Published:Updated:

“இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்... கலாசாரம் தெரிந்தவர்கள்தான் லீடர் ஆக வேண்டும்!’’ - பிரகாஷ்ராஜ் பன்ச்

ம.கா.செந்தில்குமார்
“இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்... கலாசாரம் தெரிந்தவர்கள்தான் லீடர் ஆக வேண்டும்!’’ - பிரகாஷ்ராஜ் பன்ச்
“இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்... கலாசாரம் தெரிந்தவர்கள்தான் லீடர் ஆக வேண்டும்!’’ - பிரகாஷ்ராஜ் பன்ச்

“ ‘மோடியை, ஓர் அரசியல் கட்சியின் தலைவராக நான் பார்க்கவில்லை. அவரை ஓட்டு போட்டு வெற்றி பெறவைத்தவர்களுக்கும் அவர்தான் பிரதமர்; அவருக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். அப்படி நடுநிலையோடு இருக்கவேண்டியவர், ஒரு கொலையைக் கொண்டாடுபவர்களைக் கண்டிக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்க்கையில் எனக்கு பயம் வருகிறது. ‘என் பிரதமரே அமைதியாக இருக்கிறாரே!’ என்ற பயம். என் பயத்தைப் போக்கவேண்டியதுதானே அவருடைய வேலை. இப்பேர்பட்ட படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்கு முன், கொண்டாடுபவர்களைக் கண்டிக்கவேண்டியதுதானே ஒரு பிரதமரின் கடமை?' இந்தக் கேள்வியைக் கேட்டதற்குத்தான், அரசியலாக்குகின்றனர். நீங்கள் கடவுள் அல்ல, எங்களின் பிரதிநிதி மட்டுமே!” - கண்களை நேர் எதிராகப் பார்த்து மனதிலிருந்து பேசுகிறார் பிரகாஷ்ராஜ். அவரின் பேச்சில் தன் தோழியைப் பறிகொடுத்த இழப்பின் வலி தெரிகிறது. கர்நாடகப் பெண் பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாட்டையே உலுக்கியது. இந்த கௌரி, பிரகாஷ்ராஜ் மதிக்கும் லங்கேஷ் என்கிற மூத்த கன்னடப் பத்திரிகையாளரின் மகள்.

“கௌரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்ஸரே... இந்தக் கொலைகளில் ஒளிந்திருக்கும் பேட்டர்னைக் கவனிக்க வேண்டும். இந்துத்துவா, இந்துயிசம் என்கிற மதவெறியை எதிர்ப்பவர்கள், ஃபார்வேர்டு திங்கிங் இருப்பவர்கள் ஒரே மாதிரியாகக் கொல்லப்படுகிறார்கள். கொலையாளிகள் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முதல் கொலை நடக்கும்போது தெரியவில்லை. ஆனால், அடுத்தடுத்து தொடரும்போது அந்த பேட்டர்னில் ஒளிந்திருக்கும் புதிர் பிடிபடத் தொடங்கியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சிஸ்டத்தை, சிந்தனைகளை எதிர்த்துப் பேசினால், அதைக் கேள்விக்குள்ளாக்கினால், அந்த எதிர் குரலை மௌனிக்கவைக்கும் வேலை நடக்கிறது. ‘இந்தக் கொலையைக் கொண்டாடுவது யார் எனத் தெரிகிறது. அப்படிக் கொண்டாடும் பலர், ட்விட்டரில் என் பிரதமர் அவர்களை ஃபாலோ பண்ணுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு பிரதமராக நீங்கள் இதைக் கண்டிக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்றேன். உடனே, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானோர் என்னை அசிங்கம் அசிங்கமாகத் திட்டினார்கள். அந்த அசிங்க முகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு நிறுவனத்தின், ஓர் அமைப்பின் முகங்களாக இருக்கின்றன.”

“நீங்கள் அப்படிப் பேசியதைத் தொடர்ந்து என்ன மாதிரியான எதிர்வினைகளை எதிர்கொண்டீர்கள்?”

“ ‘நீ எப்படி ஒரு தலைவனை அப்படிப் பேசலாம்?' என்ற எதிர்ப்பு. ‘ஓ! அப்ப நான் சரியாகத்தான் பேசியிருக்கேன்’ எனப் புரிந்துகொண்டேன். அதன்பிறகு, சிவராம் கரன்த் அவார்டு வாங்கச் சென்றிருந்தேன். அங்கு, `தேசிய விருதைத் திருப்பிக் கொடுக்கிறேன்’ என நான் சொல்லாததைச் சொன்னதாக, `தேசிய விருதுகளை எப்ப திருப்பிக் கொடுக்கப்போற?’ என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். `நான் ஏன் தேசிய விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்? அது என் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. அப்படி தேசிய விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றால், கர்நாடகாவில் உள்ள பிரச்னைக்கு, தமிழகத்தில் வாங்கிய விருதுகளை ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்? அடுத்து, `ஒரு நடிகனாக நீ எப்படிப் பேசலாம்?' என்கிறார்கள். நாங்கள் மக்களால் வளர்க்கப்பட்டிருக்கிறோம்; அவர்களால் மேடையேற்றப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நாங்கள் கோழைகளானால் ஒரு சமுதாயமே கோழையாகும்.”

“கௌரி லங்கேஷ், அங்கு என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொண்டார்?”

“கௌரி, என்னைவிட இரண்டு வயது மூத்தவர். அவரின் அப்பா லங்கேஷ்தான் என் குரு. லங்கேஷ் பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் நாங்கள் இளைஞர்கள். லங்கேஷ், தான் நினைத்ததைச் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றவர்; ஆகச்சிறந்த பத்திரிகையாளர். `பிரகாஷ், நாம என்னிக்குமே எதிர்க்கட்சியா இருக்கணும்’ என்பார். ‘உன் நண்பன் ஆளும் கட்சின்னா, நீ அவனுக்கு எதிர்க்கட்சியா இரு. கேள்வி கேட்கணும். உண்மையோடு, நேர்மையின் மனசாட்சியா இருக்கிறதுதான் உன் வேலை’ என்பார். அந்தச் சிந்தனைக்குப் பிறந்தவள்தான் கௌரி. நக்ஸல் மூவ்மென்ட்டில் உள்ளவர்களுடன் உரையாற்றி, அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்புவது, சாதி, மத அமைப்புகளுக்கு எதிராகச் செயலாற்றுவது, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசுவது எனத் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார் கௌரி. 

நாங்கள், லங்கேஷ் போன்ற தந்தைகளால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள்; `வாழ்க்கையில் இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும்’ எனச் சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள். அந்தக் கேள்விகளைச் சில வருடங்களுக்கு முன்பு வரை சமூகம் உள்வாங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், கடந்த நான்கைந்து வருடங்களாக இப்படிப்பட்ட குரல்களை நெரிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு கௌரியின் எதிர் குரல் அச்சத்தைத் தந்தது. அதனால்தான் அந்தக் குரலை அமைதியாக்கிவிட்டனர். `நக்ஸல்களை உள்ளே அழைத்து வந்ததால், அந்த நக்ஸல் ஆள்களே கௌரியைக் கொன்றிருக்கலாம்’ என இந்தப் பிரச்னையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். கொலையாளியைக் கண்டறிய, போலீஸ் இருக்கிறது. அதற்கு முன் அந்தப் பழியை இன்னொருவர் மீது போடாதீர்கள்.”

“லங்கேஷ், கௌரி லங்கேஷுடனான மறக்க முடியாத தருணங்கள் பற்றி...”

“பெரிய புத்தகமே எழுதலாம். கர்நாடக இலக்கியத்தில் லங்கேஷுக்கு முக்கியப் பங்கு உண்டு. 1970-களில் நவோதயா லிட்ரேச்சர் மூவ்மென்ட் அங்கு ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில்தான் லங்கேஷ், பத்திரிகை ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்து ஒரு விளம்பரம்கூட இல்லாமல் நடத்திய பத்திரிகை அது. சாதாரண ஒரு குடிமகன் தொடங்கி முதலமைச்சர் வரை குறிப்பிட்டு, `நீ தவறு... நீ முட்டாள்’ என பயமின்றி எழுதியும் பேசியும் வந்தவர்; தன்னைப்போல் உண்மையான, நேர்மையான இளம் நிருபர்களை வளர்த்தெடுத்தவர். அதற்கான மேடையாக தன் பத்திரிகையை மாற்றினார். சிறுகதை எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள்... என ‘லங்கேஷ் பத்திரிகை’யை எல்லோருக்குமான மேடையாக மாற்றினார். லங்கேஷ் சாரின் எடிட்டர் டேபிளில் மாலைப்பொழுதுகளில் நாங்கள் கூடுவோம். என்னை மாதிரியான இளைஞர்கள், கன்னட நாட்டின் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் எந்த பேதமுமின்றி அமர்ந்திருப்போம். எங்களுடன் உரையாடுவார். கருத்துப் பரிமாற்றம் நடக்கும். எனக்கு, கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுக்கும் இங்கிலீஷ் டீச்சரும் அங்கு இருப்பார். அவருக்குச் சமமாக நானும் அமர்ந்து பேசுவேன். 

லங்கேஷ், பாடம் சொல்லித்தரவில்லை; வாழ்ந்துகாட்டினார். ஓர் எழுத்தாளர் தவறாக எழுதினால், `ஏன்டா முட்டாள்தனமா எழுதுற? ஜனங்களை ஏமாத்திட்டிருக்க’ எனக் கோபப்படுவார். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், அரசியல்வாதிகள் அலறுவார்கள். அப்படி இருந்த மனிதர் இறந்த பிறகு, அவர் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகைப் பொறுப்பு அவரின் மகள் கௌரிக்கு வருகிறது. கௌரி அந்தப் பத்திரிகையை லங்கேஷ் அளவுக்கு நடத்தவில்லைதான். ஆனால், அந்த வேலைக்குள் இறங்கிய பிறகு சமூகச் செயற்பாட்டாளர் ஆனார். குறிப்பிட்ட இடைவெளியில் கௌரியும் நானும் பேசிக்கொள்வோம். கன்னையா குமார், தலித்துகளுக்கான பிரச்னை... இப்படி எதுவாக இருந்தாலும் போன் பண்ணுவார். ‘ஹைதராபாத் காலேஜ்ல எதிர்ப்புக் கூட்டம். உடனடியா ஏதாவது பண்ணு’ என்பார். நான் உடனே வாட்டர் பாட்டில், உணவுப் பொட்டலங்களை அனுப்புவேன். கன்னையா குமாரை தன் பிள்ளை என்பார். அவர் பெங்களூரு வந்தால் தங்க, தன் வீட்டில் இடம் கொடுப்பார். `எது ஆளும் கட்சியோ, நாம்தான் எதிர்க்கட்சி. அது நம் கடமை’ என்பார். அந்த எதிர் குரல் அமைதியானதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய வலி. 35 வருட நட்பு. அரசை எதிர்த்தது தவிர, அவள் வேறு தவறு எதையும் செய்யவில்லை. ‘அரசை எதிர்க்கிற, அநியாயத்தைக் கண்டால் துடிக்கிற... ஏன்?’ என்று சமீபத்தில் கேட்டேன். ‘எதிர்க்காம அமைதியா இருக்கிறதும் பிணமா இருக்கிறதும் ஒண்ணு பிரகாஷ்’ என்றார். அவளைப் பிணமாக்கிவிட்டார்கள். என் வயிறு எரியுது சார்.”

“ஒரே மொழி, ஒரே மதம்... என அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் இந்த எண்ணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அது மிகப்பெரிய ஆபத்து. இந்த அளவுக்குத் தமிழ் பேசும் என்னை, நீங்கள் `கன்னடக்காரன்' என்று சொல்லக் கூடாது; `இந்தியன்' என்றே சொல்லவேண்டும். ஆனாலும், நான் கன்னடக்காரன்தான். ஏனெனில், என் வேர் கர்நாடகாதான். பிறகு ஏன் இந்த மொழியைப் பேசுகிறேன்? ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதும் பிற மொழியைத் தெளிவாகப் பேசுவதும் அந்த மொழிக்கு, அந்த இனத்துக்கு நான் கொடுக்கும் கெளரவம். நான் அவர்களை மதித்தால்தான் என்னை அவர்கள் மதிப்பார்கள். `நம்ம ஆளு’ என்பார்கள். `அப்ப, தமிழக அரசியலில் நிற்பீர்களா?’ எனக் கேட்டால், நான் தமிழ்நாட்டில் நிற்க மாட்டேன். இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணோடு வளர்ந்த இந்த மண்ணின் கலாசாரம், மக்களைத் தெரிந்தவர்கள்தான் இங்கு லீடராக வேண்டும். ஆனால், கன்னடன், தமிழன் என்கிற இனவெறியில் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டேன். தகுதி உள்ளவர்கள் ஆளலாம். முடிந்த அளவுக்கு இந்த இனத்தில், இந்த மொழியில், இந்த மண்ணில் தகுதி இருப்பவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எல்லாமே ஒரே மொழியாகிவிட்டால், அதனுடைய தனித்துவம் செத்துப்போய்விடும். இந்தியாவின் அழகே, `எல்லாரும் ஒன்றாக இருப்போம். ஆனால், அவரவர்களின் தனித்துவத்தோடு இருப்போம்’ என்பதுதானே? என் தாய்மொழி கன்னடம். ஆனால், என் முதல் மனைவி லதாவுக்குப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள், தமிழ்நாட்டில் வளர்கிறார்கள். நான் அவர்களுக்குக் கன்னடம் கற்றுக்கொடுக்கவில்லை. `நீ ஏன் இங்கிலீஷ் மீடியம் சேர்க்கிற? தமிழ் மொழி கற்றுக்கொள்ளட்டும். ஏன்னா, அது அவ தாய்மொழி’ எனச் சண்டைபோடுகிறேன். எதற்கு இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளவேண்டும்? இந்தி எனக்குத் தேவையெனில், நான் கற்றுக்கொள்வேன். ஆனால், நீ கட்டாயப்படுத்துவதற்குப் பின்னால் ஏதோ அஜெண்டா இருக்கிறது.”

“சினிமா, வாசிப்பு, மனிதர்கள், விவசாயம்... பிரகாஷ் என்கிற மனிதரால் இவ்வளவு வேலைகளுக்கும் எப்படி நேரம் செலவிட முடிகிறது?”

“நேரம் செலவழிக்க முடியவில்லை என யாராவது சொன்னால், அவன் மிகப்பெரிய சோம்பேறி. சினிமாவில் நடிக்கிறேன், இயக்குகிறேன், தயாரிக்கிறேன், கட்டுரைகள் எழுதுகிறேன், விவசாயம் செய்கிறேன், விவசாயிகளைக் கவனித்துக்கொள்கிறேன், என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன், மனைவியை, அம்மாவைக் கவனிக்கிறேன்... இவை தவிர, நான் தனியாகப் பயணம் செய்கிறேன். இவையெல்லாம்போக, இன்னும் எனக்கு நேரம் இருக்கிறது. நான் இப்படி ஆவேன் என எனக்குத் தெரியாது. எங்கோ ஒரு புள்ளிக்குப் பிறகு ஒரு மனிதன் பெர்சனாலிட்டியாக மாற வேண்டும். `எத்தனை மழைகள், எத்தனை குருவிகள்...’ என்று அரை நூற்றாண்டு மரத்தைப் பார்க்கையில் வரும் உணர்வு, 50 வயதைக் கடந்த அந்த மனிதரைப் பார்க்கும்போது ஏன் வருவதில்லை? ஒரே இடத்தில் நிற்கும் அந்த மரம் அப்படிப் பக்குவமாகும்போது, எல்லா இடங்களுக்கும் நகர்ந்துகொண்டே இருக்கும் மனிதன் ஏன் பக்குவப்படுவதில்லை? நான் என்னால் வளரவில்லை. ஆயிரக்கணக்கானோர் ஏற்றுக்கொண்டதாலும் அவர்களின் அன்பினாலும் அதன்மூலம் எனக்கு இன்னும் நம்பிக்கை வந்து, வளர்ந்திருக்கிறேன். ஒரு புள்ளியில் திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும். கடனோடு போய்விடக் கூடாதே. என்னை வளர்த்த பாலசந்தருக்கு நான் திருப்பிக் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர் என்னைவிட பெரியவர். அவர் எனக்குச் செய்ததை நான் அடுத்தவர்களுக்கு செய்தாக வேண்டும்.''

“கவிதை ஒன்று...''
“தீபத்தை வணங்கினார்கள் மக்கள்
தீக்குச்சியை வணங்கினான் பித்தன். 
ஏனென்று கேட்டேன், 
எரிவதைவிட ஏற்றியது உயர்ந்ததல்லவா” என்றான். 

இப்படி யாரோ என்னை ஏற்றியதால்தானே நான் இங்கு இருக்கிறேன். கொடுக்கும் இடத்திலிருந்து லட்சம் மரங்களையாவது நான் விட்டுப்போக வேண்டும். இனி நான் கொடுத்து ஏழையாவேனா? என் தாய், ஓர் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். யார் யாரோ போட்ட சோற்றினால்தானே அவள் வளர்ந்தாள். அப்படியெனில், அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா? ஒரு மனிதன் உயரத்துக்குப் போகும்போது எத்தனை பேரை உடன் அழைத்துச் செல்கிறான் என்பதுதான் முக்கியம். இல்லையெனில், எங்களின் பெயரும் எங்களின் உயரமும் அசிங்கமாகிவிடும்.”

“தெலங்கானாவில் நீங்கள் தத்தெடுத்த கிராமத்துப் பணிகள் நிறைவடைந்துவிட்டனவா?”

“தெலங்கானாவில் பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன் சார்பில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தோம். 500 வீடுகள், பள்ளிக்கூடம் எனக் கட்டி முடித்து, ஆறு மாதங்களுக்குள் வேறு கிராமம் நோக்கி நகர வேண்டும் என்பதே என் திட்டம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்று உள்ளே நுழைந்த பிறகுதான் தெரிந்தது. இரண்டு வருடங்கள் முடிந்தும் பணிகள் தொடர்கின்றன. ஆனால், ‘இதுக்குப் பிறகு உங்க பொறுப்பு. ஊட்டிவிட்டுட்டே இருக்க முடியாது’ எனச் சொல்லிவிட்டேன். அடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்றிலும் மாநிலத்துக்கு ஒன்று என மூன்று கிராமங்களைத் தத்தெடுக்க இருக்கிறேன். நகரத்தையொட்டிய கிராமமாக இல்லாமல் இன்னும் அடர்த்தியான கிராமங்களைத் தேடி கண்டடைந்திருக்கிறேன். `இந்தக் கடவுளைக் கும்பிடணும்னு சொல்ல மாட்டேன். இவங்களுக்கு ஓட்டு போடணும்னு சொல்ல மாட்டேன். நீங்களும் அரசியல்ரீதியான பிரச்னைகளைத் தூக்கிக்கிட்டு என்கிட்ட வரக் கூடாது. என் வேலை, இந்த ஊரைச் சீரமைப்பது’ என்று கிராமத்துக்குள் நுழையும்போதே தெளிவாகச் சொல்லிவிடுவேன். தவிர, அனைத்தையும் செய்ய நான் அரசாங்கம் கிடையாது. அதனால் அரசுக்கும் குடிமகனுக்கும் இடையே பாலமாக இருந்தால் போதும் என நினைக்கிறேன். தவிர, ஊரைத் தத்தெடுக்க பெரிய செலவு இல்லை. நான் சம்பாதிக்கும் காசுக்கு, இது பெரிய விஷயம் கிடையாது. நேரம்தான் தர வேண்டும். இந்த வேலை எனக்குப் பொறுமையைக் கற்றுத்தந்திருக்கிறது; நான் பார்க்காத, நானே ஆச்சர்யப்படும் பிரச்னைகளைத் தெரியவைத்திருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வுகள் என்னிடம் இல்லை என்பதும் புரிகிறது.”

“தத்தெடுத்த கிராமத்தில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்?”

“நிறைய...  நடிகன் ஒருவன், `ஓர் ஊரைத் தத்தெடுக்கிறேன்’ என அழைத்தால் அனைவரும் வந்துவிடுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம் என்பது புரிந்தது. முதலில் நான் அவர்களை அழைக்கும்போது அனைவரும் என்னுடன் செல்ஃபி எடுக்கத்தான் வந்தார்கள். `எடுக்கட்டும் எத்தனை நாள்கள் எடுப்பார்கள்?’ என்று விட்டுவிட்டேன். ஒரு வாரம் இப்படியே செய்தார்கள். `ஐயய்ய... இவன் இங்கேதான் இருப்பான்போலிருக்கு’ என, பிறகு டயர்டாகிவிட்டனர். `வாங்க பெருக்கி சுத்தம்பண்ணுவோம்’ என அழைத்தேன். வரவில்லை. `ஏன் வரவில்லை?’ என்று அவன் ஊரில் நின்றுகொண்டு அவனிடம் நாம் சண்டைபோடக் கூடாது. அவர்களுடன் இருந்து சாப்பிட்டு, புழங்கி, தூங்கி `நான் விளம்பரத்துக்காக வரவில்லை’ என்பதைப் புரியவைத்து அவர்களை சகஜமாக்க வேண்டும். `டாய்லெட்ஸ் கட்டிக்கணும். இல்லைன்னா இவ்வளவு வியாதிகள் வரும்’ என்றால் புரியாது. `டாய்லெட் மட்டுமல்லாம, அதையே கொஞ்சம் எக்ஸ்டன் பன்னிரண்டு மாடு கட்டுற மாதிரி கொட்டகை போட்டுக்கலாம்’ என்றேன், வந்தார்கள். 

‘புழங்குற தண்ணியையும் குளிக்கிற தண்ணியையும் அப்படியே எடுத்து பூமிக்குள்ள விட்டோம்னா, கிரவுண்ட் வாட்டர் லெவல் அதிகரிக்கும்’ என்றால் `ரோட்ல ஊத்தினாலும் அதுவும் பூமிக்குத்தானே போகுது’ என்பார்கள். அவர்கள் என்ன சயின்டிஸ்டா சொன்னவுடன் புரிந்துகொள்ள? இதற்கு பொறுமை அவசியம். `ஸ்கூல் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடத்த, திருமணங்கள் நடத்த... என்று எல்லா சாதிகளுக்குமான ஒரே கம்யூனிட்டி ஹால் கட்டலாம். நானே அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன்’ என்றேன். ஆனால், ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ ஒருவர், தலித் மக்களுக்கு மட்டுமான கம்யூனிட்டி ஹாலுக்கு அரசிடம் பெர்மிஷன் வாங்கிவருகிறார். காரணம், அவர் அந்த மக்களை ஓட்டுகளாகப் பார்க்கிறார். மக்களும் அவர் சொல்வதைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். இப்படி எந்த அடி எடுத்து வைத்தாலும் பிரச்னை. 

`தனியார் பள்ளி கூடாது. உதவி பண்ணினாலும் அது அரசுப் பள்ளிக்குத்தான்’ என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த எண்ணத்தில் ஓர் அரசுப் பள்ளியைக் கட்டினேன். அரசாங்க வேலை என்பதால், காலை 9:30 மணிக்கு வந்துவிட்டு, மதியம் 3:30 மணிக்குப் போய்விடுகிறார்கள். மொத்தம் 120 பிள்ளைகள். 5 டீச்சர்கள். நானே இரண்டு டீச்சர்களை, கூடுதலாகச் சம்பளம் கொடுத்து நியமித்தேன். பிறகு ஆசிரியர்களுக்குள் பிரச்னை. ‘நல்லா இருக்கும்னு சொன்னீங்க. அதனால சேர்த்தோம். இப்ப அவங்களுக்குள் அடிச்சுக்கிறாங்க. நான் பிரைவேட்லேயே சேர்த்துக்கிறேன்’ என்கிறான் ஓர் அப்பன். ஒரு டீச்சர் தன் வகுப்பில் உள்ள 30 மாணவர்களை மறந்து, தன் ஒரு மகனுக்குப் பரீட்சை இருக்கிறது என்று சொல்லி லீவு போடுகிறார். 

இப்படி அந்த மக்களைப் படித்தவர்களிடம் இருந்தும் பணக்காரர்களிடம் இருந்தும் காப்பாற்றவேண்டியிருக்கிறது. ஏழை கோபப்பட்டால், ஏழை முட்டாளாக இருந்தால், ஏழை உன்னை நம்பவில்லை என்றால் உனக்குப் பொறுமை இருக்க வேண்டும். இல்லையென்றால், தத்தெடுக்கப்போகாதே! `நான் ஒரு நடிகனே வர்றேன்’ என நினைத்துப் போனாலும், `கிராமத்துல ஒரு பய புரிஞ்சுக்க மாட்டுறான்’ என்று அந்த மக்களை நினைத்துக் கோபப்பட்டாலும் நீங்கள் எந்த மாற்றத்தையும் அங்கு நிகழ்த்த முடியாது. வெறுங்கையுடன்தான் திரும்பி வரவேண்டியிருக்கும்.”

“ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் செய்துவிட்டீர்கள். ஆனால், இன்னும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி வருவது, நீங்கள் தவிர்ப்பது... எப்படியிருக்கிறது?”

“அந்த விநாடிக்கு அன்றைய தேவைக்கு எது சரியெனப்படுகிறதோ... அதை ஒப்புக்கொள்வேன். நிறைய யோசிக்க மாட்டேன். ஒரு படைப்பாளிக்கு, ‘நான் பிரகாஷ்ராஜ்கிட்ட போனா, அவன் என் கதையை தன் நடிப்பின் மூலம் சொல்வான்’ என்கிற நம்பிக்கையை நீங்கள் உருவாக்கிவைக்கும் வரை உங்களைத் தேடி கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கும். இன்னமும் பசி இருக்கிறது. இப்போதும் சேலஞ்சிங்காக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி... என ஐந்தாறு மொழிகளில் என் பயணத்தை, திசையை மூவ் பண்ணும் அளவுக்கு ஒரு டிரைவிங் கிடைத்திருக்கிறது. பிரபலமான ஒவ்வொரு நடிகணும் எங்கோ ஓரிடத்தில் மொனாட்டனஸாக இருப்போம். மறுபடியும் ரீஇன்வென்ட் பண்ணவேண்டியதாக இருக்கும். நடுவில் பிரகாஷ்ராஜ் போரடித்ததும் நிறைய நடிகர்கள் வருவார்கள். பிறகு, `இதுக்கு பிரகாஷ்ராஜ் இருந்தா நல்லா இருக்குமே’ என மீண்டும் என்னைத் தேடி வருவார்கள். மணி சாரின் அடுத்த படத்தில் நானும் இருக்கிறேன். நல்ல கேரக்டர் தந்திருக்கிறார். அடுத்து ராதாமோகனுடன் மீண்டும் இணைகிறேன். அதில் நான், சமுத்திரக்கனி, அதர்வா உள்பட பலர் நடிக்கிறோம். நானே தயாரிக்கிறேன். `மொழி’, `அபியும் நானும்’ மாதிரியான ஈர்க்கக்கூடிய அற்புதமான பொறுப்பான ஆபாசம் இல்லாத படம். இப்படி என் பசிக்கான படங்களும் படைப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பறவையைப்போல பறந்துகொண்டே இருக்கிறேன்.”

“ஐந்தாறு மொழிகள், பயணங்கள், கதைகள், கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள்... ஆர்வமும் ஆசையோடும் பண்ணுவதால் சிரமம் இல்லைதான். இருந்தாலும் நாள்களை, நடிப்பை எப்படிப் பிய்த்துத் தருகிறீர்கள்?”

‘என் சம்பளம் பேச, என் கதைகளைக் கேட்க, இயக்குநர், தயாரிப்பாளர்களிடம் பேசி எனக்கான படத்தை எடுத்துகொண்டுவந்து கொடுக்க... எனக்கு மேனேஜர்கள் கிடையாது. இதை எல்லோருமே ஆச்சர்யமாகக் கேட்பார்கள். அனைத்தையுமே நானே கேட்கிறேன். என் மெயில் பாக்ஸைப் பார்த்தீர்கள் என்றால், எல்லா மொழிகளிலிருந்தும் வித்தியாசமான படங்கள். `இவ்வளவையும் பண்ண முடியலையே’ என்கிற ஏக்கம் இருக்கிறது. ஆனால், என் பயணம் எனக்குத் தெரிகிறது. அதைப் பொறுத்துதான் தேதிகள் கொடுப்பேன். ‘கர்நாடகாவில் கொஞ்ச நாள்கள் இருக்க வேண்டும். மைசூரில் விவசாயிகளுடன் வேலை செய்யவேண்டும், அங்கு நடக்கும் தியேட்டர் மூவ்மென்ட்டில் கலந்துகொள்ள வேண்டும், டிசம்பர் - பிப்ரவரியில் ஃபெஸ்டிவலில் சில விஷயங்களைப் பார்க்க வேண்டும்' என்றால், அந்தச் சமயத்தில் அங்கு இருப்பதுபோல் ஒரு கன்னடப் படத்துக்குத் தேதி கொடுப்பேன். அதிக வெயில் சமயம், ஆந்திராவில் உள்ள என் கிராமத்தில் நிறைய வேலைகள் இருந்தன என்றால், தெலுங்குப் படங்களுக்குத் தேதி கொடுப்பேன்.  ஆமாம், என் நாள்களை நான் விற்பதில்லை. யாரையும் விற்கவிடுவதும் இல்லை. அதேபோல ‘அடுத்த வருஷம் வரை பிரகாஷ்ராஜ் பிஸிப்பா’ எனப் பேச வேண்டும் என நினைக்க மாட்டேன். ஆமாம், மூன்று மாதங்களுக்கு முன் தேதி கொடுப்பதேயில்லை. இதனால் தொலைப்பது அதிகம் எனத் தெரிகிறது. இருந்தாலும் இப்படியிருக்கப் பிடித்திருக்கிறது.”

“ ‘பிரகாஷ்ராஜ், பயங்கரமாகக் கோபப்படுவார்.’ இந்த எண்ணம் பலரின் மனங்களில் பதிந்துள்ளது. ஆனால், காலம் உங்களை மென்மையாக்கியிருப்பதாக நினைக்கிறீர்களா?”

“அப்படித்தானே ஆகவேண்டும். வாழ்க்கைதான் பக்குவப்படுத்தும். ஆனால், அந்தக் கோபம் இன்னும் போகவில்லை. ஆனால், விளக்கம் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். பத்திரிகையாளர்களுடன் பேசுவதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால், சிலருடன் பேசும்போது தெரிந்துவிடும், `அவனின் பதிலை என் வாயிலிருந்து பிடுங்க நினைக்கிறான்’ என்பது. இன்றைய இந்த டி.ஆர்.பி ஜேர்னலிசத்தைப் பார்த்தவுடன் எழுந்து போய்விடுவேன். சினிமா ஷூட்டிங், இப்பவும் நான் என் டைமில்தான் போவேன். எனக்குத் தேவையிருந்தால் போவேன். ஆனால், நான் பட்ட கோபங்களில் நியாயம் இருந்தாலும், அவையும் தவறுகளே. அதனால் நான் இழந்ததும் எனக்குத் தெரிகிறது. ஆனால், இன்று என் கோபம் குறைந்திருக்கிறது. ‘அவனுக்கு என்னைப் புரியவில்லை. தவிர, அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பிறகு, அவனைத் திட்டி என்ன பயன்?’ என்ற இந்த நிதானம் என்னை அழகாக்கியிருப்பதாக நினைக்கிறேன். ''

“ ‘சினிமாவில் சிறிதும் பெரிதுமா நிறைய பார்த்துவிட்டீர்கள். ஆனாலும் `இந்தக் கலையை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இன்னமும் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றனவே!' என யோசித்தது உண்டா?''

“அதனால்தான் தேர்தலில் நின்றோம். வென்று, இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் பல வேலைகள் செய்கிறோம். அனைத்தையும் விளக்கமாகச் சொல்ல முடியாது. கசப்பாகத்தான் உள்ளது. அழுத்தமான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். 30 ஆண்டுகளான பழைமையை ஒரே ஆண்டில் புதுமையாக்கிவிட முடியாது. ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை அடித்தாலும் வலிக்காது. புராக்ஸியை அடிக்கவைக்கிறார்கள். நம்மை எதிர்ப்பது உண்மையிலேயே அவர்கள்தானா... அவர்களுக்குப் பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா என, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் அது தெளிவாகிவிடும். இங்கு ஒற்றுமையை உடைத்து உடைத்து வாழ்ந்து பழகிவிட்டார்கள். ஆனால், நாங்கள் நினைத்த அளவுக்கு இந்தப் பணி எளிதாக இல்லை. 

40 ஆண்டுகாலமாக அதே தொழிலநுட்பக் கலைஞர்கள். அதே விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள். ஆனால், நடுவில் தயாரிப்பாளர்களும் படைப்பாளிகளும் பாண்டிபஜார் நடைபாதைவாசிகள் போல வந்து போய்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் யாரோ வருகிறார்கள். வீட்டை விற்றுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் திறமையை யோசிக்க வேண்டும். ஒன்றரைக் கோடி ரூபாயில் ஒரு படம். ரிலீஸிங் செக்டரில் போகும்போது மொத்தம் இரண்டரை கோடி ரூபாயாகிறது. ஆனால், பட்ஜெட் ஒன்றரைக் கோடி ரூபாய்தான். அந்தச் சிந்தனையை நம்பி, படம் எடுத்தவனுக்கும் இழப்பு. அந்த இளைஞன் குழம்புகிறான். இந்த சிஸ்டமில் சாவது யார், பிழைப்பது யார்? படைப்பாளியும் தயாரிப்பாளரும்தான். 

தொழிலை ஒழுங்காக்குங்கள். டிக்கெட் விற்பனையை முறைப்படுத்தி, கணினி மயமாக்குங்கள். தயாரிப்பாளர்கள் சம்பாதிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கவில்லை. ஆன்லைன் டிக்கெட் விற்பனை பணம் யாருக்குப் போகிறது? கார் பார்க்கிங் பணம் யாருக்கு? புதுப்படத்துக்கு 500 ரூபாய் டிக்கெட். அந்தப் பணம் யாருக்கு? இப்படி மக்கள் ஏமாறுவதால்தான் அவர்கள் பைரஸி, சிடி-யே மேல் என நினைக்கிறார்கள். ஏனெனில், இன்றைய சூழலில் சென்னையில் நான்கு பேர்கொண்ட குடும்பம் படம் பார்க்க 2,000 ரூபாய் தேவை. இதைச் சொன்னால் எதிரியாக நினைக்கிறார்கள். `நடிகர்கள் பெரிய சம்பளம் கேட்பதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்’ என்பீர்கள். ஆனால், வெறும் ஐந்து சதவிகிதமே உள்ள அந்தப் பெரிய நடிகர்கள் மட்டுமே சினிமா கிடையாது. அந்த ஐந்து சதவிகிதத்துக்காக மீதியுள்ள 95 சதவிகிதத்தைப் பலிகொடுக்க முடியாதே? தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நாங்கள் கையில் எடுக்கும் ஒவ்வொன்றும் கெட்டபெயர் உண்டாக்கும் விஷயம்தான். ஆனால், அந்தக் கசப்பை ஜீரணிக்கும் சக்தி இன்று உள்ள இளைய அணிக்கு இருக்கிறது.”

“உங்களின் சீனியர்களான கமல், ரஜினி இருவரும் அரசியலை நோக்கி நகர்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பிரபல நடிகர், நிறைய ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன... போன்ற காரணங்களுக்காக ஒருவன் அரசியல்வாதியாக முடியாது; கூடாது. மக்களும் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவை. மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அதைத் தீர்க்கும் வழிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகச் சொல்லும் நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுவார்களே தவிர, `நான் ரசிகன்’ என இன்றைய இளைய தலைமுறை ஓட்டு போடாது. அது ரஜினி சாராக இருக்கட்டும், கமல் சாராக இருக்கட்டும். அவர்கள் வருவதை வரவேற்கிறோம். ஆனால், `என்ன மாற்றத்தைக் கொடுக்கப்போகிறீர்கள், இங்கு உள்ள பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?' எனக் கேள்வி கேட்பார்கள். அவர்கள் இருவரையும் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூன்றாவது ஓர் இளைஞன் வந்தால், அவனையும் அப்படியே வியந்து பார்ப்பேன். நானும் மற்ற மக்கள்போல் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.''

“ ‘மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுதான் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசை இயக்குகிறது’ என்கிறார்கள். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“உண்மைதானே? எதற்கு மூடி மறைந்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நடந்துகொண்டிருப்பது தவறு. வரும் தேர்தலில் முடிவெடுங்கள். மாற்றம் உங்கள் கையில்தான் இருக்கிறது. தவறானவர்களை நாமே ஏற்றுக்கொண்டுவிட்டு அழுவதில் அர்த்தமில்லை. தமிழ்நாட்டு மக்கள், மறுபடியும் தமிழ்நாட்டை அழகான நாடாக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் மனதில் வைத்து வாக்களிப்பார்கள்.”