Published:Updated:

''எனது குரலை ரசிகர்கள் ஏற்காவிட்டால், நடிக்க மாட்டேன்..!’’ - குண்டடிபட்டபின் எம்.ஜி.ஆர்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-13

''எனது குரலை ரசிகர்கள் ஏற்காவிட்டால், நடிக்க மாட்டேன்..!’’ - குண்டடிபட்டபின் எம்.ஜி.ஆர்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-13
''எனது குரலை ரசிகர்கள் ஏற்காவிட்டால், நடிக்க மாட்டேன்..!’’ - குண்டடிபட்டபின் எம்.ஜி.ஆர்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-13

''எனது குரலை ரசிகர்கள் ஏற்காவிட்டால், நடிக்க மாட்டேன்..!’’ - குண்டடிபட்டபின் எம்.ஜி.ஆர்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-13

எம்.ஜி.ஆர் பரங்கிமலை சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக நின்றபோது அவர் பிரசாரம் செய்யப் புறப்படும் வேளையில் எம்.ஆர் ராதாவும் தயாரிப்பாளர் வாசுவும் அவரைப் பார்க்க வந்தனர். அப்போது எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரை காதோரத்தில் சுட்டார். வழக்கு நடந்தது. எம்.ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. நன்னடத்தை காரணமாக நான்கரை ஆண்டுகளில் விடுதலை ஆனார். அவருக்காக தமிழறிஞரும் பொதுவுடைமை கட்சி வழக்கறிஞருமான நா.வானமாமலை வாதாடினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவரையும் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு கிளம்பியபோது எம்.ஜி.ஆருக்குக் குரல் நன்றாக இருந்தது. பின்பு எப்படி மாறியது என்று தெரியவில்லை, என்கிறார் அவர்களுக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவர்.

டப்பிங் வைக்கலாமா?

எம்.ஜி.ஆருக்குக் குரலில் தெளிவில்லை என்பதால் வேறொருவரைக் கொண்டு பின்னணிக் குரல் கொடுக்கலாமா என்று ஆலோசித்தனர். ஆனால் எம்.ஜி.ஆரோ அந்த யோசனையை முற்றிலுமாக மறுத்துவிட்டார். “எனது குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால் நடிக்கிறேன். இல்லையென்றால் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்’ என்று கடுமையாகக் கூறிவிட்டார். அவர் உயிர் பிழைத்து வந்ததே பெரியது என்று நினைத்த அவரது ரசிகர்கள் அவரது குரல் பிரச்னையை பெரிதாகக் கொள்ளவில்லை. அவர் முகம் முன்பை விட அழகாகவும் உடல் மெலிந்து இளமையாகவும் தோற்றமளித்ததை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர்.

காவல்காரன் படத்தில் சில ஒலிகள் தெளிவற்றிருந்ததை அறிந்த எம்.ஜி.ஆர் தெளிவாக முன்பு பேசிய சொற்களை cut and paste முறையில் தானே எடிட்டிங் செய்து சரி செய்தார். இருப்பினும் முன்பு அந்தச் சொல் பேசியிருக்கவில்லை என்றால் அது தெளிவற்று ஒலிப்பதை ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்படியே விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

வராத வளைநா ஒலிகள்

தமிழில் வளைநா ஒலிகள் (retroflex sounds)  அல்லது நாவளை ஒலிகள் எனப்படும். ட,ர,ற,ல,ழ,ள ஆகியவற்றில் ஒலிப்பதில் எம்.ஜி.ஆருக்கு சிரமம் ஏற்பட்டது. மற்ற ஒலிகளை ஒலிப்பதில் அவருக்குச் சிரமம் இல்லை. நாக்கு வளைந்து மேல் அண்ணத்தைத் தொடுவதாலும் தடவுவதாலும் இந்த வளைநா ஒலிகள் ஒலிக்கின்றன.

குரல் பயிற்சி

எம்.ஜி.ஆர் தன் உதவியாளர்களுடன் அதிகாலையில் கடற்கரைக்குச் சென்று குரல் பயிற்சி பெற்றிருக்கிறார். இருவர் இரண்டுபுறமும் நின்று கைகளைப் பிடித்துக்கொள்ள கழுத்துவரை கடல் நிரலில் நின்று சத்தமாகப் பேசிப்பழகி குரல் பயிற்சி மேற்கொண்டார்.

எம்.ஜி.ஆருக்கு 1958ல் நாடக மேடையில் கால் ஒடிந்த போது பாலமேடு கிராமத்தைச் சேர்ந்து எலும்புநோய் நிபுணர் டாக்டர் நடராஜன் அவருக்கு சிகிச்சை அளித்தார். கால் எலும்பு ஒன்று சேர்ந்ததும் டாக்டர் எம்.ஜி.ஆரிடம் நீச்சல் பயிற்சி கால் எலும்புகளுக்கு நல்ல பலமளிக்கும் என்றார். உடனே எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டில் ஒரு நீச்சல்குளம் கட்டி அதை டாக்டரிடம் காண்பித்தார். பின்பு அதில் தினமும் நீச்சல் பயிற்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் தன் உடல் மற்றும் குரல் செழுமை பெற முறையான பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டார். Practice makes Perfection என்பதில் நம்பிக்கை கொண்டு உழைத்தார்.

ரிக்ஷாக்காரனில் ஓரம்… ஓரம்...

தமிழில் வளைநா ஒலிகளில் ‘ரா’ என்பதும், ஒன்று. இது வருடொலி (Trilled sound) எனப்படும். நாக்கு நுனியால் மேல் அண்ணத்தை வருடும்போது ‘ர’ என்ற ஒலி தோன்றும். இது குரல்வளை ஒலி (gutteral) ஆகும். அதாவது ஒலிப்பு முயற்சியில் போது மூச்சை குரல்வளைப் பகுதி வழியாக வெளியே விடவேண்டும். ங, ஞ, ண, ந, ன என்ற மூக்கொலிகளுக்கு மூக்கு வழியாக மூச்சை விட வேண்டும். கசடதற என்ற வல்லொலிகளுக்கு மூச்சை நிறுத்தி வெடிப்பொலியமாக (explosive) வெளியே விட வேண்டும்.

ரிக்ஷா ஓட்டும்போது வழி கேட்டு பாதசாரிகளை, ஓரமாகப் போகும்படி சொல்வதாக ‘ஓரம் ஓரம்’ என்று எச்சரித்துக்கொண்டே ரிக்ஷாக்காரர் வண்டி ஓட்டுவார்கள். இந்தச் சொல்லை எம்.ஜி.ஆர் சொல்லும்போது நாக்கு வளையாமல் ‘ர’ ஒலிக்காமல் ‘ஓயம் ஓயம்’ என்றே கேட்கும். இதை எதிரணியினர் தம் விருப்பம் போல் ஒலித்து எள்ளி நகையாடினர். ஆனால் எம்.ஜி.ஆரைத் தன் வீட்டுப் பிள்ளையாக கருதியதால் மக்களும் எம்.ஜி.ஆர் ரசிகரும் இதைப் பெரிய குறைபாடாகக் கருதவில்லை.

உலகம் சுற்றும் வாலிபனில் ‘முருகன்’...

எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் ஏற்று நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அண்ணன் எம்.ஜி.ஆரின் பெயர் முருகன். ஆனால் அதை அவர் சொல்லும்போது ‘முய்ஹன்’ என்று கேட்கும். முதலில் படம் பார்ப்பவருக்கு மோகனாக இருக்குமோ அதைஏன் மூகன் என்கிறார் எனத் தோன்றும். ‘ர’ ஒலிப்பிலா ஒலியாகிவிடும்.

படிப்பும் பண்பும்...

எம்.ஜி.ஆரின் குரல் பிரச்னையை கேலி செய்பவர்கள் இன்னொரு தொடரை எடுத்துக் கூறுவதுண்டு. அதில் படிப்பு, பண்பு என்று இரண்டு சொற்கள் இடம் பெறும். இவற்றில் ட மற்றும் ண ஆகியன வளைநா ஒலிகள் என்பதால் எம்.ஜி.ஆரால் அவற்றைச் சரியாக ஒலிக்க இயலாது. படிப்பு என்பது பஇப்பு என்றும் பண்பு என்பது பம்பு என்றும் ஒலிக்கக் கேட்டவர்கள் “படிப்பு இருக்கும் இடத்தில் பண்பு இருக்கும் ‘என்ற தொடரை “பைப் இருக்குமிடத்தில் பம்ப் இருக்கும்’ என்று கேலி பேசினர்.

திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை...

அதிமுக கட்சி ஆரம்பித்ததும் ஆறே மாதத்தில் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் வந்தது. இத்தேர்தலில் தி.மு.க (உதய சூரியன்), இந்திரா காங்கிரஸ் (பசுவும் கன்றும்) ஸ்தாபன காங்கிரஸ் (ராட்டை) ஆகிய மூத்த கட்சிகளும் போட்டியிட்டன. அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தது. எம்.ஜி.ஆர் மேடைகளில் தேர்தல் பிரசாரம் செய்தபோது இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றது ராட்டையிலே ஓட்டுப் போடுங்கள் என்று பொருள் கொள்ளப்படலாம் என்பதால் தன் இரண்டு விரல்களை அகல விரித்து for victory என்பது போலக் காட்டினார். இந்த சைகை வெற்றியையும் வேண்டியது, இரட்டை இலை என்பதையும் குறித்தது. மற்ற கட்சிகள் டெபாசிட் இழந்தன. அதிமுக வெற்றி பெற்றது.

சிறுநீரக சிகிச்சைக்குப் பின்பு

எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று மூன்றாவது முறை முதலமைச்சராகத் திரும்பியபோது அவரது முகமும் கோணி குரலும் கெட்டுவிட்டது. அவர் பேசுவது மற்றவருக்குப் புரியவில்லை. தன் அன்பை வெளிப்படுத்த கைகளைப் பிடித்துக் குலுக்கினார், சைகை மூலமாகப் பேசினார். அதிகாரிகளையும் முக்கியஸ்தர்களையும் தவிர்த்தார். ஏழை மக்களைச் சந்தித்தார். கோட்டை வாசலில் வந்து அமர்ந்துகொண்டு மனுக்களை வாங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். ஏழைமக்கள் அவரை தம் வீட்டுப் பிள்ளையாகக் கருதியதால் அவர்கள் எம்.ஜி.ஆரால் சரியாகப் பேச முடியாததைப் பெருங்குறையாகக் கருதாமல் அவரது அன்புள்ளத்தைத் தொடர்ந்து நேசித்து ஆதரவளித்தனர். மதுரை மாநாட்டில் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் பேசிய போது கூட அதை மக்கள் தவறாகக் கருதவில்லை. தனது பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டின் ஒரு பகுதியில் காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு ஓர் உறைவிடப் பள்ளியை ஏற்படுத்தும்படி உயில் எழுதி வைத்தார். 

அடுத்த கட்டுரைக்கு