Published:Updated:

‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..!’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவாரஸ்யம் #VikatanExclusive

‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..!’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவாரஸ்யம் #VikatanExclusive

‘காற்று வெளியிடை'க்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.  'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியன், இப்போது தீரன் என இதில் கார்த்திக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குநர் வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெகுவாகப் பாராட்டு பெற்றுள்ள நிலையில் இதன் ஒளிப்பதிவாளர் சத்யனிடம் பேசினேன்.

''சின்ன வயதிலிருந்தே ஓவியம் வரைவது எனக்குப் பிடிக்கும். அதனாலே ஸ்கூல் முடித்தவுடன் அரசு கவின் கலைக் கல்லூரியில்  ஓவியத்தைத் தேர்ந்தேடுத்து படித்தேன். கல்லூரி படிப்பு முடித்தவுடன் போட்டோஸ் எடுக்கத் தொடங்கினேன். அப்போது நான் எடுத்த புகைப்படம் ஒன்று விருது வாங்கியது. ‘இந்தப் போட்டோவை பி.சி.ஸ்ரீராமிடம் கொண்டுபோய் காட்டு. நிச்சயம் அவர் உன்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்வார்'' என்று என் நலவிரும்பி ஒருவர் சொன்னார். நானும் பி.சி.சாரை சந்தித்தேன். அவருக்கு அந்தப் புகைப்படம் பிடித்திருந்தது. என்னைக் கொஞ்ச நாள்கள் காத்திருக்கச் சொன்னார், காத்திருந்தேன். அந்தச் சமயங்களில் அவரை ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருந்தேன். பிறகு என்னை தன் உதவி கேமராமேனாகச் சேர்த்துக்கொண்டார். 

அவரிடம் ஒளிப்பதிவு கற்றுக்கொண்ட பிறகுதான் நான் முழுமையானேன் என்றே சொல்லலாம். பிறகு வெளியே வந்து எனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருந்தேன். அந்தச் சமயத்தில் மிஷ்கின் சாரும் தன் ‘யுத்தம் செய்’ படத்துக்காக ஒளிப்பதிவாளரைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது என்னைப் பற்றி அவரிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் 'யுத்தம் செய்' படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரது 'முகமூடி' படத்துக்கும் நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். மிஷ்கின் தன் ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலில் எப்போதும் உறுதியாக இருப்பார். ஆனால், அவருடன் ஒர்க் செய்தது எனக்குக் கஷ்டமாகவே இருந்ததில்லை. 

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, எனக்கு அமைந்த படம்தான் 'மாயா'. இந்தப் படம் எனக்கு சவாலாக இருந்தது. 'மாயா'வுக்கு முன் நான் செய்த இரண்டு படங்களின் ஷூட்டிங் இரவிலேயேதான் இருந்தது. அதேமாதிரி இந்தப் படத்தின் ஷூட்டிங் குறுகிய காலத்திலேயே நடந்து முடிந்தது. நயன்தாராதான் இந்தப் படத்தின் மெயின் கேரக்டர். அடர்ந்த காடுகளில் ஷூட் செய்ய வேண்டிய காட்சிகளைச் சென்னையில் பல்லாவரம், வேளச்சேரியில் ஷூட் பண்ணி மேட்ச் பண்ணினோம்.

இதில் க்ளைமாக்ஸ் உட்பட நிறைய காட்சிகள் காட்டில் எடுக்கப்பட்டு இருப்பதுபோல் காட்டியிருப்போம். ஆனா, அது ஒரு தோட்டம். அதைதான் காடு மாதிரி காட்டியிருப்போம். ஏன்னா, படத்துக்கு பட்ஜெட் ரொம்ப கம்மி. படக்குழுவினர் எல்லோரையும் வைத்துக்கொண்டு காட்டில் ஷூட் செய்வது ரொம்ப கஷ்டம். அதனால்தான் தோட்டத்தில் ஷூட் செய்தோம். 

‘மாயா’வில் நயன்தாராவை ஷூட் செய்வது ரொம்ப ஈஸியான வேலையாக இருக்கும். ஏனெனில், அதிக டேக் போக மாட்டார். ஒரே டேக்கில் எல்லா சீன்ஸூம் ஓகே வாங்கப் பார்ப்பார். 'ஃபர்ஸ்ட் டைம் பண்ணும்போதுதான் அந்த சீன் நடிப்பாக இல்லாமல் ரொம்ப யதார்த்தமாகயிருக்கும். திரும்பத் திரும்ப பண்ணும்போது யதார்த்தம் போய் நடிப்பு மட்டும்தான் தெரியும்' என்பார் நயன்தாரா. அதற்குப் பிறகு, எனக்கு நயன்தாரா படங்கள் நிறைய வந்தது. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு வேற கமிட்மென்ட்கள் இருந்ததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. 'மாயா' தந்த நல்ல பெயர்தான் எனக்கு அடுத்தடுத்து படங்களைப் பெற்றுத்தந்தது. இப்போது கார்த்தி சாருடைய 'தீரன் அதிகாரம் ஒன்று'ம் அப்படி வந்ததுதான். 

ஆனால், 'மாயா' படத்துக்குப் பிறகு, இரவில் ஷூட் செய்யக்கூடிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய நிறைய வாய்ப்புகள் வந்தன. 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தை ஒப்புக்கொண்டேன். அதுவும் ஒரு ஹாரர் மூவிதான். அட்லீ தயாரிப்பு என்பதாலேயே அந்தப் படம் பண்ணினேன். பிறகு தொடர்ந்து ஹாரர், த்ரில்லர், நைட் ஷூட் படங்கள்தான் வந்தன. அதிலிருந்து வெளியே வரணும் என்பதற்காகவே 'தீரன் அதிகாரம் ஒன்று' பட வாய்ப்பு வந்ததும் உடனே ஓகே சொல்லிட்டேன்.

இந்தப் படம் என் கேரியரில் முக்கியமான படம். அகண்ட நிலப்பரப்பு, பாலைவனம் என வித்தியாசமான நிலப்பரப்பில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. கதையை எழுதி இயக்கும் இயக்குநர்கள் நம்ம தமிழ் சினிமாவில் கொஞ்சம் கம்மிதான். அந்த வகையில் வினோத் உண்மைச் சம்பவத்தை வைத்துக் கதை எழுதி, அந்தக் கதையை நம்மக்கிட்ட சொன்னபோதே எனக்குள் ஒரு தேடல் ஆரம்பமாகிவிட்டது. அப்போதே இந்தக் கதையைத் தேடி நானும் போக ஆரம்பித்தேன். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே வினோத்துடன் சேர்ந்து ஆறு மாசம் ட்ராவல் பண்ணினேன். லொக்கேஷன் பார்க்க வட இந்தியா முழுக்க சுற்றினோம். எங்களுக்கு நிறைய ஐடியாக்கள் கிடைத்தன. அதற்குப் பிறகுதான் ஷூட்டிங் ஆரம்பித்தோம். 

ஒரு பெரிய ஹீரோ படத்தை ஷூட் செய்வது இதுதான் முதல்முறை. அதனால் எனக்கான பொறுப்பு சற்று அதிகமாகவே இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நிறையச் சவால்களைச் சமாளித்தோம். 40 நாள் ஷெட்டியூல். வேலை செய்துகொண்டேயிருந்தோம். அப்போது வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. படப்பிடிப்பிலிருந்த ஃபைட்டர் உள்பட பலர் சுருண்டுவிழ ஆரம்பித்தனர். ஆனால், கார்த்தி சார் ஸ்டெடியாக நிற்பார். டீசரில் வரும் மணலுக்குள் போகும் காட்சியில் உண்மையிலேயே மணலுக்குள் புதைந்து இருந்தார். அங்க அடிக்கிற வெயிலில் கொஞ்சம் நேரம் நின்றாலே உடம்பெல்லாம் கூசும். ஜூரம் அடிக்கிற மாதிரியிருக்கும். 

இதையெல்லாம் தாங்கிக்கொண்டு 40 நாள் அந்த வெயிலோடு ஓடி நடிச்சியிருக்கார் கார்த்தி. படத்துக்காக எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு ஓடினார். அதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருந்தது. படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங், நயன்தாரா மாதிரியே கேமராவுக்கு அவர் முகம் அவ்வளவு அழகாக இருக்கும். அதிகமாக டேக் வாங்கக் கூடாதுனு நினைப்பாங்க. எப்படி நிக்கணும், பேசணும் என்பதைத் தெரிந்து பண்ணுவார். நல்ல ஃபெர்ஃபாமர்.

இது க்ரைம் த்ரில்லர். படத்தில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் பலதரப்பட்ட மக்கள் மற்றும் காலநிலையை 'தீரன் அதிகாரம் ஒன்று' காட்டும். படத்தில் நிறைய செட் காட்சிகள் வரும். அதையெல்லாம் பார்க்கும்போது உண்மையான இடங்கள் போலவே இருக்கும்.

இந்தப் படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகளை ஷூட் செய்வதற்கு மட்டும் நிறைய ஷாட் எடுக்க வேண்டியதாக இருந்தது. ஏன்னா, வெயில் ஒரு பக்கம் அடிக்குது இன்னொரு பக்கம் காற்று பலமாக வீசுது. நாற்பது கிலோ மீட்டருக்கு காற்றின் வேகமிருந்தது. ஷாட் ஓகே ஆகி டேக் சொல்லும்போது பார்த்தால் கார்த்தி மணலுக்குள்ளபோய்  மூழ்கியிருப்பார். அப்போது டக்குனு காற்று அடிக்க ஆரம்பிச்சிரும் டேக் ஓகே ஆகாது. அடிக்கிற காற்றின் வேகத்துக்கு கேமராவே பறந்து போயிருச்சு. அப்புறம் புது கேமரா எடுத்து வந்து ஷூட் பண்ணினோம். அந்தளவுக்கு ஷூட்டிங் ரொம்ப சவாலாகயிருந்தது. 

நான் ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகும்போது என் குரு பி.சி சாரிடம் போய்ச் சொல்வேன். அவருடைய வாழ்த்துகளை என்னிடம் தெரிவிப்பார். ஆனால், அவர் அந்தப் படங்கள் ரிலீஸானவுடன் பார்த்தாரா இல்லையா என்பது தெரியாது. இதுவரை அவர் என்னைக் கூப்பிட்டு ''டேய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு நல்லா பண்ணியிருக்கடா'' அப்படினு சொன்னதில்லை. அந்த நாளுக்காகதான் காத்திருக்கிறேன்” என்று முடித்தார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன்.

அடுத்த கட்டுரைக்கு