Published:Updated:

’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..!’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார்

பா.ஜான்ஸன்
’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..!’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார்
’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..!’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார்

போனில் அழைத்தால் "மதுரைவீரந்தானே... அவனை உசுப்பிவிட்ட வீணே" என காலர் ட்யூனில் கணீரென ஒலிக்கிறது பரவை முனியம்மாவின் குரல். மாலையில் பேட்டிக்காகச் சந்திக்கும் போது சோலோ, டேவிட், மணிரத்னம், துல்கர், நான்கு ஹீரோயின்கள் என எதையும் கேட்பதற்கு முன் காலர் ட்யூன் பற்றிய கேட்டதும் இயக்குநர் பிஜோயின் முகத்தில் அத்தனை பிரகாசம். "அவங்க குரல் எனக்கும் எங்க அம்மாவுக்கும் ரொம்பப் பிடிக்கும். டிவியில் அவங்க பண்ணின கிராமத்துச் சமையல் நிகழ்ச்சி எங்களுடைய ஃபேவரைட். அந்தச் சமையலுக்கு இடையிடையில் அவங்க பாடுவாங்கள்ல அதனாலயே பார்ப்போம். `சோலோ'வில் அவங்களை ஒரு பாட்டு பாட வைக்கக் கேட்டோம். ஆனா, உடல் நிலை சரியில்லைனு சொல்லிட்டாங்க. அதனாலதான் "வாறான்டி வாறான்டி" பாட்டை சின்னப் பொண்ணு பாடினாங்க’’ எனப் படபடவெனப் பேசி முடித்தார். அவருடனான மாலை நேர லன்ச் சந்திப்பிலிருந்து, அவருக்கு மாலை நேரம்தான் லன்ச் டைம். "சென்னைல பெரிய நட்பு வட்டம் கிடையாது பிரதர். வந்தா ஸ்ரீகர் பிரசாத் சாருடைய ஆஃபீஸ் மட்டும்தான். அடிக்கடி வர்றேன்றதால ஒரு ஸ்கூட்டர் வாங்கி வெச்சிட்டேன். 

தமிழில் உங்களுடைய முதல் படம் `டேவிட்'. அதனுடைய ரிசல்ட் நீங்க எதிர்பார்த்த அளவு இருந்ததா? என்ன தப்பானதா நினைக்கறீங்க?

’’இப்போ நிறைய பேர் டேவிட் பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொல்றாங்க. இந்திய விட தமிழ் ஆடியன்ஸ் நிறைய பேர் சொல்றாங்க. சில படங்கள் காலம் தாண்டிதான் கொண்டாடப்படும். அதுமாதிரிதான் `டேவிட்'னு நினைக்கறேன். ஆனா, ரிலீஸ் டைம்ல அப்படியே நிராகரிக்கப்பட்டது. அந்த நேரம்தான் விஸ்வரூபம் பட பிரச்னைகள் போயிட்டிருந்தது. இன்னொரு காரணம் விக்ரம் சம்பந்தபட்ட காட்சிகளை டப் பண்ணது. அது பெரிய தப்புனு நினைக்கறேன். அதுவுமில்லாம அந்தக் கதைக் களம் தமிழுக்கு ரொம்ப ஏலியனா இருந்ததும் ஒரு பிரச்னை. இதெல்லாம் ஒரு லேர்னிங்ஸ்தான்.’’

டேவிட்ல இரண்டு கதைகள் வெச்சு பண்ணீங்க, அடுத்து சோலோவில் நான்கு கதைகள். `சோலோ'வுக்கான ட்ரையல் வெர்ஷனா `டேவிட்' படத்தைச் சொல்லலாமா?

’’அப்படி இல்ல. எனக்கு எப்போதுமே மல்டிபிள் நரேட்டிவ் ஸ்டைல்ல கதை சொல்றது பிடிக்கும். ஒரு பையன், ஒரு ஊருனு, ஒரு மலைனு ஆரம்பிச்சு நேரா கதை சொல்றதில் எனக்குப் பெருசா ஆர்வம் இல்ல. `டேவிட்'ல கடைசியா ரெண்டு கதையும் இணைஞ்சிடும். ஆனா, சோலோ ஒரு ஆந்தாலஜி. நாலு வேற வேற கதைகள். அந்த நாலு கதைகளுக்கும் ஒன்னுக் கொன்னு சம்பந்தமே இருக்காது, ஒரே சம்பந்தம் நானும் துல்கரும்தான். ஒருமுறை மணி சார்கிட்ட ஒரு கதை சொன்னேன். ரொம்ப சிம்பிள் ஸ்டோரி. அதை முழுசா கேட்டு முடிச்சிட்டு "என்னப்பா யாரும் யாரையும் சுடல, யாரும் சாகல.. என்ன ஆச்சு"ன்னார். சார் நார்மலா ஒரு கதை பண்ணலாம்னு யோசிச்சேன்னு சொன்னேன். அப்போ எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது, நான் சாதாரணமா கதை சொல்றதை விட வித்தியாசமா கதை சொல்லும் போதுதான் என்னுடைய படம் முழுமையடையுதுனு நினைக்கறேன்.’’

தமிழ்ல பக்காவான ஆந்தாலஜி படம் வந்தது கிடையாது. ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கனு பயம் இருந்ததா..?

’’நான் எந்த மாதிரி படம் பண்ணாலும் பயம் இருக்கதான் செய்யும். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நல்ல முயற்சி எடுத்திருக்கேன்னு நம்புவேன். அதனுடைய ரிசல்ட் எப்படினு ஆடியன்ஸ் சொல்றதை வெச்சுதான் இருக்கும். என்னைக் கேட்டா சோலோ ஒரு கமர்ஷியல் படம்னுதான் சொல்லுவேன். என்ன, இது ஒரு ஆந்தாலஜி கமர்ஷியல் ஃபிலிம்.’’

வேற வேற மொழி நடிகர்களைக் கூட்டிட்டு வந்து நடிக்க வெச்சது பைலிங்குவல்காக மட்டுமா, வேற ஏதாவது காரணம் இருக்கா?

’’உறுதியா பைலிங்குவல் ஒரு காரணம். இன்னொரு காரணம் அவங்களோட எல்லாம் வேலை செய்யணும்னு எனக்கு ஆசை இருந்தது. பார்த்திபன் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நடிக்க வைக்க பேசினோம். அவரும் ஆர்வமா இருந்தார். ஆனா, அவருக்கு வந்த வேற ஒரு கமிட்மென்ட்ல இதில் நடிக்க முடியாம போயிடுச்சு. நடிகர்களைத் தேர்வு செய்யும் ப்ராசஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலயே என் படத்துக்கு நானே காஸ்டிங் டைரக்டரா வேலை செய்வேன். ஆந்தாலஜிங்கறதால ஒவ்வொரு கதைக்கும் வேற வேற நடிகர்கள் இருந்தாங்க. அதை முடிவு பண்றதும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.’’

`சோலோ' கதை யோசிச்சப்போவே துல்கர்னு முடிவு பண்ணீட்டீங்களா?

’’ஆமா. நான் முதல்ல இதை யோசிக்கும் போது ஐந்து கதைகள்னு சொன்னேன்ல, அதில் மூணு கதைகள் ஆண் கதாபாத்திரத்தின் கதையாவும், இரண்டு கதைகள பெண் கதாபாத்திரத்தின் கதையாவும் யோசிச்சிருந்தேன். பிறகுதான் நான்குகதைகள்னு முடிவு பண்ணோம். சரி துல்கரையே நாலு கதைகள்லயும் நடிக்க வெப்போமேனு முடிவு பண்ணி நடிக்க வெச்சோம். கேரளாகாரனா இருந்துகிட்டு மலையாளம்ல படம் பண்றதுக்கு ஏன் இவ்வளோ நாள்னு கூட கேட்டாங்க. லேட்டா பண்ணணும்னு எதுவும் இல்ல. இதுக்கு முன்னாலயே கூட நிறைய முயற்சி பண்ணேன். எதுவும் சரியா அமையல. ஆனா, இந்தத் தாமதத்துக்கு நியாயம் செய்யும்படியான சினிமாவா `சோலோ’வை எடுத்தேன். முதல் முறை துல்கர் கூட வேலை செய்த அனுபவமும் ரொம்ப நல்லா இருந்தது. `ஓகே கண்மணி'ல நான் வேலை செய்யலைங்கறதால, துல்கரை நேரா `சோலோ' செட் வந்ததுக்குப் பிறகுதான் பழக்கம். எந்த ஸ்ட்ரஸையும் முகத்தில் காட்டமாட்டார். உடனடியா ஷாட்டுக்கு ரெடியாகறது, எந்த ஆட்டிட்யூடும் இல்லாம மரியாதையோட எல்லாரையும் நடத்துறதுனு துல்கர் செம ஆளு. அப்படி ஒரு மெய்ன் ஆக்டர் இருந்தா உங்களுடைய பாதி பிரச்னை குறைஞ்சிடும். ஹீரோயின்ஸும் அப்படிதான், அவ்வளோ சிம்பிளா சீனைப் புரிஞ்சுகிட்டு நடிச்சாங்க. தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், நேஹா ஷர்மா, ஆர்த்தி வெங்கடேஷ்னு நாலு ஹீரோயின்ஸ். இதில் ஆர்த்தி மட்டும் புதுசு, மற்றவங்க ஏற்கெனவே தெரிஞ்ச முகங்கள்தான். தன்ஷிகா கண் தெரியாத பெண்ணா நடிச்சிருந்தாங்க. அவங்க எப்படி நடிப்பாங்கனு எனக்கு முன்னாலயே தெரியும். நீங்க செலக்டடுனு சொல்லிட்டேன், ஆனாலும் எனக்கு ஆடிஷன் வைங்க நான் சரியா இருப்பனானு பாருங்கனு சொல்லி ஆடிஷன் வெச்சு அவங்களுக்குத் திருப்தியான பின்னாடிதான் வந்தாங்க.’’

எல்லாப் படங்களிலும் நிறைய இசையமைப்பாளர்கள், நிறைய ஒளிப்பதிவாளர்கள் எதனால அந்த கலெக்டிவ் எஃபர்ட் தேவைப்படுது?

’’நான் ஒரு கதை யோசிக்கும் போதே அதுக்குத் தேவையான சவுண்டையும் சேர்த்துதான் யோசிப்பேன். சில சமயம் ஸ்க்ரிப்ட்லயே பாட்டு இருக்காது. `சஜன்' ட்ராக் படத்திலயே கிடையாது. ஆனா, நான் அதைக் கேட்டதும் இது படத்தில் இருந்தா நல்லாயிருக்குமேனு சொல்லி அதுக்கு ஒரு சீன் வெச்சேன். ஏன்னா அது படத்தில் இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்னு அதைக் கேட்கும் போது தோணுச்சு. அதுக்கான காட்சிகளை யோசிச்சு சேர்த்தேன். நிறைய இன்டிபென்டன்ட் இசைக்கலைஞர்கள் கவனம் பெறலனு நினைக்கறேன். சினிமா இசையமைப்பாளர்கள் பண்றது மட்டும்தான் இசைனு இல்ல, அதைத் தாண்டி நிறைய திறமையான கலைஞர்கள் சரியான அடையாளம் இல்லாம இருக்காங்க. அதனாலயே அவங்களை என் படங்கள்ல பயன்படுத்தறேன். பிரசாந்த் பிள்ளை ஒரு ட்ராக் அனுப்பி வெச்சார். அது ஒரு பேண்ட் கம்போஸ் பண்ண இசை. அவங்களைப் படத்துக்குப் பண்ண சொல்லலாம்னு அவரே சஜஸ்ட் பண்றார். இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் போது எனக்கு இன்னும் கூட கம்ஃபர்ட்டா இருக்கு. 

ஒளிப்பதிவும் அந்த மாதிரிதான். முதலில் நாலு கதைகளுக்கும் நாலு பேரை வெச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அந்த ஃபீல் வேற வேற மாதிரி இருக்கணும்னு. ஆனா அந்த நேரத்தில் துல்கருக்குக் குழந்தை பிறந்ததால கொஞ்சம் ஷெட்யூல் தள்ளிப் போயிடுச்சு. அதனால், கடைசில அந்த நாலாவது கேமராமேன் வேற படத்துக்குப் போயிட்டார். மூணாவது கதைய ஒளிப்பதிவு பண்ணின கிரிஷ்தான் நாலாவது கதைக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். எந்த சீனும் முந்தைய கதைய நினைவுபடுத்திடக் கூடாதுன்னு பார்த்துப் பார்த்து வேலை செய்தோம்.’’

இந்தியில் அமிதாப் பச்சன் வெச்சு ஒரு படம் பண்ணியிருக்கீங்க, தமிழ்ல அது மாதிரி பெரிய ஸ்டார்ஸ் கூட வேலை செய்யணும்னு ஐடியா இருக்கா?

’’யாருக்குதான் இருக்காது. எல்லா பெரிய ஸ்டார்களையும் வெச்சு படம் பண்ணணும்னு எனக்கு ஆசைதான். எனக்கு விஜய் பிடிக்கும், அஜித் பிடிக்கும்... அதுக்காக ஒரு படம் பண்ண முடியாதில்ல. அதுக்குன்னு ஒரு கதை அமையணும். ஆர்யா எனக்கு அவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்டு. ரொம்ப நாளா சேர்ந்து படம் பண்ணணும்னு முயற்சி பண்றோம். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு களம் அமைய மாட்டேங்குது. நான் `ஷைத்தான்' படம் எடுக்கும் போது அதில் வர்ற போலீஸ் ரோலில் நடிக்க கார்த்திய கேட்டேன். முடிஞ்ச அளவு அவரை ஒத்துக்க வெச்சிட்டேன். ஆனா, கடைசில நடக்காம போயிடுச்சு.’’

ஓர் இயக்குநருடைய அசிஸ்டன்டா இருந்தா அவருடைய சாயல் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும். மணிரத்னம் கிட்ட இருந்து என்ன சாயல் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கறீங்க?

’’புழக்கத்தில் இருக்கும் புராணங்களைப் பின்னணியில் இணைச்சு கதை பண்றது. டேவிட்ல நல்லா கவனிச்சீங்கன்னா, பைபில்ல மைத்தாலஜி ஒன்னு இருக்கும் ஜீவா போர்ஷன் அப்படியே டேவிட் - கோலியாத் கதையை இணைச்சிருந்தேன். வலிமையான ஒருத்தனை எதிர்க்கும் எளியவன்தான் ஜீவாவுடைய போர்ஷன். அதே போல சோலோவில் சிவனுடைய கதைகள்.’’

மணிரத்னத்தை நடிக்க வெக்கணும்னு என்னைக்காவது தோணியிருக்கா?

’’இல்லவே இல்ல. யாரும் கேட்டிருக்காங்கலானு தெரியல. ஆனா, அவர் பண்ணவே மாட்டார். என்னோட அசிஸ்டென்ட் ஒருத்தர் அவர் எடுக்கப் போற படத்தில் மணிரத்னமாவே அவரை நடிக்க வெக்கணும் கேக்கட்டுமான்னார். இல்ல கேக்காதீங்கன்னுட்டேன். ஆனா, அவருடைய படம் ஒன்ன எடுத்து ரீமேக் பண்ண ஆசை. இதை நான் முன்னாலயே கூட சொல்லியிருக்கேன். எனக்கு அவருடைய `அக்னிநட்சத்திம்' படத்தை இந்தியில் ரீமேக் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஏன் இந்தியிலனா, தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்கெனவே அந்தப் படம் நல்லா தெரியும். அத எப்படி எடுத்தாலும் அவங்க எதிர்பார்ப்ப நம்ம பூர்த்தி செய்ய முடியாது. அதுவே இந்திலனா, கொஞ்சம் சேஃப்ல.’’

இயக்குநரா சில படங்கள் முடிச்சிட்டீங்க அதுக்குப் பிறகு மறுபடி `காற்று வெளியிடை'ல எதற்காக உதவி இயக்குநரா வேலை செய்தீங்க?

’’நான் ஆரம்பத்தில் சினிமா ஆர்வம் வந்து அவர் கிட்டதான் உதவி இயக்குநரா சேர அப்ளை பண்ணேன். ஆனா, பதிலே வரல. அதுக்குப் பிறகு என்னோட குறும்படம் மூலமாதான் அவர்கிட்ட உதவி இயக்குநரா சேரும் வாய்ப்பு கிடைச்சது. மணி சார் கூட வேலை செய்யறது எனக்கு எப்போதும் பிடிச்ச ஒன்னு. நான் இந்தியில் `ஷைத்தான்' படம் முடிச்ச பிறகும் கூட அவர்ட்ட எப்போ பேசினாலும் "அடுத்த படம் எப்போ தொடங்கறீங்க, நான் வந்து வேலை செய்யணும்"னுதான் கேட்பேன். அவர் `கடல்' தொடங்கினப்போ எனக்கு `டேவிட்' வேலை இருந்தது. `ஓகே கண்மணி' தொடங்கினப்போ `வஸீர்' வேலைல மாட்டிகிட்டேன். சரியா `காற்று வெளியிடை' தொடங்கினப்போ நான் துல்கர்கிட்ட, "நான் போய் மணி சார் படம் முடிஞ்சதும் வர்றேன், நீயும் உன்னோட மத்த படங்கள முடிச்சிடு"னு சொல்லிட்டு வந்து வேலை செய்தேன். எந்த விஷயத்தையும் கத்துக்கிட்டே இருக்கறது நல்ல விஷயம்தானே, அதுவும் கத்துக் கொடுக்கறது மணி சார்னும் போது எப்படி போகாமா இருக்க முடியும். அவர் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கான பாடம்தான்.’’

அடுத்த படம்?

’’இன்னும் தெலுங்கு, கன்னடத்தில் படம் பண்ணல, பேசாம ரெண்டயும் சேர்த்து ஒரு பைலிங்குவலப் போடுவோமானு தோணுது. ஆனா, மேக்ஸிமம் இந்தியில்தான் இருக்கும்னு நினைக்கறேன்.''