Election bannerElection banner
Published:Updated:

பி.பி.சி முதல் பி.ஜே.பி வரை விவாதிக்குமளவுக்குச் சிறந்த படமா 'மெர்சல்?' #VikatanExclusive

பி.பி.சி முதல் பி.ஜே.பி வரை விவாதிக்குமளவுக்குச் சிறந்த படமா 'மெர்சல்?' #VikatanExclusive
பி.பி.சி முதல் பி.ஜே.பி வரை விவாதிக்குமளவுக்குச் சிறந்த படமா 'மெர்சல்?' #VikatanExclusive

பி.பி.சி முதல் பி.ஜே.பி வரை விவாதிக்குமளவுக்குச் சிறந்த படமா 'மெர்சல்?' #VikatanExclusive

கழுத்தை நெரிக்கும் பொருளாதார மந்தநிலை, பீதியடையச் செய்யும் டெங்குக் காய்ச்சல் என பா.ஜ.க தலையிட ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் 'மெர்சல்' பற்றியே மூச்சுவாங்க பேசிக்கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். இவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பி.பி.சி போன்ற சர்வதேச ஊடகங்கள் 'Movie of India' என்கிற அளவுக்கு மெர்சல் மேல் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சரி, அப்படி நேஷனல், சர்வதேச ட்ரெண்டாகும் அளவுக்கு மெர்சலில் என்னதான் இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக ஏன் இத்தனை வலுவாக எதிர்ப்பு எழுகிறது?

'மெர்சல்' - வொர்த்தா இல்லையா?

கதையாகப் பார்த்தால்... ஆயிரம் முறை கோலிவுட் அலசிக் காயப்போட்ட அதே பழிவாங்கும் பார்முலாதான் மெர்சல். அதுவும் இது அபூர்வ சகோதரர்களின் அப்பட்டமான தழுவல் என்பது படம் வெளியாவதற்கு முன்பே எல்லாருக்கும் தெரியும்தான். சரி, அபூர்வ சகோதரர்கள் கதை. திரைக்கதை - அதற்கும் எக்கச்சக்க படங்களிலிருந்து காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஓப்பனிங் காட்சி - சிவாஜி, சிலபல மேஜிக் காட்சிகள் - Now You See Me என்ற ஆங்கிலத் திரைப்படம், விமான நிலையத்தில் நடக்கும் சர்ஜரி - ஒரு கொரியன் படம், இதுபோக ரமணா, கஜினி என எக்கச்சக்க இன்ஸ்பிரேஷன் காட்சிகள் வேறு. அதையும்தாண்டி படத்தை எல்லாரும் எதிர்நோக்க இரண்டே காரணங்கள். ஒன்று - விஜய், இன்னொன்று திரைக்கதைக்காக மெனக்கெட்ட 'பாகுபலி' விஜயேந்திர பிரசாத்.

விஜய் - படத்தைத் தாங்கி நிற்கும் ஹெர்குலிஸ். டான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அத்தனை ஏரியாக்களிலும் அடித்து ஆடியிருக்கிறார். திரையில் தெறிக்கும் அவரது எனர்ஜி, தியேட்டரில் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. ஆக, நடிகராக விஜய் தனது பெஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார். ஆனால் இரண்டாவது காரணமான விஜயேந்திர பிரசாத், சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் திரைக்கதைக்கென பெரிய டீம் அமைத்து வொர்க் செய்தது இந்தப் படத்துக்குத்தான். ஆனால், விஜயை எடுத்துவிட்டுப் பார்த்தால் திரைக்கதையில் பெரிதாக ஒன்றுமே இல்லை. ராட்டினத்தை விஜய் இழுக்கும் காட்சி அப்படியே பாகுபலியில் பல்வாள்தேவனின் சிலையை ஷிவூ இழுக்கும் காட்சி. சீனியர் விஜய் இறந்தவுடன் குட்டி விஜய் உயிர் பெறும் ஷாட்கூட பாகுபலியில் இருக்கும். (பாகுபலி மாதிரி சீன் வைக்கலாம். பாகுபலியையே சீனா வைப்பாங்களா என்ன?) மாஸ்டர்பீஸ் திரைக்கதை அமைத்திருக்க வேண்டிய அந்த டீம், யூகிக்கும்படியான காட்சிகள், எக்கச்சக்க லாஜிக் குளறுபடிகள் என சுமாரான திரைக்கதையையே நம் பார்வைக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது.

சோஷியல் மெசேஜை படங்களின் வழியே சொல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று உருக்கமான காட்சியமைப்பு, மற்றொன்று கேட்டவுடன் உள்ளே சென்று தைக்கும் வசனங்கள். முதலாவது வழியை சமீபகாலத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்திச் சொல்ல வந்ததை கச்சிதமாகக் கடத்திய படம் 'விசாரணை' அதில் தினேஷின் முதுகில் விழும் ஒவ்வொரு அடிக்கும் நம் உடலும் அதிர்ந்ததுதானே? க்ளைமாக்ஸில் இருண்ட பின்னணியில் கேட்கும் அந்தத் துப்பாக்கி ஒலி கனவில் வந்து எத்தனை பேரின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும்? ஆனால், மெர்சலில் அத்தகையான உருக்கமான காட்சியமைப்புகள் இல்லாதது ஏமாற்றம்தான்.

'கலைப் படைப்புக்கும் கமர்ஷியல் படத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?' எனச் சிலர் கொந்தளிக்கக்கூடும். சரி இதற்கு முன் விஜய் நடித்த 'கத்தி' படத்தையே எடுத்துக்கொள்வோமே. 'நீ குடிக்கிறது குளிர்பானம் இல்ல, ஓர் ஏழை விவசாயியோட ரத்தம்' என இயலாமை வழியும் குரலில் சொல்லிவிட்டு வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியின் வீரியம் நமக்குத் தெரிந்ததுதானே? மெள்ள மெள்ள  'சிவப்புத்' தண்ணீரில் மூழ்கும் அந்த உடல்கள் உலுக்கியது நம் மனசாட்சிகளைத்தானே? அப்படியான காட்சியமைப்புகள் இருந்திருந்தால் மெர்சல் மிரட்டியிருக்கும்.  

இவ்வளவையும் தாண்டி மெர்சல் இந்த ரீச்சை அடையக் காரணம் வசனங்கள். ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, இலவச மருத்துவம் போன்ற டாபிக்கல் டச்சோடுகூடிய வசனங்கள். பார்வையாளர்கள் கேட்டவுடன் கைதட்டக்கூடிய வசனங்கள். அதுவும் விஜய் போன்ற முன்னணி நடிகரின் வாய்ஸில் கேட்கும்போது, ஏற்கெனவே வாட்ஸ்அப் பார்வேர்டுகளாக இவற்றைப் பார்த்திருந்தும், பல தகவல் பிழைகள் இருப்பது தெரிந்தும் கைதட்டுகிறது கூட்டம். 'நம்ம மனசுல இருக்குறதை அப்படியே சொல்றாருய்யா' என வினாடி நேரத்தில் விஜய்யோடு நெருக்கமாகிறார்கள் சாமானியர்கள். ஆனால், அந்த வசனங்கள் பேசும் அரசியல்? சிங்கப்பூரோடு ஒப்பிடுவது எந்தளவுக்கு அபத்தமானது எனப் புள்ளிவிவரங்களோடு வட இந்திய ஊடகங்களே விவாதித்துவிட்டன. வசனங்கள் வழி அரசியல் பேசிய சமீப கால படமாக ஜோக்கரை எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு ஏன்? விஜயே கத்தியில் இதைவிட அருமையாகப் பேசியிருப்பார்தானே? ஆக, பா.ஜ.கவின் தலையீடு இல்லாவிட்டால் இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான திருவிழாப் படமாகவே இருந்திருக்கும். ஆனால், லோக்கல் பா.ஜ.க தலைவர்கள் 'டெல்லி தலைமைக்குக் கொடி பிடிக்கிறேன்’ என ஆளாளுக்கு வம்பிழுத்ததில், அது இப்போது இந்திய சினிமாவாகிவிட்டது. இந்த வேதனை ஒருபுறமிருக்க, ‘மெர்சல்’ சினிமாவை பி.ஜே.பி. தலைவர்கள் ஏன் இந்தளவுக்கு எதிர்த்தார்கள்!? 

பா.ஜ.கவின் 'மெர்சல் அரசியல்':

சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க தான் ராஜா. அக்கட்சியின் தலைவர்களை எதிர்த்தோ, திட்டங்களை எதிர்த்தோ பிரபலங்கள் கருத்து உதிர்த்தால் முடிந்தது கதை. அந்தப் பிரபலத்தை திட்டி நிமிடத்தில் ஆயிரக்கணக்கான ட்வீட்கள், ஸ்டேட்டஸ்கள் பறக்கும். நேஷனல் ட்ரெண்டிங்கில் நெகட்டிவ் இமேஜோடு இடம்பிடிப்பார்கள் அந்தப் பிரபலங்கள். இவற்றில் 95 சதவிகித விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்வினைகளாக இருக்காது. தனிப்பட்ட தாக்குதல்கள்தான். இதற்காகவே பிரத்யேகமாக பா.ஜ.க ஒரு நெட்வொர்க் அமைத்திருக்கிறது எனத் தன் 'I am a Troll' புத்தகத்தில் ஆதாரங்களோடு விளைக்கியிருப்பார் ஊடகவியலாளர் ஸ்வாதி சதுர்வேதி.

இந்த நெட்வொர்க் வடக்கே மட்டும்தான் வெற்றிகரமாகச் செயல்படமுடிகிறது. தெற்கே, அதுவும் முக்கியமாகத் தமிழகத்திலும், கேரளத்திலும் இவர்களின் நிலை, 'அண்ணனுக்கு ஓர் ஊத்தப்பம்தான்'. அதனால்தான் PoMoneModi-யும் MersalvsModi-யும் இந்திய அளவில் ட்ரெண்டாகி பா.ஜ.க தலைவர்களை மிரட்டுகின்றன. சகல ஊடகங்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. வடக்கே சின்ன முனகல் சத்தம் வந்தாலும் தன் பலம் கொண்டு அடக்கும் பா.ஜ.க தென்னகத்தில் தடுமாறுவது இந்த பேஸ்மென்ட் வீக்கு விஷயத்தால்தான்.

தமிழக பா.ஜ.க - கன்டென்ட் கொடுக்கும் தெய்வங்கள்:

பா.ஜ.க ஆட்பேசம் தெரிவிக்கும் அந்த வசனங்கள் எதுவும் ஆழமான விமர்சனங்கள் அல்ல. ஹீரோயிச டயலாக்குகள்தான். அதைக்கூட தமிழக தலைவர்களால் பொறுக்கமுடியவில்லை என்பதுதான் பிரச்னையைத் தீவிரமாக்குகிறது. தமிழிசையாவது பரவாயில்லை வசனங்களோடு நிறுத்தினார். ஹெச்.ராஜாவோ இனவாத அரசியல் பேசுகிறார். 'இணையத்தில் மெர்சல் காட்சிகளைப் பார்த்தேன்' என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, 'ஆத்தா நான் கண்டுபிடிச்சிட்டேன்' ரேஞ்சுக்கு விஜயின் வாக்காளர் அட்டையைப் பதிவேற்றுகிறார். ஏன் ஜி, அவர் என்ன மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது நாளைய தீர்ப்பு காலத்திலிருந்தே தமிழகத்துக்குத் தெரியுமே?! இதுதானா உங்க டக்கு? இவர்களின் இந்த அபத்த அரசியல்தான் மெர்சலை மேலும்மேலும் வைரலாக்குகின்றன. எப்படியாவது இங்கே காலை ஊன்றிவிட நினைக்கும் பா.ஜ.கவுக்கு மாஸ் ஹீரோ பேசும் இந்த வசனங்கள் செரிமானப் பிரச்னையை உண்டாக்குகிறதோ என்னவோ?

சரி, மொத்த இந்தியாவும் பார்க்கும்படி கலாய்க்கப்பட்டாயிற்று! இதோடு விட்டார்களா என்றால் இல்லை! 'விஜய் தைரியமிருந்தால் எங்களோடு விவாதம் செய்யட்டும்' என்கிறார் தமிழிசை. பக்கத்து மாநிலத்தில் பினராயி விஜயன் 'வாங்களேன் ஒரு விவாதத்திற்கு' என பலகாலமாய் பா.ஜ.கவை அழைத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் தலைவர்களை விட்டுவிட்டு நடிகர்களை அழைப்பதில்தான் இவர்கள் விருப்பம் காட்டுகிறார்கள். நியாயப்படி தமிழ்நாடு கவர்மென்ட்டோடதானே தமிழிசை விவாதம் பண்ணனும்? ஏன் பாஸு அவங்ககூட அவங்களே எப்படி விவாதம் பண்ணுவாங்க?

மெர்சலைவிட உருக்கமாகக் கதை சொன்னவிதத்தில், வசனம் பேசிய வகையில் 'கத்தி' தனித்து நிற்கிறது. ஆனால், அதையும் தாண்டி மெர்சலை மெகாஹிட் ஆக்கியதில் விஜய் ரசிகர்கள் பா.ஜ.கவிற்கு ஒரு யுகத்திற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள்..!    

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு