Published:Updated:

‘அலைபாயுதே’, ‘விடிவி’ கார்த்திகளை மெர்சல் பண்றான் இந்தக் கார்த்தி! - ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘அலைபாயுதே’, ‘விடிவி’ கார்த்திகளை மெர்சல் பண்றான் இந்தக் கார்த்தி! - ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம்
‘அலைபாயுதே’, ‘விடிவி’ கார்த்திகளை மெர்சல் பண்றான் இந்தக் கார்த்தி! - ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம்

`மெர்சல்' படத்தின் முதற்காட்சியில் இளையதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வது போலவே, இந்தப் படத்தின் முதற்காட்சியில் நம் சின்னதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி, மருத்துவர்களின் நிலை என இரு படங்களுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் வேறு. இப்படி `மெர்சலு'க்கே ஜோடிக்கட்டாக நிற்பது யார் தெரியுமா? ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, கெட்ட பய சார் இந்தக் கார்த்தி.

மேற்சொன்ன ஓப்பனிங் காட்சியை அப்ரூட்டாக கட் செய்தால், அடுத்து அல்ட்ரா மாடலாக ஸ்பைக் கலையாமல் கல்லூரிக்கு பைக்கில் வந்து இறங்குகிறார் Bharath. ‘நான் பொண்ணுங்களோடலாம் ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கறதில்லை. ஒன்லி வித் பாய்ஸ்' எனக் கை கொடுக்க வந்த பெண்ணிடம் அதப்பாக பேசிவிட்டு, அதற்கு உன்னதமான ஒரு காரணத்தையும் சொல்கிறார். அது என்ன காரணமென அப்புறம் சொல்கிறோம். இப்படி பரத்தின் `பேரன்பையும் பெருங்கோபத்தையும்' கண்டு, கல்லூரியின் முதல்நாளே அவருக்கு ஏழெட்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். மொத்தமே, அந்தக் கல்லூரியில் பத்துபேர்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை.

படத்தில், வித்யா (ருஹானி ஷர்மா)வுக்கு ஏனோ பரத்தைக் கண்டாலே ஒரே வெறுப்பு. மாடியிலிருந்து ருஹானி தவறவிடும் ஃப்ளோரன்ஸ் க்ளாஸை கீழே நின்று அழகாக கேட்ச் செய்கிறார் பரத். அதைப் பார்த்ததும் ருஹானியின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, உடனே `இப்படி எத்தன காலத்துக்குதான் பாட்டில கீழ போட்டுட்டு கண்ண மூடிப்பீங்க, அதான் கேட்ச் பிடிச்சு நீ கண்ணு தொறக்கும் வரை வெய்ட் பண்ணேன்' என ஃப்ளாஸ்கை கீழே போட்டுடைத்து, ருஹானியின் வயிற்றில் பறந்த பட்டாம்பூச்சியை பிடித்து `சப்சப்'னு வெளுக்கிறார். நாளடைவில் பரத்தின் நல்ல குணம் தெரிந்ததும், ருஹானி அவரைக் காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார். காதலைச் சொன்னதும் `அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு' என ருஹானியைத் தனி கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்று, அறையில் கலர் பலூனெல்லாம் ஊதி மாட்டிவிட்டு, தன்னுடன் `கமிட்' பண்ணிக் கொள்ள அழைக்கிறார். `ச்சீ... உன்னோட மனசுகுள்ள இந்த என்னத்தோடதான் இருந்தியா?' என கட் அண்ட் ரைட்டாக பேசி காதலை `கட்' செய்துவிட்டு கிளம்பிவிடுகிறார் ருஹானி. பரத் எதற்காக இப்படி ஒரு கப்பித்தனமான கண்டிஷன் போட்டார், முதல் காட்சியில் நீதிமன்றத்துக்கு ஏன் சின்னதளபதி அழைத்து வரப்பட்டார், மாணவர்கள் ஏன் கடைசி பெஞ்சில் அமர்கிறார்கள், லவ்வுக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம், பாய் ஃப்ரெண்ட் என்றால் என்ன, காதல் எப்போது தீவிரவாதம் ஆகிறது எனப் பல விஷயங்களை அடிமட்டம் வரை சென்று அலசியிருக்கிறது `கடைசி பெஞ்ச் கார்த்தி'. கொளுத்திப்போடுவோம்..!

முதலில் பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ளாததற்காக, அவர் சொல்லும் உன்னத காரணம் இதோ. "இப்ப நான் இவனோட பைக்ல போகும் போது, முன்னால ஒரு ஆன்ட்டி இருந்தா, அந்த ஆன்ட்டி சூப்பர்லனு சொல்லி ஷேர் பண்ணிக்குவேன். எனக்கு மனசு சரியில்லனா குவாட்டர் அடிச்சுட்டு இவன் மேலயே குப்புறப் படுத்து தூங்கிருவேன். ஆனா, இதெல்லாம் உன்னோட பண்ண முடியுமா" என முதல்முறை சந்திக்கும்போது மரியாதை நிமித்தமாக கை கொடுக்க வரும் பெண்ணை கதிகலங்கவைக்கிறார் பரத். புரட்சிகரமான படம். இதுமட்டுமல்ல, இன்னும் மறைக்கப்பட்ட பல பிரச்னைகளைத் தோலுரித்துக் காட்டுகிறது படம். ஒரு காட்சியில், பரத்தின் நண்பர்களில் ஒருவருக்குச் சந்தேகம் ஒன்று எழுகிறது. "நாம பொண்ணுங்களப் பத்தி கேலி பேசுற மாதிரி; பொண்ணுங்களும் நம்மள பத்தி பேசுவாங்களா?" அதற்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சியும், அதில் இடம் பெற்றிருக்கும் வசனங்களும் பேரண்டத்தையே மாற்றும் பெரும் சக்தியைத் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை. விபசாரத்தின் மீதான மாற்றுப் பார்வை, `ஆணுறை, குழந்தையை வேணும்னா தடுக்கும். ஆனா, அசிங்கத்தைத் தடுக்காது' வகையிலான வசனங்கள், ரத்ததானத்திற்கு ஆட்களை அழைத்து வர ஹீரோயின் கையாளும் யுக்தி, ரவிமரியா சொல்லும் ட்ரெண்டிங் காமெடிகளென எல்லாம் சேர்ந்து படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. 

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத புது வில்லனை இந்தப் படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். அவர் வந்து ஹீரோயினிடம் பிரச்னை செய்யும் ஒரே ஒரு காட்சியிலும், பறந்து வந்து அவர் நெஞ்சுலேயே மிதிக்கிறார் பரத். பேசிவிட்டு அடிப்பதெல்லாம் சாதாரணவர்களின் ஸ்டைல், அடித்துவிட்டு பேசுவதுதான் பரத்தின் ஸ்டைல். "யார்ரா இவன்?" என பரத், வில்லனைப் பற்றி விசாரிக்க, "இவனுடைய அப்பாதான் இந்த காலேஜ் கட்ட கொஞ்சம் இடமும் பணமும் கொடுத்தார். இவனோ பொழுது போகலைனா காலேஜுக்கு வந்து கலாட்டா பண்ற பொறுக்கி பொறம்போக்கு பய" எனப் படுகேவலமாய் ஒரு பதில் வர, "கேட்டியாடா...அதான்டா நானு" எனச் சிலிர்த்தெழுகிறார் அந்த வில்லன்! இப்படியாக படத்தின் ஒவ்வொரு மூளையிலும் ஒரு சர்ப்ரைஸ் எலமென்ட்டைப் புதைத்து வைத்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் ரவி பார்கவ்.

லவ்வுக்கும் காதலுக்கும் வித்தியாசம் இருப்பது போல், பழத்திற்கும் பழுத்த பழத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், பேக்குக்கும் - இன்னசென்ட்ஸுக்கும் உள்ள வித்தியாசங்களையும் புரியவைக்க முயற்சி செய்கிறார். க்ளாஸில் ஒரு காட்சியில் கூட பரத் கடைசி பெஞ்ச்  பக்கமே போகவில்லையே பின் எதற்கு இந்தப் படத்திற்கு `கடைசி பெஞ்ச் கார்த்தி' எனப் பெயர்ங்கிறேன். "முதல் பெஞ்ச்ல உட்கார்ந்தா சுத்திலும் நம்மள யாராவது கவனிச்சிட்டே இருக்கற மாதிரி இருக்கும். மிடில் பெஞ்ச்ல உட்கார்ந்தா சுத்திலும் எல்லாரும் பண்ணிட்டிருக்க ரொமான்ஸ்தான் தெரியும். அதுவே கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்தா என்னோட கவனம் முழுக்க பாடத்துமேலதான் இருக்கும்" என ஒரே வசனம் மூலம் கடைசி பெஞ்ச் பற்றிய மூட நம்பிக்கைகளைக் கட்டுடைத்திருக்கிறார் இயக்குநர். அடுத்து "இந்த உடம்பு, கல்யாணம் ஆகற வரைக்கும் அம்மா, அப்பாவுக்குச் சொந்தம். கல்யாணம் ஆன பின்னால புருஷனுக்குச் சொந்தம்" எனப் புதுசுபுதுசாய் புரளிகளைக் கிளப்பியிருக்கிறார்.   

யாராவது பின்னணி இசையமைப்பாளரின் வீட்டிற்கு சென்று ஃப்யூஸ் கட்டையைப் பிடுங்கி, மின்சாரத்தை நிறுத்தியிருக்கலாம். காரணம் பிரான்ஸிஸ் இசையமைத்திருக்கும் பின்னணி இசை பின்னணி இசையே கிடையாது. அது முன்னணிக்கும் முன்னாடி அணி இசை. படம் முழுக்க இசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த இசைக்குப் பத்தடி பின்னால் தள்ளி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கிடைத்த கேப்பில் எல்லாம் மியூசிக் போடாமல், கேப்பே விடாமல் மியூசிக் போட்டிருக்கிறார். சில இடங்களில் வசனத்தையே ஓவர் லாப் ஆகி ஒலிப்பதால், இசை இரைச்சலாய் தெரிகிறது. ஆக மொத்தம் எல்லாமே நான் சின்க்லேயே போயிட்டிருக்கு. கண்ணிமைக்கக் கூட இடைவெளிவிடாமல் அத்தனை இன்ஸ்ட்ரூமென்ட்களிலும் இசையமைத்திருக்கிறார் பிரான்ஸிஸ். பிறகு இசைக்க வேறு இசைக் கருவிகளே இல்லாமல் க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் கட்டையை வைத்தே புது இசையை உருவாக்கி, இந்திய இசைக்குப் புது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. "உந்தன் கண்ணில் என்னைப் பாரு, என்ன வேணும் என்கிட்ட கேளு" என்ற வரிகள் ட்யூனுக்குள் செட் ஆகாமல் வெளியே நீட்டிக் கொண்டிருப்பது ஓர் அழகு என்றால், அதை ஒளிப்பதிவு செய்திருந்த விதம் பேரழகு.

படத்தின் நடிகர்கள் பற்றி என்ன சொல்ல, பரத் `ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் கொஞ்சம் நீளமான கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். கூடவே அவர் `காதல்' பட ரெஃபரன்ஸை பயன்படுத்தியிருந்த விதம் அழகு. ஆனால், ’எப்படியிருந்த மனுஷன்...’ என சிந்திக்கவைக்கிறது. கதாநாயகிகளாக ருஹானி ஷர்மா, அங்கனா ராய் இருவருக்கும் இந்தப் படம் மூலம் இந்தி, ஒடிசா, பாகிஸ்தானி, ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். படத்தில் பல தமிழ் வசனங்களை அவர்கள் தெலுங்கு, இந்தியில் பேசிய விதமே அதை நிரூபிக்கிறது. பரத்தின் நண்பர்களாக வரும் சித்தூர் சீனு, பவன் கல்யாண் ஃபேனு அனைவரும் சிறப்பு. கூடவே `கொட்டப்பாக்கு' பாபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், பரத்தின் அப்பாவாக நடித்திருந்தவர் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

சும்மா விளையாட்டுக்குச் சொன்னோம் பாஸ். முக்கியமாகக் கதாபாத்திர வடிவமைப்பை குறிப்பிட வேண்டும். நாயகன், நாயகி இருவரின் பெற்றோரும் `கடல்' படத்தில் வரும் அர்ஜூனைப் போல பெரிய மேசைக் காரர்களாக இருப்பார்கள் போல. எல்லாக் காட்சிகளிலும் டைனிங் டேபிள் முன்னாடியே அமர்ந்திருக்கிறார்கள். அதுவும், சப்பாத்தியைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாப்பிடுவதேயில்லை. மாலை வேளையில் படத்துக்குச் சென்றுவிட்டு சீரியல் மிஸ்ஸாகி விட்டதே எனக் கவலைப்படவும் தேவையில்லை. காரணம், ஒரு வசனத்தை பேசிவிட்டு, அந்த ஃப்ரேமில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் க்ளோஸ் அப் வைக்கிறார்கள். படமே பெரியதிரையில் சீரியல் பார்ப்பதுபோன்ற அனுபவத்தைத்தான் கொடுக்கிறது. எனவே சீரியல் + படம் டபுள் தமாக்கா!