Published:Updated:

“தனுஷ் கில்லி, ஜி.வி.பிரகாஷ் பக்கா ஹார்ட் வொர்க்கர்..!” - ‘மாஸ்டர் டூ இயக்குநர்’ பாபா பாஸ்கர்

“தனுஷ் கில்லி, ஜி.வி.பிரகாஷ் பக்கா ஹார்ட் வொர்க்கர்..!” - ‘மாஸ்டர் டூ இயக்குநர்’ பாபா பாஸ்கர்
“தனுஷ் கில்லி, ஜி.வி.பிரகாஷ் பக்கா ஹார்ட் வொர்க்கர்..!” - ‘மாஸ்டர் டூ இயக்குநர்’ பாபா பாஸ்கர்

தமிழ் திரையுலகில் புதுப்புது இயக்குநர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், நடன இயக்குநரான பாபா பாஸ்கரும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பெயர் 'குப்பத்து ராஜா'. வரும் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கும் இந்த படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டோம்.
 

நடன இயக்குநரிலிருந்து இயக்குநர் ஐடியா எப்போ வந்துச்சு?

“என்னை பொருத்தவரை, சினிமாவில இந்த வேலைதான் செய்யணும்னு கன்டிஷன் கிடையாது. எனக்கு சினிமாவில இருக்கணும் அவ்வளவுதான். அதுதான் என் அப்பாவோட ஆசையும் கூட. ஒரு முறை நான் டான்ஸ் சீக்வென்ஸுக்காக என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போதுதான் ஒரு ஒன் லைன் தோணுச்சு. அதை அப்படியே கதையா எழுதி கொஞ்சம் மெருகேத்தி தனுஷ்கிட்ட சொன்னேன். அவரும் நம்ம ப்ரோடக்‌ஷன்லேயே பண்ணலாம், கதை ரொம்ப நல்லா இருக்குனு சொன்னார். அப்புறம் அவரும் பாலிவுட்டில் பிஸியாகிட்டார். நானும் கோரியோக்ராஃப்னு போயிட்டேன். அப்படியே அந்த கதை தள்ளிப்போயிடுச்சு. அதுதான் நான் எழுதின முதல் ஸ்கிரிப்ட். அந்த படத்தின் பெயர் 'குல்ஃபி'. கண்டிப்பா அந்த கதையை படம் பண்ணுவேன். அப்புறம், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பட ஷூட்ல தான் அடுத்த ஒன்லைனை  பத்தி நானும் ஜி.வி.பிரகாஷும் டிஸ்கஸ் பண்ணோம். அவருக்கு கதை பிடிச்சு பண்றேன்னு சொல்லிட்டார். அப்புறம் முறையா கதையை டெவலப் பண்ணி தயாரிப்பாளர்கிட்ட சொல்லி ஓகே ஆகிடுச்சு. படம் ஷூட் முடிஞ்சு ரிலீஸ் ஆகப்போகுது. ரொம்ப ஹாப்பி."
 

இயக்குநர் அவதாரம் எப்படி இருக்கு?

"ஒரு இயக்குநரா இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு நல்லா தெரிஞ்சுகிட்டேன். ஒவ்வோர் அடியும் பார்த்துப் பார்த்து வைக்கணும். கவனம் சிதறிடக்கூடாதுனு எனக்கு பிடிச்ச விசயங்கள்கிட்ட இருந்து தள்ளியே இருந்தேன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் நிறைய பேர் ஃப்ரேம்ல வருவாங்க. அவங்கள மெயின்டெயின் பண்றது பெரிய டாஸ்க். எல்லா இயக்குநர்களுக்கும் என் சல்யூட். இருந்தாலும், டான்ஸ் மாஸ்டரா இருந்தனால நான் கத்துகிட்ட விஷயம் இங்கே ரொம்ப உதவியா இருந்துச்சு. முதல் படம் நல்லபடியா வரணும். எனக்கு சினிமாவில காசு முக்கியமில்லை, நல்ல பேர், என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கிறதுதான் முக்கியம். வேலையில கவனமா இருக்கணும், க்ரியேட்டிவா நிறைய யோசிட்டே இருக்கணும். நம்ம வேலையை பார்த்துட்டு ஒருத்தர் நல்லா இருக்குனு வந்து சொல்லும்போது ஒரு ஆனந்தம் கிடைக்குமே அதுக்கு நிகர் ஒன்னுமே இல்லைங்க."
 

ஜி.வி. பிரகாஷ், பார்த்திபன், யோகிபாபுனு எப்படி தேர்ந்தேடுத்தீங்க?

"நான் ஏற்கெனவே. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்துல வொர்க் பண்ணும்போதே ஜி.வி.பிரகாஷுக்கு லோகல் ஏரியாவுல நகரும் இந்த கதை செட்டாகும்னு தோணுச்சு. ஹீரோயினா முதல்ல ஒரு பொண்ணு ஃபிக்ஸ் ஆகியிருந்தாங்க. அவங்களே திடீர்னு 'நான் இன்னும் நடிப்பு கத்துட்டு வர்றேன்'னு சொல்லி படத்திலிருந்து விலகிட்டாங்க. அவருக்கு பிறகுதான், பலாக் லால்வாணி ஒப்பந்தமானார். என்னை பொருத்தவரை, படத்துக்குள்ள கம்ஃபோர்ட் சோன்ல இருக்கணும். அப்போதான் ஷூட் ஆரோக்யமா போகும். யோகிபாபு பல படங்கள்ல கமிட்டாகி இருந்தார். எனக்காக கிடைக்குற நேரத்துல எல்லாம் வந்து நடிச்சுகொடுத்துட்டு போவார். பார்த்திபன் சாரோட 'புதிய பாதைகள்' எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இந்த ரோல் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. கதை கேட்ட 45வது நிமிஷம் க்ரீன் சிக்னல் காமிச்சுட்டார். அதே மாதிரி ஒளிப்பதிவாளரா வேல்ராஜ் சார் ப்ளான் பண்ணோம். அவர் 'வடசென்னை' படத்துல பிஸியா இருந்ததுனால மகேஷ் முத்துசாமி கமிட் ஆனார். இவரோட டெடிகேஷன்தான் இவரோட ப்ளஸ்."

திலிப் சுப்ராயன், அன்பறிவ்னு ரெண்டு ஸ்டன்ட் மாஸ்டர்கள் இருக்காங்களே.. அப்போ இது ஆக்‌ஷன் படமா? 

"படத்துல ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு. நாலு ஃபைட் சீன் சும்மா 'நறுக்'னு உட்கார்ந்திருக்கு. இந்த சீனுக்கு இவர், இந்த ஃபைட்டுக்கு இவர்னு ப்ளான் பண்ணிதான் பண்ணோம். ஆனா, படம் முழுக்க ஆக்‌ஷன் இருக்காது. ஆக்‌ஷன் சீன் வர்ற இடங்கள்ல தரமா இருக்கும்."
 

நடன இயக்குநரா நடிகர்களை வேலை வாங்கியிருப்பீங்க. இப்போ இயக்குநரா எப்படி வேலை வாங்குரீங்க?

"நான் டான்ஸ் மாஸ்டரா எப்படி வேலை வாங்கினேனோ அப்படிதான் இப்பவும். எனக்கு என்ன ஆனாலும் காலையில 7.30 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் எடுத்தே ஆகணும்  இல்லைனா, கோபம் வந்திடும். இதனாலயே ஜூனியர் ஆர்டிஸ்ட் எனக்கு நல்லா ஒத்துழைச்சாங்க. சினிமாவுல டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு மணி நேரங்கிறது ஒரு லட்ச ரூபாய்க்குச் சமம். நம்மளை நம்பி பணம் போடுற தயாரிப்பாளரோட நிலைமையில இருந்து யோசிச்சுப் பார்க்கணும். இதனாலே நிறைய பேரை திட்டிருக்கேன். ஆனா, எனக்குச் சொன்ன நேரத்துக்குள்ள ஷூட் முடிச்சிடணும். இந்தப் படத்தை 54 நாள்ல முடிச்சுக் கொடுத்துட்டேன்."

சிவகார்த்திகேயன் படத்துலயும் நீங்க வொர்க் பண்ணிருக்கீங்க. இப்போ, உங்க படமும் அவர் படமும் சேர்ந்து ரிலீஸ் ஆகுறதை எப்படிப் பார்க்குறீங்க?  

"சிவகார்த்திகேயன் இப்போ நல்ல வளர்ச்சியில இருக்கார். அவர் கூட போட்டி போடணும்னு எல்லாம் இல்லை. அவங்கவங்க உழைப்புக்கான மரியாதை அவங்கவங்களுக்குக் கிடைக்கும். சினிமாங்கிறது பெரிய கடல். அதுல நான் இன்னும் நீந்த கத்துக்கிட்டே இருக்கேன். எனக்கு சினிமாவில பயணிச்சுட்டே இருக்கணும் அவ்வளவுதான்."

'குப்பத்து ராஜா'னு ரஜினி படத்தோட டைட்டில்லை வெச்சிருக்கீங்களே...

"இந்தப் படத்துக்கு மொத்தம் 45 டைட்டில் வெச்சிருந்தேன். அதுல 'குப்பத்து ராஜா'ங்கிற டைட்டில் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அப்படி ஒரு மனதா தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்த டைட்டில்."
 

அடுத்து நடன இயக்குநரா இல்லை இயக்குநரா? என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க?

"நடன இயக்குநரா எனக்கு வர்ற வாய்ப்பை விடவே மாட்டேன். சினிமா இதுதான்னு ஃபிக்ஸ் பண்ண விரும்பலை. நம்மளை நம்பி இருக்கவங்களை நல்லா வெச்சிக்கறதுக்காக நல்லா உழைக்கணும், நிறைய விருதுகள் வாங்கணும். அதிலும், தேசிய விருது வாங்கணுங்கிறதுதான் என் டார்கெட். இயக்குநரா, 'குல்ஃபி' கதை இல்லாம மூணு கதைகள் வெச்சிருக்கேன். அதுல ஒரு கதை நாலு பசங்களை வெச்சு நகரும். அது நல்லா இருக்குனு சிலர் சொல்லியிருக்காங்க. அதைப் பண்ணணும். வொன்டர்பார் தயாரிப்புல 'குல்ஃபி' பண்ணணும். நம்ம ஆயிரம் நினைக்கலாம், கடவுள் நினைக்குறதுதான் நடக்கும். பார்ப்போம்" என்றபடி விடைபெற்றார் பாபா பாஸ்கர்.

ஜி.வி.பிரகாஷ் டான்ஸ் எப்படி பண்றார்?

''ஜி.வி.பிரகாஷ் டான்ஸ்ல அதிகமாவே கவனம் செலுத்துவார். டான்ஸ் ஆடும்போது அவருக்கு திருப்தியடையுற வரைக்கும் அவரா, 'மாஸ்டர் ஒன் மோர் போலாம்னா சொல்லுங்க' நான் பண்றேன்னு சொல்லி அவ்வளவு எனர்ஜியுடன் பண்ணுவார். நல்ல டெடிகேசனோட அதிகமா ப்ராக்டீஸ் பண்ணிட்டே இருப்பார். நானும் முன்னடியே சொல்லிக்கொடுக்க ஆட்களை அனுப்பிடுவேன். ஷாட்டுக்கு முன்னாடியே ஒரு முறைக்கு பல முறை ஆடிப்பார்த்த பிறகுதான் ரிகர்சல்லே போவார். பாட்டு டான்ஸ்னு வந்துட்டா 'மாஸ்டர் போதும்' னு இன்னைக்கு வரை ஒரு வார்த்தை சொன்னதில்லை. நான் ஓகே சொன்னாலும் அவருக்கு திருப்தியாகும் வரை அதை விடமாட்டார். டான்ஸ்ல அவர் காட்ற முன்னேற்றம் வியக்க வைக்கிது. இந்த டெடிகேஷன் எப்பவும் அவர்கூடவே இருந்தா எங்கேயோ போயிடுவார் நடிப்பிலும் டான்ஸிலும்.’’

யோகிபாபுவை படத்துல எப்படி வேலை வாங்குனீங்க?

“இந்த படத்துல யோகிபாபுவுக்கு ஒரு முக்கியமான கேரக்டர். படம் முழுக்க ட்ராவல் ஆவார். இந்த படத்துக்குன்னு அவர்கிட்ட காமெடிகள் திணிக்கவே இல்லை. அதுவா, அப்படியே போயிட்டு இருக்கும். வழக்கமா யோகிபாபு மத்தவங்களை கலாய்க்கிற மாதிரி இதுல இருக்காது. மேலும், இந்த படத்துல புதுசா கோபால்னு ஒரு பையன் இவருக்கூடவே நடிச்சிருக்கார். ஜி.வி - யோகிபாபு - கோபால் கூட்டணி வரும் காட்சிகள்ல மக்கள் நல்லா என்ஜாய் பண்ணுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. கதைக்கு என்ன தேவையோ அதை தெளிவாவும் ரொம்ப அழகாவும் பிண்ணியிருக்கார் யோகிபாபு."

தனுஷ் படத்தோட முக்கியமான கோரியோகிராஃபர் நீங்க. இப்போ ஜி.வி.பிரகாஷை இயக்கிட்டும் இருக்கீங்க. எப்படி இருக்கு ரெண்டு பேர் கூட வொர்க் பண்ண அனுபவம்?

“தனுஷ் டான்ஸ்ல கில்லி. அவர் படத்துல எல்லாம் ஒரு பாட்டுக்கு அதிகபட்சம் 2 நைட்ல முழு பாட்டுக்கான ஷூட்டும் முடிஞ்சுடும். நம்ம சொல்லிக்கொடுக்குற மூமென்ட்ஸை பிசிரு தட்டாமல் அப்படியே போடுவார். அதுக்கு அப்புறம், அந்த ஸ்டெப்பை எப்படி முக பாவனைகள் மூலம் மெருகேத்தலாம்னு யோசிச்சு அதையும் ஸ்க்ரீன்ல கொண்டு வந்திடுவார். ஜி.வி.பிரகாஷ் இவ்ளோ நாளா மியூசிக் வாசிச்ச நபர். இப்போதான் டான்ஸ் பக்கம் வந்து கலக்க ஆரம்பிச்சுருக்கார். இவருக்கு ஒரு ஸ்டெப் போட்டு காண்பிச்சா அதை எவ்ளோ உள்வாங்கணுமோ வாங்கி டெடிகேஷனோட ஒரு முறைக்கு பல முறை ஆடிப்பார்த்து ஷாட் போகும்போது அசத்திருவார். இதுக்கு முன்னாடி அவங்களுக்குள்ள எப்படி இருந்தாலும், நம்ம கூட இருந்தவன் வளரணும்கிறதுக்காக 'குப்பத்து ராஜா' படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட்டது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. ஜி.வி.யும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.’’