Published:Updated:

அசினுக்கு இரட்டை வாழ்த்துகளைச் சொல்லலாமே..! - #HBDAsin

அசினுக்கு இரட்டை வாழ்த்துகளைச் சொல்லலாமே..! - #HBDAsin
அசினுக்கு இரட்டை வாழ்த்துகளைச் சொல்லலாமே..! - #HBDAsin

பொதுவாக கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு நடிகைகள் வருவது சாதாரண விஷயம்தான். ஆனால், கோலிவுட்டில் தன் திறமையை நிரூபித்து, பாலிவுட்டிலும் தன் முத்திரையை பதித்தவா் அசின். வசதியான குடும்பத்தைச் சோ்ந்த அசின் வளா்ந்ததும் பிஸ்னஸை கவனிப்பார் என்றுதான் அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஏன் அசினே ஒருமுறை, ’நான் சிறு வயதில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். எப்படி நடிகையானேன் என தெரியவில்லை’ என்று பேட்டியில் கூறியிருக்கிறார். மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்தாலும் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த "எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி" படம்தான் தமிழ் சினிமா ரசிகன் மனதில் அவரை நெருக்கமாக்கியது.

இந்தப்படம் வெளியாவதற்கு முன்னர் மலையாளத்தில் இருந்து ஒரு நடிகை தமிழுக்கு அறிமுகம் ஆகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், படம் வெளியான பிறகு நடந்தது எல்லாம் 'அசின் மயம்தான்'. அசினுக்குத் தமிழ், தெலுங்கு என வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஏ.ஆர்.முருகதாஸ் தன் கஜினி படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை  வைத்திருந்தார். அதில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்ட நடிகையும் அசின்தான். அவரின் நம்பிக்கை வீண்போகாத வண்ணம் தன் நடிப்பை அவ்வளவு தத்ரூபமாக  தந்திருப்பார். அப்படத்தில் காமெடி காட்சிகளிலும் பின்னியெடுத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில்தான் விஜய்க்கு ஆக்ஷன் படங்கள் வரிசைக்கட்டி வரத் தொடங்கின. ‘சிவகாசி, போக்கிரி, காவலன்' என மூன்று படங்களுக்குமே அசின் தான் விஜய்க்கு ஜோடி. காவலன் படத்தின் ஷூட்டிங்கின்போது ‘அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஒரு திறமைமிக்க நடிகை" என பாராட்டிருப்பார் விஜய். தன் குறும்புத்தனமான நடிப்பால் இளைஞர்களின் மனதில் பட்டாம்பூச்சி பறக்கச் செய்தவர் அசின். சில நடிகைகளுக்கு சிட்டி சப்ஜெட்தான் செட்டாகும், கிராமத்து சப்ஜெட் செட்டாகாது. ஆனால் அசினுக்கு டீ-சா்ட், ஜீன்ஸ் அணிந்தாலும் சரி, தாவணி கட்டினாலும் சரி அம்மணி அம்பூட்டு அழகாக இருப்பார்.

'கஜினி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் இந்தி திரையுலகில் தன் தடத்தைப் பதித்தார். அதன்பிறகு பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட்  வந்துவிட்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு தென்னிந்திய நடிகை இந்தியில் வெற்றிகரமாக தன் கெரியரை தொடங்கியது அசின்தான். அசின் நடித்த படங்கள் வெற்றி பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்தபோது பாலிவுட்டிலும் அசினுக்கு ராஜ உபசாரம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார், சல்மான் கான், அமிர்கான் என இந்தியில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பிரபலம் ஆகிட்டா ப்ராபளம் தானே என்பதற்குச் சான்றாக அசினைச் சுற்றி பல சர்ச்சைகள் வட்டமடிக்க ஆரம்பித்தன. சல்மான்கானும் இவரும் காதலிக்கிறார்கள் என்றும் அசின் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் எனவும் வதந்திகள் பரவின. 

கடந்த 2016-ம் ஆண்டு, தான் காதலித்து வந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனர் 'ராகுல் சர்மாவை' திருமணம் செய்துகொண்டார் அசின். இவா்களது திருமணம் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடந்தது. திருமணத்துக்குப் பிறகு பிஸ்னஸை கவனித்து வந்த அசினுக்கு நேற்று முன்தினம் (24.10.17) பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று பிறந்தநாள் காணும் அசினுக்கு இரட்டை வாழ்த்துகளைச் சொல்லலாமே..!!