Published:Updated:

வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்... என்ன காரணம்? - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-14

வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்... என்ன காரணம்? - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-14
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்... என்ன காரணம்? - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-14

எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தி, மினிமம் கேரன்  ராமச்சந்திரன் என்று படத்தின் வெற்றியால் பெயர் பெற்றிருந்தாலும் சில படங்கள் 100 நாள்கள் ஓடவில்லை. வசூலை அள்ளிக் குவிக்கவில்லை அதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய முனைகிறது.
ஓர் அரசியலில் கட்சியின் வெற்றிக்கு அதன் தொண்டர்கள் அனுதாபிகள் ஆதரவு மட்டும் போதாது. அரசியல் கட்சி எதையும் சாராத பொதுவானவர்களின் வாக்குகள் மிகவும் அவசியமாகும். அதுபோல ஒரு படத்தின் வெற்றிக்கும் அந்த நடிகர், இயக்குநர் போன்றோரின் ரசிகர்கள் ஆதரவு தருவதில் வியப்பேயில்லை. ஆனால், இது மட்டும் போதாது.

ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்குக் காரணம் அதை சிவாஜி ரசிகர்களும் விரும்பிப் பார்த்ததுதான். உலகம் சுற்றும் வாலிபனின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணம் பொதுமக்களும் சிவாஜி ரசிகர்களும் சேர்ந்து வந்து பார்த்தது என்றால் மிகையில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமே பார்த்தனர். அதனால், அவை 100 நாள்கள் ஓடவில்லை. இவர்கள் ஒரே நாளில் இரண்டு, மூன்று காட்சிகளோ அல்லது ஒரே வாரத்தில் இரண்டு மூன்று தடவையோ (நாள்களோ) வந்து படம் பார்க்காதது ஏன் என்பதை அறிந்துகொள்ள முயல்வோம்.

100 நாள் ஓடாத படங்கள்

பாசம், தாயின் மடியில், என் கடமை, மாடப்புறா, நான் ஆணையிட்டால், ராஜாதேசிங்கு, பட்டிக்காட்டு பொன்னையா, ராணி சம்யுக்தா, நீரும் நெருப்பும், கலையரசி, தலைவன் போன்றவை 100 நாள்கள் ஓடவில்லை. மறுவெளியீடுகளில் வெற்றிவாகை சூடும் அரசகட்டளை, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்கள் முதல் வெளியீட்டின்போது பெருவேற்றி பெறவில்லை.  

பாசம், ராஜா தேசிங்கு, நீரும் நெருப்பும், ராணி சம்யுக்தா போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் இறந்து விடுவதாகக் கதை அமைந்திருந்ததால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இவற்றைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. என் கடமை, அரசியல் காரணத்தால் பாதியிலேயே திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டது. தாயின்மடியில், பட்டிக்காட்டுப் பொன்னையா தனிநபர், ஒழுக்க மீறல் காரணமாக ஓடவில்லை. கலையரசி, தலைவன் படங்கள் அறிவியல் புரட்சி செய்திருந்தாலும் மக்கள் அவற்றை நம்பத் தயாராக இல்லாததால் அவையும் பெருவெற்றி பெறவில்லை.

பிற்காலப் படங்களான இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம் போன்றவற்றில் எம்.ஜி.ஆர் ஹேர் ஸ்டைல், பெல்ஸ் பாட்டம் உடை ஆகியவற்றை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. இதயக்கனி, உரிமைக்குரல் ஹேர்ஸ்டைல் மற்றும் பேண்ட் சூட் ஆகியவற்றை ரசித்து வெள்ளிவிழா படமாக்கினர்.

எம்.ஜி.ஆர் சாவதா?

காலத்தை வென்றவனாகவும் வெற்றித் திருமகனாகவும் நம்பப்பட்ட எம்.ஜி.ஆர் நிஜத்தில் சாவார் என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லாத காலத்தில் படத்தில் அவர் சாவார் என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதைப் பாசம் படத்தின் இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவிடம் எம்.ஜி.ஆர் கூறியபோது அவர் மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் சாவதைப் பார்த்த இரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து திரையைக் கிழித்தனர். திரையரங்கு உரிமையாளர் படத்தை எடுத்துவிட்டார். பாசம் படத்தில் ஆறு பாடல்களும் தேனாறுகளாகப் பாய்ந்தும் எம்.ஜி.ஆரை படம் முழுக்க அழகற்றவராக, திருடனாக, இடதுகை பெருவிரல் நகத்தைக் கடிப்பவராக, நண்பனின் தங்கையை ஒருதலையாகக் காதலிப்பவராக, தன்னை காதலிக்கும் நாட்டியக்காரி மஞ்சுவை (சரோஜாதேவி) ஏற்க மனமில்லாதவராக வந்ததால் ரசிகர்களால் படத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வசூல்ரீதியாக படம் தோற்றாலும் எம்.ஜி.ஆரின் “திருவாய்க்கு மறுவாய் ஏது" என்ற நிலை தோன்றியது. அதற்குப் பிறகு, அவர் கருத்துக்கு எதிர்கருத்து தோன்றவில்லை.

ராஜா தேசிங்கு படத்தில்

ராஜா தேசிங்கு படத்தில் நண்பன் மகமத்கான் பாத்திரப்படைப்பின் முக்கியத்துவம் குறைந்துவிடும்படி தேசிங்குக்கு மூத்த அண்ணனாக இன்னொரு எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. படத்தின் இறுதியில் இந்த இரண்டு எம்.ஜி.ஆர்களும் (ஒருவரின் தாய் முஸ்லீம், அடுத்தவரின் தாய் இந்து) சண்டையிட்டு இறந்துவிடுவர். சண்டைக்காட்சி வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் முடிவு மரணம் என்பதால் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. எம்.ஜி.ஆருக்கு இப்படத்தில் ஜோடியாக வரும் பானுமதி அவருக்குப் பெரியவர் போலக் காட்சி அளிப்பார். ரசிகர்களால் அதையும் ரசிக்க இயலவில்லை.

கண்ணதாசன் கதை, வசனம் எழுதி இந்தப் படம் தொடங்கப்பட்டபோது தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும். எண்ணம் இருந்தது. தமிழில் தேசிங்காக எம்.ஜி.ஆரும் மகமத்கானாக என்.டி.ராமாராவும் நடிக்க இருந்தனர்.  இவர்களுக்கு ஜோடியாக பத்மினியும் பானுமதியும் ஒப்பந்தமாகி இருந்தனர்.  மகமத்கான் பேச வேண்டிய வசனங்களைப் படித்துப் பார்த்த கலைவாணர், எஸ். எஸ் ஆரால் மட்டுமே இந்த வசனங்களைச் சிறப்பாகப் பேசமுடியும் என்று சொல்லி என். டி. ஆரை மாற்றி எஸ். எஸ் ஆரைக் கொண்டு வந்தார்.

என்.டி.ஆர் அதன் பின்பு தமிழ்த்திரையை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்.  எஸ்.எஸ். ஆர் வந்ததும் எம்.ஜி.ஆர் தன் வேடத்தை இரட்டைவேடமாக வளர்த்துக்கொண்டார்.  இப்போது கதையின் ஹீரோவும் எம்.ஜி.ஆர், வில்லனும் எம்.ஜி.ஆர். இரண்டு எம்.ஜி.ஆர்கள் தமக்குள் பகை கொண்டு சண்டைபோடும் படங்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை.  இதற்கு இன்னோரு உதாரணம் நீரும் நெருப்பும்.

நீரும் நெருப்பும்

மணிவண்ணன், கரிகாலன் என்ற இரு வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்த நீரும் நெருப்பும் படம் அவரது இளமைக்காலக் கனவுப்படம் ஆகும். தன் குருநாதரின் மகன் எம்.கே.இராதா நடித்த இரு சகோதரர்கள் படத்தைப் பார்த்த ரசித்த எம்.ஜி.ஆர் தான் அப்படத்தின் கதையில் நடித்து வெளியிட்டார்.  கரிகாலன் எம்.ஜி.ஆர் வில்லன் கதாபாத்திரமாக நடித்ததை மக்கள் ரசிக்கவில்லை. சகோதரனின் காதலியிடம் அவர் முறை தவறி நடக்க முயற்சிப்பதை ரசிகர்கள் ஏற்க மறுத்து பார்க்க மறுத்தனர். படத்தில் அருமையான பாடல்கள் இருந்தும் இறுதிக்காட்சியில் கரிகாலன் செத்ததும் மணிவண்ணன் மகுடம் சூடியதும் மக்களுக்கு உவப்பாக இல்லை. ஒரு எம்.ஜி.ஆர் வலது கையாலும் அடுத்தவர் இடது கையாலும் வாளைச் சுழற்றி சண்டை போட்ட அருமையான காட்சிகள் இருந்தாலும் படம் வெற்றியடையவில்லை.

அறிவியல் புரட்சி

1963ல் எம்.ஜி.ஆர் பானுமதி நடித்து கலையரசி என்றோரு படம் வந்தது.  இதில் எம்.ஜி.ஆர் வேற்றுலகவாசியாகவும் ஒரு கதாபாத்திரம் ஏற்றிருப்பார்.  எரிகல் மோதி உயிர் இழப்பார். இப்படத்தில் வீணை வாசிக்கும் பானுமதியை சந்திரமண்டலத்துக்கு பறக்கும் தட்டில் வைத்து நம்பியார் கடத்திக்கொண்டு போய் விடுவார்.  எம்.ஜி.ஆர் போய் மீட்டுக் கொண்டு வருவார்.

கலையரசியில் புதுமுகமாக ராஜஸ்ரீயை அறிமுகம் செய்தனர்.  அவர் சந்திரமண்டலத்து இளவரசியாக நடித்திருப்பார்.  (பின்பு இவர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் மறு பிரவேசம் செய்தார்)  இந்தப்படம் பார்த்த பலருக்கும் இது நம்பக் கூடியதாக இல்லை.  பறக்கும் தட்டு, சந்திரமண்டலம் என்றவை கட்டுக்கதையாகத் தோன்றியதால் வசூல் குறைந்தது.

எங்கள் தங்கம் (9-10-1970) படத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்ததை ஒரு நையாண்டி காலட்சேபமாக எம்.ஜி.ஆர் செய்வதை ரசிகர்கள் ரசித்தனர்.  முதலில் மனிதன் சந்திரமண்டலம் போனதை நம்பாதவர்கள் இப்போது அவன் சந்திரமண்டலம் போனதை நம்பினர் அதை நம்பால் பேசும் பத்தாம் பசலிகளைக் கேலி செய்து ரசித்தனர். காலம் மாறியிருந்தது.

1970ல் தலைவன் என்றோரு படத்தில் ஹடயோகம் மூலமாக உடலை உயர்த்தி  இலகுவாக்கி காற்றில் மிதக்கலாம் என்று எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.  சித்தவைத்தியம், யோகா பற்றி அப்போது அவர் காட்டியதை எவரும் நம்பவில்லை அதனால் படத்தில் கதையும் பாடல்களும் சிறப்பாக இருந்தும் படம் 63 நாட்களே ஓடின.  வண்ணப்படங்கள் வந்துவிட்ட காலத்தில் இது கறுப்பு வெள்ளைப்படமாக இருந்ததும் ஒரு காரணமாகும். ஆனால் இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நல்ல இலாபம் கிடைத்தது அவர் அதைக்கொண்டு திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்டி அதற்கு எம் ஜி ஆர் நிலையம் என்று பெயர் சூட்டினார்.