Published:Updated:

தெலுங்குக்கு ராணா, இந்திக்கு கரண் ஜோஹர், தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜி! - என்னது இது? #2PointOUpdates

தெலுங்குக்கு ராணா, இந்திக்கு கரண் ஜோஹர், தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜி! - என்னது இது?  #2PointOUpdates
தெலுங்குக்கு ராணா, இந்திக்கு கரண் ஜோஹர், தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜி! - என்னது இது? #2PointOUpdates

‘மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் இந்திய படம்’, ‘நேரடியாக 3டியில் ஷூட் செய்யப்படும் முதல் இந்தியப் படம்’ உள்பட நிறைய பெருமைகளுடன் தொடங்கப்பட்ட ‘2.0’, தற்போது, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஆடியோ வெளியீட்டு விழா’ என்ற பெருமையை நாளை துபாயில் நிகழ்த்த உள்ளது. ஷங்கர்-ரஜினி-அக்ஷய் குமார்-ஏ.ஆர்.ரஹ்மான்-லைகா காம்போவின் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள் சிலவற்றை பார்ப்போம். 

ஏ.ஆர்.ரஹ்மான்:

‘இந்தப் படத்தில் பாடல்களே கிடையாது’ என்கிற திடமான திட்டத்தோடுதான் இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பை நடத்தி முடித்தார். பின்னணி இசை அமைப்பதற்கு முன்பு முழுப்படத்தையும் திரையில் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'கண்டிப்பாக '2.0'வில் பாடல் இடம்பெற்றே ஆகவேண்டும்' என்று அன்பு வேண்டுகோள் வைத்தார். அதன்பிறகுதான் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. ஒருவேளை ஷங்கர் நினைத்தமாதிரி பாடல்கள் இல்லாமலேயே 2.0 உருவாகி இருந்தால் இப்போது துபாயில் ஆடியோ ரிலீஸ் என்கிற விழாவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்காது. ஆக, ஆடியோ விழாவுக்கு வித்திட்டவர் ஏ.ஆர். ரஹ்மான்தான். மேலும் ‘2.0’ படப் பாடல்களை ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஹ்மான் நேரடியாகவே பெர்ஃபார்ம் பண்ணுகிறார். 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மேலும் இதில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன. 

ஷங்கர்:

விழாவில் இயக்குநர் ஷங்கரைப் பற்றிய சிறப்பு ஆடியோ-வீடியோ தொகுப்பு ஒன்று திரையிடப்படுகிறது. அவர் இதுவரை இயக்கிய படங்களில் உள்ள காட்சிகளின் தொகுப்பாக அது இருக்கும். மேலும் இந்தப் படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் தொழில்நுட்ப இயக்குநர்கள் ஒவ்வொருவரையும் ஷங்கர் மேடையில் அறிமுகப்படுத்துகிறார். ஏமி ஜாக்சனின் சயின்டிஃபிக் நடன நிகழ்ச்சி கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம். 

சிறப்பு தொகுப்பாளர்கள்:

‘2.0’ படம் இந்தியாவில் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. அதனால் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இந்த ஒரே மேடையில் மூன்று மொழிகளுக்கும் பண்ணுகிறார்கள். தமிழ் ஆடியோ வெளியீட்டை நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு ஆடியோ வெளியீட்டை ராணாவும், இந்தி ஆடியோ வெளியீட்டை இயக்குநர் கரண் ஜோஹரும் தொகுத்து வழங்குகிறார்கள். ஆனால் ஒரே மேடையில் எப்படி தனித்தனியாக இசை வெளீயீடு நடத்துகிறார்கள் என்பது சர்ப்ரைஸ். 

ஆடியோ வெளியீடு:

இன்று மாலை, ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர். அங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள். நாளை படத்தின் இசை வெளியீடு burj parkல் நடைபெறுகிறது. இந்த பார்க், நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ளது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி:

நேற்று துபாய்க்கு புறப்பட்ட ரஜினி, இன்று நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு, நாளை  நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு இரண்டு நாள்கள் துபாயிலேயே தங்குகிறார். அதன்பிறகு 29-ம்தேதி இரவு அங்கிருந்து புறப்பட்டு 30-ம்தேதி சென்னைக்கு திரும்புகிறார். 

சிறப்பு அனுமதி: 

பாஸ்கோ நடனக்குழு, 12000 பேர் பார்க்க இலவச அனுமதி, துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரமாண்ட LEDகளில் இந்நிகழ்ச்சியை அங்கு நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள்... என பிரமாண்டமாக தயாராகும் இந்த நிகழ்ச்சியில் துபாய் அரசர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.