Published:Updated:

“தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ஆர் அப்படி பேசியிருக்கக்கூடாது..!” - ஓர் இயக்குநர் வாய்ஸ் #VikatanExclusive

“தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ஆர் அப்படி பேசியிருக்கக்கூடாது..!” - ஓர் இயக்குநர் வாய்ஸ் #VikatanExclusive
“தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ஆர் அப்படி பேசியிருக்கக்கூடாது..!” - ஓர் இயக்குநர் வாய்ஸ் #VikatanExclusive

கடந்த 2010-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் இயக்குநர் மீரா கதிரவன். இவர் தற்போது, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா, தம்பி ராமையா எனப் பெரும் பட்டாளத்தையே வைத்து இயக்கியிருக்கும் படம் 'விழித்திரு'. பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டோம். 

‘அவள் பெயர் தமிழரசி' படத்துக்குப் பிறகு, பெரிய இடைவெளி ஏற்படக் காரணம் என்ன?

“2010ல் 'அவள் பெயர் தமிழரசி' வெளிவந்துச்சு. அந்த படம் முடிஞ்சு, 2012லயே இந்தப் படத்துக்கான போட்டோஷூட் ஆரம்பமாகிடுச்சு. 2013ல படப்பிடிப்பு தொடங்கி 2015ல முடிஞ்சுடுச்சு. இந்தப் படம் சென்னையில இருக்க முக்கியமான மெயின் ரோட்டுல நடக்குற கதை. அதுவும் ஒரு நைட்ல என்ன நடக்குதுங்கிறதுதான் படமே. அதனால, ஷூட்டிங் எல்லாமே பத்து மணிக்கு மேலதான் ஆரம்பிப்போம். நைட் மட்டும் படம் எடுக்குறதுனால நாள்கள் அதிகம் தேவைப்பட்டுச்சு. எல்லா நடிகர்களும் சேர்ந்து இருக்க மாதிரி மட்டுமே 20 நாள் தேவைப்பட்டுச்சு. அவங்க ஒவ்வொருத்தரும் வேற சில படங்கள்ல கமிட் ஆகிருந்தாங்க. அவங்க எல்லாரையும் ஒன்னு சேர்த்து ஷூட் பண்ண லேட் ஆயிடுச்சு. சென்சார் போர்ட்ல சில காட்சிகளை எடுக்கச் சொன்னாங்க, அதுக்காக அவங்ககிட்ட கொஞ்சம் சண்டையெல்லாம் போட்டு மூணு முறை ரிவைசிங் பண்ணி படம் ஓகே ஆகுறதுக்கே ஆறு மாசம் ஆகிருச்சு."

இந்த படத்துல ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வெச்சிருக்கீங்களே...

“ ‘அவள் பெயர் தமிழரசி' படத்துலயே ஜெய், கஞ்சா கருப்பு தவிர எல்லாருமே புதுமுகங்கள்தான். ஆனா, இந்த கதைக்கு எல்லாருமே அனுபவம் உள்ள நடிகர்களா தேவைப்பட்டாங்க. நான் யார்யாரை ப்ளான் பண்ணினேனோ எல்லாருமே படத்தோட கதை கேட்டுட்டு ஓகே சொல்லி படத்துக்குள்ள வந்துட்டாங்க. நடிகர்கள் பகல்ல வேற படத்துலயும் நைட் இந்த படத்துலயும் கமிட்டாகி நடிச்சு கொடுத்தாங்க. உண்மையாவே, எல்லாரும் ரொம்ப நல்லா ஒத்துழைச்சாங்கன்னுதான் சொல்லணும். இந்தப் படத்துல நடிச்ச எல்லா நடிகர்களும், டெக்னீஷியன்களும் அவ்வளவு டெடிகேஷனா வொர்க் பண்ணாங்க."

வெங்கட் பிரபுவை மீண்டும் நடிக்க வெச்சிருக்கீங்க. என்ன சொன்னார்?

"ஆமாங்க. பேபி சாராவுக்கு அப்பா கேரக்டர்ல நடிச்சிருக்கார். மத்தவங்க யாரோ நடிச்சா, ரோல் வெயிட்டா இருக்காதுனுதான் வெங்கட் பிரபுவை நடிக்க வைக்க ப்ளான் பண்ணேன். 'மங்காத்தா' முடிஞ்சிருந்த நேரம், அவர்கிட்ட நடிக்க கேட்டதுக்கு, 'இப்போ நடிக்கிறதில்லை சார்'னு சொல்லிட்டார். 'நீங்க கதை கேளுங்க சார். பிடிச்சா ஓகே சொல்லுங்க'னு சொன்ன பிறகு, கதை கேட்டார். கதை கேட்டு பத்தாவது நிமிஷம் நடிக்க ஓகே சொல்லிட்டார். சாராவுக்கு நைட் பத்து மணிக்கு தூக்கம் வந்திடும். வெங்கட் பிரபு பகல் நேரங்கள்ல ரொம்ப பிஸியா இருப்பார். நைட்லதான் ஷூட்டுங்கிறனால அப்போதான் வெங்கட் பிரபு வருவார். ஆக, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஸ்கிரீன்ல வருவாங்க. இவங்க ரெண்டு பேரையும் ஒருங்கிணைக்க கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டுச்சு."

உங்க படத்துக்கு விஷால் முக்கியத்துவம் கொடுப்பதா சொன்னாராமே...

“பெரிய நடிகர்கள் படம் வந்தா முதல் நாளிலிருந்தே மக்கள் கூட்டம் அதிகமாகிடுது. நல்ல கன்டென்ட் உள்ள சின்னப் படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வர அஞ்சு நாளுக்கு மேல் ஆகும். ஏன்னா, படம் நல்லாயிருக்கானு பத்திரிகைகள், டிவி, இணையத்தளத்துல ரிவீயூஸ் பாத்துட்டுதான் மக்கள் வர்றாங்க. அப்போ அதுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும்ல. அதைக் கொடுக்காம முதல் மூணு நாள் பாத்திட்டு சீக்கிரமே படத்தை தியேட்டர்ல இருந்து தூக்கிடுறாங்க. இதனால, வாழ்வா சாவாங்கிற மாதிரியான நிலைமை ஏற்படுது. ஒரு தேதி முடிவு பண்ணினோம். அப்போ ஒரு பெரிய நடிகரோட படம் வெளியாகுதுனு தேதியை மாத்தினோம். அந்த படத்தோட தேதியும் மாறிடுச்சு. அப்புறம் ரிலீஸ் பண்ணலாம்னா, ஸ்ட்ரைக் அறிவிச்சுட்டாங்க. எங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நிறைய இழப்பு ஏற்படுது. அதுக்குத்தான் விஷாலை சந்திச்சு பேசி நிலைமையை சொன்னேன். அப்போ அவர்தான் நம்பிக்கை கொடுத்தாரு. அதுபடிதான் படம் வெளியாக இருக்கு. உண்மையாவே, விஷால் டீம் ஆரோக்யமான டீம்னுதான் சொல்லணும்."

'விழித்திரு' என்ன மாதிரியான படம்?

"ஓர் இரவில் நடக்கும் கதை. சென்னை பகல் நேரத்துல எப்படி ஒருத்தர் முகத்தைக்கூட பார்க்க முடியாம ஓடிட்டு இருக்காங்களோ அதுக்கு நேர் எதிர் இரவு நேரங்கள்ல இருக்கும். அப்படி நடக்குற சம்பவங்களைத்தான் படமா பண்ணிருக்கோம். இந்தப் படத்துல எளியவர்கள் மீது சுமத்தப்படும் அநீதிகளைப் பத்தி பேசப்பட்டிருக்கு. என்னதான் மருத்துவம், கல்வினு மேல போனாலும், இன்னும் ஜாதியால் நடக்கும் ஆணவக்கொலைகள் நடந்துட்டுதானே இருக்கு. அது மாதிரிதான்."

படத்தோட இசை வெளியீட்டு விழாவுல டி.ஆர் பேசினது ரொம்ப வைரல் ஆனதே...

“அந்த ஒரு க்ளிப் மட்டும்தான் வைரலாச்சு. முழுமையா அந்த நிகழ்ச்சியை பார்த்தா தெரியும்னு நினைக்குறேன். டி.ஆர் சார் 'என்னையும்தான் மேடை நாகரிகம் இல்லை'னு சொன்னார். காரணம், நானும் விடியல்ராஜ் சார் பேரை சொல்ல மறந்துட்டேன். யாராவது வேணும்னு சொல்லாம இருப்பாங்களா? அதுபோல, வெங்கட் பிரபு, கிருஷ்ணா எல்லாரையும் விமர்சிச்சுதான் பேசினார். எல்லாரும் ஜாலியா சிரிச்சுட்டு இருந்தபோது தன்ஷிகா எப்போ சீரியஸானாங்கனு தெரியலை. நிகழ்ச்சி முடிஞ்சு, 'உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை சார்' னு சொன்னார். என்னை பொறுத்தவரை, தன்ஷிகா மேடையில் மன்னிப்பு கேட்ட பிறகும் பேசிருக்கக் கூடாதுனு நினைக்குறேன்." 

இப்ப வர்ற நிறைய படங்கள்ல அரசியல் பேசப்படுதே... 

“மக்களுக்கு அரசியல் பத்தின பார்வையும் புரிதலும் உருவாகிடுச்சு. அதனால மக்களும் அரசியல் பேசுற படங்களைத்தான் எதிர்ப்பார்க்குறாங்க. ராஜூ முருகன், 'காக்கா முட்டை' மணிகண்டன், பிரம்மா மாதிரியான சமூக பார்வையுடைய நிறைய படைப்பாளிகள் சினிமாக்குள்ள வந்துட்டாங்க. எத்தனையோ சமூக அவலங்கள் நடந்துட்டுதான் இருக்கு. இதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், நம்மால் முடிஞ்ச விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும்னு சமூகத்தின் மேல் அக்கறையோட இப்ப வர்ற படைப்பாளிகள் இருக்கிறதுதான் காரணம்." 

முழுக்க முழுக்க இரவு நேரங்கள்ல ஷூட்டிங். என்ன மாதிரியான பிரச்னையை சந்திச்சீங்க?

"பகல்ல எவ்வளவு நேரம்னாலும் ஷூட் பண்ணலாம். ஆனா, இரவு நேரங்கள்ல அப்படி பண்ண முடியாது. அதுவும் கேமரா ஆன் பண்ணும்போதே சாராவுக்கு தூக்கம் வந்திரும். அப்போலாம் உதவி இயக்குநர்கள்தான் சாராவை தூங்காம பாத்துப்பாங்க. நிறைய பேர் காலைலேயும் ஷூட் இருந்தானால ரெஸ்டே இல்லாம நடிச்சாங்க. அப்படி நடிக்கும்போது தூக்கம் இல்லாதனால முகமே வித்தியாசமா இருக்கும். அதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி நடிகர்கள் நடிச்சாங்க. சில சமயம் நைட் ஷூட் பண்ண அனுமதியெல்லாம் வாங்கி வெச்சிருப்போம். ஆனா, விசாரணை பன்றேனு போலீஸ் என்னைக் கூட்டிட்டு போயிருவாங்க. நான் ஸ்டேஷன்ல இருப்பேன்; இங்க எல்லாமே அப்படியே இருக்கும். இந்த மாதிரியான நேரங்கள்ல ஷூட் பாதிக்கும்." 

புதுமுக இசையமைப்பாளரை அறிமுகப்படுத்திருக்கீங்க. அவரைப் பத்தி சொல்லுங்க...

"சத்யன் மகாலிங்கம் ஒரு பாடகர். இளையராஜா, யுவன், ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல நூறுக்கும் மேலான பாடல்கள் பாடியிருக்கார். இந்த படத்துக்கு ஒரு பெரிய இசையமைப்பாளர்கிட்டதான் பேசிட்டு இருந்தோம். அந்த நேரத்துல இவர் வந்து டெமோ காட்டினார். அது ரொம்ப பிடிச்சிடுச்சு. நானே தயாரிப்பாளாரா இருக்கறதுனால எனக்கான சுதந்திரம் நிறையவே இருந்துச்சு. அப்படிதான் இவரை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தினேன். ஒரு பாடகரை இசையமைப்பாளராக்கின உடனே, ஏன் இசையமைப்பாளரை பாடகர்களாக்க கூடாதுனு ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, சந்தோஷ் நாராயணன், தமன், அல்ஃபோன்ஸ், சத்யா, டி.ராஜேந்தர் சார் உட்பட ஏழு இசையமைப்பாளர்களைப் பாட வைச்சிருக்கோம். அது படத்துல கொஞ்சம் ஸ்பெஷல்."

அடுத்து என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க?

“ரெண்டு கதைகள் எழுதி வெச்சிருக்கேன். அதுல ஒன்னு ஆனந்த விகடன்ல சிறந்த நாவல் விருது வாங்கிய இரா.முருகவேளுடைய 'மிளர் கல்' கதையை தழுவி எழுதப்பட்ட கதை. கண்ணகி பூம்புகார் பட்டினத்துல இருந்து கொடுங்களுர் வரைக்கும் நடந்து போன பாதையில ஒரு பொண்ணும் பையனும் நடந்து போவாங்க. சிலப்பதிகாரமும் இப்போ இருக்கும் கார்ப்பரேட் ட்ரேடும் மாறிமாறி வரும் வித்தியாசமான ஒரு ட்ராவல் ஸ்க்ரிப்ட். இதை மலையாளம், தமிழ்ல பண்ற ஐடியா இருக்கு. இன்னொன்னு கொஞ்சம் ரிலாக்ஸா ஜாலியா ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் இருக்கு. இப்போ நிறைய திறமையான இளைஞர்கள் கோடம்பாக்கம் வீதிகள்ல வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்படுறாங்க. 'விழித்திரு' வெற்றிக்குப் பிறகு அப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கும் இளைஞர்களை வெச்சு நம்ம தயாரிப்பில வருஷம் ரெண்டு படம் பண்ணணும்ங்கிற ப்ளானும் இருக்கு."