Published:Updated:

'300'-ல வெறும் கைலயே விளாசுனவரை, இப்படி பண்ணிட்டீங்ளே?! - #Geostorm படம் எப்படி?

கார்த்தி
'300'-ல வெறும் கைலயே விளாசுனவரை, இப்படி பண்ணிட்டீங்ளே?! - #Geostorm படம் எப்படி?
'300'-ல வெறும் கைலயே விளாசுனவரை, இப்படி பண்ணிட்டீங்ளே?! - #Geostorm படம் எப்படி?

'300'-ல வெறும் கைலயே விளாசுனவரை, இப்படி பண்ணிட்டீங்ளே?! - #Geostorm படம் எப்படி?

வழக்கம் போல்,  உலகம் அழியப்போகிறது அதை எப்படி ஒரு குழு காக்கிறது என்னும் ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் Scifi படம் தான். ஆனால் அதற்கு, இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரணம் தான்  'அட்றா அட்றா' லெவல் காமெடி. அந்த ஒரு காரணத்திற்காக, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஃபிளாப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது ஜியோ ஸ்டார்ம்.

 
காலநிலை மாற்றங்களால், உலகம் அழியத் தொடங்குகிறது. கடுமையான வெய்யில், பனிப்பாறை மழை, உறைதல் என பல காரணங்கள். இதை சரி செய்ய ஜேக் லாசன் தலைமையில், ஒரு குழு விண்வெளியில் ஆராய்ச்சிகள் செய்து பல சேட்டிலைட்டுகளைக் கொண்டு உலகைக் காக்கிறார்கள் (அதெப்படி பாஸ் கண்ணாடிய திருப்புனாஆட்டோ ஓடும்). எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க, ஜேக்கைக் குழுவிலிருந்து நீக்குகிறார்கள். ஒரு சேட்டிலைட்டில் வைரஸைப் புகுத்தி, அங்கு உயிர் இழப்பை ஏற்படுத்துகிறார்கள். ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங், துபாய் என பல இடங்களில்  அழிவு தொடங்குகிறது. இதை எப்படி ஜேக் தன் தம்பி மேக்ஸ் லாசனுடன் இணைந்து சரி செய்கிறார் என்பதை விவேகம் பாணியில், அதுதாங்க எமோஷனல் ஆக்ஷன் ஜானரில் சொல்லியிருக்கிறார்கள். 300 திரைப்படத்தில் அதிரடி காட்டிய கெரார்டு பட்லருக்கு, இதில் ஜேக் லாசனாக நடந்துகொண்டே இருக்கிறார். 

Disaster டைப் படங்கள் என்றாலே, பெரிய கட்டிடங்கள் இடிந்து நொறுங்குவது; மக்கள் ' அது வந்துருச்சு எல்லோரும் ஓடுங்க' லெவலில் ஓடுவது; கடல் நீர் சுனாமியாய் மிரட்டுவது; கப்பல் ஊருக்குள் வருவது;இரண்டு விமானங்கள் தரையில் லேண்ட் ஆவது என பல மெகா பட்ஜெட் காட்சிகள் இருக்கும். ஜியோஸ்டார்மிலும் அப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் வருகின்றன. ஆனால், ஒவ்வொரு காட்சிக்கு முன்னும், 'அனுபவம் தான் வாழ்க்கை நண்பா' என ஹீரோவும், ஹீரோவின் தம்பியும் பேசி கொண்டேயிருக்கிறார்கள். அது போக, ' யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ' பாணியில் ரகசியம் என்று எல்லோருக்கும் சொல்லி கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் விடவும் ஹீரோவின் மகளாக வரும் டலிதா பேட்மம் அட்டகாசமாக நடித்திருக்கிறார். முதல் காட்சியில் வரும் வாய்ஸ் ஓவரில் இருந்து, இறுதியில் அவர் வரும் வரை எல்லாமே சிறப்பு. அதே போல், சீக்ரெட் ஏஜென்ட் சாரா வில்சனாக நடித்து இருக்கும் அப்பி கார்னிஷ். ரிவர்ஸ் கியரில் அவர் செய்யும் சாகச கார் சேஸ், இன்னும் சில மாதங்களில் தமிழாக்கப்படலாம். 

படத்தில் நம்மைக் கடுப்பேற்ற எண்னற்ற காட்சிகள் இருக்கின்றன. இவை எல்லாம் போதாதென்று, வழக்கம் போல், இந்தியாவைக் காட்டும் போது, குடிசைப் பகுதி. அதிலும் நாயோடு ஒரு சிறுவன். அவனும் அமெரிக்க சிறுவன். ஹாலிவுட் பரிதாபங்கள் . எப்பத்தான் பாஸ் திருந்துவீங்க?

இண்டிபெண்டன்ஸ் டே, காட்ஜில்லா என பல பழைய மெகா ஹிட் பட்ஜெட் படங்களுக்கு கதை  எழுதிய டியன் டெல்வின், முதல் முறையாக இயக்கியிருக்கிறார். அந்த முடிவை மறு பரீசலனை செய்வார் என நம்புவோம். 

படத்தை முதலில் வேறொரு குழுவை வைத்து படமாக்கி இருக்கிறார்கள். அது தயாரிப்புக் குழுவுக்கு பிடிக்காமல் போக, எல்லா கோட்டையும் அழித்துவிட்டு ரீஷூட் செய்தார்களாம். இதுவும் ரீஷூட் செய்வது போலத்தான் இருக்கிறது. என்ன செய்ய, வேறு வழியில்லாமல், ரிலீஸ் செய்துவிட்டார்கள் போல. குருநாதா... முடியல குருநாதா. உலகம் அழிவதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போதும், ஹாலிவுட் நிறுத்திக்குவோம். 

இறுதியாக ஒரே ஒரு ஸ்பாய்லர். உலகை அழிக்க சேட்டிலைட்டுகளில் வைரஸ் பரப்ப என்ன காரணம் தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்காம். மூக்க பொடப்பா இருந்தா இப்படித்தான் பாஸ். 

அடுத்த கட்டுரைக்கு