Published:Updated:

தகப்பன்சாமிகளின் பேரன்பைப் பதிவு செய்த ‘தவமாய் தவமிருந்து’..! #12YearsOfThavamaiThavamirundhu

பொதுவாகவே படைப்புகளிலும் சரி திரைப்படங்களிலும் சரி தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு. தாய் 'பத்து மாசம் சுமந்து பெத்ததை' பெரிதாகப் பேசினாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சொந்தக்காலில் நிற்கும் வரையும் - அதற்கு பின்னாலும் கூட - அவனைத் தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாகப் பேசப்படுவதில்லை. அப்படித் தாயின் பெருமையை மட்டுமே பெரிதாகப் பேசும் இந்த உலகத்தில், அந்தக் குறையை நீக்குவதற்காகவே ஒரு தகப்பனின் பேரன்பைப் பதிவு செய்யும் முயற்சியாக வெளிவந்ததுதான் சேரனின் 'தவமாய் தவமிருந்து'. 

பாசமுள்ள ஓர் ஏழைத் தகப்பனின் வாழ்க்கையை அவனுடனே பயணம் செய்து நமக்குக் காட்சிகளாய் விரித்தது இந்தத் திரைப்படம். மேலும், இந்தப் படம் தகப்பனின் பெருமையை மட்டும் பேசவில்லை. மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக்கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும், உறவுகளின் மேன்மையினையும், அவசியத்தையும் உணர்வுக்குவியலாகப் பேசியது.

நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்களைக் கண் முன் நிறுத்தியது இந்தத் திரைப்படம். ஒரு சாதாரண மனிதனின் முப்பத்தைந்து வருட வாழ்க்கை... அதுவும் மூன்றரை மணி நேர சினிமா. காமெடி டிராக், அதிரடி ஆக்ஷன், திடீர் திருப்பங்கள், குத்துப் பாட்டு, குழு நடனங்கள் ஏதுவும் இல்லாத படம். 

ஒரு சராசரி கிராமத்துத் தகப்பனை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருப்பார் ராஜ்கிரண். வாழ்க்கை முழுக்க மகன்களின் நல்வாழ்வுக்காக வட்டிக்குக் கடன் வாங்கிச் செலவழித்து, கடனுக்கு வட்டி கட்டவே வாழ்க்கையோடு போராடும் தகப்பனாக இவரது நடிப்பின் முன் பிறர் காணாமல் போகின்றனர்.மகனுக்கு கல்லூரி ஃபீஸ் கட்ட வட்டிக்கடைக்காரரிடம் கூனிக் குறுகி நின்றுவிட்டு, பணத்துக்கு ரெடி பண்ணியதும் கண்ணீர் மல்க நடந்து வரும்போது, ஆயிரமாயிரம் ஏழைத் தகப்பன்களை கண் முன் நிறுத்திவிடுவார் ராஜ்கிரண். "உங்க பையன் நேத்து விபசார கேஸ்ல மாட்டிக்கிட்டான் "என்பதை போலீஸ் மூலம் கேட்கும் போதுதான் கண்ட கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போனதை எண்ணி கண்ணீர் விடும்போதும்,ஓடிப்போன இளையமகன் பட்டணத்தில் சிரமப்படுகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்து மெளனமாய் வெறித்த பார்வையுடன் காத்திருக்கும் போதும், அர்த்தராத்திரியில் காதலியுடன் ஓடிப்போகக் கிளம்புகிறான் இளைய மகன் என்பது புரியாமல், அவன் சொல்லும் பொய்யை நம்பி, திருநீறு பூசி ஆசிர்வதித்து அனுப்பும் போதும், பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவிப் பெற்றோரின் உலகத்தை நெஞ்சில் பாரமாக ஏற்றி விடுகிறார் ராஜ்கிரண். இவரைப் போல் தனக்கும் ஓர் அப்பா இல்லையே என்று படம் பார்ப்பவர்களை விம்மி விம்மி ஏங்க வைத்திருப்பார் ராஜ்கிரண். 

இது அப்பாவைப் பற்றிய படம்தான் என்றாலும், அவரின் துணையாக வரும் அப்பாவி மனைவியாக அசத்தியிருப்பார் சரண்யா. மேலும், தாயாக நடிக்கும் சரண்யா, தனது இருப்பை மிக வலிமையாகப் பதிவு செய்திருப்பார். கிராமத்துச் சூழ்நிலை, பேச்சு வழக்கு, பழக்க வழக்கம் அனைத்தையும் சின்னச் சின்ன அசைவுகளின் மூலமே காட்டியிருப்பார் சரண்யா. 
கணவனின் அதிகாரம் மூத்த மருமகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகையில் கோபத்தில் வெடிக்கும் போதும், மனம் திருந்தி வந்த சேரனைக் கண்டு கதவை அறைந்து சாத்தும் போதும் , "உம் பொண்டாட்டி மட்டுந்தேன் அல்வா திம்பாளாக்கும்" என மருமகளை லேசாக எரிச்சலாகப் பார்ப்பது போல இருந்தாலும் அடுத்த காட்சியிலேயே "வகுத்துப் பிள்ளைக்காரிக்குக் கடைப் பலகாரம் குடுத்தா ஒத்துக்காதுப்பா" என முடிக்கும்போதும், தாய்மையின் கரிசனத்தால் நம்மை ஒட்டுமொத்தமாக ஆட்கொள்கிறார். "என்னடா இது, அடுப்பு மேல உட்கார்ந்துட்டு போற மாதிரி இருக்கு" என்று நகர வெஸ்டர்ன் டாய்லெட்டினை சொல்லும்போது ஆயிரமாயிரம் கிராமத்து அம்மாக்களை திரையில் காட்டியிருப்பார் சரண்யா. 

கல்லூரி மாணவிக்குரிய குறும்பு, இளம் மருமகளுக்குரிய பக்குவம், தாய்மைக்குரிய கண்ணியம் என்று எந்தக் குறைபாடும் இல்லாத நிறைவான நடிப்பினை செய்திருப்பார் பத்மபிரியா. சென்னை வாழ்க்கையில் சிரமமான பொருளாதாரத்தில் கர்ப்பம் சுமந்து கஷ்டப்படும் பெண்ணாக வரும்போது, கலங்கடித்திருப்பார் பத்மப்ரியா. 

சேரனின் அண்ணியாக வருபவர் மாமியாரின் பேச்சுக்கு எதிரே பேசாமலும், அதை சமயம் பார்த்து கணவரிடம் புகார் சொல்லி தனிக் குடித்தனத்திற்கு அடித்தளம் போடும் போதும், வருடங்கள் கழித்து ராஜ்கிரண் குடும்பத்தோடு அவர்களின் வீட்டுக்கு வரும்போது தண்ணீரைக் கொண்டு வந்து சட்டென்று வைத்து விட்டு சமையலறையில் புகுந்துகொள்ளும் போதும் மாமனார், மாமியார் சொல் கேட்காத மருமகளாக அசத்தியிருப்பார். 

ராஜ்கிரணின் அச்சகத் தொழிலாளியாக வரும் இளவரசு, அப்பாவி அழகராக பாசமும் விசுவாசமுமாக அந்தப் பாத்திரத்திற்கு உண்டான பங்களிப்பை நிறைவாகச் செய்திருப்பார். பாத்திரப் படைப்புகளின் யதார்த்தமும் நிதர்சனமும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. குறிப்பாக மூத்த மகனான செந்திலின் கதாபாத்திரம், அப்பாவின் மீதான பாசமும் விலகாமல், மனைவியின் மேலான பிரியமும் கலந்து, இளமையின் விறைப்புடன் கூட்டணி சேரும் குழப்பமான மனநிலையைத் தெளிவாகப் படம் பிடித்தது. 
      
படம் முழுக்க உணர்வுகளின் புயல் மழையாகக் காட்சிக்குக் காட்சி நம்மை நனைத்தெடுக்கிற விதத்தில் கதையைச் சொல்லியிருப்பார் இயக்குநர் சேரன். சேரனின் குழந்தைகள் ,"எனது தாத்தாவின் பெயர் முத்தையா. என் பாட்டியின் பெயர் சாரதா. என் தாத்தா சிவகங்கையில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள்.."என்று சரித்திரக் கதை படிப்பதுபோல சேரன் குடும்பத்தின் வரலாற்றைப் படித்துக்கொண்டிருப்பதுபோல படம் முடிகிறது. இங்கே வாழும் எத்தனை பேருக்கு தனது முப்பாட்டனார், பாட்டனார் வரலாறு தெரிந்திருக்கிறது?

சிறந்த காட்சிகள் :

1. மலைக்கவைக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தரப் பணம் சேர்க்கும் பொருட்டு இரவெல்லாம் போஸ்டர் ஒட்டி, காலையில் வீடு திரும்பி களைத்துப் படுத்திருப்பார் ராஜ்கிரண். அப்போது புத்தாடை உடுத்தின பிள்ளைகள், கேப் வெடிக்கும் துப்பாக்கியுடன் வந்து அவர் மேல் ஏறி விளையாடும் போது களைப்புடன் கண்விழித்து, "டிரஸ் பிடிச்சிருக்கா? வெடி வெடிக்கிறீங்களா?" என்று கேட்டு பூரிப்புடன் மீண்டும் உறங்கும் காட்சியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. 

2.இன்ஜினீயரிங் படிக்கும் சேரன், தன் சக மாணவி பத்மப்ரியாவுடன் காதலாகி, கர்ப்பமாகிற காதலியுடன் ஊரை விட்டே ஓடிவிடுகிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகே ராஜ்கிரணுக்கு விஷயம் தெரியவர சேரனை காண்பதற்காக அவரது வீட்டிற்கு செல்வார். சேரனைப் பார்ப்பதற்காக அவரது வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பார். அந்த ஒரு காட்சி போதும், பரிதவிக்கும் பார்வையுடன் ’ஏம்ப்பா இப்படிப் பண்ணினே?’ எனக் கேட்கிற காட்சி, மிகவும் கிளாஸாக இருக்கும். மேலும் ராஜ்கிரண், "நீ பொறக்கும்போது காசுக்கு நான் அலைஞ்சது ஞாபகமிருக்கிறது. நீயும் அப்படிதானே அலைஞ்சிருப்பே. அதனாலதான் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்"  எனச் சொல்வார். குழந்தையிடம் பணத்தை வைத்து விட்டு ஊருக்குச் செல்ல ஆயத்தமாவார். அப்போது சேரனிடம், "இன்னொரு பக்கம் எம் புள்ளைகளுக்கு நா ஏதோ குறை வெச்சுட்டேன் போலிருக்கு. அதான் ரெண்டு பிள்ளைகளுமே என்கிட்ட தங்கலை. நீயாவது உம் பிள்ளைக்கு அந்தக் குறை வராமப் பார்த்துக்கோப்பா " என்று கூறுவார். இதுபோன்ற இயல்பான வசனங்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்தின. 

3.சேரன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு குழந்தை பிறந்துவிடும். ராஜ்கிரண் வந்து ஒருமுறை பார்த்துவிட்டுப் போவார். அதன்பின் வீட்டுக்கே போய்விடலாம் என முடிவு செய்து வீட்டு வாசலில் போய் சேரனும், பத்மபிரியாவும் ராஜ்கிரண் வீட்டு வாசலில் நிற்கின்றனர். 
சரண்யா கோவமாக வந்துக் கதவைப் படாரென்று சாத்திவிட்டு உள்ளே செல்வார். 'இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க அம்மாவும் அப்பாவும் செத்துப் போயிடுவாங்க. கருமாதி பண்ணிட்டுப் போகச் சொல்லு' எனக் கூடியிருந்த கும்பலிடம் வீராப்பாகச் சொல்வார். அதன்பின் சேரன் பின்வாசல் வழியாகச் சென்று அவர் குழந்தையை, அமர்ந்திருக்கும் சரண்யா காலுக்கடியில் போடுவார். குழந்தை அழ ஆரம்பிக்கையில் அழுதுகொண்டு சரண்யாவின் வைராக்கியம் வெடிக்கும். இந்த ஒரு காட்சியில் சரண்யா மொத்தமாக நம்மை ஆட்கொண்டு விடுவார். இந்தக் காட்சி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காட்சிகளுள் ஒன்று என்றால் மிகையல்ல. 

"ஒரே ஒரு ஊருக்குள்ள" பாடலில் ஒரு கிராமத்து அப்பாவும் அம்மாவும் தங்களின் இரண்டு மகன்களுடன் பாசமாக சைக்கிளில் பயணிக்கும்போதே, நாமும் அவர்களின் வாழ்க்கைச் சைக்கிளில் தொற்றிக்கொண்டுவிடுகிறோம். வழக்கமான தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி இதில் இல்லை. துள்ளவைக்கிற முடிச்சுகளோ, தூக்கிவாரிப்போடும் திருப்பங்களோ கொண்ட காட்சி அமைப்புகள் எதுவும் இல்லவே இல்லை. ஒரு மென்மையான நீரோடை மாதிரி அதன் போக்கில் மிக மெள்ளப் பயணிக்கிறது படம். அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் யதார்த்த வகை. 

பெற்றோரைத் தவிக்கவிட்டுச் செல்லும் பிள்ளைகள், அவர்களின் கண்ணீரை உணர வேண்டும்; முதுமைக் காலத்தில் அவர்களை அன்போடும் ஆதரவோடும் அரவணைக்க வேண்டும் என்பதைப் பின்பகுதியில் வலியுறுத்தியிருக்கிறார். அது, சேரன் சொல்லும் முக்கியச் செய்தி. படத்தின் நீளம் அதிகரித்தபோது, எந்தப் பகுதியை வெட்டுவது என்று யோசித்த சேரன், இந்தக் காட்சிகளை வெட்டாமல் வேறு காட்சிகளை வெட்டியிருக்கிறார். இதிலிருந்தே இந்தப் பகுதிக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது. தவமாய் தவமிருந்து சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றது. மேலும், தமிழக அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்றது.

பின் செல்ல