Published:Updated:

"விஜய், மகேஷ்பாபு நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்குலாம் ஓ.கே.... ஆனா, அஜித்துக்கு?!’’ - குழம்பும் தீபா

"விஜய், மகேஷ்பாபு நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்குலாம் ஓ.கே.... ஆனா, அஜித்துக்கு?!’’ - குழம்பும் தீபா
"விஜய், மகேஷ்பாபு நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்குலாம் ஓ.கே.... ஆனா, அஜித்துக்கு?!’’ - குழம்பும் தீபா

தமிழ் சினிமாவின் புது அம்மா தீபா ராமானுஜம். `பிச்சைக்காரன்' பட விஜய் ஆண்டனி, 'ரஜினி முருகன்' சிவகார்த்திகேயன், 'இது நம்ம ஆளு' நயன்தாரா, 'ஸ்பைடர்' மகேஷ்பாபு... என முன்னணி நட்சத்திரங்களுக்கு அம்மாவாக நடித்து, கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் அம்மாவாக வலம் வருகிறார் தீபா. 

''திடீர்னு எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?"  

“நான் ஒரு டயட்டீஷியன். என் கணவருக்கு ஐ.டி வேலை. அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் வரும். நானும் அவர்கூட ஊர்ஊரா மாறிட்டே இருந்ததால் டயட்டீஷயன் வேலையைச் சரியா செய்ய முடியலை. அதனால ஃபீல்டையே மாத்திக்கிட்டு தூர்தர்ஷன்ல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க நான் தொகுப்பாளர். பிறகு, நிறைய நாடகங்களுக்கு நானே ஸ்கிரிப்ட் எழுதி நடிச்சேன். கணவருக்கு மீண்டும் டிரான்ஸ்ஃபர். அதனால அமெரிக்கா போயிட்டோம். அங்க `க்ரிய நாடகக் குழு'னு ஒரு நாடக கம்பெனி தொடங்கி, நிறைய மேடை நாடகங்கள் நடிச்சு, இயக்கிட்டு இருந்தேன். அதையும்தாண்டி திரைப்பட இயக்குநராகணும்னு ஆசை. அந்த ஆசைதான் என்னை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரவெச்சுது.”

"‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ்பாபுக்கு அம்மாவா நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி சொல்லுங்க?”

"அந்தப் படத்தில் நடிக்க என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. 'நீங்க ஏற்கெனவே பல படங்களில் நடிச்சிருக்கீங்க. ஆடிஷனுக்குக் கூப்பிடுறதால் தப்பா எடுத்துக்காதீங்க'னு சொன்னாங்க. ‘நீங்க கூப்பிட்டதே எனக்கு சந்தோஷம். நான் ஆடிஷனுக்கு ரெடி'னு சொன்னேன். சில சீன்ஸ் நடிச்சுக்காட்டச் சொன்னாங்க. நானும் நடிச்சுக்காட்டினேன். அந்த ஸ்பாட்லயே முருகதாஸ் சார் என்னை செலக்ட் பண்ணிட்டார். மகேஷ்பாபுவுக்கும் எனக்கும் யாருமே இன்ட்ரோ கொடுக்கலை. அவரே என்கிட்ட வந்து கை கொடுத்துப் பேசினார். 'எங்க இருந்து வந்திருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க'னு விசாரித்தார். நான் அவர் நடிச்ச ஒரே ஒரு படம் மட்டும்தான் பார்த்திருந்தேன். அதையும் அவர்கிட்ட சொன்னேன். சந்தோஷப்பட்டார்."

"‘ஸ்பைடர்’ல நடிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்குமே?"

"நிறைய நடந்துச்சு 'ஸ்பைடர்' படம் தமிழ், தெலுங்கு ரெண்டு மொழியிலும் ஒரே டைம்ல ஷூட் பண்ணினாங்க. முதல்ல தமிழ்ல எடுத்ததுக்குப் பிறகு தெலுங்குல எடுப்பாங்க. டயலாக் பேப்பர் கையில தந்த உடனேயே நான் ஸ்கூல்ல பாடம் படிக்கிற மாதிரி மனப்பாடம் பண்ணிட்டு இருப்பேன். திடீர்னு 'ரெடியா?'னு முருகதாஸ் சார் குரல் மட்டும் கேட்கும். 'அய்யயோ.. அதுக்குள்ளயே கூப்பிட்டுட்டாங்களே'னு பயந்துட்டு இருப்பேன். என் முகத்தைப் பார்த்துட்டு மகேஷ்பாபு, 'நோ... நோ.. நாட் ரெடி... நாட் ரெடி'னு சொல்வார். நான் டயலாக் மனப்பாடம் பண்ணதை தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம்தான் 'ஓ.கே' சொல்வார் மகேஷ்பாபு. இப்படி 'ஸ்பைடர்' படம் நடிச்சு முடிக்கிறவரை ஒவ்வொரு நாளும் செம  ஃபன். இந்தப் படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுத்த முருகதாஸ் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்." 

"இன்னமும் எந்தெந்த ஹீரோ-ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கணும்னு ஆசை?"

"ஏங்க, சில படங்களில் அம்மாவா நடிச்சனால எல்லாப் படங்களிலும் அம்மாவாவே நடிக்கணும்னு அவசியம் கிடையாது. ஆனா, சில ஹீரோஸ்கூட நடிக்கணும்னு மட்டும் ஆசை இருக்கு. விஜய், தனுஷ் அடுத்து அஜித். ஆனா, அஜித் இப்ப வேற லுக்குக்கு மாறிட்டார்ல. அவருக்கு அம்மாவா நடிச்சா மக்கள் ஏத்துப்பாங்களானு தெரியலையே.” (சிரிக்கிறார்) 

"மலையாளப் படங்களில்கூட அம்மா ரோலில் நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களாமே?" 

" 'விமானம்' என்ற மலையாள படத்துல பிருத்விராஜூக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். இந்தப் பட ரிலீஸுக்காக நான் ரொம்ப ஆவலா காத்திருக்கேன். 'இந்தப் படம் வெளிவந்தால் நீங்க மலையாளத்துலயும் பிஸி ஆகிடுவீங்க'னு படத்தோட இயக்குநர், தயாரிப்பாளர் சொன்னாங்க. நல்லப் படங்கள் வந்தால் மலையாளத்துலயும் நடிக்க வேண்டிதான். சினிமா என்பதே மொழியைக் கடந்ததுதானே.''

''தொடர்ந்து அம்மாவாகவே நடிக்க போர் அடிக்கலையா?"

"சில சமயம் இன்னும் நிறைய சேலஞ்ச் பண்ணுற மாதிரி ரோல் வந்தா நல்லா இருக்கும்னு தோணும். ஆனா, இங்க அம்மாவா நடிக்கறது பிரச்னை இல்லை. இந்த அம்மா கேரக்டருக்கு ஸ்கோப் கொடுத்து நடிக்க வெச்சாங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.''

"சரண்யா பொன்வண்ணன்தான் தமிழ் சினிமாவில் இன்னைக்கு நம்பர் ஒன் அம்மா. இப்ப நீங்களும் பல படங்கள்ல அம்மாவா வர்றீங்க. அவங்களுக்கு நீங்கதான் போட்டினு சொல்லலாமா?" 

சிரிக்கிறார். "இங்க யாரும் யாருக்குமே போட்டி இல்லைங்க. இங்க எவ்வளவோ படங்கள் தயாரிச்சுட்டு இருக்காங்க. வாராவாரம் பல படங்கள் வெளியாகுது. எல்லாப் படங்களிலும் நாம நடிக்கணும்... நாம இருக்கணும்னு நினைச்சா முடியுமா? சரண்யா வேற டிராக். நான் வேற டிராக்... ஆனா, நீங்க சரண்யாகூட என்னை கம்பேர் பண்றதே எனக்கு சந்தோஷமா இருக்கு."

 "சரண்யா பொன்வண்ணனை நேர்ல சந்திச்சுப் பேசி இருக்கீங்களா?"

"நாங்க ரெண்டு பேரும் சென்னைப் பெண்கள் கிறிஸ்துவ காலேஜ்லதான் படிச்சோம். நான் எம்.எஸ்.சி படிக்கும்போது அவங்க பி.எஸ்.சி. படிச்சுட்டு இருந்தாங்க. அப்ப அவங்க 'நாயகன்' படம் நடிச்சுமுடிச்சிருந்த சமயம். ஒரேஒருமுறை பார்த்துப் பேசியிருக்கேன். அவ்வளவுதான். சினிமாவுக்கு வந்தபிறகு இன்னமும் சந்திக்கலை.”

"உங்கக்கூட நடிச்ச நடிகர், நடிகைகளைப் பற்றி ஒருவரியில் சொல்லணும்னா என்ன சொல்லுவீங்க?”

"நயன்தாரா, அவங்க எப்பவும் யார்கிட்டயும் தேவைக்கதிகமா பேச மாட்டாங்க. நல்ல மனசு உள்ளவங்க. சிவகார்த்திகேயன், கலகலனு பேசுற தன்மையான பையன். விஜய் ஆண்டனி, ரொம்ப யதார்த்தமான மனிதர், செம இன்டலிஜன்ட்.மகேஷ் பாபு, பந்தாவே இல்லாதவர். உண்மையாகப் பழகுவார். பிருத்வி ராஜ்,  திறமையான நடிகர்."

"சரி, இதுல யார் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சவங்க?"

"அய்யயோ... ரொம்ப தர்மசங்கடமான கேள்வியா கேட்குறீங்களே. சரி, பதில் சொல்லிடறேன். கலகலனு இருக்குறதால சிவாவை எப்போதுமே எனக்குப் பிடிக்கும். மகேஷ்பாபு கூடவும் இன்னோரு படம் வேலை செய்யணும்னு ஆசை இருக்கு. (எதையோ யோசித்தவர்) இந்த பதிலை படிச்சுட்டு விஜய் ஆண்டனி கோவிச்சுகிட்டார்ன்னா அதுக்கு நீங்கதான் பொறுப்பு.''

"இயக்குநராகணும்னுதான் ஆசைனு சொன்னீங்க. அதுக்கான முயற்சி எந்தளவுல இருக்கு?”

“நான் டைரக்டர் ஆகணும்ங்கிற ஆசையோடு அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தப்ப, நான் நினைச்சமாதிரி எதுவுமே இங்க நடக்கலை. ரியாலிட்டி வேற மாதிரி இருந்துச்சு. அப்ப எனக்கு இரண்டு சாய்சஸ் இருந்துச்சு. ஒண்ணு என்ன நடந்தாலும் இங்கயே தங்கிப் போராடுவது, ரெண்டாவது வந்த வழியைப் பார்த்து திரும்பவும் ஊருக்கே போய்டுறது. எனக்குத் தோல்வியோடு அமெரிக்கா போக கொஞ்சம்கூட விருப்பமில்லை. என் கணவரும் ரொம்ப சப்போர்ட் பண்ணினார். அந்தச் சமயத்துல சினிமா, டி.வி-னு நடிக்க வாய்ப்புகள் வந்தன. கே.பி சார் உயிரோட இருந்தபோது நடிக்கக் கூப்பிட்டார். 'இல்லை சார்'னு மறுத்தேன். அப்ப அவருக்கு என்மேல ரொம்ப வருத்தம். அவர் இறந்த பிறகு நான் ரொம்பரொம்ப வருத்தப்பட்டேன். ஒருகட்டத்துல நடிக்க வர்ற வாய்ப்பை தவிர்க்கவே முடியலை. கதைகேட்டு ரொம்ப செலக்ட்டீவான படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். நல்ல பேரும் கிடைச்சுது. தவிர கொஞ்சம் நேரமும் கிடைக்குது. அதனால என் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் அப்பப்ப செஞ்சுட்டு இருக்கேன். 

இப்ப நான் ஒரு டீம் ஃபார்ம் பண்ணி வெச்சிருக்கேன். ஒரு முழு பைண்டட் ஸ்கிரிப்ட்டும் ரெடி. பல போராட்டங்களுக்குப்பிறகு இப்ப கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது. எழுதி வெச்சிருக்கும் ஸ்கிரிப்டும் ஒரு பெண்ணை மையமா வெச்சு எழுதிய கதைதான். என் படத்துக்கான அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும். விரைவில் இயக்குநர் தீபாவை பார்ப்பீங்க!''

ஆல் தி பெஸ்ட் மேடம்! 
 

பின் செல்ல