Published:Updated:

“நட்புக்காக கமிட்டான சீரியல்ல, லாஜிக் பார்க்க மாட்டேன்!” நடிகை ஊர்வசி #VikatanExclusive

கு.ஆனந்தராஜ்
“நட்புக்காக கமிட்டான சீரியல்ல, லாஜிக் பார்க்க மாட்டேன்!” நடிகை ஊர்வசி #VikatanExclusive
“நட்புக்காக கமிட்டான சீரியல்ல, லாஜிக் பார்க்க மாட்டேன்!” நடிகை ஊர்வசி #VikatanExclusive

னக்கே உரிய வசீகர நடிப்பால் இன்றும் ரசிகர்கள் மனதில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர், நடிகை ஊர்வசி. சன் டிவியில் நான்கு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகிவரும் 'வம்சம்' சீரியலில், 'சுந்தரி' என்ற புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். "இது நட்பின் வெளிப்பாடு" என உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார். 

"பல வருஷமா ஒளிப்பரப்பாகும் சீரியலில் திடீர்னு நடிக்கக் காரணம் இருக்கா?" 

"நிச்சயமா இருக்கு. 'வம்சம்' நாயகியா ரம்யா கிருஷ்ணன் கலக்கிட்டு இருக்காங்க. 'பாகுபலி' படத்துக்குப் பிறகு சினிமாவில் ரொம்பவே பிஸியாகிட்டாங்க. அதனால், ரம்யாவுக்கு சீரியலில் நடிக்க அதிக நேரமில்லை. பெரிய லீடு ரோல் தொடர்ந்து வராத ஏமாற்றம் ஆடியன்ஸுக்கு வந்திடக்கூடாதில்லியா? ரம்யாவுக்கு இணையாக ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்காங்க. நெருங்கியத் தோழியான என்னை நடிக்க ரம்யா கேட்டதன் பேரில், இப்போ சுந்தரி கேரக்டரில் நடிக்கிறேன்.''

“ஹிட்டான சீரியலில் புதுசா நடிக்கிறதால், பெரிய பிரபலம் என்ற உங்க பிம்பத்தின் மதிப்பு குறையுமே?'' 

"இதே கேள்வியைப் பலரும் கேட்டாங்க. என் பிரபலத்தையோ, லாஜிக்கையோ நினைச்சு இந்த சீரியலில் கமிட் ஆகலை. இது நட்பின் வெளிப்பாடு. 'உங்க கவுரவத்துக்குக் குறையில்லாத வகையில் இந்த கேரக்டர் இருக்கும். கதையில் தொய்வு வந்திடக் கூடாது. நீங்க நடிச்சா சிறப்பா இருக்கும்'னு ரம்யா சொன்னாங்க. உடனடியா சம்மதிச்சுட்டேன். புது கேரக்டர் வருதே; இது புரியலையேனு மக்கள் நினைக்காத அளவுக்குக் கதையோடு என் கேரக்டர் ஒன்றியிருக்கு. ஒருவேளை கதையில் தொய்வு வந்தால், 'நான் நடிக்க மாட்டேன்'னு விலகிடுவேன். பணத்தைத் தாண்டி என் வேலை எனக்கு முழு திருப்தியைத் தரணும்.'' 

“சினிமாவுக்கும் சீரியலுக்குமான நடிப்பை எப்படிப் பார்க்கறீங்க?" 

"ரெண்டுமே நடிப்புதான். ஆனால், வெளிப்படுத்தும் முகபாவனைகள், காட்சியமைப்பு, லொக்கேஷன்களில் வித்தியாசம் இருக்கு. சில வசனங்களை ரிப்பீட் பண்ணணும். வேகமா ஷூட் நடக்கும். பல நூறு படங்களில் நடிச்சிருந்தாலும், புதுசா நடிக்கும் சீரியல் பற்றிதான் மக்கள் பேசறாங்க. வெளியில் பார்த்தால், 'நேத்து உங்க வசனம் சூப்பர். இன்னிக்கு என்ன ஆகும்?'னு கேட்கறாங்க. ஆடியன்ஸை ரொம்பவே ஒன்றிப்போக வைக்கும் திறமை சீரியலுக்கு இருக்கு. சினிமாவோ, சீரியலோ நாம சிறப்பா நடிச்சா, மக்கள் மனசில் இடம்பிடிக்கலாம்.'' 

“ ‘மகளிர் மட்டும்' படம் மாதிரி உங்க ஃப்ரெண்ட்ஸோடு தொடர்ந்து நட்பில் இருக்கீங்களா?'' 

"நான் ஒன்பதாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதுவரை என் உயிர்த்தோழிகளா இருந்த பலருடன் தொடர்ந்து நட்பில் இருக்கேன். 1994-ம் வருஷம் நான் நடிச்சு ரிலீஸான 'மகளிர் மட்டும்' படத்துக்குப் பிறகு, அதேமாதிரி பெண்களை மையப்படுத்தி ஒரு படம் ரிலீஸாகுது. இப்படி ஒரு படம் வர்றதுக்கு 20 வருஷத்துக்கும் மேலே ஆகுது. இந்தப் பெரிய இடைவெளி கவலையை அளிக்குது. இந்த நிலை மாறணும். ஒவ்வொரு வருஷமும் பெண்களை மையப்படுத்தி பல படங்கள் வரணும்.'' 

“இப்போ ரொம்பவே செலக்டிவாக நடிக்கக் காரணம் இருக்கா?'' 

“கல்யாணத்துக்கு பின்பும் ரொம்பவே ஆக்டிவாகத்தான் வொர்க் பண்ணிட்டிருக்கேன். எல்லாக் காலகட்டங்களிலும் நடிக்கும் படங்களின் கதையைப் பலமுறை கேட்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கானு பார்த்துதான் ஒப்புக்கறேன். வெறும் எண்ணிக்கைக்காக எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்கிறதில்லே. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தாலும், முழுத் திருப்தி கொடுக்காத கேரக்டர்களை ஒப்புக்கிறதில்லே.'' 

“ஓர் அம்மாவாக உங்க நேரத்தைச் சரியாகச் செலவழிக்க முடியுதா?" 

“நிச்சயமா முடியுது. என்னதான் பிஸியா நடிப்புனு டிராவல் பண்ணினாலும், காலையில் என் குழந்தையைச் சரியா கவனிச்சுட்டுதான் போவேன். சாயந்திரம் வீட்டுக்கு வந்து என் குழந்தையோடு முழுமையா நேரத்தைச் செலவழிப்பேன். நடிகை என்பதைவிடவும், அம்மா பந்தம்தான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்குது" எனப் புன்னகைக்கிறார் ஊர்வசி.