக நடித்துக் கொடுத்த கலைஞரின் எங்கள் தங்கம், தர்மம் தலை காக்கும் ஆகியன. இவை எம்.ஜி.ஆரின் மீதான நல்லவன், வல்லவன், கொடையாளி என்ற கருத்துக்களை மேலும் வலுப்படுத்த உதவிய படத்தலைப்புகள் ஆகும்.

திமுக ஆட்சிக்கு முன்

எம்.ஜி.ஆர் பட வரலாற்றை திமுக ஆட்சிக்கு முன்பு, திமுக ஆட்சியின் போது, அதிமுக ஆரம்பித்த பிறகு என்று மூன்றாகக் பகுக்கலாம். 

புதிய பூமி

கதிரவன் என்ற பெயருடைய எம்.ஜி.ஆர் ஆங்கில மருத்துவராக ஒரு மலைக்கிராமத்துக்கு வந்ததும் அங்கிருந்த மந்திரம் தந்திரம் என்ற அறியாமை இருள் மறைந்து பகுத்தறிவுப் பகலவனின் ஒளி தோன்றியது. இது திமுகவின் ஆட்சி நாட்டில் புதிய பூமியை உருவாக்கியதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஆகும்.

அதிமுக தோன்றிய பின்பு...

அதிமுக ஆட்சியில் சேர்ந்து தன்னைப் பின்பற்றுவோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் படத்தலைப்புகளை அமைத்தார். முதலில் நேற்று இன்று நாளை, பின்பு அதைத் தொடர்ந்து உரிமைக்குரல், நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க நிறைவாக மதுரையை (தமிழகத்தை) மீட்ட (திமுகவிடம் இருந்த) சுந்தரபாண்டியன் (அழகான தலைவன் எம்.ஜி.ஆர்). இப்படத்துடன் அவர்காலத்திய அவரது திரையுலக வரலாறு நிறைவு பெற்றது. அவர் காலத்திற்குப் பின்பு அவர் நடித்த அவசரப்போலீஸ் படம் வெளி வந்தது. எம்.ஜி.ஆர் நடித்த இரண்டு பாடல்காட்சிகளும் சில வசனக்காட்சிகளும் மட்டுமே அப்படத்தில் இருந்தன.

அதிமுக தொடங்கிய பிறகு நல்லதை நாடு கேட்கும், உன்னை விட மாட்டேன், புரட்சிப் பித்தன் போன்ற படங்கள் எம்.ஜி.ஆர் நடித்த வரவேண்டியவை. ஆனால் அவர் முதல்வராகி விட்டதால் வரவில்லை.

ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்

ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர் பாட்டாளிகளில் ஒருவராகத் தான் நடித்து பணக்கார முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்கியதால் பலரும் எம்.ஜி.ஆரை தம் பங்காளியாகவும் தம் ரட்சகராகவும் பார்த்தனர். துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் இறையம்சம் பொருந்தியவராகவே எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தோன்றினார். எனவே எம்.ஜி.ஆர் ‘உங்களில் ஒருவன் நான்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலான உழைக்கும் வர்க்கத்தினரின் பாத்திரங்களை ஏற்று நடித்தார். தன் படங்களுக்கும் உழைப்பவரின் பெயரையே சூட்டினார். ஆட்டோகிராஃப் போடும்போதும், ’உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
தொழிலாளி, படகோட்டி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், உரிமைக்குரல் என்று தன் படங்களுக்குப் பெயர் சூட்டினார்.

1001 அரபுக்கதைகள்

மேடை நாடகமாக குலேபகாவலி நாடகம் ‘பகடை 12’ என்ற பெயரில் நடைபெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இதை எம்.ஜி.ஆர் நடித்து ராமண்ணா தனது ஆர் ஆர் பிக்சர்ஸ் மூலமாக படமாக எடுத்தார். ஆயிரத்தோரு அரபுக்கதைகளைச் சேர்ந்த குலேபகாவலி, பாக்தாத் திருடன், அலிபாபாவும் 40 திருடர்களும் படங்கள் எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

படத்தலைப்பு என்பது ஒரு படத்துக்கு முகம் போன்றது எனவே எம்.ஜி.ஆர் மிகவும் ஆலோசித்து படத்தலைப்பைச் சூட்டியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு