Published:Updated:

டான்ஸுக்காக வியர்வை சிந்திய எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-12

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
டான்ஸுக்காக வியர்வை சிந்திய  எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-12
டான்ஸுக்காக வியர்வை சிந்திய எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-12

எம்.ஜி.ஆர் தன் படங்களில் வித்தியாசமான நடனக்காட்சிகள் அமையவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆகவே அவருடன் நடிக்கும் நடிகையாரும் நடனப்பயிற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். மந்திரிகுமாரி பட நாயகி சரோஜா (உதயசங்கரின் மாணவி) முதல் பத்மினி, ஜெயலலிதா, லதா எனப் பலரும் நடனத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். சரோஜாதேவி ‘குரூப் டான்சராக’ இருந்து கதாநாயகி ஆனவர். கே.ஆர். விஜயா ‘ஸ்ட்ரீட் டான்சராக’ இருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் ‘சினிமா டான்ஸ்’ ஆடுவதில் வல்லவர்களாக இருந்தனர். இவர்கள் தவிர சிறந்த நாட்டியக்காரர்களான E.V. சரோஜா, எல் விஜயலட்சுமி, ஹெலன் (ஹிந்தி) ஆகியோரையும் எம்.ஜி.ஆர் தனது பாடல் காட்சிகளில் பயன்படுத்தினார். நடனக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் தனது உடையும் நடையும் வெகுப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

கதாநாயகியின் தகுதி

கதாநாயகியாக நடிக்க விரும்புவோர் நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழைத் தெளிவாகப் பேசவேண்டும் என்று ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர் நடனத்தை அடிப்படைத் தகுதியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஞ்சுளாவை ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது அவருக்குத் தனி ஆசிரியர் வைத்து நடனம் கற்பிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நடனப்பயிற்சியே கதாபாத்திரத்தின் உணர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு கண்களாலும் முகபாவத்தாலும் உடல்மொழியிலும் அவற்றைப் பிரதிபலிக்க உதவும் என்பதில் எம்.ஜி.ஆர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நடிப்பில் அவர் தன் உடல்மொழியோடு நயனபாஷையையும் பொருத்தமாகச் சேர்த்திருப்பார். பாடல் காட்சிகளில் அவர் கண் அசைவு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

காவல்காரன் படத்தின் காவல்நிலையக் காட்சியில் நம்பியார்தான் நிரபராதி என நிரூபிக்க முயலும் போது எம்.ஜி.ஆருக்கு அதிக வசனமே இருக்காது. அவரது கண் அசைவும் தலை அசைவும் அவர் பேசவேண்டிய வசனங்களைப் படம் பார்ப்போருக்கு உணர்த்திவிடும். திரை அரங்கில் ரசிகர் இக்காட்சியை மிகவும் ரசித்துப் பார்ப்பர்.

சினிமாவில் நடனக்காட்சி

எம்.ஜி.ஆர் தன் படங்களில் பல வகையான நடனங்களை இடம்பெறச் செய்தார். அவர் ஒவ்வொரு ரசிகரும் அந்த நடனத்தை ரசிக்கும்படி மாற்றியமைத்தும் இருப்பார். நடனத்தில் இலக்கணம் நடன மேடையில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்குப் பொருந்தும். ஆனால், திரைப்படக்கலை மக்களின் ரசனை சார்ந்தது என்பதால் நடன இலக்கணத்தை விட படம் பார்ப்போரின் ரசனையோ முக்கியமாகும். அவர்கள் திரையரங்கை விட்டு வெளியே செல்லும்படி நடனக்காட்சி அமையக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார்.

நடனப்பயிற்சி

எம்.ஜி.ஆர் சாஸ்திரீயக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அதனால், நாடகங்களில் நடிக்கும் போது கர்நாடக சங்கீதப் பயிற்சி பெற்றார். அவர் காரில் போகும்போது தியாகராஜ பாகவதர் பாபனாசம் சிவன், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் பாடல்களை விரும்பிக் கேட்பார். அதுபோல நடனப் பயிற்சியும் பெற்றார். குமாரன் ஆசான் என்பவரிடம் முறைப்படி நடனம் பயின்றார். ஸ்ரீ முருகன் படத்தில் நடிகை மாலதியோடு இணைந்து சிவதாண்டவம் ஆடினார்.

நாடகங்களில் பெண்வேஷம் ஏற்று நடித்து வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தனது மேக்கப்மேனாக வைத்துக்கொண்ட ராம்தாஸ் என்பவருடன் இணைந்து ஒரு நாடகத்தில் இருவரும் ஊர்வசியும் மேனகையுமாக நடனம் ஆடினர். மேடையில் மக்கள் முன்னிலையில், (சினிமாவில் இருக்கும் ‘ரீடேக்’ வசதிகள் இன்றி) நேரடியாக அழகாக நடனம் ஆடத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் சினிமாவிலும் நடனக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத் தேவைப்படும்போது உரிய நடனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

வழுவூர் ராமையாபிள்ளை ஒரு பேட்டியில் சிறந்த”எம்.ஜி.ஆர் நடனக்கலைஞர் அவரது நடனங்களை அவரே பெரும்பாலும் அமைத்துக் கொள்வார். நாங்கள் சொல்லித்தர வேண்டிய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நடன வகைகள்

எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்

எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

“ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

பங்க்ரா நடனம்

பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

மேலை நாட்டு நடனம்

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்

டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

டான்ஸ் மாஸ்டர்கள்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார். 

ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.